தற்போது உலகம் முழுவதும் 160 கோடி மக்கள் தங்கள் கணினிகளில் VPN (virtual private network) என்ற உலாவியைப் (browser) பயன்படுத்துகின்றனர். தங்கள் அலுவலகப் பணியை இணைய வழியில் மேற்கொள்ளும் மென்பொறியாளர்கள் முதல் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க விரும்பும் இணையப் பயன்பாட்டாளர்கள் வரை அனைவரும் VPN உலாவியை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆறு VPNகளில் மூன்று VPNகள் இசுரேல் பாதுகாப்பு படை (IDF) உடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
இதற்கு முன்னரும் தொழில்நுட்பத்தின் உதவியால் இசுரேல் உளவு மென்பொருளை வடிவமைத்ததும், அரசியல் தலைவர்களை உளவு பார்த்ததும் நாம் அறிந்ததே. இசுரேலின் இனப்படுகொலை இராணுவத்தின் ரகசிய தகவல் தொழிற்நுட்ப அமைப்பான ‘யூனிட் 8200’ என்ற நிறுவனம் தான் செலிபிரைட் மற்றும் பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளைக் கண்டுபிடித்தது. (இந்த பெகாசஸ் மூலம் தான் தோழர் திருமுருகன் காந்தி உட்பட பல சமூக ஆர்வலர்களின் கைபேசி உளவு பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது) தனக்கு எதிராக இயங்கும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என மெற்காசியா துவங்கி உலகெங்கிலும் தகவல் திருட்டு, படுகொலைகள் செய்ய தகவல் தொழிற்நுட்ப மென்பொருள்களை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு விற்பனைசெய்கிறது. இந்த மென்பொருள் மூலம் ஜமால் கஷோகி போன்ற பத்திரிக்கையாளர்களை கொலை செய்ய சவூதி அரேபியாவுக்கு உதவி செய்தது இசுரேல்.
இத்தகைய சூழலில் தான் VPN உலாவியை இசுரேல் நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது இணைய பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. இசுரேலிய உளவுத்துறைக்கு மக்களின் தனிப்பட்ட தகவல்களை திறந்து விடும் சாவியாக VPN செயல்படுகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
VPN என்பது ஆன்லைனில் நம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதாகக் கூறும் ஒரு இணைய சேவையாகும். நாம் கணினியில் VPN-ஐ நிறுவினால் நாம் வழக்கமாக பயன்படுத்தும் இணைய சேவை நிறுவனத்திற்குப் பதிலாக VPN நிறுவனம் நம் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.
நம் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நாம் VPN பயன்படுத்துகிறோம். ஆனால் மிக முக்கியமாக தனிநபர் செயல்பாடுகளை பாதுகாக்க வேண்டிய VPNதான், தற்போது நம் தகவல்களை கசிய விடும் வேலையைச் செய்கிறது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட கேப் டெக்னாலஜிஸ் நிறுவனம்தான் ExpressVPN, CyberGhost, Private Internet Access, ZenMate, Intego Antivirus போன்ற பல தொழில்நுட்ப இணைய VPN தொழில் நிறுவனங்களை விலைக்கு வாங்கி இசுரேலின் உளவுத்துறைக்கு தகவல் திரட்டுவதற்காக பயன்படுத்துகிறது. 1,000 பேருக்கு மேல் பணிபுரியும் கேப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான டெடி சாகி இசுரேலின் டெல் அவிவில் பிறந்தவர். இசுரேலின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக இருந்த டெடி சாகி 6.4 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு உரிமையாளர். ஆனால் பொருளாதாரக் குற்றங்களுக்காக சிறை சென்றவர்.
இசுரேலிய உளவுத்துறைக்கு மிகவும் நெருக்கமான டெடி சாகி காசாவிற்கு எதிரான பரப்புரைக்காக இசுரேல் அரசாங்கத்திற்கு பல மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதிஉதவி அளித்தார் சாகி. கடந்த 2019 ஆம் ஆண்டில், முன்னாள் இசுரேலிய ராணுவ வீரர்களுக்கு (3 மில்லியனை டாலர்) கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். இசுரேலின் இனவெறி மிக்க ராணுவ வீரர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவார். முன்னாள் இசுரேலிய வீரர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளையும் வழங்கியவர் சாகி.
மேலும், இசுரேலிய உளவுத்துறை உடன் பல காலமாகத் தொடர்பு கொண்ட நிறுவனம்தான் கேப் டெக்னாலஜிஸ். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரான கோபி மெனாசெமி ‘யூனிட் 8200’ நிறுவனத்தில் டெவலப்பராக தனது தொழில்நுட்ப வேலையைத் தொடங்கினார். கேப் நிறுவனத்தின் தற்போதைய கணக்கியல் தலைவரான லிரோன் பீரும் இசுரேலிய இராணுவத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். கோபி மெனாசெமிக்குப் பின் பதவியேற்ற இடா எர்லிச்மன்னும் உள்ளூர் அரபு மக்களுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
2018க்கு முன்பு வரை கேப் டெக்னாலஜிஸ் நிறுவனம் ‘கிராஸ்ரைடர்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. கணினி உலாவிகளில் விளம்பரங்களை வலுக்கட்டாயமாக ஒளிபரப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்தது கிராஸ்ரைடர். பயனர்களின் கணினிகள், (PC மற்றும் Mac ஆகிய இரண்டிலும்) விளம்பர வருவாயைப் பெருக்குவதற்கு க்ராஸ்ரைடர் தனது இயங்குதளம் மூலம் மால்வேர் வைரஸ்களை பரப்பியது. இதன் பின்னரே கேப் டெக்னாலஜிஸ் என்று அந்த நிறுவனம் பெயரை மாற்றி இருக்கிறது.
2017 ஆம் ஆண்டில், கேப் நிறுவனம் சைபர் கோஸ்ட் என்ற முதல் முதல் வி.பி.என்-இயங்குதளத்தை 10 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. 2018 இல் ZenMate நிறுவனத்தை $5.5 மில்லியனுக்கும், 2019 இல் Private Internet Access நிறுவனத்தை $126 மில்லியனுக்கும், 2021 இல் ExpressVPN $936 மில்லியனுக்கும் வாங்கியது. இவ்வாறு இன்றுவரை உலகின் மிக விலையுயர்ந்த VPN இயங்குதளங்களை விலைக்கு வாங்கியிருக்கிறது கேப் நிறுவனம். இவற்றைப் போன்றே VPN Mentor மற்றும் Wizcase போன்ற VPN மதிப்பாய்வு தளங்களையும் விலைக்கு வாங்கியது. இந்த நேர்மையான மதிப்பாய்வு நிறுவனங்களை தன்வசப்படுத்தியதன் மூலம் தனது VPN நிறுவன கட்டமைப்பை பொதுமக்கள் மத்தியில் தரமான நிறுவனங்களாக தரப்படுத்தும் வேலையிலும் ஈடுபடுகிறது.
2019-2023 ஆண்டுகளில் ExpressVPN இன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) டேனியல் ஜெரிக் மீது உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் சாதனங்களை ஹேக் செய்து, அவர்களின் தரவைத் திருடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்கு அனுப்பிய உளவாளிகளின் குழுவில் ஜெரிக் இருந்தார் என்று ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது. இந்த தரவு மூலம் ஐக்கிய அரபு அமீரகம், அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைக் கண்டுபிடித்து சித்திரவதை செய்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது.
ஜெரிக்கை ராய்ட்டர்ஸ் அம்பலப்படுத்திய பின்னர் அமெரிக்க நீதித்துறை அவருக்கு $335,000 அபராதம் விதித்தது. இவ்வளவு நடந்த பின்னரும் ExpressVPN நிறுவனம் ஜெரிக்கை தொடர்ந்து ஆதரித்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே ஜெரிக் ExpressVPN-யை விட்டு வெளியேறினார்.
ஜெரிக் உளவு பார்த்தது அம்பலமானதால் ExpressVPN-இல் வேலை செய்த பல ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களிடமிருந்து முக்கியமான தரவுகளைத் திருடி ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பிய இந்த இணைய-கூலிப்படை குறித்து எட்வர்ட் ஸ்னோவ்டென்னும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு முன்னாள் உளவாளி என்ற பின்னணியுடன், ஜெரிக் கேப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இணைந்தார். 2016-2023 ஆண்டுகளில் கேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆக பணி புரிந்த இடா எர்லிச்மன், டுவதேவன் என்ற இஸ்ரேலிய அரசியல் படுகொலைகள் நிகழ்த்தும் கமாண்டோ பிரிவின் மூத்த அதிகாரி. (டுவதேவன் குறித்து நெட்ஃபிக்ஸ் தொடரான Fauda இல் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.)
யூனிட் 8200 இசுரேலிய அரசு எந்திரத்தின் உளவு மையப்புள்ளியாக உள்ளது. பாலஸ்தீனிய மக்களை இடைவிடாது கண்காணிக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான டிஜிட்டல் வலையை அது உருவாக்கியுள்ளது, பாலஸ்தீனிய மக்களின் அலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் என ஒவ்வொரு அசைவும் யூனிட் 8200 குழுவால் கண்காணிக்கப்படுகின்றன.
பாலஸ்தீனியர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை, அவர்களின் மருத்துவ வரலாறு, பாலியல் வாழ்க்கை மற்றும் browser தேடல் வரலாறுகள் உட்பட அனைத்து தரவுகளையும் கசிய விடுகிறது யூனிட் 8200. இந்தத் தகவல்கள் பாலஸ்தீனிய மக்களை மிரட்டி பணம் பறிப்பதற்கு கூட சில வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் குண்டுவீச்சிற்கான இலக்குகளைத் தேர்ந்தெடுக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திட்டம் வகுத்தது யூனிட் 8200.
யூனிட் 8200 நிறுவனத்தால் கண்டுபுடிக்கப்பட்ட உளவு மென்பொருள்தான் பெகாசஸ். பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஈராக்கின் அதிபர் பர்ஹாம் சாலிஹ் போன்ற அரசியல்வாதிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள 50,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களை உளவு பார்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களும் பெகாசசால் கண்காணிப்புக்கு இலக்காக்கப்பட்டனர். பெகாசஸை உலகின் மிகவும் சர்வாதிகார அரசாங்கங்களுக்கு விற்றது யூனிட் 8200.
இந்தியாவில் தோழர் திருமுருகன் காந்தி உட்பட பல சமூக ஆர்வலர்களின் அலைபேசியை ஒட்டுக்கேட்க பெகாசாசை பயன்படுத்தினார் மோடி. இந்திய தலைமை நீதிபதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணின் தொலைபேசியை ஹேக் செய்யவும் பெகாஸஸ் பயன்பட்டது.
சமூக வலைத்தளங்களிலும் இசுரேலின் உளவுப்படை:
VPN மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் இசுரேலின் உளவு மிக ஆழமாக பரவியிருக்கிறது. யூனிட் 8200 நிறுவனத்தில் பணிபுரிந்த ஏராளமான நபர்கள் முகநூல் நிறுவனமான மெட்டாவில் மூத்த பதவிகளில் பணியாற்றியுள்ளனர். இவர்களுள் முக்கியமானவர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலிய நீதித்துறை அமைச்சரகத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரலுமான எமி பால்மர் ஆவார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸின் மேற்பார்வை குழுவில் அமர்ந்திருக்கும் 21 நபர்களில் பால்மரும் ஒருவர். எனவேதான் நாம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிடும் போது முகநூல் உடனே அந்தப் பதிவை நீக்குகிறது.
பேஸ்புக் தொடர்ந்து இசுரேலுக்கு ஆதரவாக உள்ளதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குரல்களை முடக்குவதும் இவர்களின் திட்டப்படியே நடக்கிறது. இதே போன்று யூனிட் 8200 நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 99 நபர்கள் கூகுளில் பணிபுரிகின்றனர். கூகுளின் செயல்பாடுகளுக்கான தலைவர் கேவ்ரியேல் கோய்டெல், அதன் நுண்ணறிவு, தரவு மற்றும் மேலாண்மைத் தலைவர் ஜொனாதன் கோஹன் மற்றும் கூகிள் வேஸின் உலகளாவிய சுய சேவைத் தலைவர் ஓரி டேனியல் இவர்களில் முக்கியமான இசுரேலியர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் யூனிட் 8200 நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 166 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் பலர் இசுரேலிய இராணுவத்திலிருந்து நேரடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தவர்கள்.
இந்த பின்னணியில், பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலையில் படுகொலை செய்வதற்கான இலக்கை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் லாவண்டர் WhatsApp குழுக்கள், Google Photos மூலம் அடையாளம் கண்டறிகிறது. சந்தேகத்திற்குரிய நபர் பாலஸ்தீனிய விடுதலை அமைப்புகளுடன் ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடர்பில் இருந்திருந்தால், அவர்களை கொல்ல 100 பொதுமக்கள் வரை கொல்லலாம் எனும் விதிமுறைகளை பின்பற்றுகிறது. இது சர்வதேச போர் விதிமுறைக்கு எதிரான கொடூரமான போர் குற்றம் ஆகும்.
இதே Unit 8200 நிறுவனம் லெபனான் மக்கள் மீதான Pager, Walkie-talkie தீவிரவாத தாக்குதலுக்கு சர்வதேச நுகர்பொருள் வர்த்தக சந்தையில் ஊடுருவி உலக சந்தையை அபாயகரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. வரலாற்றில் இடம்பெறாத மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு, உலக சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகளில் எந்த சர்வதேச விதிகளுக்கும் உட்படாத நாடாக இருக்கும் இஸ்ரேலின் கொடூரமான உளவு அமைப்பான Unit 8200 நிறுவனத்தின் VPN நிறுவன சந்தை ஊடுருவல் சர்வதேச சமூகத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது.
இதே நிறுவனம் Wix எனும் இணைய தள சேவை வழங்கும் நிறுவனத்தையும் உருவாக்கி வெகுமக்கள் மத்தியில் பிரபலப் படுத்தியுள்ளது. இதன் மூலம் தகவல் சேமிக்கும் சேவையை வழங்குகிறது. இந்த நேரடி தகவல் சேமிப்பு நிறுவனம், மறைமுகமாக தகவல் திருடும் VPN சேவை, Pegasus, Celebrate போன்ற உளவு மென்பொருள், Google, Meta, Microsoft உள்ளிட்ட மேற்கத்திய தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் இன்றைய உலக சமூக கட்டமைப்பை, சமூக பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாக விளங்குகிறது Unit 8200.
இசுரேல் எனும் சர்வதேச விதிமுறைகளை மதிக்காத இனப்படுகொலை குற்றவாளி நாடு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட இன்றைய தொழிற்நுட்ப உலகில் உளவு தகவல் சேகரிக்கும் பணியை செய்து வரும் அமைப்பு Unit 8200.
உலகம் தகவல் தொழில்நுட்பங்களின் மூலமாகவே இணைந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதாகவே உறுதியளிக்கின்றன. ஆனால் அந்த பாதுகாப்பு தளங்களே ஒரு இனவெறி நாட்டின் கைப்பிடிக்குள் இருக்கின்றன. ”தனி நபர் மட்டுமல்ல, ஒரு நாட்டினையே மிரட்டலாம், பணத்திற்காக உளவு செயலிகளை ஒரு நாட்டிற்கு விற்கலாம், இராணுவ இரகசியங்களை கசிய விடலாம், மூலதன முதலீட்டாளர்களின் தகவல்களையும் கொண்டு உலக வணிகத்தையே கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் என்கிற நிலையை இசுரேல் உருவாக்கி இருக்கிறது”.
இலங்கை இனவெறி அரசுக்கு, பதுங்கு குழிகளையும் ஊடுருவிப் பார்க்கும் கருவிகளைக் கொடுத்து, தமிழீழ மக்களைக் கொத்துக் கொத்தாக சொல்வதற்கு காரணமாயிருந்தது இசுரேல். ”லெபனானில் செல்போன், பேஜர் முதற்கொண்ட 2000 கருவிகளை வெடிக்க வைத்து, 40க்கும் மேற்பட்டோரை கொன்றது இசுரேல். வாட்ஸ் அப் செயலி மூலமாக, ஈரான், பாலஸ்தீன தலைவர்களின் இருப்பிடம் கண்டறிந்து எறிகனைகள் வீசி படுகொலை கொன்றது”.
தங்களின் தொழில்நுட்ப திறமைகளை நாசகார வேலைகளில் ஈடுபடுத்தி உலகில் அமைதியின்மையை உருவாக்கும் இனவெறி நாடாக இசுரேல் இருக்கிறது. இசுரேலின் இந்த அதிநவீன தொழில் நுட்ப அறிவால் உருவான பெகாசிஸ் எனும் செயலியை மோடி அரசு வாங்கியது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு என்று நம்பக்கூடிய மென்பொருள்களில், நாம் அறியாத வகையில் நம் மென்பொருள்களில் உள்ள தகவல்களுக்கு இவ்வளவு பாதுகாப்பின்மை வலைப்பின்னல்கள் இருக்கும் போது, இந்தியாவின் வாக்கு எந்திரமான EVM கருவியின் தொழில்நுட்பம் பாதுகாப்புத் தன்மையுடையது என்பதன் உத்தரவாதமும் கேள்விக்குறியானதே.
தகவல் தொடர்பு சாதனங்களை உண்மையாகவே வெடிகுண்டுகளாக மாற்றிய இவர்கள், நாம் அறியாமல் பகிரும் நம் தகவல்களை வெடிக்கும் குண்டுகளாக மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்பது திண்ணம். விழிப்புடன் இருக்க வேண்டும், அது மட்டுமே தீர்வாகாது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு நாடு, செய்யும் அனைத்து குற்றங்களையும் அம்பலப்படுத்துவதும், அதனை எதிர்த்து போராடுவதும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சமூகத்தில் செய்தியை கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும்.