Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

சே கெவாராவும் மார்க்சியத்தின் தொடர்ச்சியும் – புத்தகப் பார்வை

“லத்தீன் அமெரிக்க மண்ணில் ஊன்றப்பட்ட வித்தியாசமானதோர் எதிர்காலத்தின் விதை; மக்கள் நம்பிக்கை ஒன்று திரண்ட வான மண்டலத்தின் நட்சத்திரம்; வேதனைச் சாம்பலுக்குக் கீழ் கனன்று கொண்டிருக்கும் கரித்துண்டு” என கியூப சிந்தனையாளர் ஒருவர் வர்ணித்த வரிகளுக்கு சொந்தக்காரராய் வாழ்ந்தவர் சே கெவாரா (சே குவேரா)

கியூப விடுதலைக்குப் பின்பு, கியூபாவில் சே குவேரா புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார். அந்தக் கொள்கை கம்யூனிசத்தை எந்த காலத்திலும் நிலைநிறுத்தும் வகையில் இருந்தது. அவரால் கொண்டு வரப்பட்ட ‘திட்டமிடப்பட்ட நிதி முறை’ என்பது பொருளாதார – சமூக உறவுகளை இணைத்து சோசலிசப் பாதையில் கியூபாவை கொண்டு செல்லும் வகையில் அமைந்தது. சேகுவேரா கியூபாவை விட்டுச் சென்ற 1965-ம் ஆண்டுக்குப் பின்பு, அங்கு கொண்டு வரப்பட்ட நிதித் திட்டங்களால் பொருளாதார – சமூக உறவுகளில் இடைவெளி விழுந்தது. அந்த இடங்களில் முதலாளித்துவம் மெல்ல மெல்லப் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. அதன் காரணமாக சே குவேராவின் கட்டுரைகளின் மீதான விவாதங்கள் நடந்தன. அவைகளை விரிவாக விளக்குவதே எழுத்தாளர் அமரந்த்தா அவர்களின் எளிய மொழிபெயர்ப்பில் நிமிர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “சே கெவேராவும், மார்க்சியத்தின் தொடர்ச்சியும்” என்கிற இந்நூல்.

1985-களின் பிற்பகுதியில் கியூப பொருளாதார  வல்லுநர்களிடையே நடைபெற்ற விவாதங்களில் ‘சீரமைப்பு செயல் திட்டம்’ என்கிற செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ சார்பு அரசில் இப்படியான விவாதங்களுக்கான சாத்தியத்தையே பரிசீலிப்பதில்லை. ஆனால் கம்யூனிச அரசுகள் தங்கள் பிழைகளை திருத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டே கியூபாவில் நடந்த பொருளாதார – சமூக உறவுகளின் மீட்டெடுப்பு விவாதங்களாக இருக்கிறது. இந்தத் திட்டம் சரியான நேரத்தில் கியூபாவை மீட்டது. சாதாரண மனுசியும், மனிதனும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் சோசலிசக் கட்டுமானத்திற்கு உரிய புதிய மனுசியாகவும், புதிய மனிதனாகவும் வலிமை கொண்டவர்களாக மாறுவார்கள் என்னும் சே குவேராவின் கூற்றிற்கேற்ப இந்த செயல் திட்டம் மாற்றியது என ஆசிரியர் அமரந்த்தா அவர்கள் தன்னுரை பகுதியில் தெரிவிக்கிறார்.

இன்றைய முதலாளித்துவ உலகம் பெரும் பொருளாதார சரிவையும், சமூக நெருக்கடியையுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கி சீரழிவதையும், ஏகாதிபத்திய நாடுகளில் நிலவும் வர்க்கப் பிளவு, லஞ்சம், காவல் துறை மிருகத்தனம், பொருளாதார பின்னடைவு போன்ற பலவும் மற்ற நாடுகளுக்கும் பரவுவதையும் தவிர்க்க இயலாது. இன்றைய உலகிற்கு ஏற்ப லெனின் உருவாக்கிய பொருளாதார திட்டங்களை தளர்த்திக் கொண்டு அமுல்படுத்திய ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவின் நிலை மோசமாகி சோசலிசப் பாதையை விட்டு விலகியிருக்கிறது. அந்தப் படிப்பினைகளை ஏற்று கியூபா தங்களின் பொருளாதாரக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் துவங்கியதே இந்த விவாதத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

சே குவேரா படுகொலை செய்யப்பட்டு இருபதாண்டுகள் முடிந்த பின்பு 1987-அக்டோபரில் பிதெல் காஸ்த்ரோ (பிடல் காஸ்ட்ரோ), “சே குவேராவின் பொருளாதார முறைமைகளை நடைமுறைப் படுத்தாததின் விளைவே அவரின் பொருளாதார சிந்தனைக்கு நேரெதிரானவை எங்கும் வியாபித்து விட்டன. கம்யூனிசத்தை கட்டி எழுப்ப சேகுவேரா கருத்துக்களே தேவை” என்று அழுத்தந் திருத்தமாக கூறுகிறார்.

சே குவேரா முன்னெடுத்த பொருளாதாரக் கட்டமைப்புகளை ஆழ்ந்து அறிந்தாலே ஒரு நாட்டில் கம்யூனிச அரசாக எளிதாக பரிணமிக்கலாம் என்னும் அளவுக்கு முதலாளித்துவம் முன்வைக்கும் ஒவ்வொரு கோட்பாட்டையும் உடைத்து, சோசலிசம் அமையும் பாதையைக் காட்டுகிறது சே குவேராவின் கட்டுரைகள். இந்த நூல் ஆசிரியர் அமரந்த்தாவின் சிறப்பான மொழிபெயர்ப்பினால் சே குவேராவின் மீதான பிரமிப்புத் திறன் அணுவளவும் குறைக்காத வண்ணம் நம்முள் விரிகிறார் சே குவேரா.

முதலாளித்துவம் தனிப்பட்ட திறனுடையவர்களை அதிகார வட்டங்களாக நியமித்தே பழக்கப்பட்டது.  ஆனால் பொதுவுடைமை அரசை நிறுவ விரும்பிய சே குவேரா உடல் உழைப்பாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களை அமைப்பாக்கும் கூட்டுத் திறனில் பொருளாதார – சமூக உறவுகள் மேம்படும் என்பதை உறுதியாக எண்ணினார். அரசின் பிடியில் வங்கியும், நிறுவனங்களும் இருக்கும் வகையில் ‘வரவு – செலவு கணக்கு (திட்டமிடப்பட்ட நிதி முறை) என்ற திட்டத்தை வரையறுத்தவர் சேகுவேரா. இந்த முறையில் வங்கி வசம் தனிப்பட்ட நிதி சேர்வதில்லை. ஆனால் அதற்குப் பின்னர் பின்பற்றப்பட்ட ‘பொருளாதாரக் கணக்கியல் முறை’ என்ற முறையினில் முதலாளிகளிடம் தனிப்பட்ட லாப நிதி சேர்ந்தது. இந்த முறை சோவியத் ஒன்றியத்தில் இருந்தும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கப்பட்ட முறையாகும். லெனினின் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து தேய்ந்து போன இந்த முறையே சோவியத் ஒன்றியத்திலும் பின்பற்றப்பட்டது. அதையே கியூபாவும் பின்பற்றத் தொடங்கியது. 1975-லிருந்து 1985 வரை இம்முறை தொடர்ந்து முதலாளித்துவம் நுழைவதற்கு காரணமாய் இருந்திருக்கிறது.

தொழிலாளர்கள் பொருளாதார நிர்வாகத்திலும், அரசியல் முடிவுகள் எடுப்பதிலும் கூடுதல் அதிகாரம் பெறும் போது அவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் மட்டுமின்றி, கியூபாவிலும், உலகெங்கிலுமுள்ள  மக்கள் சமூகத்தின் நலனுக்காக உழைக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது சே குவேராவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவர்களை அமைப்பாக்கும் வேலைகளில் ஈடுபட்டார். அது போலவே, 1970-களில் சே குவேரா முன்னெடுத்த முக்கியமான நடவடிக்கை ‘தன்னார்வ உழைப்பு’ என்பதாகும். தன்னார்வ உழைப்பாளர்களை முன்வைத்து ‘சிறு பணிக்குழுக்கள்’ அமைத்து அந்தக் குழுக்களை அமைப்பாக்கும் பணிகளை செய்தார். இந்த தன்னார்வ குழுக்கள் மக்கள் சேவைக்கான அடிப்படையான பணிகளை செய்தன. இதனால் சமூக உறவுகள் மேம்பட்டன.

அதிகார வர்க்க கட்டளைகளுக்கு செயல்படும் ஒரு மாதிரி அமைப்போ அல்லது மேலாண்மை விதிகளின் கீழ் முதலாளித்துவ இயங்கு நுட்பங்களை பயன்படுத்தும் அமைப்போ உழைப்பாளர்களை அந்நியப்படுத்தி குட்டி முதலாளித்துவ சமூக அடுக்குகளையே உருவாக்கும்.

முதலாளித்துவத்தின் மதிப்பு விதி, அதிகார மட்டங்களை நீக்காமல் சோசலிசப் பாதை சாத்தியமில்லை என்பதைப் பற்றியான சே குவேராவின் கட்டுரைகளும், தேசிய அரசால் மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மூலமாகவே உற்பத்தி முறை, அதற்கேற்ற கல்வி என்று படிப்படியாக முதலாளித்துவத்தை ஒழிக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும் என்பதான கட்டுரைகளும் மீண்டும் 1985-ல் நடக்கும் விவாதங்கள் மூலமாக எடுத்தாளப்படுகின்றன.

முதலாளித்துவ நடைமுறைகளை சோசலிச அரசு அமைந்தவுடன் உடனே நீக்குவது சாத்தியமில்லை என்பதையும், பரபரப்பாக செய்வது பின்னர் மந்த நிலைக்கு தள்ளப்பட்டு, உலக சந்தையின் அழுத்தத்தால் முதலாளித்துவமே மீண்டும் தலையெடுக்கும் என்பதையும் உணர்ந்திருந்தார் சே குவேரா. கம்யூனிசம் நோக்கி விவசாயிகளையும், தொழிலாளர்களையும் அமைப்பாய் திரட்டி அரசியல் விழிப்புணர்வை அளித்துக் கொண்டே, படிப்படியாக முதலாளித்துவ நீக்கத்தை செய்யுமளவுக்கு அவர்களிடையே ஒற்றுமை உணர்வு, தன்னியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார். தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி, ஊக்குவிப்புகள் அளித்த அதே வேளையில் தொழில் வல்லுநர்களை, தொழில் முனைவோர்களை, சிறப்புத் தகுதியாளர்களை உழைக்கும் வர்க்க கண்ணோட்டத்திற்கு கொண்டு வர முயற்சித்தார்.

ஊதியம், ஊக்கத்தொகை நிர்ணயிக்கும் வழிமுறைகளை தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலன்களை மையப்படுத்தியே வரையறுக்கிறார். ஒருவரின் திறமை பார்த்து அளிக்கப்படும் தனி நபர் ஊக்கத்தொகை என்பது முதலாளித்துவத்தை மீண்டும் நிறுவி விடும் என்பதற்கான காரணங்களை அடுக்கி விட்டு, ஊக்கத் தொகையை ஒரு நிறுவனத்தின் தனித்தனி நபர்களுக்கு அளிக்காமல், அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வீட்டு வசதி, பகல் நேர குழந்தைகள் காப்பகம், பண்பாட்டு மனமகிழ் மன்றம் போன்றவற்றை நிறுவுவதன் வழியாக செயல்படுத்துவதை முன்வைத்தார். கம்யூனிசத்தை நோக்கிய ஒட்டு மொத்த வளர்ச்சி நிலைக்கு பொருள்வகை (ஊக்கத்தொகை) ஊக்குவிப்பை விட, அவர்களுக்கு உருவாக்கும் உணர்வு நிலை வளர்ச்சி ஊக்குவிப்பே அதிகமாக உதவும் என 1964-கட்டுரையில் எழுதுகிறார்.

அவர் கியூபாவை விட்டுப் போன பின்பு அவர் வழிகாட்டிய ‘திட்டமிடப்பட்ட நிதி முறை’ திரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டதால் கியூப பொருளாதாரத்தில் முதலாளித்துவம் புகுந்து விட்டதாக 1987- அக்டோபர் உரையில் பிடல் காஸ்ட்ரோ கூறுகிறார். மேலும் அவர், ‘சே குவேரா மனிதனை நம்பினார். மனிதன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் ஒரு போதும் புரட்சியாளராக முடியாது. மனிதன் திருந்தாதவன் என்ற முன்முடிவுகளோடோ அல்லது ஏமாற்றியே முன்னகர்த்த முடியும் என்பதையோ நம்பினால் அவர்கள் சோசலிசவாதியாக இருக்க முடியாது‘ என்றும் பேசுகிறார்.

லெனினின் ஆரம்ப கால நடைமுறையாக பின்பற்றப்பட்ட ‘புதிய பொருளாதாரக் கொள்கை’-யால் பல சறுக்கல்கள் சந்தித்தப் பின்பு, 1922-ல் தொழிலாளிகளை, விவசாயிகளை முன்னிறுத்தும் திட்டங்களை மேற்கொள்கிறார் லெனின். இடைப்பட்ட காலத்தில் நடந்த படிப்பினைகளை ஆய்வாக ஆழமாகக் கற்ற பின்பே, ‘திட்டமிடப்பட்ட நிதி முறை’-யை முன்வைக்கிறார் சே குவேரா. ஆனால் லெனினுக்குப் பிறகாக சோவியத் அரசாலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப்பட்ட ’பொருளாதார கணக்கியல் முறைமைகளை’ பின்பற்றச் செய்த கியூப பொருளாதார வல்லுநர்களால் கியூபாவில் முதலாளித்துவமே வளர்ந்தது. இதனால் நேர்ந்த ஆபத்தினை உணர்ந்தே பிடல் காஸ்ட்ரோவால் 1985-ம் ஆண்டுக்கு பிறகாக விவாதங்கள முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவாக சே குவேராவின் பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளில் முன்வைத்த திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவை நடைமுறைப் படுத்தப்பட்டதால் கியூபா சோசலிச அரசாக மீண்டிருக்கிறது.

திசை புத்தக நிலையத்தில் புத்தக வெளியீடு நிகழ்வில் தோழர் அமரந்தா (வலது ஓரம்)

இந்நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் அமரந்த்தாவின் பேருழைப்பு போற்றத்தக்கது. ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், அந்நாட்டின் தொழிலாளிகளுக்கும் இடையேயான உறவில் சிறு பிழை நேர்ந்தாலும் அங்கு முதலாளித்துவம் புகுந்து சமூக சீரழிவுகள் ஒவ்வொன்றாக உள்நுழையும் என்னும் தெளிவை இந்நூலை முழுமையாக வாசிப்பவர்கள் உணரும் அளவுக்கு ஆசிரியரின் மொழி பெயர்ப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்நூலில் தன்னுரைப் பகுதியில் ஆசிரியர் அமரந்த்தா அவர்கள் இறுதியாக இவ்வாறு முடிக்கிறார்.

“இருபத்தோராம் நூற்றாண்டின் உலகின் எப்பகுதியில் ஆனாலும் சோசலிசம் நிறுவப்படும் போது அது மெய்யான சோசலிசப் பாதைதான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டி வரும்; ஆம், அப்போது அங்கே ஒப்பிலா பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியும், புரட்சிகர பண்பாட்டின் முன்மாதிரியுமான எர்னெஸ்டோ சே கெவாராவின் காலடித்தடத்தை தேடிக் கண்டுகொள்ள வேண்டும்”

இப்புத்தகம் கிடைக்குமிடம்:

திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணாசாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொலைபேசி: 98840 82823
Location: https://goo.gl/maps/fZXqRjz6n1u461fc7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!