இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி

இராமாயணம் தொடரை சன் தொலைக்காட்சிக் குழுமம் தமிழில் ஒளிபரப்பப் போவதாக சமீபத்தில் அறிவித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எந்தத் தொலைக்காட்சித் தொடருக்கும் உருவாகாத எதிர்ப்பு இதற்கு மட்டும் ஏனென்கிற கேள்வியும் பலரிடையே எழும்பியுள்ளது. இராமாயணம் தொடர் உருவாக்கிய சீரழிவு அரசியலை அவர்களுக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இதற்கு முன்பே இராமாயணம் தொடர் 1987-ம் ஆண்டு இந்திய தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வெளியான அத்தொடர் பெரும்பான்மையான மக்களின் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் இன்று பெரும் கொதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக, 1987-களுக்குப் பின்பு சங்கிலித் தொடராக இந்தியா முழுதும் இந்துத்துவ கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டங்களுக்கு இத்தொடர் மறைமுகமாக பல வகைகளில் உரமிட்டது என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் இதயமான மதச்சார்பற்ற தன்மையை இந்திய ஒன்றியத்தின் அரசு நிறுவனங்கள் யாவும் பின்பற்ற வேண்டும். ஆனால் அன்றைய ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு இத்தொடர் ஒளிபரப்பானதை ஊக்குவித்தது. அன்றைய அரசியல் சூழல் தந்த நெருக்கடியினால் இந்துக்களின் கூட்டு உளவியலை ஓட்டாக மாற்ற நினைத்த சுயநலத்திற்காக மதச்சார்பற்ற தன்மையை அரசுத் தொலைக்காட்சியில் பலி கொடுத்தார் ராஜீவ் காந்தி. ‘நமது கலாச்சார பாரம்பரியமான இந்த இதிகாசத்தை பெருமையுடன் காட்டப்பட வேண்டும்’ என்று அவர் வாதிட்டார். இந்திய மதச்சார்பற்ற தன்மைக்குக் காரணமான பன்மைத்துவ கலாச்சாரத்தை ஓர்மை கலாச்சாரமாக மாற்ற ராமானந்த் சாகர் என்னும் பிரபல இயக்குனரை இத்தொடர் தயாரிக்க தேர்ந்தெடுத்தார்.

பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் 1980-க்குப் பின்பு தொலைக்காட்சி வந்து சேர்ந்த காலமாக அமைந்தது. அன்றைய இந்திய ஒன்றிய அரசின் தொலைக்காட்சியாக தூர்தர்சன் மட்டுமே நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பியது. இந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தொழில்நுட்பப் பிரிவுகளில், நிர்வாகங்களில் பெரும்பாலும் உயர்சாதிப் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருந்தனர். இதனால் இவற்றில் பார்ப்பனிய மயமான நிகழ்ச்சிகளே அதிகம் இடம்பிடித்தன. இதே காலகட்டத்தில்தான் இராமாயணம் தொடரும் பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிராந்திய அளவிலான ஊடகங்களில் ஒளிபரப்பாகியது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில், 82% மக்களின் உளவியலை தன் வசம் ஈர்க்கும் அளவிற்கு வரவேற்பைப் பெற்றது.

இத்தொடர் பெற்ற வரவேற்பை பிபிசி பத்திரிக்கை கூறுகையில்,

“இத்தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஒளிபரப்பப்படும் போது, ​​தெருக்கள் வெறிச்சோடி இருக்கும், கடைகள் மூடப்பட்டிருக்கும், மக்கள் குளித்துவிட்டு தங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு சீரியல் தொடங்கும் முன் மாலை அணிவிப்பார்கள்” என்று பரவலான ஆய்வுகள்  நடத்தி வெளியிட்டது. குறிப்பாக ராமன் கதாபாத்திரம் தோன்றும் காட்சிகளில் தொலைக்காட்சியின் முன் ஆரத்தி எடுத்து குடும்பமே வழிபடும் அளவுக்கான ராமபக்தியை சாமானிய மக்களிடையே ஏற்படுத்தியது. இத்தொடரில் ராமனாக நடித்த அருண் கோவில் என்ற நடிகரை ராமனாகவே மக்கள் பார்க்கத் தொடங்கினர். அவர் செல்லும் இடங்களில் காலைத் தொட்டு வணங்குமளவிற்கு இந்தத் தொடர் மக்களின் உளவியலை மாற்றியது. பல லட்சக்கணக்கானவர்கள் இராமனை தரிசித்தனர் என சில பத்திரிக்கைகளும் கூட எழுதும் அளவுக்கு இந்த கதாபாத்திரம் ராமனாகவே பார்க்கப்பட்டது.

இந்திய சமூக மட்டங்களில் இத்தொடர் ஏற்படுத்திய ராமபக்தியின் தாக்கங்களை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவாரக் கும்பல்கள் ஆயத்தமாயின. இத்தொடரால் இந்தியாவின் பன்மைத்துவ வழிபாட்டு முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. இந்து தேசியத்தின் ஓர்மையான கடவுளாக இராமன் ஆக்கப்பட்டார்.

இந்து தேசம் அமைப்பதே நோக்கம் என்கிற சாவர்க்கரின் கனவை ஏந்திய இந்த இந்துத்துவக் கூட்டத்திற்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்து என்ற மனநிலையிலிருந்து இத்துத்துவ மனநிலைக்கு பெரும்பான்மையினர் மாற்றப்பட காரணமாக அமைந்தது.

இராமர் பிறந்த இடமாகக் கருதிய அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியேத் தீர வேண்டும் என ராமஜென்ம பூமி இயக்கம் 1983-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டதா அல்லது இந்த இயக்கத்தை வலுப்படுத்த இத்தொடர் தயாரிக்கப்பட்டதா என்ற புதிர்களுக்கு நடுவில் 1987-ம் ஆண்டு இராமாயணம் தொடர் துவங்கியது. 1986-ல் பாஜக கட்சித் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 தேர்தலில் பாஜகவின் மக்களவை பலம் 2-லிருந்து 88 ஆக மாறியது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தே அத்வானி ரதயாத்திரையைத் தொடங்கினார். 1990-ல் சோம்நாத் பகுதியிலிருந்து அயோத்தி வரை 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ரதயாத்திரையை அத்வானி அறிவித்தார்.

இராமாயணம் தொடரில் வந்த இராமனைப் போல அலங்கரிக்கப்பட்ட தேரில் அத்வானி வில்லைப் பிடித்தபடி இருக்க, அந்தத் தேர் மகாபாரதம் தொடரில் வந்த காட்சியைப் போல திரிசூலங்கள் மற்றும் குங்குமப் பட்டைகளால் சூழப்பட்டிருந்தது. இத்தேர் குஜராத்தில் மட்டும் 600 கிராமங்கள் வழியாக சென்றது. ஏற்கனவே இத்தொடர்கள் உருவாக்கிய தாக்கத்தினால், அதில் வரும் காட்சியைப் போல அணிவகுத்து வந்த இத்தேரினைக் கண்டதும் சாமானிய மக்கள் ஆர்ப்பரித்தனர். புராண காலத்தை கண்முன் நிறுத்தியதாக மகிழ்ந்தனர். இதனால் வெகு சனங்கள் சுலபமான வழியில் பரவலாக அணிதிரட்டப்பட்டனர். 

இராமனின் மேல் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களால் ஏற்றப்பட்ட அதீதப் புனிதம், இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பாக கட்டமைக்கப்படும் என்று அவர்கள் அன்று நினைத்திருக்க மாட்டார்கள். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போதே இந்த இந்துத்துவ காவிக் கும்பல் தூண்டிய வன்முறை வெறியாட்டத்தை அறிந்திருந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் அபாயக்குரல் எழுப்பினர். ஆனால் இந்தக் குரல்கள் ரதயாத்திரை பேரிரைச்சல்களால் அடக்கப்பட்டன.

அத்வானியின் ரதயாத்திரை புறப்பட்டது. சென்ற இடமெங்கும் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளால் வன்முறைகள் தூண்டப்பட்டது. இந்துத்துவவாதிகள் செயல்படுத்தும் வன்முறைகளில் பல வகைகள் உண்டு. இஸ்லாமியர் போல் வேடமிட்டு இந்துக்களின் மத விழாக்களில் புகுந்து கடவுளர்களை கொச்சையாகப் பேசுவது, ஊர்வலங்களில் முதல் கல்லை எறிந்து கூட்டத்திடையே சலசலப்பை உருவாக்கி முஸ்லிம்களே செய்ததாக திட்டமிட்டு பரப்புவது என பல வகைகளில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளில் கற்றுக் கொடுத்ததை செயல்படுத்தும் களமாக வெகு மக்கள் திரளும் இந்துக்களின் விழாக்கள் அவர்களுக்கு பயன்பட்டன.

இந்துக்களை பாதுகாப்பதாக நினைக்க வைத்து இஸ்லாமியர்கள் மேல் கலவரத்தை நிகழ்த்தி, அதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை அள்ளும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் தந்திர அரசியலைப் பற்றி அப்பாவி இந்துக்கள் அன்று அறிந்திருக்கவில்லை. இதனால் கலவரக் கும்பல்களால் மத வேறுபாடின்றி ரத்த ஆறு ஓடிக் கலந்தது. ஊர்வலம் செல்லும் வழியெல்லாம் ஆக்ரோசமான பக்திப் பாடல்களை ஒளிபரப்பிச் சென்றனர். உச்சபட்ச பக்தி உணர்ச்சியில் எளிதில் கோவம் தூண்டப்படும் என்னும் உளவியலை அறிந்த மேல்மட்ட பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் கும்பல் இத்தகைய பாடல்களை உருவாக்குவதை ஒரு வேலைத்திட்டமாகவே செய்தது. கீழ்மட்ட சங்கிக் கூட்டம் இதன் மூலம் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கலில் வன்முறைகளில் ஈடுபட்டது.

இக்கூட்டம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களைக் குறிவைத்துத் தாக்கியது. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகளைக் கூட தீயில் வீசி எரித்தனர். ஏறக்குறைய 3000 பேரைக் கொலைக் களமேற்றியே பாபர் மசூதியை இடிக்க வெறியர்கள் அத்வானி தலைமையில் ஏறினர். 

அயோத்தி பாபர் மசூதி வளாகத்தில் ராமர் சிலையை வைத்து வணங்க உத்தரவிட்ட பின்னரே இந்துத்துவ அமைப்புகள் நடத்திய அடாவடித்தனம் இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டியது. அங்கங்கு மதவாதக் கலவரங்கள் தூண்டப்பட்டன. 1987, மே 22ம் நாள் உத்திரப் பிரதேசத்தின் ’ஹாசிம்புரா’ பகுதியில் இந்துத்துவ வெறி கொண்ட காவல் துறையினரால் 42 முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை கால்வாயில் வீசியெறிந்தனர். 300-க்கும் அதிகமானோர் பிடித்துச் செல்லப்பட்டு சிறைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தச் சித்திரவதைகளால் உடல் பலகீனப்பட்டு பலர் மாண்டனர். மதவாதக் கலவரங்களை அடக்கவே சுட்டதில் 42 பேர் இறந்ததாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டே 42 பேரை பிடித்துக் கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள் என்பது பலத்த காயத்துடன் தப்பித்த 6 பேரால் நிரூபணமானது.

1987, ஜனவரி 25-ம் நாள் இராமாயணம் தொடர் ஆரம்பிக்கப்பட்டதற்கும், 1987- மே மாதம் நடந்த இந்த துப்பாக்கி சூட்டிற்கும் உள்ள இடைவெளி நான்கு மாதங்கள். இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சிறப்புப் படையினரின் இவ்வளவு வன்மத்திற்கு பின்னால் ராமபக்தியின் காரணமாக மென்மையான அவர்களுக்குள் ஏற்றப்பட்ட இந்துத்துவ வெறியன்றி வேறென்ன காரணமாக இருந்திருக்க முடியும்? இந்த சந்தேகமும் இராமாயணம் தொடர் ஆரம்பிக்கப்பட்ட 4 மாத இடைவெளியில் ஹாசிம்புரா படுகொலை நடந்திருப்பதை ஒட்டியே எழுகிறது. இவை மட்டுமல்ல, பீகார், கான்பூர், பகல்பூர், அலகாபாத், மும்பை போன்ற பல வட இந்திய மாநிலங்களிலும் தொடர்ச்சியாக இந்துத்துவ குண்டர்கள் நிகழ்த்திய வன்முறைகளால் இஸ்லாமியர்கள் ரத்தச் சகதியில் மிதந்தனர்.

இந்தியா முழுமைக்கும் அனைத்து சமூகங்களுக்கும் வி.பி.சிங் அரசு இடஒதுக்கீடை உறுதி செய்திருந்தார். இந்த ஆத்திரத்தில், பார்ப்பனியக் கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த ரதயாத்திரை என்பது சமூகநீதி அரசியல் செயல்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் வெகுமக்கள் தளத்தினில் தூண்டப்படும் பக்தியே தங்களின் சித்தாந்தத்திற்கு பலம் என்று நம்பிய இன்றைய பாஜகவும் அன்றைய ஜனசங்கமுமான இந்த ஆர்.எஸ்.எஸ் காவிக் கூட்டம் சமூகநீதியை உறுதிப்படுத்திய வி.பி. சிங் அரசை கவிழ்த்தது.

ராம ராச்சியம் அமைக்கும் இந்துத்துவவாதிகளின் கனவு நிறைவேற இஸ்லாமியர்கள் மீது வன்மமான கருத்தாக்கங்கள் உயர்சாதி பார்ப்பனக் கும்பல்களால் எழுதப்பட்டன. 1992-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகளும் கரசேவை என்ற பெயரில் கிளம்பினர். 16-ம் நூற்றாண்டின் பெருமையான பாபர் மசூதி இடிப்பதற்கு அச்சாணியாக இராமாயணம் தொடரே அமைந்தது. இஸ்லாமியர்களை எதிராகக் காட்டியே பாஜக-வும் ஆட்சியைப் பிடித்தது. மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் பதட்டத்துக்குள் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இசுலாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் சிஏஏ, பொது சிவில் சட்டம், காசுமீர் 370 சிறப்பு பிரிவு ரத்து போன்ற இந்துத்துவவாதிகளின் செயல்திட்டங்கள் மோடியினால் அரங்கேற்றப்பட்டன.

“ஒரே நாடு, ஒரே கடவுள்” என்ற ஆர்.எஸ்.எஸ்-சின் கோட்பாட்டினை பாஜகவினர் நிறைவேற்ற இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவ பண்பாட்டை அழிக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய தனிப்பட்ட வழிபாட்டு முறைமைகளை எள்ளி நகையாடவே இராமன் என்னும் கதாபாத்திரம் புனிதனாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிக்க அந்த புனிதத்துவத்திற்கு எதிராக ஒரு எதிரியைக் காட்ட இஸ்லாமியர்களைக் கைக்கொண்டனர். அவர்களின் மீது காழ்ப்புணர்வை தீவிரமாக வளர்க்க பல தளங்கள் பார்ப்பன கும்பலுக்கு தேவைப்பட்டன. அதில் உறுதியான, எளிதில் அனைவரிடத்திலும் நுழையக்கூடிய இந்த அரசு ஊடகத்தின் வழியாக இராமாயண புராணக் குப்பையின் நாயகனான இராமனை உச்சத்தில் ஏற்றினர். 

வால்மீகி என்னும் வடமொழிப் புலவன் 25 லட்சம் வருடம் முன்புள்ள கதையாக எழுதிய கற்பனையே இராமாயணம். இந்தப் புளுகுப் புராணத்தை தீ பரவட்டும் என கருத்தியலால் கிழித்து தொங்க விட்டனர் பெரியார், அண்ணா முதற்கொண்ட திராவிடப் பேரறிஞர்கள். இராமனுக்கு எதிராகமாற்றுப் பண்பாட்டை முன்வைக்க இராவணனுக்கு விழா எடுத்தனர். தமிழரசன் இராவணன் எனப் போற்றினர். இராவணக் காவியம் வடித்தனர். சனவரி 23, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளில் சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக “தமிழர் மூதாதை! தமிழ் நிலத்து அரசன் இராவணன் திருவிழா”வை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது.

திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவரின் குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சி குழுமம் வட மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளுக்குப் பின்புலமாக இருந்த இராமாயணம் தொடரை இங்கு ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருக்கிறது.

மாநில உரிமை, மாநில சுயாட்சி பேசும் கட்சியின் பாரம்பரியத்தில் வந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த கட்சியின் சார்பில் அதிகாரத்தில் பங்கெடுத்தும் அதிகாரத்தை அனுபவித்து வரும் வாய்ப்பை பெற்றது தான் சன் குழுமம். தமிழ் நாடு மக்களிடம் அரசியல் ஆதரவையும், பொருளாதார ஆதரவையும் பெற்று வளர்ந்து நிற்கும் ஒரு நிறுவனம் வட இந்திய மோசடி அரசியலை தமிழ்நாட்டில் புகுத்த நினைப்பது எந்த வகையில் அறம்? பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதாக சொல்லும் திமுகவின் பல நபர்கள் இந்திய தேசியத்தின் முதலாளிகளாக தங்களை வரித்துக் கொள்வது தமிழ் நாட்டின் அரசியலில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.

வன்முறையின் மறு உருவமான ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களை ஊடுருவ விடாமல் ஊடறுக்கும் வழிகளை முற்போக்கு அமைப்புகள் கடும் சிரத்தையுடன் மேற்கொள்ளும் சூழலில், சன் குழுமத்தாரின் இந்த அறிவிப்பு பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி திராவிடப் பாரம்பரியத்தைக் கொண்டதாக சொல்லிக் கொள்ளும் கட்சியினர் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை இந்தத் தீய சக்திகள் அண்டி விடாமலிருக்க அனுதினமும் உழைக்கும் இன உணர்வாளர்கள், பெரியாரிய தோழர்கள் அமைதி காக்க முடியாது. ஆரியத்திற்கு கைக்கொடுத்து, இந்துத்துவக் கும்பலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் இராமாயணம் தொடருக்கு எதிரான குரல்களை வலுப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »