ஊடகப் போராளி – தராகி சிவராம்

தர்மரத்தினம் தராகி சிவராம் – இலங்கை அரசால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலையை வெளி உலகிற்கு அறிவித்த தமிழ் ஊடகவியலாளர். தனது ஊடகப் பணியையே போராளிக் குணத்துடன் மேற்கொண்ட தராகி சிவராம், ‘தமிழ்நெட்.காம்’இன் மூத்த ஆசிரியருமாகவும் பணியாற்றினார். ஈழத்தமிழர் குறித்து ஊடகங்கள் எழுதத் தயங்கிய உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்காக கடந்த ஏப்ரல் 28, 2005 அன்று சிங்கள பேரினவாத அரசினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவர் மறைந்து விட்டாலும் அவரின் ஊடகவியல் பணி உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29, 2010 அன்று லண்டனில் நினைவேந்தல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் மார்க்.பி.விட்டேக்கர் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

“தராகி சிவராம் நினைவு நிகழ்வில் என்னைப் பேச அழைத்ததற்காக திரு.அருண் கணநாதன், திரு.உவிந்து குருகுலசூரியா மற்றும் தமிழ் சட்ட ஆலோசனை அமைப்பிற்கு நான் நன்றி கூறுகிறேன்.

சிவராமைப் போன்று, இலங்கையில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து பத்திரிகையாளர்களையும் நினைவு கூர்வது முற்றிலும் பொருத்தமானது. இலங்கை மட்டுமல்ல, தன்னை ஜனநாயக நாடாகக் காட்டிக்கொள்ளும் எந்தவொரு நாட்டிலும், பேச்சு சுதந்திரத்தை அடிப்படை உரிமையாகப் பாதுகாக்க வேண்டிய முக்கியத் தேவையை இவர்களின் தியாகங்கள் உணர்த்துகின்றன.

 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாளன்று இரவு, இலங்கையின் மிகவும் முக்கியமான, தனது எழுத்தின் மூலம் இலங்கை அரசுக்கு கோபமூட்டிய ஊடகவியலாளர் தராகி சிவராம் கொழும்பு வீதியில் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார். இருபது ஆண்டுகளுக்கும் மேலான எனது நண்பன் இறந்துவிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் இறந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா! என்று எண்ணினேன்.

(படம்: பேராசிரியர் மார்க்.பி.விட்டேக்கர்)

பிறிதொரு இரவு தொலைபேசி அழைப்பு வரும், கதவு தட்டப்படும், தராகியின் குரல், “மிஸ்டர்.விட்டேக்கர், என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் மச்சாங்” (சிவராம் ‘மச்சான்’ என்ற வார்த்தையை ‘மச்சாங்’ என்று உச்சரிக்க விரும்புவார்) என்று ஒலிக்கும் என்று எண்ணினேன்.

ஆனால் அப்படி நடக்காது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் இறுதிச் சடங்கு முடிந்த உடனேயே, அவரது உறவினர் சவப்பெட்டிக்குள் இருந்த என் நண்பனின் குளிர்ந்த முகத்தைத் தொட்டதாக என்னிடம் கூறினார். அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தெரிந்து கொள்வது வேறு. புரிந்து கொள்வது வேறு. அதனால், எனது நண்பர் என்னை விட்டு பிரிந்த துயரத்தை இந்நிகழ்வின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

ஆனால், நிச்சயமாக, இந்த துக்கத்தின் பின்னாலுள்ள, உண்மைகளை சொல்ல வேண்டிய ஒரு பெரிய நோக்கம் இங்கே இருக்கிறது. சிவராமின் மரணம் மறைந்து போகக்கூடிய வரலாறு அல்ல. 1992 முதல் 2009 வரை இலங்கையில் நடைபெற்ற போரின் போது, 18 ஊடகவியலாளர்கள் உண்மை செய்திகளை வெளியிட்டதற்காக கொல்லப்பட்டார்கள். இத்தகவலை ‘ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு’ உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசு ஜே.வி.பி-க்கு எதிராக நடத்திய யுத்தம் உட்பட, 1983 முதல் 1992 வரையிலான காலப்பகுதியில், பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கிறோம். சிவராமின் நண்பரும் வழிகாட்டியுமான ரூபவாஹினி செய்தி தொகுப்பாளர் ரிச்சர்ட் டி சொய்சாவும் இதில் ஒருவர். (சிவராமை பத்திரிகைத் துறைக்கு ஈர்த்தவர் ரிச்சர்ட் டி சொய்சா)

இலங்கை அரசால் கடத்தப்பட்ட சிறிது காலத்துக்குப் பிறகு, டி சொய்சாவின் உடல் மொரட்டுவை கடற்கரையில் (Moratuwa coast) கரை ஒதுங்கியது. அந்த உடலின் பாகங்களைக் கொண்டு சொய்சாவின் உடலை அடையாளம் கண்டார் சிவராம்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்; ‘தி சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் தமிழரில்லை. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என மேலும் பல ஊடகவியலாளர்கள் இலங்கை அரசால் நாடு கடத்தப்பட்டனர். ஜே.எஸ். திசைநாயகம் சிறையில் அடைக்கப்பட்டார். (ஜனவரி 13, 2010 அன்று அவர் சிறை மீண்டார்). இந்த நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோருபவர்கள், போர் தேவையென்று சில சாக்குபோக்குகளைக் கூறியுள்ளனர். ஆனால், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகிய இரண்டும் அண்மையில் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த (2009) மே மாதம் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்தும்,  ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை முடியவில்லை.

அரசியல் ஆய்வாளரான பிரகீத் எக்னலிகொட, 2010 ஜனவரி 24 அன்று தேர்தல் பற்றிய செய்தி சேகரிப்பின் போது காணாமல் போனது ஒரு கசப்பான உதாரணம். இவ்வாறு இலங்கை அரசு ஊடகவியலாளர்கள்கள் மீது வன்முறையை ஏவி விடுவது தொடர்கதையாகிப் போனது. இது வருத்தத்திற்குரிய விடயம். ஆனால் இதில் எதுவுமே சிவராமை ஆச்சரியப்படுத்தியிருக்காது. இலங்கை அரசு தொடுத்த வன்முறையை தனது உணர்ச்சிகளைக் கடந்து அவர் புரிந்து கொண்டதுதான் அவரது முதன்மையான பண்புகளில் ஒன்று. இதனால், இலங்கை அவரை கொல்வதற்கு திட்டமிடக்கூடும் என்ற எண்ணமும் அவரை மாற்றவில்லை.

அவர் இலங்கைக்கு கடினமான இலக்காக மாறி இருந்தார். முக்கியமாக சர்வதேச ‘பாதுகாப்பு’ நடைமுறைகளுக்கு எதிராக, இலங்கை அரசு நடந்து கொள்வதை உலகளாவிய கவனத்திற்கு கொண்டு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்தார். நான் பின்னோக்கிப் பார்க்கிறேன், மிகவும் ஆச்சரியமாக உணர்கிறேன். அவரைப் போல, மிகுந்த தெளிவுள்ள ஒரு பத்திரிகையாளர் இலங்கையில் எப்படி இருக்க முடியும்? என்பதுதான் என் வியப்பிற்குக் காரணம். சிவராமுக்குப் பின் வந்த ஊடகவியலாளர்கள்,  அவரைப் போலவே தங்கள் உயிரைப் பணயம் வைத்ததையும் வியப்புடன் பார்க்கிறேன். அவர் கொல்லப்பட்டதைப் போலவே அவர்களும் கொல்லப்பட்டார்கள். உயிருக்கு அச்சப்படாத இத்தகைய தன்மையை எவ்வாறு விளக்குவது?

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. 1995-இல் (சிவராம் முதல்முறையாக அமெரிக்காவுக்குச் சென்ற ஆண்டில்) தனது ஊடகப்பணி காரணமாக தான் கொல்லப்படப் போவதை பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். அமெரிக்க தகவல் முகமையின் (U.S. Information Agency-USIA) நிகழ்வுக்காக சிவராம் அந்த ஆண்டு அமெரிக்காவிற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில், USIA பல்வேறு நாடுகளில் இருந்து முக்கியமான ஊடகவியலாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘ஜனநாயகம்’ மற்றும் ‘பன்மைத்துவம்’ குறித்த விழுமியங்களைப் பரப்புவதற்கு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தது. USIAயின் இந்த நடவடிக்கை சிவராமுக்கு வேடிக்கையாக இருந்தது. எவ்வாறாயினும், “Building Democracy in Diverse Communities” நிகழ்ச்சிக்காக சிவராம்  செப்டம்பர் 14, 1995 அன்று வாஷிங்டன்-க்கு வருகை புரிந்தார்.

அங்கிருந்து மூன்று வாரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா, அக்ரோன் ஓஹியோ, மியாமி புளோரிடா ஆகிய இடங்களுக்கு சென்று இறுதியில் மீண்டும் வாஷிங்டன் திரும்ப வேண்டும். அங்கிருந்து அக்டோபர் 12, அன்று சிவராம் உடனடியாக இலங்கைக்கு திரும்ப வேண்டும். “என்ன ஒரு இனிமையான பயணம்!” என்று அவரது USIA பயண அட்டவணையை கிண்டல் செய்தார் சிவராம். ஆனால் ஆறு மாதங்களுக்கான நுழைவு விசாவை கையில் வைத்திருந்த அவர், அதற்கு பதிலாக என்னை பார்க்க வந்தார்.

அவர் தென் கரோலினாவில் உள்ள அய்கென் நகருக்கு வந்த போது, சாம்பல் நிற ஸ்போர்ட்ஸ் கோட் அணிந்து, ஒரு சிறிய சூட்கேசூடன் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வைத்திருந்தார். அதில் ஜனநாயகம் மற்றும் அரசியல் குறித்த துண்டு பிரசுரங்கள் நிரம்பியிருந்தன. அதைக் குப்பைத் தொட்டியில் போடும்போது, “இவை அனைத்தும் நிலையற்ற தன்மையானவர்களால் (giddy insects) எழுதப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறினார். இருப்பினும், அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களை முதல் பார்வையிலேயே அவருக்கு பிடித்திருந்தது. “நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான, அப்பாவி மக்களைப் போன்றவர்கள். உங்களைப் பார்ப்பது குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பது போன்று இனிமையானது, மச்சாங்.” என்று கூறினார். குறிப்பாக ஐகெனின் உள்ளூர் பல்பொருள் அங்காடிகள், முன்-கீல்ஸ் சூப்பர்மார்க்கெட், வால்மார்ட் சூப்பர்சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவதையம் அங்கு உண்பதையும் விரும்பினார்

அப்போது கலிபோர்னியாவில் ஆசிரியராக இருந்த என் மனைவி, விடுமுறைக்கு வந்திருந்தார். நாங்கள் சிவராமை தென் கரோலினாவின் சுற்றுலா நகரமும், அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கிய இடமுமான சார்லஸ்டனுக்கு அழைத்துச் சென்றோம். (இது சிவராம் தனிப்பட்ட ஆராய்ச்சி செய்வதற்காக சென்றது)

ஏனெனில் சிவராம் தெற்காசியாவிலிருந்து தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, ​​அவரது பத்திரிகை ஆர்வம் முழுமையாக மேலோங்கியிருந்தது. அவர் எப்போதும் அந்நியர்களுடன் உரையாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார். அவர் சென்ற ஒவ்வொரு நகரத்திலும், சிவராம் ஏழைகளையும் ஒதுக்கப்பட்டவர்களையும் தேடி அலைந்தார். ​​வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எத்தியோப்பிய அரசியல் அகதிகள், மெக்சிகன் தொழிலாளர்கள், LAவில் ஒரு முக்கிய சீன-அமெரிக்க எதிர்ப்பாளர், கறுப்பின தொழிலாளர்கள், மியாமியில் ஒரு மார்க்சிஸ்ட் பாதிரியார் (இவருடன் ஒரு மாலை, பிஸ்கெய்ன் விரிகுடாவில் ஹைட்டிய மக்கள் பேரழிவைப் பற்றிப் பேசினார்) மற்றும் எல்லா இடங்களிலும் ஒழுங்கமைக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் போன்றோர்களுடன்  உரையாடினார் சிவராம்.  அவருடைய அதிகாரப்பூர்வ பயணத் திட்டத்தில் இவர்களில எவரும் இல்லை. ஆனால் மற்றவர்கள் கேட்கப் பழகாத அந்தக் குரல்களுக்கு சிவராம் காது கொடுத்தார்.

சார்லஸ்டனில், மீட்டிங் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ​ஒரு மறியல் போராட்டத்தை பார்த்தார் சிவராம். அவர் உடனடியாக போராட்டத்தில் இணைந்து, தொழிலாளர்களுடன் பேசத் தொடங்கினார். இறுதியில் வேலைநிறுத்தத்தின் முழு காரணத்தையும் கண்டுபிடித்தார். தென் கரோலினாவின் தொழிலாளர் அரசியலைப் பற்றி நான் பல வருடங்களில் கற்றுக்கொண்டதை விட, சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் அதிகம் கற்றுவிட்டார். ஒரு உள்ளூர் நாளிதழை வாங்கி, மறியல் நிகழ்வு முழுமையாக எழுதப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நண்பரே, உங்கள் USIA நபர்கள், தங்களுக்கு ஊடக சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள்” என்று கூறி சிரித்தார்.

அவரது முதல் வருகையின் போது, ​​பல்வேறு சமயங்களில், அவரை மற்ற கல்வியாளர்களுடன் விருந்துக்கு அழைத்துச் சென்றோம். (இவை எப்போதும் சிக்கலாக முடிந்தன) நாங்கள் ஒயின் மற்றும்  சீஸ் பற்றி நகைச்சுவையாகப் பேசுவோம். உடனிருக்கும் கல்வியாளர்கள் (சுய முக்கியத்துவம் கருதுபவர்களாக  இருந்தால்), உலகம், அரசியல், தத்துவம் மற்றும் இலக்கியம் பற்றி அவர்கள் நினைத்ததை சிவராமுக்கு விரிவுரை செய்ய முயற்சிப்பார்கள். சிவராம் பொதுவாக அவர்களை விட அனுபவம் மிக்கவர் என்பதால், இந்த உரையாடல் மோசமான சூழலை உருவாக்கி விடும்.

ஒருமுறை இளங்கலைப் பட்டம் பெற்ற ஒரு இளம் கல்வியாளர், ஹெகல் குறித்து கோஜெவே எழுதியதை சிவராமிடம் விளக்க முற்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. இந்த இளைஞன் கோஜெவே பற்றி எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதை கோஜெவே-வை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டினார் சிவராம். 

ஒரு அரசியல் செயல்பாட்டாளரின் உண்மையான அடையாளம் அவருக்கு உண்டாகும் மரண அச்சுறுத்தலும் சிறைவாசமுமே என்று கூறுவார். ‘அரசியல் ரீதியாகச் செயல்படுபவர்கள்’ என்று தங்களைக் கருதுவோர் குறித்து சிவராம் சற்று கடுமையாகவே விமர்சிப்பார். “நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் விளையாடுகிறீர்கள்” (“You have to risk something. Otherwise you are just playing”) என்று கூறுவார்.

தன்னுடைய மாலை பொழுதுகளை இனிமையான இசை, மசாலா உணவு, சுவர்களில் இருக்கும் எர்சாட்ஸ் பழங்கால ‘மூன்றாம் உலகம்’ பொருட்கள், அரசியல்- இவற்றுடன் ரசிக்க விரும்புவார்.

இவ்வாறு வீடு திரும்பும் வழியில், (எந்த நாள் என்று நினைவில் இல்லை), கருவேல மரங்களில் ஒளிரும் நிலவின் ஒளியை ஏக்கத்துடன் பார்த்தார் சிவராம். தான் இறக்கும் போது மட்டக்களப்பு மண்ணில் கலந்து, “அதன் காடுகளுடனும் பூக்களுடனும் ஒன்றாக மாறுவேன்” என்று கூறினார்.

“நாம் ஏன் மரணத்தைப் பற்றி பேசுகிறோம்?” என நான் கேட்டேன்.

“ஏனென்றால், இளைஞனே, நான் இப்போது செய்து கொண்டிருப்பது இறுதியில் என்னைக் கொல்லப் போகிறது.” – என்றார் சிவராம்.

நாங்கள் இதைப் பற்றி நிறைய பேசினோம். அவர் இறந்தவுடன் எனக்கு ஒரு பாட்டில் சாராயம் தபாலில் வரும் என்று கூறினார். “நான் அதை என் உயிலில் எழுதி வைத்துள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

“நீங்கள் அதை விரும்பாவிட்டால், ஜின் பாட்டிலாக மாற்ற வேண்டுமா?”

“சாராயம் போதும். ஆனால் நீங்கள் சாகப் போவதில்லை” – என்றேன்.

“ஓ நான் சாகப் போகிறேன், இளைஞனே! சாராயத்தை நினைவில் கொள்.”

அவர் கொல்லப்பட்டதை நான் தபால் மூலம் அல்ல, தொலைபேசி அழைப்பின் மூலம் அறிந்தேன். அடுத்த சில வாரங்களில், அவரது நண்பர்கள், அவரது பத்திரிகை சகாக்கள், கல்வியாளர்கள் ஆகியோர் அவரைக் கொன்றவர்கள் யார் என்பது குறித்து பேச என்னை அழைத்தனர். யாருக்கும் சரியாக எதுவும் தெரியாது, நிச்சயமாக, எங்களுக்கு இன்னும் தெரியாது. இருப்பினும் நம் சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்டோம். குறைந்தபட்சம், அவரது மரணத்திற்கான நீதியை பெறுவது ஒன்றே அவருக்கு செலுத்தும் பொருத்தமான இறுதி அஞ்சலியாக இருக்கும். 

அவர் கொலை செய்யப்பட்ட மறுநாள், தெஹிவளை கார்கில்ஸில், நான் அவருடன் வாங்கிய கடைசி போத்தலில் இருந்து ஒரு கிளாஸ் சாராயம் எடுத்து குடிக்க உட்கார்ந்தபோது, ​​நான் யோசிக்க ஆரம்பித்தேன். அவர்  ஏன் கொல்லப்பட்டார் ? அல்லது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் கூறியது போல, அவர் ஏன் யாரோ ஒருவரால் கொல்லப்பட வேண்டும்? அவர் தனது ஊடகப் பணியில் மிகவும் உறுதியாக  இருந்ததே எனக்கான பதிலாகத் தெரிந்தது.

தனது ஊடகப் பணியில், பாதிக்கப்பட்ட மக்கள் (ஈழத்தமிழர்கள்) அனைவருக்கும் நீதி கிடைப்பதில், அவர்களுக்காக குரல் எழுப்புவதில், அவர் உறுதியாக இருந்தார். ஈழத்தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகளை பற்றி எழுதுவதற்கு உறுதி பூண்டிருந்தார். சுருக்கமாக கூறவேண்டுமென்றால், மிக வெளிப்படையாக, அவர் சிவராமாக இருந்தார்.

எடுத்துக்காட்டாக, சிவராம் தராகியாக (ஊடகவியலாளராக)  மற்றும் ‘தமிழ்நெட்’டின் ஆசிரியராக தனது பணியின்போது செய்தவற்றை கவனியுங்கள். அவற்றில் சிலவற்றை நான் பட்டியலிடுகிறேன்.

முதலாவதாக, பனிப்போரின் முடிவானது இலங்கையின் புவிசார் அரசியல் சூழ்நிலைகளை எவ்வளவு ஆழமாக மாற்றியமைத்தது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்ட சில ஊடகவியலாளர்களில் சிவராமும் ஒருவர். இந்த வலுவான தாக்கத்தை பிறர் கவனிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, (1990 ஆம் ஆண்டிலேயே) இது பற்றி சிவராம் குறிப்பிட்டிருந்தார்; இது இந்தியா, அமெரிக்கா, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் நடத்தப்படும் சிக்கலான அரசியலைப் பற்றிய ஒரு நுண்ணறிவை அவருக்கு வழங்கியது. (சம்பந்தப்பட்ட இந்த நாடுகளுக்கு இது சங்கடத்தைக் கொடுத்தது.)

இரண்டாவதாக, 1990-முதல் சிவராம் (ஒதுக்கப்பட்டவர்களிலும் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்த) கிழக்குக் கரையோர முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் பிரச்சனைகள் குறித்து எழுதினார். அனைத்து தரப்பினருக்கும் அவர் முன்மொழிந்த அரசியல் உத்திகளால் அவர்களின் பிரச்சனைகள் கவனம் பெற்றன. (பொய்யான அரசியல் முடிவுகளை விரும்பியவர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கவில்லை.)

மூன்றாவதாக, இன்று அரசாங்கங்கள் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையைப் பற்றி சிவராம் முழுமையாக புரிந்துகொண்டிருந்தார். அமைதி நாடுகளாக கூறப்படும் அரசுகளும் கூட வன்முறையைக் கையாண்டன. எடுத்துக்காட்டாக, இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது செய்த அடக்குமுறையை சிவராம் தனது அறிவைக் கொண்டு வெளிப்படுத்த முடிந்தது; துப்பாக்கி மூலமும்,  கைது வழியையுமே வழிமுறையாகக் கொண்ட நாடுகளுக்கு இந்தக் கருத்து எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, ஆனால் யூகிக்க முடிகிறது.

நான்காவதாக, சிவராம் ஒரு போராளியாகவும் அரசியல்வாதியாகவும் அனுபவம் மிக்கவராக இருந்தார். ஏனென்றால், எண்பதுகளின் தமிழ்த் தேசிய இயக்கங்களில் பங்குகொண்ட பல அறிவுஜீவிகளைப் போலல்லாமல், சிவராம் அப்போது அவருடைய அமைப்பான PLOTEன் இராணுவ மற்றும் அரசியல் பிரிவுகளில் செயல்பட்டார். இதன் விளைவாக இலங்கையின் சிக்கலான அரசியல் மற்றும் இராணுவ விடயங்களை  புரிந்துகொண்டு விளக்கும் திறமை பெற்றிருந்தார்.

ஐந்தாவது, சிவராம் எவருடனும் பேசுவதற்கு தயாராக இருந்தார். மேலும், அவரது ஆற்றல்மிக்க ஆளுமையால் (அவரது அரசியல் பின்புலத்தைப் பொருட்படுத்தாமல்) பெரும்பாலான மக்கள் அவருடன் பேசத் தயாராக இருந்தனர். இலங்கையில் அவர் இறப்பிற்கு துக்கம் அனுஷ்டிப்பவர்களில் பலர், சிங்கள ஊடகவியலாளர்கள். (சிங்கள ஆதிக்க மனநிலை கொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள்.) அவர்களில் பலர் இறுதியில் சிவராம் போலவே  மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகினர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருந்தவர்கள் விரும்பாத செய்திகளை எழுதியதற்காக இதே போன்ற அச்சுறுத்தல்களை அனுபவிக்க வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினருடனும் பேசுவதும், அவர்களுக்கிடையில் அறிவார்ந்த அரசியல் பார்வையை வழங்குவதும் அவரது ஆழமான ஊடக நெறியினால் நிகழ்ந்தது. அவர் தனது உரையாடலில் இருந்து யாரையும் ஒதுக்கிவிடவில்லை, இதை அவருடைய எழுத்தில் இருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதுவே அவரது கொலையாளிகளுக்கு, கொலையாளிகளாக மாற எண்ணியவர்களுக்கு கோபமூட்டியது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆறாவது, சிவராம் ஒரு முழுமையான பத்திரிகையாளராக இருந்தார். அவரின் ‘ஊடகவியல்’ என்பதன் பொருள், நிச்சயமாக, விளக்குவதற்கு மிகவும் சிக்கலான ஒன்று. ஏனெனில் இதைப் பற்றிய அவரது கருத்துகள் ஆழமான அரசியல் தொடங்கி ஆழமான நடைமுறை (உண்மைகளை இருமுறை சரிபார்த்த பின் எழுதுவது) வரை இருந்தது. இவ்வாறு சிவராமின் ஊடகவியல் தெற்காசிய இதழியலுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. அவர் இறந்தபோது, ​​ உலகம் முழுவதிலும் மக்கள் எழுப்பிய வலிமிகுந்த சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது.

ஏழாவதாக, தமிழ் மக்கள் அனைவருக்குமான உரிமைகளையும் நீதியையும் அடைவதே தனது இறுதி இலக்காக அவர் கருதினார். இந்த இலக்கிற்காக கடுமையான உழைப்பு மற்றும் தளராத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். இந்த இலக்கை எவ்வாறு அடையலாம் என்பதைப் பற்றி விவாதிக்கும் போது, ‘இலக்கிற்கு குறைவான ஒன்றே போதுமானது’ என்று நினைப்போரின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை.

இறுதியாக, அவரைப் பொறுத்தவரை, இலக்கை அடைவதற்கு அவரது மரணம் தேவையானது. மரணத்தின் மூலம் அவரது எதிரிகளை ஏளனப்படுத்த நினைத்தார். இறுதியாக, அவர் மிகவும் நேசித்த மட்டக்களப்பு மண்ணுடன் அவரது உடலின் மூலக்கூறுகள் கலக்கும்போது அவரது மரணம் மதிப்புமிக்கதாகிறது. இது குறித்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு, “(மட்டக்களப்பில்) நான் பூக்களுடன் பூப்பேன், இந்த எண்ணமே எனக்கு  ஆறுதலளிக்கிறது” என்று அவர் என்னிடம் கூறி இருந்தார்.

இதை கூறிவிட்டு அவர் சிரித்தார்.

அதனால் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது எனக்கு புரிந்தது. ஆனால் ‘அவர்கள்’ அவர்களின் நோக்கங்களுக்காக அவரைக் கொன்றனர். அவரது மரணம் எனக்கு எதை உணர்த்துகிறது? சிவராம் இறந்த உடனேயே அவரது நெருங்கிய உறவினர் ஒருவருடன் போனில் பேசியது நினைவிருக்கிறது. சிவராமின் மரணம் தம்மை மிகவும் கவலையடையச் செய்தது என்றும் அவரைப் போல் இனி வேறு யாருடனும் பேச இயலாது என்றும் அவர் என்னிடம் கூறினார். இதன் பொருள் என்ன என்று எனக்கு நன்றாக விளங்கிற்று. அவரை நன்கு அறிந்தவர்கள் அனைவரும் அவ்வாறே விளங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவர் இறந்தபோது-அந்த உரையாடல், அந்த புத்திசாலித்தனம், அந்த முரண்பட்ட மற்றும் அச்சமற்ற சிந்தனை- இவையும் இறந்து விட்டன. அவரின் பிரிவு நம் அனைவரையும் துயரில் ஆழ்த்தி விட்டது. எப்பேர்ப்பட்ட ஒரு நினைவை நாம் கொண்டு செல்லப் போகிறோம்!!

நன்றி.

பேராசிரியர் மார்க் பி. விட்டேக்கர் தென் கரோலினாவில் உள்ள  ஐகென் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். 1981ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தமிழ் சமூகத்தில் அரசியல், மதம் மற்றும் ஊடகவியல் மீது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்:

  • Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Hindu Temple (1998), the University of Amsterdam Press.
  • Learning Politics from Sivaram: The Life and Death of a Revolutionary Tamil Journalist in Sri Lanka (2007), Pluto Press.

மேலும் 17 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1982 ஆம் ஆண்டு தராகி சிவராம் தர்மரத்தினத்தை சந்தித்தார் விட்டேக்கர். அவர்கள் இருவரும் சிவராம் இறக்கும் வரை நெருங்கிய நண்பர்களாகவும்  சக ஊழியர்களாகவும் இருந்தனர். மேலே கொடுக்கப்பட்டுள்ள உரை ‘Learning Politics from Sivaram: The Life and Death of a Revolutionary Tamil Journalist in Sri Lanka’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »