லாபத்தா லேடீஸ் – திரைப்பார்வை

வட இந்திய கிராமங்களில் கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் அணியும் முக்காடு என்னும் ஆடை ஏற்படுத்தும் குழப்பத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு, அதன் ஊடாக ஆணாதிக்க சமூகத்தையும், பழமைவாதத்தையும், பெண்களை அடிமைப்படுத்தும் பிற்போக்குத்தனத்தையும் பற்றிய நகைச்சுவையான உரையாடல்களோடு காட்சிப்படுத்தி இருப்பதே இயக்குனர் கிரண் ராவ் அவர்கள் இயக்கி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று வெளிவந்திருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ (தொலைந்த பெண்கள்) திரைப்படம்.

நிர்மல் பிரதேஷ் எனும் கற்பனையான மாநிலத்தில் இந்த கதை தொடங்குகிறது. கதையின் நாயகன் தீபக், தனது மனைவியான ஃபூல்குமாரியை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிலிருந்து தனது ஊருக்கு செல்ல, வயல்களின் நடுவே செல்லும் ரயில் வண்டியை மறித்து ஏறுகிறார். அவர் ஏறிய நெரிசலான பெட்டியில், இன்னொரு புதுமணத் தம்பதியான பிரதீப்- ஜெயாவும் இவர்களுடன் சேர்ந்து அந்த இரயிலில் பல புதுமண தம்பதிகள் அவர்களின் திருமண உடையிலேயே பயணிக்கின்றனர். பிரதீப்பின் தாய், ‘வரதட்சணை எவ்வளவு வாங்கினாய்?’ என்று தீபக்கிடம் கேட்கிறாள். தீபக் பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்க, ‘நாங்கள் மோட்டார் சைக்கிள், ஒன்றரை லட்சம் பணம், 150 சவரன் நகை மற்றும் மொபைல் போன் வாங்கினோம்‘ என்று தான் வாங்கிய வரதட்சணையைப் பற்றி பெருமையாய் பேசுகிறார். இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கும் தீபக்கை பார்த்து “ஆணிற்கு குறை இருந்தால் தான் வரதட்சணை வாங்கமாட்டார்கள்” என்று வரதட்சணையை நியாயப்படுத்தி தீபக்கை கேலி செய்து பேசுகிறார். 

வரதட்சணை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்று சட்டத்தில் இருந்தாலும், வரதட்சணை என்பது இயல்பாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இந்த காட்சி உதாரணம்.

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு அளித்திட வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். ஆண், பெண் பாகுபாடின்றி குடும்ப சொத்தினை இருவருக்கும் சமபங்கு கொடு என்று பெரியார் பேசியது பெண்ணுக்கான உரிமை சார்ந்தது.

மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீர்வரிசையை கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்பது பெண்களின் அடிமைத்தனத்தை காலம்காலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கும் சீரழிவு நிலை. தனது குடும்பம் சீர்வரிசைக்கு சிரமப்படுவதை பார்க்கும் பெண், இவ்வளவு துன்பங்களை பெற்றோர் அனுபவித்து அமைத்துக் கொடுப்பதை பார்க்கும் அந்தப் பெண் திருமண வாழ்க்கை என்பதை உளவியலாக தமது குடும்பத்தின் கவுரவரச் சின்னம் என ஏற்றுக் கொள்கிறாள். இதனால் கணவன் வீட்டில் நடக்கும் எந்த கொடுமைகளையும் ஏற்றுக் கொண்டு எதிர்கேள்வியே இல்லாமல் சுயத்தைத் தொலைத்து விடுகிறாள். ஆனால் இந்த வரதட்சணை ஒரு ஆணின் தனிப்பட்ட கவுரவமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் ஆணாதிக்கக் கட்டமைப்பு இன்னமும் சமூக உளவியலை மாற்றாமல் நிலைத்திருக்கப் பயன்படுகிறது. இந்த பழக்கம் இவ்வாறு வழிவழியாக தொடர்ந்து வருவதைத்தான் பிரதீப்பின் தாய் வழியாக இயக்குனர் கடத்தியிருக்கிறார்.

பெண்களுக்கு 1989-ஆம் ஆண்டிலே சொத்துரிமை உண்டு என முதன்முதலில் சட்டமாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

மணப்பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான முக்காடு அணிந்திருக்க அந்த நெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில் தான் இறங்கும் இடம் வந்ததும், இருட்டில் அவசரத்தில் பிரதீப்பின் மனைவியை (ஜெயா) கூட்டிக்கொண்டு தீபக் இறங்கி விடுகிறார். தீபக்கின் வீட்டில் ஆரத்தி எடுக்கும் போது, தனது முக்காட்டை விலக்குமாறு தீபக்கின் தாய் கூற, பெண் மாறியது குறித்து தெரிய வருகிறது. 

‘உன் கணவனை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியாதா?’ என கோபமாக அந்தப் பெண்ணிடம் கேட்கின்றனர். அந்தப் பெண் ‘கூடாரம் போல் புடவையை வைத்து முகத்தை மூடிக்கொண்டு இருந்ததால், எதிரே இருப்பவரின் கால்களைத் தவிர வேற எதுவும் தெரியவில்லை, இதிலே எனது தவறு என்ன?’ என  கேட்கிறார். அந்த மணப்பெண் அப்பாவியாகக் கேட்கும் படி இந்தக் காட்சி வைக்கப்பட்டிருந்தாலும், கலாச்சாரம் என்ற பெயரில் ஆடை அணிகலனில் கூட பெண்களின் மேல் காலம் காலமாக ஏற்றி வைத்திருக்கும் கனத்தை உணர வைக்கிறார் இயக்குனர்.

தீபக் தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட முக்காட்டால் முகம் மூடிய மனைவியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு தனது மனைவியைத் தேடுவார். அப்போது ‘முகம் தான் அனைத்திற்கும் அடையாளம், இப்படி ஒரு முக்காடு போட்ட புகைப்படத்தை வைத்து தேடுகிறாயே’ என்று ஒருவர் கேட்க, அப்போது அவர் வீட்டில் பர்தா அணிந்த ஒரு பெண் எட்டிப் பார்ப்பார். அந்த காட்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டிருந்தாலும், எந்த மதமானாலும் பழமைவாதம் என்கிற அடிமைத்தனத்தை சுமப்பது பெண்களே என்ற எண்ணத்தை பதிய வைக்கிறது. மேலும் காலம் காலமாக தங்களது குடும்பத்துப் பெண்களை பிற்போக்குத்தன்மையில் வைத்துக்கொண்டு ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் ஆண்களைப் பற்றிய பகடியையும் அந்தக் காட்சி வசனங்களே இல்லாமல் சொல்லிச் செல்கிறது.                    

மறுபுறம் கணவனின் பெயரை சொல்லக் கூட தயங்கும் ஃபூல்குமாரி கதாபாத்திரம்: தனது ஊர் பெயர், கணவரின் ஊர் பெயர், என்று எதுவும் தெரியாவிட்டாலும் தனது அம்மா தன்னை மிகுந்த பொறுப்பானவளாக சமைக்க, துவைக்க, தைக்க, சாமி கும்பிட என்று வீட்டில் சகல வேலைகளையும் செய்ய வைத்துள்ளார் என்று பெருமையாகக் கூறுகிறார். பெண்களை எப்படி திருமணம் என்ற பெயரில் கடிவாளம் மாட்டிய குதிரை போல கணவனைப் பேணுவதும், வீட்டு வேலை செய்வதும் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லி வளர்க்கிறார்கள் என்பதையும், தன் சுயத்தை அறிவதை விட புகுந்த வீட்டின் நலன் பேணுவதை பெண்களுக்கான பொறுப்புகளாக பதிய வைத்திருக்கும் அவலத்தையும் இந்த காட்சி விவரிக்கிறது. 

இன்று வேலைக்கு செல்லும் பெரும்பான்மையான பெண்கள் கூட அலுவலக வேலை, வீட்டு வேலை என்கிற இரட்டை பொறுப்புகளை சுமந்தே தங்களின் சுயத்தைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள்  என்பதே கசப்பான உண்மை.

இவர்கள் ஏறிய ரயில் கடைசி நிறுத்தத்தில் நிற்க, அப்பொழுது விழித்துக்கொள்ளும் ஃபூல்குமாரி தான் தனியே விடப்பட்டிருக்கிறோம் என்று அறிந்து பெரும் பதட்டத்திற்கு ஆளாகிறார். தனியாக இருக்க அச்சம் கொண்டு இரவில் பொதுக்கழிப்பறையில் பூட்டிக்கொண்டு உறங்குகிறார். (பொதுவாக வட இந்தியா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஊர் என்று ஒரு பிம்பம் இருக்கிறது, அந்த மக்களை காட்டுமிராண்டிகளாகவே பதப்படுத்தி வைத்திருப்பதில் இந்திய ஆட்சியாளர்களுக்கு பெரும் பங்கு உண்டு).

ஆனால் எந்த அளவுக்கு திரைப்படத்தில் யதார்த்தத்தையும் காண்பிக்க வேண்டுமோ, அதே அளவு ஒரு திரைப்படம் பார்வையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைய வேண்டும். யாரைப் பார்த்தாலும் அச்சப்படும் ஃபூல்குமாரியை, மறுநாள் பாதுகாப்பாக தங்க வைத்து பின்னர் இரயில் நிலையத்தில் தேநீர் கடை வைத்திருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணிடம் ஒப்படைத்து அவள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை எந்தவித தவறும் நடக்காத விதமாக இரு ஆண்கள் வருகின்றனர். பெண்ணியம் பேசும் திரைப்படங்களில் ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களையும் தீயவர்களாகவே காட்சிப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த கதாபாத்திரத்தை தீயவராக காட்சிப்படுத்த வேண்டும், யாரை நல்ல மனிதர்களாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் கிரண் ராவ். 

திருமணத்திற்கு வரதட்சணையாக சோறு போடும் நிலத்தை விற்று பிரதீப்பிற்கு இரண்டாம் தாரமாக மணப்பெண் ஆனவரே ஜெயா. இவரையே தவறுதலாக தனது மனைவியாக நினைத்து, கதாநாயகன் தீபக் தவறாக தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். குடும்ப வன்முறையிலிருந்து விடுபட்டு திருமணத்தை புறக்கணித்து படிப்புக்காக முயற்சிக்கும் பெண். அவரின் கணவர் பிரதீபோ, ஜெயா தொலைந்த இரவில் அவரைத் தேடாமல் வேறொரு பெண்ணை தேடிப் போவார். “ஜெயா போனால் என்ன, அவங்க வீட்டில் தந்த மோட்டார் பைக் இருக்குல்ல“ என்று சொல்லும் இடத்திலும் காவல் நிலையத்தில் நகையை வாங்கிக்கொண்டு ஜெயாவை அடிக்கும் காட்சியிலும், வாழ்க்கைத் துணையாக வந்த பெண்ணை விட, அந்தப் பெண் கொண்டு வரும் சீதனங்களை குறி வைத்தே பல திருமணங்கள் நடக்கிறது என்பதை அந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது. 

உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் தனித்து வாழும் மஞ்சு மாயி: இவரைப் பொறுத்தவரை கல்யாணம் என்பதே ஒரு ஏமாற்று வேலைதான். தனக்கு தெரிந்த வீட்டு வேலைகளை பற்றி ஃபூல்குமாரி பெருமையாக சொல்லும் போது மஞ்சு மாயி, “முட்டாளாக இருப்பது தப்பு இல்லை, ஆனால் அந்த அறியாமையை  நினைத்து பெருமைப்படுவது வெட்கக்கேடானது” என்று சொல்வார். இந்த ஒரு வரி, வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகும் பெண்கள் அனைவருக்கும் அறிவுரை சொல்வது போல் இருக்கும். “உன் மேல அன்பு வச்சிருக்கவங்களுக்கு உன்னை அடிக்க உரிமை இருக்குன்னு கணவர் சொன்னார். அதான் நானும் அந்த உரிமையை பயன்படுத்தினேன்”, “மரியாதையான பெண் என்பது மிகப்பெரிய மோசடியான வார்த்தை” என்று போகிற போக்கில் பேசும் சில ஆழமான வசனங்கள் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தும் காட்சிகள்.

ஒரு கட்டத்தில் ஃபூல்குமாரி செய்யும் இனிப்புப் பண்டத்தை, “என் வாழ்கையில் என்ன நல்லது இருக்கிறது இந்த இனிப்பை உண்ண” என்று கேட்கும் மஞ்சு மாயி, ஃபூல்குமாரி தீபக்கிடம் சேர்ந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் அந்த இனிப்பு வகையை அனைவருக்கும் உண்ண கொடுக்க, அவரையும் ஒருவர் உண்ண சொல்ல, அதை உண்ணும் தருணத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், மஞ்சு மாயி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சாயா கடம் “ஃபான்றி” (Fandry) திரைப்படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் மட்டும் அல்ல சில காட்சிகளில் வருபவர்களும் மனதில் இடம் பெற்றுவிடுகிறார்கள். 

தீபக்கின் அண்ணியாக வரும் கதாபாத்திரம் வேலைக்காக கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் துயரத்தை எந்த ஒரு நாடகத்தொனியும் இல்லாமல் இயல்பாக வெளிப்படுத்துவார். இன்னொரு காட்சியில் சமையலைக் குறித்து உரையாடல்கள் இடம்பெறும் போது “எனக்குப் பிடித்த உணவு என் மகனுக்கும் கணவனுக்கும் பிடிக்காது. எனக்கு என்ன பிடிக்கும் என்பதையே நான் மறந்து விட்டேன்”, ”பெண்களுக்கு தான் விரும்பிய உணவை சமைத்து சாப்பிடும் உரிமை இருக்கிறதா என்ன?” போன்ற கூர்மையான வசனங்கள் உள்ளன. ஒரு பெண் திருமணம் ஆனவுடன் மருமகள், அண்ணி என்று பல சொந்தங்களாக மாறுகிறாள். ஆனால் ஒரு தோழியாக மட்டும் மாறுவதில்லை என்ற கூர்மையான  வசனங்களும் படத்தில் இருக்கின்றன. 

சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை மிகவும் கூர்மையான நையாண்டியான வசனங்களால் ஆணாதிக்கத்தின் திரையை விலக்குகிறார் இயக்குனர் கிரண் ராவ். சமூகத்தின் இழிநிலையான அடுக்குகளை பெண்களின் கண்களுக்கு புலப்படாமல் இருப்பதை தொட்டுப் பேசியிருக்கிறார்.

பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது, வீட்டு வேலைகளில் மட்டுமே கவனமாக இருந்து குடும்பத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்பது மனு சாஸ்திரம். மனுதர்மம் இப்போது எங்கே இருக்கிறது? என்று தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேட்கிறது பார்ப்பனியக் கூட்டம். வட இந்திய கிராமங்களில் இன்றைக்கும் பெண்கள் நிலை இதுவாகத் தானிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திலிருந்து, ஜெயேந்திர சரஸ்வதியிலிருந்து, உபன்யாசம் செய்யும் சாமியார்கள் வரையுள்ள உயர்சாதிப் பார்ப்பனர்கள், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்றே பேசுகின்றனர். பெண்களை சுயமரியாதையற்ற ஒரு பண்டம் என்பதையே மனு சாஸ்திரம் எழுதி வைத்திருக்கிறது.

சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்களுக்கு எதிரான சொல்லப்போனால் மனிதகுலத்திற்கு விரோதமான மனுதர்ம நூலை 1927-ஆம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் பல்வேறு தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது.  

இந்தப் படத்தின் ஃபூல்குமாரி கதாபாத்திரம் மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் ஆணாதிக்கக் கட்டமைப்பே பெண்களை சக மனிதியாக நினைக்காமல், தன் சுக வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்டவள் என்கிற எண்ணத்தின் மேல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மேல்தான் இயக்குனர் நகைச்சுவை காட்சிகளால் கல்லெறிந்திருக்கிறார். 

ஒரு காட்சியில், விவசாயத்தில் நல்ல விளைச்சல் செய்ய நம்பிக்கை மட்டும் போதாது அறிவியலும் வேண்டும் என்று புரிந்துகொண்டேன், அப்பொழுது மாறத் தொடங்கினேன் என்று ஜெயா கூற, தன் கணவரின் பெயரை கூறுவதை அவமரியாதையாக நினைக்கும் ஃபூல்குமாரி இறுதிக்காட்சியில் இரயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்று கொண்டிருக்கும் தீபக்கை சத்தமாக பெயர் சொல்லி அழைத்த கணம், அந்தப் பெண் வேறு ஒரு பெண்ணாக உருமாறத்தொடங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 

பெண்களுக்கும் சுயமரியாதை வேண்டும், பிற்போக்குத்தனம் களையப்பட வேண்டும், கல்வி பெற வேண்டும், தனித்து இயங்கும் ஆற்றல் பெற வேண்டும் என்பதை வெவ்வேறு நிலைகளிலிருந்து நகைச்சுவையின் ஊடாக பேசுகிறது இப்படம். பெண்கள் அணியும் ஒரு முக்காடை வைத்து இந்திய கலாச்சாரம் பெண் சமூகத்தின் மீது போர்த்தி விட்ட முக்காடுகளை விலக்கிக் காட்டியிருக்கும் இப்படக்குழுவினர் பாராட்டத்தக்கவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »