Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்

உலகத்தில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை, ஆனால் அவர்களுக்கு என்று ஒரு சொந்த நாடில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

“தமிழ்நாடு தமிழருக்கே!” என்பதும்

“தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!” என்பதும்

வரலாற்றின் பக்கங்களில் செங்குருதி கொண்டு தமிழினம் எழுதிய முழக்கங்கள். இவை அரசியலில் இலாபம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளால் தேய்ந்து போகாது.

ஈழத் தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் மற்ற அத்தனை தமிழர்களுக்கும் உந்து சக்தியாக திகழ்பவர்கள் தலைவர் பிரபாகரனும் அவர் கட்டமைத்த விடுதலை புலிகளும்!

தமிழீழத்துக்காக அவர்கள் போராடிய காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்கும் போது புலிகள் சோர்வு அடையாமல் புத்துணர்வோடு இருக்க தலைவர் பிரபாகரனால் எழுப்பப் பட்ட முழக்கம்தான் ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்பது. அது பின்னாளில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உணர்வுபூர்வமாக மாறியது.

இவ்வாறான ஒப்பற்ற ஒரு விடுதலைக்கான இயக்கத்தை இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகள் நசுக்கி ஒடுக்கியது. ஆயினும் மே 17 இயக்கம் இந்த ஒப்பற்ற வீரர்களின் கோரிக்கையை ஒருபோதும் கைவிடாது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வந்து விட்டால் காங்கிரஸின் அடிவருடியாக இருப்பவர்கள் ராஜீவ்காந்தி கொலையின் சூத்திரதாரிகள் ஈழத்தமிழர்கள் என்று தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் இந்த குற்றங்களின் பின்னனியில் இயங்கிய பார்ப்பனியக் கும்பலைப் பாதுகாப்பதைத் தவிர இவர்களுக்கு வெறெந்த நோக்கமும் கிடையாது. ராஜீவ்காந்தி கொலையின் பின்னனியில் செயல்பட்ட பார்ப்பன பங்களிப்பு பற்றியும், ஈழப்படுகொலையின் பின்னனியில் செயல்பட்ட பார்ப்பனிய நடவடிக்கைகள் குறித்தும் ஆவணப் பூர்வமாகவும், ஆதாரத்தோடும் மே 17 இயக்கம் மக்கள் மன்றத்தின் முன் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

மே 17 இயக்கம் என்பது 2009ஆம் ஆண்டு ஈழத்தில் இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகள் இலங்கையுடன் கைகோர்த்து போர் மரபுகள் எதையும் பின்பற்றாது தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களை இனப்படுகொலை செய்து கொன்று குவித்த நாளான மே மாதம் 17 தேதியினை உணர்த்தும் குறியீடு. தேர்தல் அரசியலில் ஈடுபடாது, தலைவர் பிரபாகரன் மற்றும் தந்தை பெரியாரின் வழியில் இயக்க அரசிலயலை முன்னெடுத்து வரும் மே 17 இயக்கம், மக்களுக்கு எதிராக இயங்கும் ஆளும் மற்றும் ஆதிக்க வர்க்கங்களை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வரும் ஓர் இயக்கமாகும்.

ஈழத்தில் எழுந்த தமிழீழ போராட்ட நெருப்பு சிங்களப் பேரினவாதத்தினை மட்டுமல்லாது இந்திய பார்ப்பனியத்தினையும், மேற்குலக ஏகாதிபத்தியத்தையும் அச்சுறுத்தியது. ஈழத்தின் மீது அக்கறைக் கொண்ட ஈழப் போராளிகளும், தமிழ்நாட்டின் திராவிட இயக்கமும் இணைந்து நின்ற அரசியலைக் கண்டு அஞ்சிய இந்திய பார்ப்பனியம், இந்திய ராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பியது. இந்த உண்மையை இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அத்தனை வேலைகளையும், பார்ப்பன அதிகார அசுர பலத்தின் பல அச்சுறுத்தல்களையும் தாண்டி துணிந்து செய்து வருகிறது மே 17 இயக்கம்.

2009-க்கு முன் தமிழீழ விடுதலை எந்த அளவிற்கு அவசியமாக ஈழத்தமிழர்களுக்கு இருந்ததோ அதனை விட பல மடங்கு தற்போது உள்ளது. இன்னும் சொல்லப்போனால், தெற்காசிய பிராந்தியத்தில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்புமே இன்று ஈழ விடுதலை அரசியலில் உள்ளது. ஏனென்றால், இன்று மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் மூழ்கித் தவிக்கும் இலங்கையை, தனது புவிசார் அரசியல் நலனுக்காக உலக வல்லாதிக்க நாடுகள் கபளீகரம் செய்ய தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. இலங்கையை கட்டுப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்தை தனது கோரப் பிடிக்குள் வைக்கத் துடிக்கின்றன. தமிழீழத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டதும் இதற்காகவே. ஏனெனில் விடுதலை புலிகள் இருக்கும் வரை உலக வல்லாதிக்க நாடுகளின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் ஒன்று சேர்ந்து இந்த மாபாதக செயலை செய்து முடித்தன.

அதனால் தான், 2009 மே மாதம் இரண்டாம் வாரத்தில் போர்சூழல் பகுதியிலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சிறப்பு கண்காணிப்பு ஐநா அதிகாரி ஈழத்தில் குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக அறிக்கை கொடுத்தும், அதே போல இனப்படுகொலை தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும் இனப்படுகொலை நடக்கும் வாய்ப்பிருப்பதாக அறிக்கையை வெளியிட்டும், இந்த தமிழினப் படுகொலையை அரங்கேற்ற அன்றைய ஐநா தலைவர் பான்-கீ-மூனும், துணை அதிகாரியான விஜய் நம்பியாரும் சிங்களப்படைக்கு சாதகமாக நடந்து கொண்டனர்.

அதற்கு பின்னர்தான் போரின் இறுதி நாட்களான மே மாதம் 17,18,19 ஆகிய 3 நாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இனப்படுகொலைச் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 169,678 சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பு அறிவித்துள்ளது. பல பெண்கள் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதில் இசைப்பிரியாவின் படுகொலை செய்த காணொளி மற்றும் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானதைப் பார்த்து உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இது போன்ற பல தகவல்கள் வெளியான பின்னரும் சர்வதேச விசாரணைகள் துவங்கப் படவில்லை எனும் குற்றச்சாட்டை மே 17 இயக்கம் தொடர்ந்து முன் வைத்து வருகிறது.

இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய சர்வதேச சமூகம் அமைதியாக இருப்பதன் காரணம் அவர்களும் இந்த இனப்படுகொலையின் பங்காளிகளே! அதோடு குறிப்பாக இந்தியா வாய்மூடி மெளனமாக இருப்பதற்கு காரணம் ”தங்களது கூட்டாளிகளான அதானி அம்பானிகளுக்கு பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பார்ப்பன அதிகார வர்க்கத்தின் தமிழின விரோத மனப்பான்மையும் தான்”. இதனால் தமிழர்களுக்கான தீர்வை முழுமுற்றாக மறுத்து வருகிறது இந்தியா.

எனவே ஈழ விடுதலை அரசியல் என்பது இன்று ஈழத்தமிழர்களின் நலன் என்பதையும் தாண்டி, தெற்காசிய மக்களுக்கான அரசியலாக மாறி நிற்கிறது என்பதை புரிந்துகொள்வது அவசியமாகிறது. எனவே தான் மே 17 இயக்கம் ’ஈழ விடுதலை’ என்ற கொள்கையில் ஒரு நாளும் சமரசத்திற்கோ அல்லது தவறான நிலைப்பாட்டையோ எடுத்ததில்லை.

இந்த கொள்கை உறுதியினால் தான் மே 17 இயக்கம் ஆரம்பித்த காலத்தில் அதாவது 2010லேயே திருநெல்வேலியில் நடத்திய முதல் பொதுக்கூட்டத்திலே ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும், இலங்கை அரசை இனப்படுகொலை அரசு என்றும் அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கையை வைத்தது. இதில் இன்றளவும் எந்த மாற்றமும் இல்லாமல் இயக்கம் இயங்கி வருகிறது. அதோடு இந்த கோரிக்கையை சிதைக்க நினைக்கும் சக்திகளையும் சமரசமின்றி எதிர்த்து அம்பலப்படுத்தி வருகின்றது. அதன்படி தான் ஐநாவில் நடக்கும் அனைத்து நாடகங்களையும் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே பல்வேறு வழிகளில் அம்பலப்படுத்தி வருகின்றது.

தமிழருக்கு எதிராக நடந்த இந்த இனப்படுகொலையை அடுத்து உலக நாடுகள் ஒவ்வொன்றும் அவரவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் என்று பேசினார்கள். இதில் கொடுமை என்னவென்றால் யாரெல்லாம் 2009இல் ஈழத் தமிழர்களை அழித்தார்களோ அவர்களே முன் நின்று இந்த வேலையை செய்தார்கள். இதில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் இங்கிலாந்தின் பங்கு மிகப் பெரியது. அவர்கள் தான் இன்று தமிழர்களுக்கு தீர்வு என்ற பெயரில் அதுவும் அமெரிக்க சார்பில் 2012 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐநா அவையில் தீர்மானங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது 2009இல் தங்களின் உரிமையை கோரிய மக்களையும் அந்த மக்களை ஒன்றிணைத்து போராடிய விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசின் வழியாக அழித்துவிட்ட உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு அவர்களின் விடுதலை கோரிக்கையை அழிக்க முடியவில்லை. அதை இல்லாமல் செய்வதற்கு தான் அமெரிக்கா போன்ற நாடுகள் செய்யும் நரிதனம் தான் ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள். இதையெல்லாம் மே 17 இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மே 17 இயக்கம், 2012ல் அமெரிக்கா இலங்கை அரசு செய்த உள்நாட்டு விசாரணையான LLRC (Lessons Learnt and Reconciliation Commission) அறிக்கையை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்த போது, மார்ச் 18, 2012இல் சென்னை மெரினாவில் சுமார் 7000 மக்களை திரட்டி பொது வாக்கெடுப்பு மற்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் அமெரிக்க தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்றும் பதிவு செய்தது. அதோடு இலங்கையின் அரசியல் சாசனத்தையும் LLRC அறிக்கையும் எரித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2012 மே மாதம் நினைவேந்தலில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களைக் கொண்டு அழுத்தமாக ஊடகத்தில் பதிவு செய்தது மே 17 இயக்கம்.

அதேபோல 2013ல் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும் முன்னர் ஐநா அலுவலகத்தினை முற்றுகையிட்டு, கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தினை வலிமையானதாகவும் சர்வதேச விசாரணையை கோருகின்ற வழிமுறையைக் அதில் முன்வைக்கவும் வேண்டும் என்று மே 17 இயக்கம் பதிவு செய்தது. இதை செய்ய மறுக்கும் ஐநாவின் கொடியும் மே 17 இயக்கத்தினால் எரிக்கப்பட்டது.

2013இல் அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிற காரணங்களை மாணவர்களிடம் புரிய வைத்து அக்கோரிக்கையை முன்னெடுத்தது மே 17 இயக்கம். அதோடு அமெரிக்க தீர்மானம் மூலமாக அனைத்து தீர்வும் கிடைக்கும் என்ற விவாதங்களை எதிர்கொண்டு அதன் பொய்மை தன்மையை அம்பலப்படுத்தியது. மேலும் 2013 மார்ச் மாதம் 17ஆம் தேதி சென்னை மெரினாவில் மக்களை திரட்டி அமெரிக்க தீர்மானத்தை எரித்தது மே 17 இயக்கம். அப்போது அந்த அமெரிக்க தீர்மானம் பல இடங்களில் மாணவர்களால் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2014லிலும் ஐநாவில் அமெரிக்கா கொண்டுவர இருந்த தீர்மானத்திற்கு எதிராக தமிழர்களின் கோரிக்கைகள் அடங்கிய “தமிழர்களின் தீர்மானம்” என்ற ஒன்றை ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் மே 17 இயக்கம் இணைந்து தயாரித்து அதனை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒப்புதலோடு பத்திரிக்கையின் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களுக்கான தீர்மானத்தை வெளியிட்டது. ஆனால் தமிழர்கள் தயாரித்த அந்த கோரிக்கையை மறுத்து விட்டு அமெரிக்கா தனது நலன் சார்ந்த ஒரு அயோக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தது. எனவே அமெரிக்காவின் தூதரகத்தையும், ஐநாவின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு அமெரிக்க தீர்மானம் தமிழர்களுடைய இறைமையையும், தமிழினப் படுகொலைக்கான நீதியையும் மறுக்கிறது என்று பதிவு செய்து, அந்த அமெரிக்க தீர்மானத்தினையும், ஐநா கொடியும் எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது மே 17 இயக்கம்.

2015-லும் ஐநா இத்தீர்மானத்தின் மூலமாக இலங்கையை காக்கிறது என்றும், இத்தீர்மானம் தமிழர்களை மேலும் பின்னடைய செய்கிறது என்றும், ஐநா அலுவலகம் மற்றும் அமெரிக்க தூதரகத்தை இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, ஐநா மற்றும் அமெரிக்க கொடிகளையும் எரித்தது மே17 இயக்கம். அதோடு அமெரிக்காவின் அதிகாரி 2015 ஜனவரியில் ஐநாவிற்கு மாற்றப்பட்டு அவர் மூலமாக இலங்கை அரசே விசாரணை நடத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதையும் அம்பலப்படுத்தியது மே 17 இயக்கம்.

அதோடு இங்கு தமிழீழ எதிர்ப்பு கொள்கை அரங்கு என்பது அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை எனும் கூட்டமைப்பு தங்களுடைய சுயநலம் மற்றும் ராணுவ பொருளாதார பொது நலன்களை குறித்து உருவாக்கி வளப்படுத்தி இருக்கும் புதிய இந்தியப் பெருங்கடல் கூட்டு செயல் திட்டங்கள் பற்றிய பல கருத்தரங்குகளையும் தமிழகம் முழுவதும் நடத்தியது மே 17 இயக்கம்.

மேற்கூறிய அமெரிக்க தலைமையிலான கூட்டமைப்பின் பேச்சை கேட்டு 2016ல் ஐநா இலங்கை குறித்தான அறிக்கையை மேலும் இரண்டு ஆண்டுகள் தள்ளி வைத்ததை கண்டித்து ஐநா அலுவலகம் மேலும் ஒருமுறை மே 17 இயக்கத்தினால் முற்றுகை இடப்பட்டது. இப்படியாக ஈழ விடுதலைக்கு எதிரான அமெரிக்க இந்திய இங்கிலாந்து இலங்கை கூட்டணியை எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது மே 17 இயக்கம். 

இதன் விளைவாக மே 17 இயக்கம் முழங்கிய ”இலங்கை அரசை இனப்படுகொலை அரசு என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவி என்ற கோரிக்கையும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்து என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது”. அதோடு மட்டுமல்லாமல் ஐநா அரங்கத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்று முதன் முதலில் பதிவு செய்ததும், மேலும் இதுவரை அமெரிக்க தூதரகமும், ஐநா அலுவலகமும் தமிழ்நாட்டில் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. 2009க்குப் பின் அனைத்து சனநாயக அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை நாடுகளை உலகத்தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது மே 17 இயக்கம்.

உலகெங்கும் ஏகாதிபத்திய வல்லாதிக்க அரசுகளால் நிகழும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் உலகப் புகழ்பெற்ற “நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்” 2010ல் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் நடந்தது. தமிழீழத்தில் நிகழ்ந்த படுகொலைகளை உலகறிய செய்தது இந்த தீர்ப்பாயம் தான். ஜெர்மனியின் பிரேமன் நகரில் துவங்கிய இதன் இரண்டாம் கட்ட விசாரணையில் இலங்கை இனப்படுகொலையில் பங்கெடுத்த இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பங்களிப்புகளைப் பற்றி விசாரணைக்கு உட்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இந்திய அரசின் பங்களிப்பு பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க மே 17 இயக்கம் அழைக்கப்பட்டது. 2013 டிசம்பரில் நிகழ்ந்த இந்த விசாரணையில் இந்தியா குறித்த தனது ஆவணங்களை மே 17 இயக்கம் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு அனைத்து வகையிலும் ஈழ விடுதலைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் சமரசமில்லாமல் எதிர்த்து இன்று வரை போராடி வருகிறது மே 17 இயக்கம். இனிமேல் ஈழம் நடைமுறைக்கு உதவாத வாதம் என்பவர்களுக்கு மே 17 இயக்கம் கூறுவது என்னவெனில், உலகை மிகச் சரியாக கணித்த மார்க்சியம் நம்மை ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி தனித் தமிழீழத்திற்காக போராடச் சொல்கிறது, போராடச் செய்கிறது என்பதாகும்.

ஈழம் போன்ற தேசங்கள் மிகச்சிறிய தேசங்களாக இருப்பதால் அதன் விடுதலை சாத்தியமில்லை, அதனால் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதற்கான பதிலையும் பேராசான் லெனின் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். அதாவது ‘பரந்துபட்ட சனநாயகத்தையும், விடுதலையையும் உறுதிப்படுத்த, தேசிய இனங்களுக்கான சுயாட்சிப் பகுதிகள் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கூட உருவாக்கப் படவேண்டும்’ என்பதேயாகும்.

இந்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 15 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் போராடி வருகின்றனர். தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுவே இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு நீதியாக அமையும். அந்த வகையில் கொல்லப்பட்ட நமது உறவுகளை நெஞ்சில் ஏந்தியும், தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டுச் சென்ற தமிழீழ கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கும் விதமாகவும் மே 17 இயக்கம் ஆண்டுதோறும் மே மாதம் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தலை சென்னையில் நடத்தி வருகிறது.

அப்படி 2017ல் சென்னை மெரினா கடற்கரையில் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மற்றும் இளமாறன், அருண்குமார், டைசன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

2018-ல் சென்னை கடற்கரைக்கு அருகில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியிலும், 2019-ல் சேப்பாக்கம் அருகிலும், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக அவரவர் வீடுகளில் நினைவேந்தல் செலுத்தப்பட்டது. 2022-ல் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் அனுமதியளித்து கடைசி நேரத்தில் ரத்து செய்தது காவல் துறை. இருப்பினும் தடையை மீறி ஆயிரக்கணக்கானவர்களுடன் பெசண்ட் நகர் பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல் நடத்தியது. 2023-ல் பலகட்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு பெசண்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

2024, மே 19 நாளன்றும் நம் தமிழின சொந்தங்களுக்காக நினைவேந்தல் நடத்துகிறோம். நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு அனைவரும் ஒன்று கூடி நினைவேந்துவோம் என கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்வதற்காகவே ஒவ்வொரு மனிதனும் ஓடிக் கொண்டிருக்கையில் தமிழின விடுதலைக்காக சாவதற்கென்று ஒவ்வொரு மணித்துளியும் ஓடிக்கொண்டிருந்த அதிசயப் பிறவிகளான விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் கனவான “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” எனும் முழக்கத்தை மெய்ப்பிக்கும் விடுதலையின் பாதையை தமிழர்களாகிய நாமே தீர்மானிப்போம்.

தமிழீழம் வெல்வோம்!

நிமிர் பதிப்பகத்தின் ’சர்வதேச அரசியலில் தமிழீழம்’ என்ற புத்தகம் மே பதினேழு இயக்கம் வெளியிட்டுயுள்ளது. இதில் தமிழீழம் குறித்தான தமிழீழப் போராட்டங்கள், நம் கடமைகள், இடைக்கால அரசியல் சட்டம், தமிழீழம் பற்றிய ஐ.நாவின் செயல்பாடு என சன்னமாக ஒலிக்கும் தமிழீழக் குரலை ஓங்கி உரக்கச் சொல்கிறது இந்த புத்தகம்.

ஈழப்புத்தகங்களை வாங்க:

திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086, அழைப்பு: 9884082323

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!