கடந்த 2022இல் ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே தொடங்கிய போர் தற்போது மூன்றாம் உலகப் போராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் போரில் அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மே 22, 2024 அன்று ரஷ்யாவின் அர்மாவிர் பகுதியில் உள்ள இரண்டு ரேடார்கள் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த இரு ரேடார்களும் ரஷ்யாவின் அணுசக்தி துறையின் அடித்தளமாக விளங்குவதால் உலகளவில் அணுஆயுதப் போர் (nuclear war) தொடங்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று உலகில் பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில் எந்த ஒரு நிகழ்வையும் தனித்த நிகழ்வாகவோ அல்லது அந்தப் பிராந்தியம் சம்பந்தப்பட்ட நிகழ்வாகவோ நாம் கடந்து செல்ல இயலாது. அதேபோல் தான் இந்த ரஷ்யா-உக்ரைன் போரையும் நமக்கு தொடர்பற்றதாக நினைத்து நாம் கடந்து செல்ல இயலாது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான இந்த மூன்றாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்காவின் கைப்பாவையாக NATO (நேட்டோ) எனும் கூட்டமைப்பு இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1949ல் உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ (NATO). அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த NATO கூட்டமைப்பானது சோவியத்துக்கு எதிரான ஒரு ராணுவ கூட்டமைப்பாக வளர்ந்து நின்றது. இங்கிலாந்து, அமெரிக்கா தவிர கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் துருக்கி உட்பட 32 உறுப்பினர்களைக் கொண்டது நேட்டோ. உலகத்தில் உள்ள மொத்த ராணுவ செலவினங்களை விட கிட்டத்தட்ட 70% அதிகமான இராணுவ செலவினங்களைக் கொண்ட கூட்டமைப்பு. முழுமையாக சோவியத்தை, குறிப்பாக கம்யூனிசத்தின் உருவாக்கத்தை தடுப்பதே NATOவின் நோக்கம்.
நேட்டோ எனப்படும் இந்த வட அட்லாண்டிக் கூட்டமைப்பின் உறுப்பினராக இல்லாத நாடு உக்ரைன். ஆனால் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தந்த NATO கூட்டமைப்பு இந்த மூன்றாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததை உலகமே உற்று கவனித்தது. ஒரு காலத்தில் சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டிருந்த இரு நாடுகளுக்குமிடையே போர் துவங்கியதற்குப் பின்னால் சில முக்கிய நிகழ்வுகள் இருந்தன. குறிப்பாக நேட்டோவின் கிழக்கு விரிவாக்கம் போருக்குக் காரணமாக இருந்தது.
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு மாநிலங்கள் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த முழுப் பகுதியும் பொதுவாக ‘டான்பாஸ்‘ பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழும் பெருன்பான்மை மக்கள் ரஷ்ய மொழி பேசினாலும் தங்களை எந்த நாட்டிற்கும் அடிமையாகாமல் தன்னாட்சி பிரதேசங்களாக அங்கீகரிப்பதையே விரும்பினார்கள்.
2014ஆம் ஆண்டில், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் உக்ரைனிலிருந்து பிரிந்தன. அந்த ஆண்டின் பிப்ரவரி பிற்பகுதியில் நேட்டோவுடன் உறவை முறித்துக் கொண்டது ‘டான்பாஸ்‘ பகுதி. இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடின் 21 பிப்ரவரி 2022 அன்று இந்த பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.
பால்டிக் பகுதி முதல் பல்கேரியா வரை ரஷ்யாவின் எல்லைகள் முழுவதும் துருப்புகளை நிறுத்தியிருந்த நேட்டோவிற்கு இந்த நிகழ்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 12 நாடுகளுடன் உறுப்பினர் எண்ணிக்கையைத் தொடங்கிய நேட்டோ தற்போது 32 நாடுகளுடன் விரிந்து கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் படைகள் டான்பாஸ் பகுதிக்குள் நுழைந்தன. ஆனால் ‘டான்பாஸ்’ பகுதியை விட்டுக்கொடுக்க விரும்பாத உக்ரைன், செப்டம்பர் 2022இல் ரஷ்ய இராணுவத்தை பின்னுக்குத் தள்ளி, அங்கு ஆயிரம் சதுர மைல் பரப்பளவைக் கைப்பற்றியது.
போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி 2022 டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை அதிகமாக்கியது அமெரிக்கா. கப்பல் ஏவுகணைகள், குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்ட பேட்ரியாட் ஏவுகணைகள் உட்பட உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியது.
தொடர்ச்சியாக NATO உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கத் தொடங்கின. போர் துவங்கிய நாளிலிருந்து அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் $75 பில்லியன் நிதி உதவிகளை வழங்கியுள்ளது. மற்ற நேட்டோ நாடுகள் இணைந்து $100 பில்லியனுக்கு மேல் வழங்கியுள்ளனர். மேலும் பிரித்தானியா உக்ரைனுக்கு 7.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்கி வருகிறது. நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா ஆகிய மூன்று இடங்களிலும் பெரிய ஆயுததளங்களை உருவாக்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது நேட்டோ உறுப்பு நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவியோடு உக்ரேனிய வீரர்களுக்கு போர்ப்பயிற்சியும் அளித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் 22/5/2024 அன்று ரஷ்யாவின் அர்மாவிரில் உள்ள இரண்டு ரேடார்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
அணுசக்தி துறையில் உள்ள முன்னணி நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவின் அதிநவீன ரேடார் நெட்வொர்க், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டறியும் திறனை கொண்டவை. இவை ரஷ்யாவின் early warning சிஸ்டம் எனப்படும் முன்னெச்சரிக்கை சமிக்ஞை தரும் நெட்வொர்க்களாகவும் செயல்பட்டன. அமெரிக்க அணுசக்தி தாக்குதலைக் கண்டறியவும், அவற்றை அழிப்பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. போர்க்கப்பல்கள் மாஸ்கோவைத் தாக்கினால் சுமார் 19 நிமிடங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் திறன் கொண்டவைதான் இந்த ராடார்கள்.
இந்த ரேடார் தளங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம் ரஷ்யாவை தூண்டி விட்டிருக்கின்றன நேட்டோ நாடுகள். நேட்டோவின் அணுஆயுதப் போருக்கான முதற்படியாகவே இந்தத் தாக்குதலை நாம் கவனிக்க வேண்டும். நேட்டோவின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா தனது அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை கியூபாவிற்கு அருகில் நிறுத்தியுள்ளது. பூகோள ரீதியாக அமெரிக்க கடற்கரைக்கு அருகில் நிறுத்தியதால், போர்ச்சூழல் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
ஜூன் மாதம் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பைடன், ஜெலென்ஸ்கி இருவரும் 10 ஆண்டு அமெரிக்க-உக்ரைன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். அடுத்தடுத்து உலக அரங்கில் நிகழும் இந்த மாற்றங்கள் தெற்காசியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு ஒட்டுமொத்தமாக உலக ஒழுங்கையும் (world order) பொருளாதாரத்தையும் மாற்றக்கூடிய ஒரு போராக இந்தப்போர் இருக்கிறது. அந்தவகையில் நேட்டோவின் விரிவாக்கம் என்பதும், அமெரிக்காவின் தொடர்ச்சியான போர்கள் என்பதும் அனைத்து மக்களையும் பாதிக்கிறது.
மேலும் இந்தப் போரில் யுரேனியம் ஆயுதங்கள் போன்ற அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் எனும் செய்திகளும் பரவுகின்றன. ஏற்கெனவே எரிபொருள் விலை, சரிந்து வரும் நிதி கட்டமைப்பு என பல்வேறு காரணங்கள் உலகை அச்சுறுத்தும் வேளையில் அணுஆயுதப் போரின் மூலம் தெற்காசிய பகுதி வரை ஆபத்தை விளைவிக்கப் பார்க்கின்றன வல்லாதிக்க நாடுகள். இந்த மூன்றாம் உலகப் போரினால் இந்தியாவில் ஏற்படப்போகும் அரசியல் பாதிப்புகள் நம் ஒவ்வொருவரையும் நேரடியாகவே பாதிக்கும். எனவே புவிசார் அரசியலைப் புறந்தள்ளாமல் கவனிப்போம்.
போர்களை ஊக்குவித்து நாடுகளுக்கிடையே பதட்டமான சூழலை தொடர்ச்சியாக தக்க வைப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், ஆயுத வியாபாரத்தையும் எல்லா காலத்திலும் முதலிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் அதன் ஜியோனிச முதலாளிகள்.
போர்கள் இல்லாத உலகத்தையும், நோய்கள் இல்லாத மக்களையும் அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அறுக்கப்படும் பிராணியை மற்ற பிராணிகள் அச்சத்துடன் பார்ப்பது போலவே உலகம் போரினால் பாதிக்கப்படும் நாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுப்பதற்கு ஒருஙரகிணைந்த சக்தி ஏதும் இல்லை.
வலுத்தவன் வாழ்வான் என்ற கோட்பாடு உடைய வேண்டும்.
வலியையும் வேதனையையும் வலுத்தவன் உணராத வரை எளியவனுடன் சமாதானாத்திற்கு வரமாட்டான்.