Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

பாதுகாப்பு வலய படுகொலைகள் – ஈழம், பாலஸ்தீனம்

போர் நடக்கும் பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அமைக்கப்படுவதே ‘உயர் பாதுகாப்பு வலயம் (NO FIRE ZONE)’. அந்த வலயத்திற்குள் பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் பாதுகாப்போம் என்று போர் நடத்தும் அரசுகள் உறுதியளிக்கும் இடங்களே அவை. இதனை மீறுவது இனப்படுகொலை குற்றம் என்பது சர்வதேச போர் விதியாக இருக்கிறது. ஆனால் அதனை இலங்கை இனவெறி அரசு அப்பட்டமாக மீறி 2009-ல் ஒன்றரை லட்சம் உயிர்களைக் கொன்றது. இன்று 2024-ல் இசுரேல் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களைக் கொன்றும் இனவெறி அடங்காமல் போரினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.      

NO FIRE ZONE – The Killing field of Srilanka- ஈழப் போரில் 4 லட்சம் தமிழர்களை பாதுகாப்பு வலயங்கள் என்று விவரித்த இடத்தில் கூடுமாறு அறிவித்து, அவர்களின் மேல்  உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்டர் பாம்), எறிகணைகளையும், கனரக பீரங்கி குண்டுகளையும் வீசி சிங்கள இராணுவம் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களை விவரித்த ஆவணப்படம். இப்படத்தை கேலம் மெக்ரே என்னும் இயக்குநர் தொகுத்து சேனல்-4-ல் வெளியிட்டார். இந்தப் படம் ஈழ மக்கள் அடைந்த அவலத்தை பெரும் பனிப்பாறையின் சிறு முனை அளவுக்கே காட்சிப்படுத்தி இருந்தது. ஆனால் இதில் வெளிப்பட்ட கொடுமைகளே இவ்வளவு என்றால், இன்னும் காட்சிப் பதிவுகளின்றி நடத்தப்பட்ட கொடூரங்கள் எவ்வளவு இருக்குமோ என காண்போர் மனதை நடுநடுங்க வைத்தது. 

ஈழப்போர் துவங்கிய 2008-ன் இறுதிப் பகுதியில் இருந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத இடங்கள் என இலங்கை அரசு மூன்று பகுதிகளை பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தது.

முதல் வலயமாக ஜனவரி 21 அன்று வடகிழக்கு தீவுப்பகுதியைக் கூறியது. அதை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு பாதுகாப்பு கோரி வந்த மக்களின் மீது இலங்கையின் விமானப்படை கொத்துக் குண்டுகளையும், ’ஆட்டிலறி’ எனப்படும் கனரக குண்டுகளையும் சரமாரியாக வீசியது. இந்த கொத்துக் குண்டுகள் இசுரேலில் இருந்து இறக்குமதியானவை. பெரிய உலோகத்தில் 500 க்கும் மேற்பட்டு அடைக்கப்பட்ட சிறிய குண்டுகள் ஒரே சமயத்தில் பல திசைகளிலும் சீறிப் பாயக் கூடிய திறனுடைய இந்த குண்டுகளை பரீட்சித்து பார்க்கும் களமாக பாதுகாப்பு வலயத்தைப் பயன்படுத்தியது சிங்கள இராணுவம். உலக அளவில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் இசுரேல் எனும் இனவெறி அரசு இலங்கை என்னும் இனவெறி அரசுடன் பகிர்ந்து கொண்ட இந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொன்றுத் தீர்த்தன.

இரண்டாவது பாதுகாப்பு வலயமாக பிப்ரவரி 12 அன்று கடலுக்கு 12 கி.மீ தூரமுள்ள வடகிழக்குப் பகுதியின் குறுகிய வளைவினைக் கூறியது. அந்த குறுகிய பகுதிக்குள் 3 லட்சம் மக்கள் அடைக்கப்பட்டனர். மாத்தளன், பொக்கணை, வலைஞர் மடம் போன்ற பகுதிகளில் தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், பல்லாயிரக்கணக் கணக்கானவர்களை படுகாயப்படுத்தியும் இராணுவம் தரைவழியாக பாதுகாப்பு வலயங்களை நோக்கி சிங்கள இராணுவம் முன்னேறியது. புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் இடைவெளியே இல்லாமல் பெருமளவிலான எறிகுண்டுகளை வீசினர் என சாட்சியங்கள் பின்னாளில் விசாரணையின் பொழுது கூறினர்.

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 4 வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமும், இலங்கை ராணுவத்தின் வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகின. புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்ட பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை சல்லடையாக துளைக்கப்பட்டது. இதில் நோயாளிகள், மருத்துவப் போராளிகள், ஊழியர்கள், 2 செஞ்சிலுவை சங்கத்தினர் முதற்கொண்டு 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களை மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாதவாறு வழியெங்கும் எறிகணைத் தாக்குதல்களை சிங்கள இராணுவத்தினர் நடத்தினார்கள். மார்ச் 19 அன்று, பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட வலைஞர்மடம் பகுதிகளில் நடத்திய வான் தாக்குதலில் 38 பொதுமக்களும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்தனர். ஏப்ரல் 21 அன்று, பாதுகாப்பு வலயத்தை நோக்கி சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், 700 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். கிளஸ்டர் குண்டுகள் மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி சிங்களப் படை மக்களை எரித்தது. அப்பகுதியில் இருந்த மருத்துவமனைகள் GPS வசதியை செஞ்சிலுவை சங்கத்தினர் அடையாளத்திற்காக இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தது. ஆனால் அந்த வசதியை மருத்துவமனைகளைக் குறி வைத்து குண்டு வீச பயன்படுத்திக் கொண்டது சிங்கள இராணுவம்.

மூன்றாவது பாதுகாப்பு வலயத்தை இலங்கை அரசு மே 8 அன்று முள்ளிவாய்க்கால் பகுதிகளை அறிவித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர். திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு ஒரு வாய்ப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தப் பகுதியும் அமைந்தது. தொடர்ச்சியான தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். பலர் காயமுற்று நோயாளிகளாயினர். அவர்களைக் காப்பாற்ற தற்காலிக மருத்துவமனைகளைத் தேடிக் கொண்டே மருத்துவர்களும், ஊழியர்களும் பயணித்துக் கொண்டேயிருந்தனர். செல்லும் வழியெங்கும் மரண ஓலம் தொடர்ந்து கொண்டே வர, மரணிப்பவர்களை அருகிருந்து புதைக்கக்கூட முடியாத வண்ணம் மக்கள் ஓடிக் கொண்டே இருந்தனர். கொலையுண்டவர்கள் ஆயிரக்கணக்கில் வீழ்ந்து கொண்டே இருந்தனர்.             

இறுதியாக மே 17,18,19 நாட்களில் இனவெறி ராணுவம் அரங்கேற்றிய கொடுமை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக வரலாற்றில் பதிந்தது. இதில் முதலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்தது. அதன் பின்னர் உள்ளூர் கணக்கெடுப்பின்படி 70 ஆயிரம் என அறிவித்தது. ஆனால் ITJP எனப்படும் ‘சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பு’ ஆய்வறிக்கையின்படி இறுதி கட்டத்தில் கொல்லப்பட்ட மக்கள் 1,69,796 – ஆக இருக்கலாம் எனக் கூறியது. அந்த அமைப்பானது ஐநா சபை, மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் மற்றும் உலக வங்கித் தரவுகள், மனித சாட்சியங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்ததின் மூலம் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.

விடுதலைப் புலிகளின் தளபதி சூசை அவர்கள், மே 17-ம் நாள் அன்றே, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். ‘கடந்த 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் 3000 பேர் கொல்லப்பட்டு இருப்பதாலும், 25000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாலும், இதற்கு மேலும் போரினை நீட்டிக்க விரும்பவில்லை. அதனால் ஆயுதங்களை மெளனிக்கிறோம்‘ என்று செய்தி வெளியிட்டு விட்டார். அதே சமயம், பாதுகாப்பு வலயத்தில் மே 17-ந்தேதி பொதுமக்கள் எவரும் இல்லை என பொதுவெளியில் கோத்தபய ராசபக்சேவும் அறிவித்தார். ஆனால் மன்னார் மாவட்ட பிஷப், இன்னும் சுமார் 75,000 எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ளனர் என சொன்னார். தமிழீழ அரசியலாளரான பொன்னம்பலம் அவர்கள் ஒரு இலட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றார். அமெரிக்காவுடனான கேபிள் உரையாடலில் கசிந்த வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தியது. செயற்கைக் கோள் மூலம் ஆய்ந்த தகவலிலும் உறுதியானது. ITJP தகவல் அறிக்கையும் ஒன்றரை லட்சம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் எனக் கூறியது.

விடுதலைப் புலிகள் ஆயுதத்தை மௌனிக்கும் முன்னர் 24 மணி நேரத்திற்குள் 3000 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர். அப்படியென்றால் இறுதிப் போரில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்களில் மீதியுள்ளவர்கள் அதற்குப் பின்னரே கொல்லப்பட்டு இருப்பார்கள் என்கிற சந்தேகமே எழுகிறது. இதன் மூலம் மே 17-க்குப் பின்பு புலிகள் ஆயுதத்தை மெளனித்த பின்னரே ஒன்றரை லட்சம் மக்களை கொன்ற பேரவலம் நடந்துள்ளது என்பதே புலனாகிறது. மே 17-க்குப் பிறகான இரண்டு நாட்களுக்குள் சிங்கள இனவெறியர்கள் ஈழத் தமிழினம் மீது நடத்திய இந்த பேரவலத்தை சர்வதேசம் இன்றுவரை எந்தக் கேள்வியும் எழுப்பாமல் மெளனத்துடன் கடக்கிறது.

எறிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களே அமைத்திருந்த பதுங்கு குழிகளைக் குறிவைத்து வீசப்பட்ட எறிகணைகளால் குடும்பம் குடும்பமாக மக்கள் கொல்லப்பட்டனர் என OHCHR எனப்படும் ஐநா பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் அமைத்த விசாரணையின் போது சாட்சியங்கள் கூறினர். காயமடைந்து சாலையில் கிடந்தவர்களின் மேல் இராணுவ டிரக்குகளை ஏற்றியதாகவும், இறந்தவர்களோடு சேர்த்து காயம் அடைந்தவர்களையும் புதைத்ததாகவும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவாறு அவர்கள் கூறியிருக்கின்றனர்.

போர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்கு பிறகான மே 30 அன்று, வடகிழக்கு கடற்கரையில் ஆய்வு செய்த சுயாதீனமான பத்திரிக்கையாளர்கள் குழுவினால், வடக்கு-கிழக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் மொத்தம் 42 கொத்து குண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதனை தமிழ் கார்டியனின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அவர்கள் செய்த ஆய்வில், No Fire Zone என அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 24 அடி அகலமுள்ள பள்ளங்கள், வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனைமரங்கள், அவசரமாக தோண்டப்பட்ட பதுங்குகுழிகள் போன்றவற்றை கண்டறிந்தனர். இலங்கை மீதான ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் அமைத்த (OHCHR) விசாரணை குழுவிடம்  சாட்சியமளித்தவர்களும் பாதுகாப்பு வலயங்கள், மருத்துவமனைகள் மீது கொத்து குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் பாதுகாப்பு வலயங்கள் (NO FIRE ZONE) என்று சொல்லி, மக்களை வரவழைத்து சிங்கள இனவெறி ராணுவம் கூட்டம் கூட்டமாகக் கொன்றதோ, அதைப் போலவே இசுரேலிய சியோனிச இனவெறி அரசு பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்த பாதுகாப்பு வலயங்களைத் தாக்கி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 7-ல் துவங்கிய பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலைப் போர் இன்னமும் தொடர்கிறது. காசா நகரத்தை கான்கிரீட் சுடுகாடாக மாற்றியதோடு பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்த பகுதிகளிலும் கனரக குண்டுகளை வீசி கொன்று கொண்டிருக்கிறது. குழந்தைகள் மருத்துவமனையான ’அல் அஹ்லி பாப்டிஸ்ட்’ மீது குண்டு வீசி 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை, பெண்களை கொன்று குவித்தது.

இசுரேலின் மோசமான குண்டுவீச்சுக்குள் இருந்து தப்பித்துச் செல்ல பாதுகாப்பு பகுதிகளை உருவாக்குவது சாத்தியமில்லை என ஐநா சபை டிசம்பர் மாதமே எச்சரித்தது போலவே ஒவ்வொரு பாதுகாப்பு வலயமும் தாக்கப்படுகிறது. வடக்கு காசாவில் 11 லட்சம் மக்களை அக்டோபர் 13, 2023-ல் பாதுகாப்பான பகுதியென தெற்குப் பகுதியை நோக்கி போகச் சொல்லிய பின்பு, அந்தப் பகுதியில் சென்ற மக்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய காசாவில் அக்டோபர் மாதத்திலேயே மூன்று முறை குண்டுகள் வீசப்பட்டிருக்கிறது. அக்டோபர் 11-ல் ரஃபா பகுதியில் குண்டு வெடித்தது. இவையெல்லாம் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்த பகுதிகள்.

இசுரேலிய அரசு காசாவை 600 பகுதிகளாகப் பிரித்து பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்தது. ஆனால் இதனை தகவல் தொடர்பை துண்டிக்கும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டு மேலும் ஆயிரக்கணக்கானவர்களை இசுரேல் இராணுவம் கொன்று குவித்தது. சர்வதேசம் தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளையும், அமெரிக்கா அளித்த 2000 பவுண்டு எடையுள்ள குண்டுகளையும் பாலஸ்தீனிய மக்கள் மீது வீசியது, இதனால் மக்களின் இறப்பு எண்ணிக்கை பல மடங்கு கூடியது. மே 8, 2024 வரை இன்று வரை 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள்.

இசுரேல் இன்னமும் இடைவிடாமல் பாலஸ்தீனிய மக்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது. பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா பகுதியில் அடைக்கலமான 10 லட்சம் பாலஸ்தீனியர்களை உடனே வேறிடத்திற்கு செல்ல உத்தரவிட்டிருக்கிறது. 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட ஜபாலியா முகாமிலும், சப்ரா, ஜெய்டவுன் போன்ற பகுதிகளிலும் இசுரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இப்போது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதே மே மாதத்தில் ஈழ மக்கள் சாரை சாரையாக இடம்பெயர்ந்து சென்ற காட்சியைப் போல, பாலஸ்தீனிய மக்களும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தில் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்துவதால், புலிகளை அழிக்க குண்டுகளை வீசியதாக சிங்கள இராணுவம் எப்படி சர்வதேசத்தை ஏமாற்றியதோ, அது போலவே இங்கும் ஹமாஸ் போராளிகளை அழிப்பதற்காகவே குண்டெறிந்ததாக இசுரேலிய அரசும் ஏமாற்றியது. பாதுகாப்பு வலயங்களுக்குள் உணவு, மருந்து, தண்ணீர் என எந்த வசதியும் உறுதி செய்யப்படாமல் மக்களை ஒன்றுகூட வைத்து, அதற்குப் பின்பு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் உள்ளிருப்பதாகக் கூறி மொத்தமாக கனரக குண்டுகளை வீசி அழிக்கிறது இசுரேல். குழந்தைகள், பெண்கள் எனப் பாராமல் அனைவரையும் அழிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறது இசுரேலிய இனவெறி அரசு

இன்று தென்னாப்பிரிக்கா இசுரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது. பல்வேறு அடக்குமுறைகளைக் கடந்து உலகெங்கும் மாணவர் போராட்டங்கள் எழுச்சியுடன் நடக்கிறது. சமூக வலைதளங்களில் இசுரேல் கட்டிக் காத்த பிம்பம் தூள் தூளாக நொறுங்கும் பரப்புரைகள் நடத்தப்படுகின்றன. தங்கள் போராட்டத்தின் நியாயங்களை பாலஸ்தீனிய அறிவுசீவிகள் கடத்துகிறார்கள். இடதுசாரி ஆளுமைகள் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக அடுக்கடுக்காக எழுதிக் குவிக்கிறார்கள்.

தமிழினமும் இதே போன்றதொரு இனப்படுகொலையைத் தான் சந்தித்தது. ஆனால் பாலஸ்தீனிய போராட்டங்களைப் போல சர்வதேசத்திடம் முறையிடும் அளவுக்கு தமிழர்களாக நாம் என்ன செய்தோம்? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டம், ஊடக வட்டம் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரி அறிவுசீவிகளின் எழுத்தின் பலம் புலிகளின் மேல் பழிகளை சுமத்துவதில் குறியாக இருக்கிறது. திராவிட அடித்தளம் மறந்த திராவிடக் கட்சிகளின் சுயநலம் கண்டு கொள்ளாமல் கடக்கிறது. தமிழீழ நோக்கத்தை இலங்கைப் பிரச்சனையாக சுருக்குகிறது. தமிழ்த்தேசிய அடிப்படை அறியாமல் முளைத்த தமிழ்த்தேசிய கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு கட்சிகள் சண்டையாக மாற்றிவிட்டது. தமிழர்கள் உணர்வுடன் ஒன்றிப் போயிருந்த தமிழீழம் இன்று வேறு நாட்டவர்கள் பிரச்சனை என்று உருமாறி நிற்பதும், கட்டுக்கதைகளால் கொச்சைப்படுத்தும் போக்கிற்கு இரையாகி நிற்கும் அவலத்தையும் அடைந்திருக்கிறது.

பெருங்கட்சிகளின் இந்த இரைச்சலுக்கு நடுவில் ஈழத் தமிழர்களின் வலியை தங்களின் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீதிக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது மே 17 இயக்கம். தோழமை கட்சிகளின், அமைப்புகளின் துணையுடன் போராட்டங்களை சமரசமின்றி 15 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனிய அதிகார மட்டத்தின் பிடிக்குள் இருக்கும் இந்திய அரசும், தமிழர்களை எதிரிகளாகக் காட்டியே சிங்கள இனவெறிகளை வளர்த்து விட்டு இலங்கை அரசும், புவிசார் இராணுவ, வணிக நலனுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 27 க்கும் மேற்பட்ட நாடுகளும் ஒன்றாக சேர்ந்து 1,69,796 தமிழர்களை இனப்படுகொலை செய்ததை அனைத்துத் தளங்களிலும் அம்பலப்படுத்தியது மே 17 இயக்கம். 

அரசியல், சமூக தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டு வழியாகவும் ஆண்டு தவறாமல் நினைவேந்தலை அனுசரிக்கிறது மே 17 இயக்கம். தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழினப்படுகொலைக்கான  நீதி வழங்க வேண்டும் என சர்வதேசத்தை நோக்கி வலியுறுத்தும் மே 17 இயக்கத்தின் பயணம் 15 ஆண்டுகளாக சமரசமின்றி தொடர்கிறது. இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்களுக்கு நினைவேந்த மே 19, 2024 அன்று சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடத்தும் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கிறது. தமிழர்களாய் கூடுவோம். ஒளியேற்றுவோம். நம் விடுதலை மரபில் உதித்த தமிழினத்தின் பெருமைமிகு போராளிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் நினைவஞ்சலி செலுத்துவோம்.    

“தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!