சன்-டிவி இராமாயணம் தொடருக்கு எதிர்ப்பு – திருமுருகன் காந்தி

ஆரிய இனவெறியை வளர்த்து, ஆதிக்க அரசியலை நிலை நிறுத்தும் சன் டி.வியின் ‘இராமாயணம்’ தொடருக்கு எதிரான குரல்கள் வலுவாக எழ வேண்டும் என்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் வலைதளத்தில் ஏப்ரல் 30, 2024 அன்று பதிவு செய்தது.

1980களில் ராஜீவ்காந்தியின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியாவில் பாபர் மசூதியில் ராமருக்கான பூசைகள் அனுமதிக்கப்பட்டது. பூட்டிய கதவுகளை திறந்து வைத்தார் ராஜீவ். அதோடு நிற்கவில்லை அவர். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரசின் ரேடியோக்களில் ஒலித் தொடராக வெளியிட்டார். இத்தோடு முடியவில்லை, பின்னர் தூர்தர்சனில் சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியா முழுவதும் சாமானிய மக்களின் மத்தியில் ராமன் புனித பிம்பமாக கொண்டு செல்லப்பட்டது. அதுவரை படிக்க, கேட்கப்பட்ட ராமாயணத்திற்கு விஷுவல் (visual) வடிவம் கொடுத்து இந்துக்களின் ஓட்டுகளை அறுவடை செய்யலாமென ராஜீவ் நினைத்திருந்தார். ஆனால் ராமன் இந்தியத்தன்மை என்பதிலிருந்து இந்துத்துவ தன்மைக்கு இத்தொடர் கொண்டு சென்றது.

அக்காலகட்டத்தில் RSS வளர தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் ராஜீவ்காந்தி அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்தார். இராமாயண சீரியல் ஒளிபரப்பாகும் நாட்களில் குடும்பம் குடும்பமாக ஆரத்தி, பூசை சாமான்களோடு மக்கள் டி.வியை வழிபாடு செய்தார்கள். இத்தொடர் நடிகர்கள் நடமாடும் கடவுளாக போற்றப்பட்டார்கள். நடிகர்கள் தேர்தலில் வெற்றிபெற்றார்கள்.

இராமாயண சீரியலுக்கு பின் இந்துத்துவ அமைப்புகளில் அதிகளவில் ஆட்கள் இணைந்தார்கள். ராம்ஜென்மபூமி பிரச்சாரம் வலுவாக கால் ஊன்ற இத்தொடர் பெரிதும் காரணமாக அமைந்தது. ராமர் பிறந்த இடத்தை பற்றிய உணர்வு இல்லாத மக்களிடத்தில் அயோத்தியை பற்றிய பிம்பம் வலுவாக பற்றிக்கொண்டது. உணர்வுப்பூர்வமாக நடுத்தர இந்தியா இராமயணத்தை வரவேற்றது. இதை பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. ஒற்றை இலக்கில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக கிட்டதட்ட ஆட்சியில் பங்கெடுக்குமளவு ராஜீவ் காலத்தில் வளர்ந்தது. இந்தியாவின் ஆட்சியை முடிவு செய்யுமிடத்தில் பாஜகவை வளர உதவியவர் ராஜீவ்காந்தி.

பாபர் மசூதியை இடிக்க வேண்டுமெனும் கோஷத்தை இந்துத்துவ அமைப்பினர் பரவலாக்கியதற்கு டி.வி தொடர் முக்கிய காரணி. அத்வானி ரத யாத்திரையை நடத்தியபோது மக்கள் இராமாயண சீரியலின் தாக்கத்தில் பெரும் கூட்டமாக இந்துத்துவ அரசியலுக்குள் கரைந்து போனார்கள். உ.பி, பீகாரில் முஸ்லீம் மீதான படுகொலைகள் நடந்தன. உ.பியின் காங்கிரஸ் அரசு ஹாசிம்புரா எனும் ஊரில் மிகக்கொடூரமான முஸ்லீம் படுகொலையை நடத்தியது. பீகார் பகல்பூரில் முஸ்லீம்கள் படுகொலையானார்கள். கான்பூர், அலகாபாத், மும்பை என முஸ்லீம் மீதான இந்த ரத்த சகதியில் சாமானியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக அணிவகுப்பதற்கு ‘ராம்ஜென்மபூமி’ பிரச்சாரமும், அதற்கு வலுசேர்த்த இராமாயண தொடரும் முக்கிய காரணம்.

இராமாயணத்தை தொடர்ந்து மகாபாரதமும் ஒளிபரப்பானது. வட இந்தியாவில் காவி அரசியல் வலுப்பெற்றது. இந்துத்துவ பார்ப்பனிய சார்பான ஜெயலலிதா அம்மையாருடன் இராஜீவ்காந்தி கூட்டணி வைத்து, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இருந்த தமிழ்நாட்டில் ‘கரசேவை’ அரசியலை கொண்டுவர வைத்தார். அத்வானியின் ரதயாத்திரை ரத்தவெள்ளத்தில் நடந்ததை லல்லுபிரசாத் யாதவ் தடுத்து நிறுத்தியதில் வி.பி.சிங் அரசை அத்வானி கவிழ்த்தார். ராஜீவின் ஆதரவில் பிரதமரான சந்திரசேகர், திமுக ஆட்சியை ராஜீவின் விருப்பத்திற்காகவும், ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்காகவும் கலைத்தார்கள். இப்படியாக 90-களின் அரசியலை இந்துத்துவத்துற்குள் தள்ளிய சூழலை வலுப்படுத்தியதில் தூர்தர்சனின் ‘இராமயணம்’ முக்கியமானது.

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக பலவேறு அடக்குமுறைகளோடு நாம் போராடிக்கொண்டிருக்கும் சூழலில் சன் டி.வி இராமாயணம் சீரியலை நடத்துவது எதற்காக என்பது புரியாததல்ல. இந்துத்துவ அரசியலோடு சமரசம் செய்துகொண்டு தன் வணிகத்தை விரிவு செய்வதற்காக நடத்தப்படும் சீரியல் தமிழர் அரசியலை படுகுழிக்குள் தள்ளும். தமிழினத்திற்காக எள்ளளவும் அக்கறை கொள்ளாத வணிக நலனை முன்னிறுத்தும் சன் டிவியின் இச்செயலை தொடக்கத்தில் எதிர்த்து தடுக்கவில்லையெனில், நாம் போராடி உருவாக்கியிருக்கும் முற்போக்கு திராவிட அரசியல் தளம் தகர்ந்து போகும்.

ஒரு முதலாளியின் கொள்ளை லாபத்திற்காக தமிழர் அரசியல் பலியிடப்படுவதை எவராலும் ஏற்க இயலாது. இத்தொடர், தமிழ்நாட்டில் வளர துடிக்கும் இந்துத்துவ அரசியலுக்கு உரம் போடும். மூலைமுடுக்குகளில், பெண்களிடத்தில், நடுத்தர-அடித்தட்டு வர்க்கத்திடம் இந்துத்துவ அரசியலை கொண்டு சேர்க்கும். இதன் விளைவாக வட இந்தியாவில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது போல தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் அரசியல் துடைத்தெறியப்படும். இதை பற்றி திமுக, அதிமுக கவலைகொள்ளாமல் கடந்து போகலாம், ஆனால் தமிழினத்தின் மீது சுயநலமில்லாமல் நேசம் வைத்திருக்கும் இன உணர்வாளர்கள், பெரியாரிய தோழர்கள் எவ்வாறு அமைதிக்காக்க இயலும்?

ஆரிய இனவெறியை வளர்த்து, ஆதிக்க அரசியலை நிலை நிறுத்தும் சன் டி.வியின் ‘இராமாயணம்’ தொடருக்கு எதிரான குரல்கள் வலுவாக எழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »