ரெம்டெசிவர், வரமா? வணிகமா?

ரெம்டெசிவர், வரமா வணிகமா?

 

“இந்தியாவின் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் கையை மீறிச் சென்றுவிட்டது. நிபுணர் குழுவின் விஞ்ஞானிகள் அளிக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வகுக்க இந்திய அரசு ஒத்துழைக்கவில்லை” – கொரோனா நோய்த்தொற்றுப் பரவலின் கண்காணிப்பு நிபுணர் குழுவில் (INSACOG)  இருந்து  கடந்த வாரம் ராஜினாமா செய்த தலைமை அதிகாரிகளில் ஒருவரான ஷாஹித் ஜமீல் (வைரஸ் நிபுணர்) நியுயார்க் இதழில் ஒரு பேட்டியின் போது கூறிய செய்திகள் இவை.

130 கோடி மக்கள் வளம் கொண்ட நாட்டில் எந்த அளவுக்கு பொறுப்புணர்வுடன் மக்கள் நலம் பேணப்பட வேண்டும் என்கிற அக்கறைத் துளியுமற்ற அரசால் போதுமான மருத்துவ வசதிகளின்றி மக்கள் அல்லல்படும் நிலையினையும், ஆயிரக்கணக்கான மக்கள் மரணிக்கும் செய்திகளையும் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா முதல் அலையில் பொழுதே மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன் போன்ற அத்தியாவசியத் தேவைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியும், உருமாற்றம் அடையும் வைரஸ் தொற்றினால் பல நாடுகளில் உருவான உயிரிழப்புகள் பற்றி எச்சரித்தும் மோடி அரசு மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாததன் விளைவை இப்பொழுது மக்கள் அனுபவிக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிறந்த பலனளிப்பதாக “ரெம்டெசிவர்” என்னும் மருந்தினை பெரும்பாலான  மருத்துவமனைகள் பரிந்துரைக்க மத்திய, மாநில அரசுகள் மக்களின் பயன்பாட்டுக்கு ஊக்கப்படுத்தின. நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்களிடம் மருத்துவமனைகள் இந்த மருந்தை வாங்கி வரும் பொறுப்பை ஒப்படைத்ததன் விளைவாக அவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பெரும் துயரமும், மன உளைச்சலும் கொண்டவர்களை இந்த செயல் மேலும் துன்பத்திற்குள்ளாக்கியது.

இந்த மருந்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கி திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற முக்கிய நகரங்களின் மருத்துவமனைகளில் அரசே விற்பனை அரங்கை ஏற்படுத்தியது. அயல் நாடுகளிலிருந்து மருத்துவ உதவியாக 5.3 லட்சம் ரெம்டெசிவர் குப்பிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தும் தமிழ்நாட்டிற்கு அதன் தேவைக்குரியதை விட மிகவும் குறைவாகவே மத்திய அரசு ரெம்டெசிவரை ஒதுக்கீடு செய்தது. இதனால் இந்த மருந்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. கள்ளச்சந்தை உருவாகவும் இது காரணமானது. ஆயிரம் ரூபாய்க்கு குறைவான இந்த மருந்தின் விலை கள்ளச்சந்தையில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் மக்கள் இதனை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த சூழலை வாய்ப்பாகக் கொண்டு ரெம்டெசிவர் போன்று தயாரிக்கப்பட்ட போலி மருந்துகளும் விற்பனையாயின.

இப்பொழுது தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு இதனை வழங்கும் வழிமுறைகளை ஒழுங்குபடுத்தியிருந்தாலும் இவ்வளவு நெருக்கடிகளை உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு வரமென கருதப்பட்ட இந்த மருந்தின் செயல்திறன் பற்றி இப்போது நமக்கு கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளின் படி  மருந்துகளின் சந்தையில் மறைந்திருக்கும் பல உண்மைகளையும், மக்களிடம் பரவிய வதந்திகளையும், அதன் பின்னணியில் இருக்கும் வணிகத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன.

ரெம்டெசிவர் வரமா?

ரெம்டெசிவர் மருந்து அமெரிக்காவின் “கீலியட்” (Gilead) எனும் மருந்து நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்தியாவில் அதன் காப்புரிமை பெற்று ஏழு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த மருந்து “ஹெபடைடிஸ்-சி” என்னும் கல்லீரல் கிருமித் தொற்றுக்கு எதிராக கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா மற்றும்  சார்ஸ்2 (SARS-COV2) போன்ற வைரஸ் நோய்த் தொற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நோய்களுக்கும் ரெம்டெசிவர் மருந்து பெரிதாக பலனளிக்கவில்லை. கொரோனாவின் மிதமான நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகையில் முன்னேற்றம் ஏற்படுவதாகக் கீலியட் நிறுவனம் அறிவித்தது.

உலக சுகாதார கழகத்தின் ஆய்வாளர்கள் “சாலிடாரிட்டி” ஆய்வு என்ற பெயரில் 30 நாடுகளில் 405 மருத்துவமனைகளில் நடத்திய ஆய்வுகளில் 28 நாட்கள் கழித்து ரெம்டெசிவர் ஊசி செலுத்தப்பட்டவர்களில் 2743 பேரில் 301 நபர்கள் மரணித்ததாகவும், ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தாமல் வழங்கபட்ட சிகிச்சையில் 2708 பேரில் 303 நபர்கள் மரணமடைந்ததாகவும் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சியில் “ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்து அல்ல” என்று கடந்த டிசம்பர் மாதமே உலக சுகாதார கழகம் தெரிவித்துவிட்டது.

கீலியட் நிறுவனத்தின் நிதியளிப்பில் நடத்திய ACTT-1 ஆய்வில் 541 நபர்களுக்கு செலுத்தப்பட்ட ரெம்டெசிவர் ஊசியால் நோயாளிகள் குணமடைய 10 நாட்களும், 521 நபர்களுக்கு “ப்ளசிபோ” (மருந்தற்ற  போலி)  ஊசி வழங்கப்பட்டதில் நோயாளிகள் குணமடைய 15 ஆனதாக வெளியானது. நோயாளிகள் குணமடையும் நாட்களை ஐந்து நாட்கள் வரை மட்டுமே இந்த மருந்து குறைக்கிறதே தவிர இறப்பு விகிதத்தை எந்த விகிதத்திலும் குறைக்கவில்லை என “நியூ இங்கிலாந்து  ஜர்னல் மெடிசின்” என்னும் இதழ் வெளியிட்டுள்ளது.

“நியூ இங்கிலாந்து ஜர்னல் மெடிசின்” ரெம்டெசிவிர் செயல்திறன் ஆய்வு வெளியீடு.

இதனைப் போன்றே ஜாமா, லான்செட் போன்ற மருத்துவ இதழ்களும ரெம்டெசிவர் வழங்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் ரெம்டெசிவர் மருந்து என்பது முற்றிலும் குணமாக்கக் கூடிய சிறந்த பலன் உடைய மருந்து இல்லை எனத் தெரிவிக்கின்றன.

பொதுவாக, மனித செல்களில் இருக்கும் மரபணுவில் உள்ள டி.என்.ஏ (DNA) வானது புது செல்களை உருவாக்க DNA நகல்களை தோற்றுவிக்கும். இதற்கு வேலை செய்யும் ஆர்.என்.ஏ(RNA) க்களும், புரதங்களும் தேவை.. கொரோனா  வைரஸ் என்பது ஒரு ஆர்.என்.ஏ இழையினைக்(Single stranded RNA) கொண்ட கிருமி. இதன் மேற்பரப்பு முட்கள் போன்ற புரதத்தால்(Spike proteins) ஆனது. மனித செல்லின் மேற்புறமுள்ள ACE2 எனும் ஏற்றிகள் (Receptor) வழியாக கொரோனா வைரசானது உள்நுழைகிறது.. பின்பு இந்த வைரஸ் மனித செல்களை தனது கட்டளைக்கேற்ப செயல்படும்படி மாற்றி தனக்கான RNA க்களையும், முட்கள் போன்ற புரதங்களையும் (Spike proteins) உற்பத்தி செய்து புதிய கொரோனா வைரஸ்களாக உருவாகி வெளிவருகிறது. இவ்வாறாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஒவ்வொரு செல்களிலும் பாதிப்பை உருவாக்குகிறது.

கொரோனா வைரஸ் மீது ரெம்டெசிவிர் மருந்து செயல்படும் முறை விளக்கப்படம்.

ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்படும் போது GS-441524 analogue நியூக்ளியோடைட் (போலி நியூக்ளியோடைட்) கொரோனா வைரசின் RNA நியூக்ளியோடைடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பிழையான மற்றும் செயல்திறனற்ற RNAக்களை உருவாக்கும்.  இதுவே ரெம்டெசிவரின் செயல்முறை. ஆனால், இந்த பிழையான RNAக்களை திருத்தக் கூடிய ஆற்றல் மிக்க 3’5’Exoribonuclease(ExoN) எனப்படும் என்சைம்கள் புதிய உருமாற்றம் அடைந்த வீரியமிக்க வைரசையும் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ரெம்டெசிவிர் மருந்து கொரொனா வைரஸ் உருமாற்றதை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கது என்ற மருத்துவ ஆய்வு அறிக்கை. pubmed.gov

 

ஐ.சி.எம்.ஆர் யின் முன்னாள் இயக்குனர் ராமன் கங்காகேட்கர்.

இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனமான ஐ.சி.எம்.ஆர் யின் முன்னாள் இயக்குனர் ராமன் கங்காகேட்கர் என்னும் தொற்றுநோய் சிறப்பு நிபுணர், “இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில், கோவிட் சிகிச்சையில் ரெம்டெசிவிர் சிறந்த பலனளிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் அந்த மருந்தை அதிகமாக உபயோகிக்கையில் உருமாற்றம் அடையும் வைரஸ்கள் பல்கி பெருகும் தளமாக இந்தியா மாறிவிடும் அபாயம் இருக்கிறது” என்று எச்சரிக்கிறார். முறையாக மருத்துவ நிரூபணம் செய்யப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதே சிறந்தது என்கிறார்.

எய்ம்ஸ் நிறுவன இயக்குனர் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறுகையில், “இது கோவிட் நோய்க்குரிய உயிர் காப்பு மருந்து அல்ல என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள படி, ரெம்டெசிவரை சிறந்த நிவாரணி எனக் கருத முடியாது. நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து நுரையீரலில் கொரோனாப் பரவல் அதிகரித்து காணப்படும் குறிப்பிட்ட  சமயங்களில் ஆக்சிஜன் அழுத்தத்தை குறைப்பதற்காக வைரசு தடுப்பாக (Anti-Virus) சில மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகை நோயாளிகளுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் உபயோகிக்கலாம். அதனால் சிலருக்கு பயனளிக்கலாம். இந்த மருந்து எபோலாவிற்குக் கூட பெரிதான பலனைத் தரவில்லை. எனவே மிதமான மற்றும் அதி தீவிர நோயாளிகளுக்கு எந்தப் பலனையும் தருவதில்லை. மாறாக மிகத்தீவிர நோயாளிகளுக்கு பயன்படுத்தினால் பெருமளவில்  சைட்டோகைனின் உற்பத்தியாகி “சைட்டோகைனின் புயல்” (Cytokine storm) என்கிற நிலை ஏற்பட்டுவிடும். நுரையீரலில் வீக்கத்தை உருவாக்குவதோடு நோயாளியை மோசமான நிலைக்கு கொண்டு சென்று மரணம் நிகழவும் காரணமாகிவிடும்” என தெரிவிக்கிறார்.

ஆரம்ப கட்ட மற்றும் மிதமான நோய்த் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் இதனை பயன்படுத்தக் கூடாது என்றும், மருத்துவமனைகளிலும் ஒரு முயற்சியாக மட்டுமே இந்த மருந்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். உயிர் காப்பு மருந்துகளான இரத்த உறைவு தடுப்பு மருந்து (Anti-coagulant) , ஸ்டீராய்டுகள் (Cortico steroids) போன்ற மருந்துகளையும் ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற கருவிகளையும் தான் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமானவையாக கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் பரவுவதைப் போல ரெம்டெசிவர் கொரோனாவை குணமாக்கிடும் “சர்வ நிவாரணி” அல்ல என்று அழுத்தமாகக் கூறுகிறார்கள்.

ரெம்டெசிவர் வணிகமா?

“ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தல்ல” என்று உலக சுகாதார கழகம் அறிவித்ததனால் இதன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உற்பத்தியும் குறைக்கப்பட்ட சூழலில் பெரும்பான்மை தனியார் மருத்துவமனைகள் அதிகமாக ரெம்டெசிவரை பரிந்துரைத்ததின் காரணம் என்ன? இவ்வளவு ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக இருந்த பின்னும் இதனைப் பரிந்துரைத்ததின் பின்னணியில் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? ரெம்டெசிவர் குறித்த உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தாமல் மக்களை இந்த மருந்துக்காக அலைக்கழிக்க வைத்ததில் அரசிற்கும் பங்கிருக்கிறதா?

சிலர் ரெம்டெசிவிர் மருந்தை தேவையின்றி பெற்றுக்கொண்டு அதனை கள்ளச்சந்தையில் ரூ.20,000 முதல் 1,00,000 ரூபாய் வரை விற்குமளவுக்கு நிலவிய  கடும் தட்டுப்பாடு இயற்கையானதா? பேரழிவை சந்திக்கும் இந்த மருத்துவ அவசர நிலையிலும் தங்கள் தொழில் லாபத்திற்காக மருந்து நிறுவனங்கள் செயல்படுகின்றனவா? இதனைக் கண்காணிக்க வேண்டிய மோடி அரசு மெளனம் காப்பது ஏன்? எனப் பல கேள்விகள் பெரும்பான்மை மக்களுக்கு எழும்புவது தவிர்க்க முடியாதவையே.

இவ்வாறு ரெம்டெசிவர் மருந்தினைக் குறித்து பல குளறுபடிகள் நிலவிக் கொண்ருக்கும் சூழலில் தற்பொழுது உலக சுகாதார கழகம் ரெம்டெசிவரை கொரோனா சிகிச்சைக்கான மருந்துப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. கொரோனோ நோய்த் தொற்றுக்கான மருந்தென்று இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், வரும் முன் காப்பதே சிறந்தது என்று  அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை மோடி அரசு ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசிகளுக்கும் பெருந்தட்டுப்பாடான சூழலில் தான் இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் செயல்படுகிறது. இதுவரை 10%க்கும் குறைவான மக்களுக்கு தான்  தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கொரோனா முதல் அலையின் பொழுது மக்கள் வறுமையின் பிடிக்குள் செல்லும் சூழல் வாய்த்தாலும் அம்பானியும், அதானியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருந்ததைப் போல, இந்த இரண்டாவது அலையின் பொழுது இந்திய மருந்து உற்பத்தி நிறுவன முதலாளிகள் லாபம் கொழித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரெம்டெசிவர் தயாரிக்கும் கீலியட் நிறுவனம் இந்த ஆண்டு வருமானம் 1.9 பில்லியன் டாலர் அளவிலும், அதன் பங்கு விகிதம் 2.5% அளவிலும் உயர்ந்திருக்கிறது. அதன் காப்புரிமை பெற்ற ஏழு இந்திய நிறுவனங்களான சினர்ஜி, சிப்லா, சைடஸ் காடில்லா, மைலன் லேப்ஸ், டாக்டர்ஸ் ரெட்டிஸ் லேப், ஜுப்லண்ட் இன்கிரீவியா, ஹெட்ரோ லேப்ஸ் போன்றவையின் வருமானமும், பங்குகளும் கடந்த ஆண்டை விட இந்த வருடக் காலாண்டில் அதிக அளவில் உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் ரெம்டெசிவிர் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் தொடர் ஏறுமுகமாக உள்ளன.

தகுதியற்ற அரசின் கீழ் செயல்படும் திறனற்ற சுகாதார அமைப்பு முறையால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார்கள். மரணப்படுக்கையில் இருக்கும் தங்கள் உறவுகளைக் காப்பாற்ற மருத்துவர் பரிந்துரைத்த சிறு வாய்ப்பையும் தவற விடக்கூடாது என்று அலைந்து திரிந்தார்கள். இந்த நேரத்திலும் பெருநிறுவனங்களும்,  கருப்புச் சந்தையின் பதுக்கல் பேர்வழிகளும் ரெம்டெசிவர் மருந்தினைக் கொண்டு கொள்ளையடிக்கும் வழிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை  மோடி அரசுக் கூச்சமின்றி அமைதியுடன் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பெருவணிக முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மருத்துவ சந்தை செயல்படும் முறை இவ்வாறாகவே  இருக்கிறது.

ஒரு அரசாங்கத்தின் கடமை மக்களிடம்  நம்பிக்கையை விதைப்பதும், மக்களை வேதனைக்கு உட்படுத்தாத அமைப்பு முறையை உருவாக்குவதுமே ஆகும். இந்த மருந்து குறைவான பயனையோ அல்லது பயனற்றதாகவோ இருப்பினும் கூட மருத்துவர் பரிந்துரைத்ததினால் மக்கள் இதன் மேல் முழு நம்பிக்கை வைத்து தேடியலைந்த போது ரெம்டெசிவர் மருந்தின் தன்மையைக் குறித்தும் நோயாளிக்கு எந்த கட்டத்தில்  பயன்படுத்தினால் குணமடைய வாய்ப்பிருக்கும் என்பதையும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாதது ஏன்? மோடி அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்காது. கருப்புச் சந்தையின் கொள்ளைகளையும் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

மோடி அரசு தனியார் நிறுவனங்களிடம்  தடுப்பூசி தயாரிப்பதற்கு மக்கள் வரிப்பானத்தை வாரி  வழங்குவதைக் கைவிட்டு உலகத் தரத்திற்கு இணையாக தடுப்பூசி தயாரிப்பு வளாகங்களும், ஆய்வுக் கூடங்களும் அமைத்து இந்த பேரிடர் காலத்தில் அரசே அனைத்து மக்களுக்கும்  தனது செலவில் தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும்.

மக்களும் கொரோனா நோய்த்தொற்று முதல் அறிகுறி தென்படும் பொழுதே உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனையோடு தகுந்த சிகிச்சையெடுத்துக் கொண்டு தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக் கொண்டால் இந்தக் கொரோனா நோய்த் தொற்றினை வெல்லலாம்.

Translate »