கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இசுரேல் அரசு காசா மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து தனது இனவெறிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது இசுரேல். தற்போது இசுரேலின் போர்வெறி காரணமாக பாலஸ்தீனத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) அண்மையில் அறிக்கையாக ஆகஸ்டு 26, 2024 அன்று வெளியிட்டுள்ளது.
இசுரேல் – பாலஸ்தீனத்தின் மீது தீவிரமாக தாக்குதலைத் தொடங்கிய அக்டோபர் 2023இல் இருந்து தற்போது வரை இசுரேலியப் படைகள் செய்து வரும் மனித உரிமை மீறல்கள் காணொளிகளாகவும் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் ஊடகவியலாளர்கள் வரை கொன்று குவித்த இசுரேல் தற்போது பாலஸ்தீனிய மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளது. மேலும் போர் விதிமுறைகளை மீறி, மருத்துவர்களை சித்திரவதை செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த பத்து மாதங்களில் 890 முறை இசுரேல் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அங்குள்ள 36 மருத்துவமனைகளில் 31 மருத்துவமனைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையும் இசுரேலால் குண்டுவீசி தரை மட்டமாக்கப்பட்டிருக்கிறது.
காசாவில் மீதமுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவ சேவையாற்றிய இவர்களும் தற்போது இசுரேல் படைகளால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இசுரேலியப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்ட செய்திக் குறிப்பிலிருந்து கீழுள்ள அட்டவணை தொகுக்கப்பட்டுள்ளது.
இசுரேல் குண்டுவீசி நிகழ்த்திய படுகொலைகள் | 3,457 |
காயம் / படுகாயமடைந்தோர் | 91,128 |
பெற்றோர் இருவரையும் அல்லது அவர்களில் ஒருவரை இழந்த பாலஸ்தீனிய குழந்தைகள் | 17,000 |
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் | 69% |
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் | 20 லட்சம் |
இசுரேல் பயன்படுத்திய வெடிபொருட்கள் | 82,000 |
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பாலஸ்தீனியர்கள் | 49,480 |
மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டும் உயிர் பிழைக்காத பாலஸ்தீனியர்கள் | 39,480 |
காணாமல் ஆக்கப்பட்டோர் | 10,000 |
படுகொலை செய்யப்பட்ட பெண்கள் | 10,980 |
படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் | 16,314 |
கொல்லப்பட்ட விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் | 107 |
பட்டினியால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் | 35 |
ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உணவுப் பற்றாக்குறையால் இறக்கும் அபாயத்தில் உள்ள குழந்தைகள் | 3,500 |
சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ள காயமடைந்த மக்கள் | 12,000 |
வெளிநாட்டில் சிகிச்சை தேவைப்படும் பல்வேறு நோய்கள் | 3,000 |
மரணத்தை எதிர்நோக்கும் புற்றுநோயாளிகள் | 10,000 |
இடப்பெயர்ச்சி காரணமாக தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் | 1,737,524 |
காசாவில் இருந்த கைதிகள் | 5,000 |
மருத்துவக் குழுக்களிடமிருந்த தடுப்புக்காவல் வழக்குகள் | 310 |
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் (இதுவரை பெயர் வெளியிடப்பட்டவர்களில் இருந்து) | 36 |
படுகொலை செய்யப்பட்ட மருத்துவக் குழு உறுப்பினர்கள் | 885 |
படுகொலை செய்யப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்கள் | 79 |
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் | 165 |
ஹெபடைடிஸ் ’ஏ’ நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் | 71,338 |
ஆபத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் | 60,000 |
மருந்துகள் நுழைவதைத் தடுப்பதால் ஆபத்தில் உள்ள நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் | 3,50,000 |
இசுரலால் குறி வைக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் | 168 |
இசுரலால் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் | 332 |
இசுரலால் அழிக்கப்பட்ட தேவாலயங்கள் | 3 |
இசுரலால் அழிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் | 198 |
இசுரலால் முற்றிலும் அழிக்கப்பட்ட மசூதிகள் | 610 |
இசுரலால் அழிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் பண்பாட்டு தளங்கள் | 206 |
இசுரலால் முற்றிலும் அழிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் | 117 |
பகுதியளவில் அழிக்கப்பட்ட மசூதிகள் | 211 |
அழிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் | 34 |
முற்றிலும் அழிக்கப்பட்ட குடியிருப்புகள் | 1,50,000 |
வாழ தகுதியற்ற குடியிருப்புகள் | 80,000 |
பகுதியளவில் அழிக்கப்பட்ட குடியிருப்புகள் | 2,00,000 |
அழிக்கப்பட்ட மின்சார நெட்வொர்க்குகள் | 3,030 km |
அழிக்கப்பட்ட நீர் கிணறுகள் | 700 |
இஸ்ரேல் உருவாக்கிய புதைகுழிகள் (இந்த கல்லறைகளில் இருந்து 520 உடல்கள் மீட்கப்பட்டன.) | 7 |
இசுரலால் குறி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் | 131 |
சேவை முடக்கப்பட்ட மருத்துவமனைகள் | 34 |
சேவை முடக்கப்பட்ட மருத்துவ மையங்கள் | 68 |
குறி வைக்கப்பட்ட சுகாதார மையங்கள் | 162 |
இவற்றில் 50க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் 300 ஆம்புலன்ஸ்கள் வண்டிகளும் இசுரேல் படைகளால் திட்டமிட்டே சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பாலஸ்தீன மருத்துவ கட்டமைப்புகளை சிதைத்தும் மக்களின் குடிநீர் ஆதாரங்களை அழித்தும் வருவதால் காசாவில் குழந்தைகளிடையே போலியோ பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் தடை செய்யும் மனித நேயமற்ற செயலை இசுரேல் தொடர்ந்து செய்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளை இசுரேல் தொடர்ந்தால், போலியோ தடுப்பூசி தேவைப்படும் 640,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கைக் குரல் எழுப்புகின்றனர்.
இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன மக்களுக்கான உணவு/ நீர் மற்றும் மருந்துகளைத் தடுப்பதை ஒரு போர்க் குற்றமாக குறிப்பிட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம். உயிர்காக்கும் மருந்துகளை காசாவுக்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் விதிகளை இசுரேல் மீறுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2009-இல் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலை போலவே பாலஸ்தீனத்திலும் பல மனித உரிமை மீறல்கள் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெரும் சோகம் நிகழும் போது உடனடி போர்நிறுத்ததிற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது இன்றியமையாததாகிறது. குறைந்தபட்சம் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டால் மட்டுமே பெருந்தொற்றுகளைத் தடுக்க முடியும். ஆனால் அத்தகைய மனித நேய முறைகள் அனைத்தையும் வழிமறித்து நிற்கிறது இசுரேலிய அரசு.