இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல்

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களின் வலிகளில் பிறந்த மே 17 இயக்கம், ஆண்டு தவறாமல் தோழமை அமைப்புகள், கட்சித் தலைமைகளுடன் இணைந்து நினைவேந்தல் அனுசரிப்பதை பண்பாட்டுக் கடமையாக கொண்டிருக்கிறது. நீர் நிலைகளில் நினைவேந்தும் தமிழர் மரபைப் பின்பற்றி, இந்த ஆண்டும் நம் ஈழ உறவுகளின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை இனப்படுகொலையை மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்கிற முழக்கத்துடன் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் மாலை 6 மணியளவில் நடத்தியது மே 17 இயக்கம். மகிழினி மணிமாறன் அவர்களின் ஈழப் பாடல்களுடன் நிகழ்வு துவங்கியது.

தமிழக அரசியல் சூழல் தமிழீழ நோக்கத்தை என்றென்றும் சிதைத்து விடாது என்கிற உறுதியை நெஞ்சிலேந்தி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஆளுமைகள், எத்தனை ஆண்டுகளானாலும் தமிழினத்திற்கு நிகழ்த்தப்பட்ட இந்த கொடுமையை மறக்க மாட்டோம் என்கிற உறுதியுடன் வந்திருந்த மக்களுடன் சேர்ந்து மெழுகேந்தி நடுகல்லாகிப் போன நம் விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்களையும் நினைவு கூறும் விதத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூணில் ஐயா. வைகோ அவர்கள் தீப்பந்தம் ஏற்றினார். தலைவர்கள் வீரவணக்க முழக்கம் எழுப்பினர். பெரும் பதாகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பாலச்சந்திரனின் உருவப்படத்திற்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசியவை:

“ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 15 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த 15 வருடத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று பல்வேறு ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றன. இலங்கை அரசு இனப்படுகொலை குற்றம் புரிந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இலங்கையிலே மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக தமிழர்களுடைய பிணங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன.

ஐநாவின் நிபுணர் குழு ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஆவணப்படுத்தி இருக்கிறது. எவ்வாறு இலங்கை அரசு இந்த படுகொலையை செய்தது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். இப்படியாக தொடர்ச்சியாக இலங்கை அரசு குற்றம் செய்து வந்ததை ஆவணப்படுத்தி பல்வேறு அறிக்கைகள் வெளியில் வந்த பிறகும் கூட, 2015-ல் ஐநா-வில் கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையிலே இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட எந்த நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐநா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நேற்றும் ஐநாவின் மனித உரிமை அவையில் இருந்து இலங்கையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதை ஐநாவின் மனித உரிமை ஆவணம் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது.

ஈழத்திலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலே சர்வதேச மனித உரிமை அமைப்பின் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தலைவர் பங்கெடுத்திருக்கின்றார். அங்கே நினைவேந்தல் நிறைவேற்றுவதற்கான நெருக்கடியை இலங்கை அரசு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறது. இப்படியான இந்த அவலமான நிலையிலே இலங்கை அரசாங்கத்தின் மீது இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திர விசாரணை கொண்டுவரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையும், சுதந்திர தமிழினத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கின்ற இரட்டை கோரிக்கையையும் தமிழினம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. பல்வேறு அரங்குகளில் இந்த கோரிக்கைகளை முன்னெடுத்து வரக்கூடிய சூழலிலே, இவற்றை நடைமுறைப்படுத்தும் ஒரு நடவடிக்கையையே நாங்கள் கேட்கின்றோம்.

இலங்கை அரசின் மீது உடனடியாக இந்த விசாரணை நடத்தப்படும் நிலை மேற்கொள்ளப்பட வேண்டும். இனப்படுகொலை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் சர்வதேசம் மேற்கொள்ளாமல் போனால் பாலஸ்தீனத்தில் நடக்கக்கூடிய இனப்படுகொலை எங்கும் நடக்கும் என்கின்ற அச்சம் இருக்கின்ற காரணத்தினால்தான், இத்தனை ஆண்டு காலம் இந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று சொல்லப்படுகின்ற இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட்டில் இஸ்ரேலின் மீது இனப்படுகொலைக்கான வழக்கை தென்னாப்பிரிக்கா பதிவு செய்திருக்கிறது. அதுபோல இனப்படுகொலைக்கான வழக்கை இந்தியா பதிவு செய்ய வேண்டும், தோழமை நாடுகள் பதிவு செய்ய வேண்டும், மனித உரிமையை மதிக்கக்கூடிய நாடுகள் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இச்சமயத்தில் நாங்கள் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். இந்த கோரிக்கைகளை உலகெங்கிலும் இருக்கக்கூடிய பல்வேறு அரங்குகளில் முன்னெடுத்துச் சென்று, இந்தியா மட்டுமல்ல, உலகங்களிலும் இந்த குரல் எதிரொலிக்கக் பல்வேறு அரங்குகளில் இதை விரிவாக எடுத்துரைக்க காரணமாக இருந்தவர் ஐயா. வைகோ அவர்கள்” – எனப் பேசினார்.

ஐயா. வைகோ அவர்கள் பேசியவை :

கடல் அலைகள் எழுப்புகின்ற ஓசை அங்கு எழும்பிய துக்ககரமான ஓசையை நினைவுபடுத்துவதாகதான் இருக்கின்றது. இது தமிழர் கடல். ஆனால் இந்தக் கடலிலும் ஈழத் தமிழர்கள், மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு கடலிலே வீசப்பட்டார்கள். 2011-ல் பெல்ஜியத்தில் பிரேசல்சில் நடைபெற்ற மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அங்கு பொதுவாக்கெடுப்பு ஈழத் தமிழர்களில் மட்டுமல்ல, உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடமும் நடத்தப்பட வேண்டும் என்று கூறினேன். மற்ற தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இப்போது வருகிறது. இதைப் பற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீர்மானம் நிறைவேற்றி சிறப்பாக பேசியிருந்தார். பிரிட்டானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கண்ணீர் சிந்தினார்கள்.

இன்று ஈழத்தில் மூன்றில் ஒரு பகுதியை சிங்களர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள். ஈழத்தைப் போன்று பெண்கள் வன்புணரப்பட்டு மிகக் கொடூரமான இனப்படுகொலை வேறு எங்கும்  நடந்ததில்லை. ஹிட்லர் கொலைதான் செய்தான், முசோலினியும் கொலைதான் செய்தான். ஆனால் அங்கே இருக்கக்கூடிய பெண்களை வன்புணரப்பட்டு, அதற்குப் பிறகு கொல்ல வேண்டும் என்று அந்த சர்வாதிகாரிகளும் துணியவில்லை. ஆனால் இங்கே பல்லாயிரக்கணக்கான இசைப்பிரியாக்கள் வன்புணரப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள்.

சரித்திரம் தோன்றிய காலத்திலிருந்து தமிழீழம் சுதந்திர தமிழ் ஈழமாகும். அந்த சரித்திர காலத்திலே இருந்து இருக்கக்கூடிய சுதந்திர தமிழீழம், ஐரோப்பியர்கள் வந்து வெளியேறுகிற போது, இங்கிலாந்து வந்து வெளியேறுகிற போது அதிகாரத்தை சிங்களவரிடம் ஒப்படைத்து விட்டு போனதால்தான், தந்தை செல்வாவின் தலைமையிலே அறப்போராட்டங்கள் நடந்தன. அது அங்கே முழுமையான வெற்றியை பெற முடியவில்லை. அதற்கு பிறகு பட்டுக்கோட்டையில் 1976-ல் அவர்கள் சுதந்திர தமிழீழம்தான் தான் தீர்வு என்று தீர்மானம் போட்டார்கள். இதை வருங்கால இளைய தலைமுறை முன்னெடுத்து செல்லட்டும் என்று தந்தை செல்வா பிரகடனம் செய்தார்.

அதை முன்னெடுக்க, 15 வயதிலே வீட்டை விட்டு வெளியேறிய வேலுப்பிள்ளை, பார்வதி அம்மா அவர்களுடைய அருமை மகனாக, உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத தலைவராக, விடுதலை புலிப்படையிலே வீர சாகசங்களை நிகழ்த்திய பெண்களுக்கும் தலைவராக, என்றைக்கும் அனைவருக்கும் வழிகாட்டும் தலைவராக இருந்தாரே பிரபாகரன், அவரை நினைத்துதான் இங்கே சுடர்கள் ஏந்தப்பட்டன. அங்கே எத்தனை பேர் மீது தீ எறியப்பட்டிருக்கும் என்பதை நினைவூட்டதான் இங்கே நம்முடைய திருமுருகன் காந்தி அவர்கள் மே 17 இயக்கத்தின் சார்பிலே ஆண்டுதோறும் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஈழப்படுகொலை என்பது ஐநா சாசனத்தின் படி இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை நடத்தியவன் இன்றைக்கு சுதந்திரமாக இருக்கிறான். சிங்களர்கள் கம்பெனிகளை கொண்டு வந்து நடத்துவதற்கு, பெரிய ஆலைகளை கொண்டு வந்து  நடத்துவதற்கு இங்கு பேரம் நடக்கிறது. இதற்கு இந்திய அரசு உதவியாக இருக்கிறது. அதற்கு பலத்த கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரே குரல்தான். சுதந்திரத் தமிழீழம்தான் ஒரே தீர்வு. வேறு தீர்வே கிடையாது. இனப்படுகொலைக்கு ஆளாகாத நாடுகள் எல்லாம், தேசிய இனங்களெல்லாம் சுதந்திர வாக்கெடுப்பை நடத்தி ஏறத்தாழ நாற்பது நாடுகள் தனிநாடாக பிரகடனம் செய்து கொண்டிருக்கின்றன. ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொற்றம் அமைத்து, கொடி உயர்த்தி வாழ்ந்த இனம் ஈழத் தமிழினமும் தனி நாடாக வேண்டும் என்பதையே நாங்களும் கோருகிறோம்.

இந்திய அரசு உதவியை பெற்றுக் கொண்டே சிங்களவன் தமிழர்களை அழித்தான். ஆனால் இன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். உணர்வுள்ள தமிழர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலும் திருமுருகன் காந்தியை போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் காட்டுகின்ற வழியிலே நாமும் செல்வோம் என்று சொல்லித்தான் நான் அவரை முதலிலே பேசச் சொன்னேன். இந்த கடற்கரையிலே இன்றைக்கு இந்த நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கு இரண்டுதான் தேவை. ஒன்று பொது வாக்கெடுப்பு, இரண்டாவது சர்வதேச நாடுகளுடைய குற்ற விசாரணை. சர்வதேச குற்றவாளியாக சிங்களவன் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் போல உலகத்தில் பல நாடுகளில் மனித உரிமைகளுக்காக போராடுகின்றவர்கள் இந்த பிரச்சனையையும் ஐநா சபையிலே கொண்டுவர வேண்டும். நான் பிரேசல்சில்தான் முதல் முதலாக சுதந்திர வாக்கெடுப்புதான் இதற்கு தீர்வு என்று சொன்னேன். அதைப் போல ஜெனீவாவிலே மூன்று தீர்ப்பாயங்களிலே திருமுருகன் காந்தி சென்று உரத்த குரலிலே அங்கே இந்த கோரிக்கையை எழுப்பினார். நானும் மூன்று ஆண்டுகள் ஜெனிவாவுக்கு தொடர்ந்து சென்று வந்தேன். என்றைக்கும் அதை மறைக்க முடியாது.

புதை குழியிலிருந்து எலும்புக்கூடுகள் வெளிவந்த கோர மரணங்கள் நடத்தப்பட்ட உண்மைகள் எல்லாம் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவையெல்லாம் பரப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இதை செய்ய முத்துக்குமார் வழியிலே வந்த இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களை போன்ற உணர்வு தமிழ் இளைஞர்களுக்கு வரவேண்டும், மாணவர்களுக்கு வரவேண்டும். இது அரசியல் அல்ல, இது நம்முடைய இனத்தைக் காக்க நம்முடைய ரத்தத்தின் ரத்தமாக இருக்கின்ற ஈழத் தமிழர்களைக் காக்க நாம் செய்ய வேண்டிய கடமையை செய்து கொண்டிருக்கிறோம். அதை திருமுருகன் காந்தியும் மே 17 இயக்கமும் ஆண்டுதோறும் செய்கிறது. அவர் பலமுறை சிறை சென்று விட்டார் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. சிறையில் உடல் நலமும் கெட்டுப்போனது. ஆயினும் அவரும், அவருடைய இயக்கத்தவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருப்போம். “மலர்க தமிழீழம், ஒழியட்டும் சிங்களர் கொட்டம். வாழ்க!வாழ்க! பிரபாகரன் புகழ் வாழ்க!!“ எனப் பேசினார்.

நினைவேந்தல் ஏற்பாடுகளை கவனித்தவாறு, கடற்கரைக்கு தன் மகனுடன் வந்திருந்த ஆந்திரப் பெண்மணி ஒருவர் தன்னிச்சையாக முன்வந்து இந்நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். முழு விளக்கம் அளித்ததைக் கேட்டதும் வேதனையடைந்தார். அதன் பின்னர் அவருடனான உரையாடல் ஆரியம், திராவிடம் குறித்தும் சென்றது. அவர் மனநிறைவுடன் உங்களின் முன்னெடுப்பு அவசியத் தேவை என்று கூறிவிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பாலச்சந்திரன் படத்தின் முன் நின்று நினைவஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள். இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் கடற்கரைக்கு வந்திருந்தனர். ஏதோ ஒரு கட்சி கூட்டமாக இருக்கும் என்று அவர்களுக்குள் பேசி விட்டு கடந்தார்கள். அவர்களிடம் துண்டறிக்கைகள் கொடுத்து நினைவேந்தலை விளக்கிய பின்பு விருப்பத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். பல இளைஞர்கள் தானே வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

குடும்பத்துடன் வந்திருந்த சிலருக்கு ஈழ இனப்படுகொலை குறித்த வருத்தம் இருந்தது. அவர்களும்  நினைவேந்தலில் இணைந்து மன வருத்தத்துடன் பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நான்கு இளம் பெண்கள் தாங்களாகவே வந்து விசாரித்தார்கள். ஈழ இனப்படுகொலை நாட்களைப் பற்றிலும், தமிழீழ வரலாறு குறித்தும் சுருக்கமாக தோழர்கள் கூறினார்கள். இறுதியில் பாலகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவத்தை விளக்கியதும் அவர்களின் முகம் மிகவும் சோகமானது. இறுதியில்தான் தாங்கள் பெண் காவலர்கள் எனக் கூறி விட்டு தங்களுக்கு இந்த வரலாறு இதுவரை தெரியாது எனவும் கூறிவிட்டு சென்றார்கள்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஐயா வைகோ அவர்கள் சுடறேற்ற ஐயா சிவாஜிலிங்கம், அற்புதம் அம்மாள், ஓவியர் தோழர். ட்ராட்ஸ்கிமருது, இயக்குனர். கவிதா பாரதி, கலைஞர். விஜய்சக்ரவர்த்தி,

தோழர்கள் வன்னியரசு, முனீர், குடந்தை அரசன், மதி பறையனார், குமரன், முபாரக்(மஜக), இளமாறன், கெளஸ், ராஜசங்கீதன், சுப்ரமணியன் மதிமுக,  மணிமாறன், மகிழினி மணிமாறன், காசி புதியராசா, லயோலா மணி, ஜலீல் மற்றும் மதிமுக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, கொங்கு இளைஞர் கட்சி  பொறுப்பாளர்கள், ஊடகத்தோழர்கள், பெருந்திரளாய் உணர்வாளர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவும், அம்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் விதமாக தோழர்கள் ‘கிஃபாயா‘ துண்டு அணிந்து வெளிப்படுத்தினார்கள். மேலும் இஸ்ரேலிய இனவெறி அரசால் படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீனிய மக்களுக்கான ஆதரவு குரலாக பாலஸ்தீன ஆதரவுப் பேரணியை அக்டோபர் 29, 2023-ல் தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது மே 17 இயக்கம். தமிழ்நாடு முழுக்க நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் பாலஸ்தீன, ஈழ இனப்படுகொலை அரசியலை இணைத்துப் பேசி, இவ்விரு இனப்படுகொலைக்கும் பின்னாலுள்ள சர்வதேச அரசியலை அம்பலப்படுத்தியது மே 17 இயக்கம்.

நீர்க்கரையோரங்களில் நினைவேந்துவதே தமிழர்கள் மரபு என்பதனால், கடந்த 2023-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை இதே கடற்கரையில் கடுமையான போராட்டத்திற்கிடையில் நடத்திக் காட்டினோம். இந்தாண்டும் காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கடும் அலைச்சலுக்குப் பிறகே அனுமதி கிடைத்தது. பல நிபந்தனைகளுடன் மக்கள் திரளுடன் பண்பாட்டு நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறோம்.

காலமுள்ளவரை,

காற்று வீசும்வரை,

கதிரவன் ஓயும்வரை

விடுதலைப் பெருநெருப்பு அணையாது பாதுகாப்போம் என உறுதியேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »