இறையாண்மையின் இலக்கணம் புலிகள்

தமிழினம் கட்டியெழுப்பிய மரபு வழி இறையாண்மை சூழும் தேசமாக ஈழம் அமையப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பாக உருக்கொண்ட நாள் மே 5, 1976-ம் நாள் இன்று. தமிழீழம் அமைய உறுதியுடன் களம் கொண்ட எண்ணற்ற வீரர்களின் அர்ப்பணிப்புகள் கருக்கொண்ட நாள். புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மை கொண்ட தன்னாட்சி தேசத்தை இன்றிருக்கும் உலக ஒழுங்குகள் அங்கீகரிக்காமல் போகலாம். ஆனால் அறம் பாடிய தமிழினத்தின் முன்னோர்கள் கனவு கண்ட ஒரு தேசத்தைப் படைத்து விட்டவர்கள் புலிகள் என்பதைத்தான் அவர்களின் தமிழீழ தன்னாட்சி தேசம் உறுதிப்படுத்தியது.

தனிநாடு கோருபவர்கள் முதலில் ஒரு தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பது ஐ.நாவின் விதி. ஒரு தேசிய இனத்தினால்தான் தனிநாட்டின் உரிமைக்காக போராடமுடியும். அதில் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும்  அவ்வரசின் அங்கமாகும். சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்கும் பகுதி, நிர்வாகத்துறை என்பது சட்டங்களை செயல்படுத்தும் பகுதி, நீதித்துறை சட்டம் மீறப்பட்டதா என்பதை தீர்மானிப்பதாகும்.

தமிழீழ கட்டமைப்புகளின் விளக்கப் படம்.

விடுதலை புலிகள் வெறும் இராணுவ அமைப்பாக மட்டும் இல்லாமல் தனக்கான அரசியலை கட்டமைத்து வளர்ச்சியடைந்ததை காட்டும் சில தொகுப்புகள் :

தமிழீழ வைப்பகம் :

உலகின் பெரும்பாலான போராளி அமைப்புகள் வெறுமனே தாக்குதல்களை நடத்துவதில் தம் முழு பலத்தை செலுத்தியதுதான் உலக வரலாற்றில் இடம்பெற்றது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர். தமிழீழ வைப்பகம் 1994, மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. வங்கி ஆரம்பிக்கப்படும் போது யாழ்ப்பாணமே புலிகளின் முக்கிய நிர்வாக நகராக இருந்தது. கற்றவர்களையும் பட்டதாரிகளையும் மாத்திரமே வங்கி நிர்வாகத்தில் ஈடுபடுத்தினர். எந்த ஒரு கட்டத்திலும் ஆயுத முனையிலோ, மிரட்டல் பாணியிலோ வட்டியையும், நிலுவையையும் வசூலித்தது இல்லை. 2005-ல் 12 கிளைகள் இருந்தன. இதில் 5 கணினி மயப்படுத்தப்பட்டவை. ஆனாலும் கணினி மயப்படுத்தப்படாத கிளைகளில் கூட மக்களை காத்திருக்க விடவில்லை புலிகள்.

சிறுவர்களுக்கு என “அமுதம்” என்று சேமிப்பு கணக்கை நடத்தினர். சில சந்தர்ப்பங்களில் புலிகள் தாமே முதல் வைப்பு தொகையை போட்டு சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்தனர். ஒரு யுத்தத்தின் அழுத்தத்தில் இருக்கின்ற அமைப்பு, 2009 இறுதி யுத்த வருடத்திலும் தமிழீழ வங்கியை முடங்க விடவில்லை. 

நீதி நிர்வாகத்துறை:

விடுதலைக்காகப் போராடும் நாடுகளில் விடுதலையின் பின்பே நீதித்துறைக் கட்டமைப்பு செயற்படத் தொடங்குகின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைத்த தன்னாட்சி தேசத்தில் தமிழீழ சட்டக்கல்லூரியே 1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கியது. தமிழீழ மக்களுக்கு பொருந்தக் கூடியதான தனிமனிதச் சட்டம் மற்றும் சொத்துச் சட்டங்கள் ஆகியனவற்றிற்கு அப்பால் சட்டத்துறைக் கோட்பாடு மற்றும் சர்வதேச சட்டம் ஆகிய பாடநெறிகளைக் கொண்டுள்ளதுடன் குடியியல் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுடன் ஆதாரச் சட்டங்களையும் கொண்டிருந்து.

சட்டங்களுக்கு அமைவாக இயங்கிய நீதிமன்றங்கள்

1.உச்ச நீதிமன்றம்.
2. மேன்முறையீட்டு நீதிமன்றம்.
3. விசேட நீதிமன்றங்கள்(தேவையேற்பட்டால் மாத்திரம் அமர்வுகள் இடம்பெறும்.)
4. மேன் நீதிமன்றம்.
5. மாவட்ட நீதிமன்றம். (குடியியல்)
6. மாவட்ட நீதிமன்றம் (குற்றிவியல்)

தமிழீழத்தில் நீதி நிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது. அச்சட்டங்கள் தயாரிப்பதற்கு  நீதி நிர்வாகத்துறை பொறுப்பாயிருந்தது. பெண்களுக்களுக்கான உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதான சட்டங்கள் இயற்றப்பட்டன. திருமண மீறல் முதலானவை குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.

காவல்துறை :

தமிழர்களின் வரலாறுகளை 97000-க்கும் மேலான புத்தகங்களாக பொதிந்து வைத்திருந்த யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களால் தீக்கரையாக்கப்பட்டதன் நினைவு நாளில் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழீழ தேசியத் தலைவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்பட்டது. இக்காவல்துறையை பற்றி அவர் கருத்து தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூக நீதிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். தமிழீழக் காவல்துறையை பொருத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்த பின் குற்றவாளியை தேடிப்பிடித்து கூண்டில் நிறுத்துவது அதன் நோக்கம் அல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவது அதன் இலட்சியமாகும்” என்று கூறியதற்கேற்ப காவல் துறை பல சமூக சீர்திருத்தங்களுக்கான சட்ட ஒழுங்குகளையும், செயல்பாடுகளையும் செய்து வந்தனர்.

ஊழல், லஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவல்துறை. போர்ச்சூழலிலும் சமூகக் கட்டமைப்பு குறையாது பாதுகாத்த பெருமை தமிழீழ காவல்துறையையே சாரும். ஒரு இனத்தின் மக்களுக்கான ஒரு நிர்வாக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகம் தமிழீழத்தின் காவல் நிர்வாகம் செயல்பட்ட விதத்தை ஆய்ந்து அறிந்து கொள்ளலாம்.

இதில் தமிழீழ காவல்துறையின் பெண்கள் அணியின் வளர்ச்சியும் அபாரமானது. இவர்களின் இவ்வளர்ச்சி பெருக்கானது தமிழீழப் பெண்களை முன்னேற்றகரமான துணிவுள்ள பெண்களாக வாழ வகை செய்தது. தமிழீழக் காவல்துறையின் பெண் உப பரிசோதகர் செல்வி.பொன்னையா பவானி அவர்கள் காவல்துறையைப் பற்றியும், அவர் அனுபவத்தைப் பற்றியும் கூறுகையில் “எமது அமைப்பானது விடுதலைக்காக போராடும் ஒரு தேசிய இயக்கத்தின் அமைப்பாகும். எமது காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சகலரும் தமிழீழ மக்களே. இவர்களும் எமது உடன்பிறப்புகளே. இவர்களுடன் அன்பாகவும், பாசமாகவுமே நாம் எமது அணுகுமுறைகளை மேற்கொள்கின்றோம். அவர்கள் எமது தடுப்பு காவலில் இருக்கும்போது அவர்களுடன் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி பழகுகின்றோம். காவல்துறையின் மக்கள் தொடர்பாக உறுப்பினர்கள் தேச விடுதலையுடன் கூடிய சமூக விடுதலைக்கான கருத்துக்கள், அன்பு, அறம் என்பவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். நாம் இப்படியான ஒரு உறவை இவர்களுடன் ஏற்படுத்திக் கொள்வதால் இவர்கள் வெளியேறும் போது தாழ்வு மனப்பான்மையோ, குற்ற உணர்வு இல்லாமலேயே வெளியேறுகின்றனர். குற்றவாளிகள் என்று தண்டிக்கப்படுவோர் கூட உயர்ந்த குணங்கள் பல சாதனைகள் படைக்கும் திறமைகள் கொண்டவர்கள்தான். ஏதோ சூழ்நிலைகளின் காரணமாகவோ வறுமையின் விளைவாகவோ, பஞ்சத்தை தீர்க்கும் எண்ணம் கொண்டு வழி தவறி குற்றங்களை புரிகின்றனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக தகுந்த ஒழுக்க பயிற்சி கொடுத்து அவர்களது உள்ளத்தை உயர்த்தி விட்டால் அவர்களும் தேசத்தின் சிறந்த குடிகளாக திகழ்வார்கள். கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அறிவும், உழைப்பில் நாட்டம் இல்லாதவர்களுக்கு உழைப்பின் உயர்வையும் புகட்டி தன்மானம், சுய கௌரவம், பிறர் மீது அன்பு, தேசப்பற்று போன்ற நல்லியல்புகளைக் கற்பித்து அவர்களின் மனம் பண்படுத்தப்பட்டால் குற்றவாளிகளும் குணவான்களாக மாறுவது இயலாத காரியம் இல்லை“ என்ற அவரது வார்த்தைகள் தன்னாட்சி தமிழீழ தேசத்தின் காவல் துறை கட்டமைப்பானது இன்றைய வலதுசாரிகளின் ஒழுங்குகள் கட்டமைத்த தேசங்கள் எதிலும் பொருத்திப் பார்க்கவே முடியாத கட்டமைப்பாக இருந்தது.

மருத்துவத் துறை :

போர்க்களத்தில் காயமுறும் போராளிகளைக் காக்க போராளிகளையே மருத்துவர்களாக்க நினைத்தனர் புலிகள். 1992 ல் தமிழீழ மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது. ஐந்து வருடங்கள் மருத்துவக் கல்வி வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் நோக்கமே கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் அளிப்பதுதான். அதேபோல் போர்க்காலங்களில் தனது அளப்பரிய பணியினை மக்களுக்கு வழங்கிய மருத்துவர் திரு. பொன்னம்பலம் அவர்களின் நினைவாக ஒரு  மருத்துவமனை 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது நவீன வசதிகளைக் கொண்டது.

தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன.

போர்க்காலத்தில் சிலரைத் தவிர பெரும்பான்மையான அரசு மருத்துவர்கள் வெளியேறிய பின்னாலும் போராளி மருத்துவக் குழு மக்களிடமே இருந்தது. போராளிகள் இடம் பெயரும் போது மருத்துவமும் இடம் பெயர்ந்தது. மருத்துவ முகாம்களைக் குறி வைத்து தாக்கிய சிங்கள இனவெறிப் படையினரால் நோயாளிகளோடு பல போராளி மருத்துவர்களும் மாண்டனர்.

கல்வித் துறை :

தன்னாட்சி தமிழீழத்தில் மழலையர் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழே பாடமொழியாக உருவாக்கியிருந்தனர். இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும் என்று சிந்தித்த புலிகள் ஐந்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பன்மொழி வகுப்புகளை நடத்தி வந்தார்கள். ‘விசுவமடு’ என்ற பகுதியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மையத்தில் இலத்திரனியல் கணினியம், இயந்திரவியல், பௌதீகவியல், ஆங்கிலம் என வெவ்வேறு துறைகளுக்கென ஆய்வுக்கூடம், நூலகம், வகுப்பறை, துறைசார் அறிஞர்களின் வழிநடத்தல்களுடன் கற்பிக்கப்பட்டது. இனிவரும் காலம் தொழிற்நுட்ப யுகத்தால் மட்டுமே வழிநடத்தப்படும் என கணித்து  கன்னித் தமிழை கணினி மொழிக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டிய அவசியத்தை அறிந்தனர். அதன் விளைவாக ‘ஆதமி’ போன்ற மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கல்வித்துறை, காவல்துறை, நீதித்துறை மட்டுமல்லாமல் மக்களுக்கான அனைத்து செயற்பாடுகளையும் புலிகள் செய்து வந்தார்கள் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்காக ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக ‘செஞ்சோலை இல்லம்’, உடல் நலிவுற்றோருக்கு ‘வெற்றிமனை காப்பகம்’ முதியவர்களுக்காக, ‘அன்பு முதியோர் பேணலகம்’, மனநோயாளிகளுக்காக ‘சந்தோசம் உளவள மையம்’, பார்வை இழந்த போராளிகளுக்காக ‘நவம் அறிவுக்கூடம்’ மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்தி கழகம் என பல ஆதரவு இல்லங்களையும் நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்டமைப்புகள் யாவும் மக்களின் நலன் பேணவே அமைக்கப்பட்டவை. இக்கட்டமைப்புகளில் அடங்கும் எந்தத் துறையிலும் ஆதிக்கம் என்பது துளியும் இல்லை. எளிய மக்கள் அணுகவே சிரமப்படும் அதிவார வட்ட விதிமுறைகள் இல்லை. இடதுசாரி கொள்கையாளர்கள் கட்டியமைக்க நினைக்கும் வர்க்க வேற்றுமையற்ற தேசத்தை உண்மையில் படைத்தவர்கள் புலிகள். திராவிடக் கொள்கையாளர்கள் விரும்பிய சமத்துவ மனித சமூகத்தை தங்களின் தேசத்தில் உலவ விட்டவர்கள் புலிகள். சாதியம் வலுவாக புரையோடிப் போயிருந்த தேசத்தில் சாதியத்தை களையும் முற்போக்கு செயல்பாடுகளை சமூக, பொருளாதார உறவுகளின் ஊடாக ஊடுருவ வைத்தவர்கள் புலிகள்.

‘சுதந்திர சோசலிச தமிழீழ தன்னாட்சி பிரதேசம்’ அமைக்க உறுதி கொண்ட தமிழீழ தேசியத் தலைவர், தனது நோக்கத்தில் வெற்றி கண்டதை பொறுக்க முடியாத நாடுகளே, ஈழ தேசத்தின் மேல் ஆயுதங்களைப் பொழிந்து வன்மத்தை தீர்த்துக் கொண்டன. இனப்படுகொலை செய்து வெறிகளை அணைத்துக் கொண்டன. பூகோள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஒரு வர்க்க வேறுபாடற்ற சமூகம் அமைவதை தங்களின் வணிக நலத்திற்கு எதிராகப் பார்த்தது அமெரிக்கா. சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் அற்று, வர்ணப் பாகுபாடுகளற்று தமிழர்களுக்கென்று ஒரு தேசம் அமைவதை  இந்தியப் பார்ப்பனிய அதிகார வர்க்கத்தினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவேதான் சிங்கள இனவெறி அரசுடன் இந்தியா, அமெரிக்கா, புவிசார் வர்த்தக, ராணுவ நலனை விரும்பிய நாடுகளெல்லாம் கைக்கோர்த்து இனப்படுகொலையை அரங்கேற்றின.  

விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளையும், அதற்குள் வாழ்ந்த மக்களின் அழகான வாழ்வியலையும் மனித சமூகம் உள்ளவரை தமிழ் சமூகம் பேசிக் கொண்டே தானிருக்கும். இறையாண்மை என்பதில் விளக்கத்தை அறிய விரும்புவர்கள கற்பதற்கு ஈழ  தேசத்தின் நாயகர்கள் கட்டியெழுப்பிய ஈழ தேசம் பற்றிய பாடங்களை விளக்கிக் கொண்டே தானிருக்கும்.

“தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் “ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »