சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?

சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள அமெரிக்காவின் ட்விட்டர் நிறுவனம் ரூ.110 கோடி ($15 மில்லியன்) உதவித்தொகையை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்குவதாக கடந்த மே 10ம் தேதியன்று அறிவித்தது. அதாவது, தொண்டு நிறுவனங்கள் “கேர்” ரூ.70 கோடியும் “ஏய்டு இந்தியா” மற்றும் “சேவா இன்டர்நேஷனல்” தலா ரூ.18.3 கோடியை பெறும் என்று தெரிவித்திருந்தது. இதில், சேவா இன்டர்நேஷனலுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்து டுவிட்டர்  நிறுவனர் ஜாக் டார்சியை இந்தியா முதல் சர்வதேச அளவில்  சன நாயகவாதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

சேவா இன்டர்நேஷனல் ட்விட்டர் நிறுவனரை நன்கொடை வழங்கியதற்கு நன்றி தெரிவிதுள்ளது.

சேவா இன்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்திற்கு நிதி வழங்குவதை சனநாயக முற்போக்காளர்கள் எதிர்ப்பதற்கான காரணம் அது இந்துத்துவ மதவெறியை வளர்த்திடும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவு என்பதே ஆகும். கூடுதலாக, ட்விட்டர் முற்போக்கு சன நாயகத்தை ஆதரிக்கும் நிறுவனமாகவும் கருதப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூன்றாம் தலைவர் மதுகர் தியோராஸ் என்பவரால் 1989ல் தொடங்கிய “சேவா பாரதி” நல சேவை அமைப்பின் சர்வதேச பிரிவே இந்த “சேவா இன்டர்நேஷனல்” ஆகும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சர்வதேச பிரிவான “இந்து சுவயம்சேவக் சங்கம்” (HSS – Hindu Swayamsevak Sangh) தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் “சேவா இன்டர்நேஷனல்” நடத்தி வருகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை அமெரிக்காவின் நியூயார்க்கில் புலம்பெயர் இந்தியர்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர்.

சர்வதேச அளவில் புலம்பெயர் இந்தியர்களிடையே “இந்துத்துவத்தை” வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் யூஸ்டன் நகரில் சேவா இன்டர்நேஷனல் நிறுவப்பட்டது. வெளிநாடு வாழ் இந்திய சமூகங்களிடையே தீவிர இந்துத்துவ கருத்தியலை பரப்புவது ஒருபுறம் என்றால் மறுபுறம் இவர்களிடமிருந்து பெருமளவில் நிதி திரட்டுவது இந்த அமைப்பின் முதன்மை பணியாகும். தற்போது, “இந்தியா கோவிட்-19” நிவாரண பணிக்கென சுமார் ரூ.128 கோடி வரை திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரொனா நிதி கேட்டு சேவா இன்டர்நேஷனல் இணைய விளம்பரம்.

இப்படி திரட்டப்படும் நிதியை கொண்டு இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழ்மையான மக்களிடம் தீவிர இந்து மதவெறியை வளர்ப்பதும் இசுலாமிய கிறித்தவ சிறுபான்மையினர் வெறுப்பையும் பரப்பி வருகிறது.

2001 குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கிட சர்வதேச அளவில் பெருமளவில் நிதியை சேவா இன்டர்நேஷனல் திரட்டியது. இந்த நிதியை கொண்டு குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடையே “இந்துத்துவ” மதவெறியை வளர்த்தெடுக்கும் வாய்ப்பாக பயன்படுத்தியது. இது குறித்து பிரிட்டன் லார்டு ஆடம் படேல் பேசியபோது “ (சேவா இன்டர்நேஷனல்) ஒரு இனவெறி அமைப்புடன் இணைந்து குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உதவியதற்காக நான் அவமானப்பட்டு வெளியேறுகிறேன். இது இந்து தீவிரவாத (RSS) இயக்கத்தின் இனவெறி முகமாக செயல்படுகிறது.” என்று 2002ல் தெரிவித்திருந்தார்.

உதாரணத்திற்கு, ஆய்வு பத்தரிகையாளர் நேகா தீக்சித் தனது 2016 ஆய்வு கட்டுரையில் சேவா பாரதி வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்துவதாக எழுதியுள்ளார். எந்த வசதியும் கல்வி அறிவும் இல்லாத அசாம் பழங்குடி குடும்பங்களில் இருந்து 6 வயதே ஆன 31 பெண் குழந்தைகளை கல்வி வழங்கிட அழைத்து செல்கிறோம் என்று கூறி குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கடத்தியுள்ளனர். குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை பற்றிய எந்த விவரங்களையும் தெரிவிக்கவுமில்லை. குஜராத்தில் சேவா பாரதியின் பள்ளி, இந்த சிறுமிகளுக்கு சனாதன இந்து பெண் அடிமை முறைகளையும், இஸ்லாமிய – கிறித்துவ வெறுப்பையும் போத்தித்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு அரசு அங்கீகரித்துள்ள கல்வி படிப்பு பயிற்றுவிப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தும்  இந்த பள்ளியை 2002ல் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

 

அசாம் பழங்குடி சிறுமிகளுக்கு இந்துத்துவம் பயிற்றுவிக்கும் சேவா பாரதி பள்ளி, குஜராத்.

ஏப்ரல் 27ம் தேதி அல்ஜசீராவில் வெளியான செய்தியின்படி அமெரிக்காவில் இயங்கி வரும் இந்து பேரினவாத அமைப்புகள் சுமார் ரூ.6.1 கோடி வரை திரட்டியுள்ளதாக கூறியது. “அமெரிக்க விசுவ இந்து பரிஷத், ஏகால் வித்யாலயா பவுண்டேசன், இன்பினிட்டி பவுண்டேசன், இந்து அமெரிக்க பவுண்டேசன், சேவா இன்டர்நேஷனல்” ஆகிய ஐந்து அமைப்புகளும் இந்த நிதியை பெற்றுள்ளதாக அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று நிவாரண பணிக்கு என்று இந்த அமைப்புகளால் திரட்டப்படும் நிதி இந்தியாவில் “இந்துத்துவ” மதவெறியை வளர்த்தெடுக்கவே பயன்படுத்தப்படும். இதை ட்விட்டரின் ஜாக் டார்சி அறியாதவர் என்றால் யாரும் நம்பப்போவதில்லை!

பாஜக அரசு – ட்விட்டர் மோதல்

அமெரிக்காவில், அன்றைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் “அறிவியலுக்கு மாறான”, “வெள்ளை இனவெறிக்கு ஆதரவான” பதிவுகளை தொடர்ந்து நீக்கி தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஒரு சனநாயக குரலுக்கான வெளியாக ட்விட்டர் கருதப்பட்டது. ஓரளவிற்கு அதை மறுக்கவும் முடியாது.

கடந்த 2020 ஆகத்து 9ம் தேதி முதல் வேளாண் தொழிலை கார்பொரேட் மயமாக்க மோடி அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த விவசாயிகளின் நேரடி ஊடகமாக ட்விட்டர் விளங்கியது. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் முழுவதையும் அரசு இறுக்கமாக கட்டுப்படுத்தி வந்த நிலையில் ட்விட்டர் மட்டும் மோடி அரசின் அடக்குமுறைகளை முறியடித்து வந்தது. இந்நிலையில், 2021 குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் பேரணியில் கலவரத்திற்கு காரணமானவர்கள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறை குறித்து அனைத்து உண்மைகளும் ட்விட்டர் மூலம் அம்பலமாகி மோடி அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

டெல்லி பேரணியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயின் உடல்.

இதையடுத்து, பாஜக அரசு ட்விட்டரில் பல கணக்குகளை நீக்கி ஆணையிட்டது. இதில், “கேரவன்” ஆய்வு இதழ் அலுவலக கணக்கு உட்பட பல நூற்றுக்கணக்கான விவசாயி போராட்ட ஆதரவாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் இயக்க தோழர்கள் பலரின் ட்விட்டர் கணக்குகளும்  இதில் முடக்கப்பட்டது. பின்னர், பொதுசமூக அழுத்தத்தின் பேரில் திருமுருகன் காந்தியின் கணக்கு மட்டும் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தோழர்.திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட செய்தி.

தொடர்ந்து, ஊடக நிறுவனம், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணக்குகளை முடக்குவது அவர்களின் “தனிநபர் பேச்சுரிமைகளை மறுக்கும்” செயல் என்று கூறி முடக்கிய சில கணக்குகளை ட்விட்டர் விடுவித்தது. இதை  ஏற்க மறுத்த மோடி அரசு “இந்தியாவில் ட்விட்டர் அலுவலர்களை ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது.

 

 

 

 

 

கடந்த 2020ல், ட்விட்டர் பதிவுகளை நீக்கக்கோரி அந்நிறுவனத்திற்கு வந்த கோரிக்கைகளில் 96% இந்தியா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி, ரசியாவில் இருந்து வந்தவை என்று அறிக்கை வெளியிட்டது. அதில், இந்திய பாஜக அரசு மட்டுமே 5900 கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவித்தது.

வலதுசாரி சமூக வலைதளங்கள்.

2020 தொடக்கத்தில் டெல்லி ஜெஎன்யு பல்கலை கழகத்தில் பாஜக ஏபிவிபி மாணவர் பிரிவினர் நடத்திய கொலைவெறி ஆட்டத்தை அம்பலப்படுத்துவதிலும் ட்விட்டர் முக்கிய பங்காற்றியது. அதே நேரம், மோடியை ஆட்சியில் அமர்த்த 2014 முன்பு இருந்தே முகநூல் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று முகநூல் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இந்துத்துவ வெறுப்பு அரசியலை கொப்பளிக்கும் தளமாக  மாறிப்போனது. முகநூலுக்கு அடுத்த பெரிய வெகுமக்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. இதில், பாஜக மோடியின் ஆட்சியில் குறிப்பிடுமளவிற்கு வெற்றியும் கண்டுள்ளது. ஆகவே, மோடி அரசை கேள்வி கேட்கும் கணக்குகளை தன்னிச்சையாக ட்விட்டர் முடக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருவதை காணலாம்.

 

மறுபுறம், ட்விட்டருக்கு போட்டியாக பாஜக “கூ” என்ற ஒரு வலதுசாரி தளத்தையும் உருவாக்கியது. இது அமெரிக்காவில் ட்ரம்பின் ஆதரவாளர்களால் இயக்கப்படும் “கெப்”, “பார்லர்” போன்ற சேவைகளின் வழித்தோன்றல் ஆகும்.

பிப்ரவரி 2ம் தேதி, உலக புகழ் பாப் பாடகி ரிகான்னா மற்றும் சூழலியல் மாணவர் போராளி கிரேட்டா தன்பர்க் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்ட ட்வீட்களால் சர்வதேச நாடுகளின் மைய விவாதமாக டெல்லி விவசாயிகள் போராட்டம் மாறியது. இது, பாஜக மோடி அரசுக்கு சர்வதேச நாடுகளின் நடுவே பெருத்த அவமானமாக உருவெடுத்தது. உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டன.

       

     ரிகான்னா, கிரேட்டா தன்பர்க் டிவீட்கள்.

ரிகான்னா மற்றும் கிரேட்டா பதிவிற்கு எதிராக இந்தியாவின் அனைத்து பிரபலங்களையும் மோடி தமது அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவிட களமிறக்கியது. இச்செயல், இந்த பிரபலங்களை

மோடி அரசுக்கு ஆதரவாக பதிவிட்ட பிரபலங்கள்.

விவசாயிகளுக்கு எதிரானவர்களாக தங்கள் ரசிகர்களிடையே நிறுத்தியது. இதனால், தங்கள் ரசிகர்களின் கோபத்தை இந்த பிரபலங்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

 

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏப்ரல் மூன்றாம் வாரங்களில் வடநாடு முழுவதும் நாள்தோறும் சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 3000 த்தை நெருங்கியது. பிப்ரவரி மாதம் முதலே இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை புரிந்தும் அவற்றை பொருட்படுத்தாமல் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கும்பமேளா, தேர்தல் பிரச்சாரம் என்று இந்து மதவெறியை வளர்த்திடும் மோடி அரசை மக்கள் கடுமையாக ட்விட்டரில் சாடினர்.

 

    கும்ப மேளாவிலும், பாஜக வங்காள தேர்தல் பரப்புரையிலும் மக்கள் கூட்டம்.

சுவாசிக்க ஆக்சிசன், மருந்து, மருத்துவ படுக்கை தேடி அலைந்த மக்கள் ட்விட்டரில் உதவி கேட்டு தங்கள் வேதனைகளை கொட்டி தீர்த்தனர்.  இறந்தவர்களின் ஈமச்சடங்கு செய்யக்கூட வசதியில்லாமல் சுடுகாடுகள் அனைத்தும் நிரம்பி பல மணிநேரம் உடல்களுடன் சொந்தங்கள் காத்திருக்க நேர்ந்தது. மோடி அரசின் கையாலாகாத தன்மையை பாதிக்கப்பட்ட மக்களின் டிவீட்கள் வெட்டவெளிச்சமாக்கின.

 

கொரோனாவால் தாங்கள் படும் அவலத்தை மக்கள் ட்வீட் செய்தனர்.

இதனையடுத்து சர்வதேச ஊடகங்கள் இந்தியாவில் “மனித பேரழிவு” நடைபெற்று வருவதாக எழுதின. இந்த அவலத்தை எல்லாம் ட்விட்டர் மூலம் வெளி உலகிற்கு அம்பலமாவது  பொறுக்க முடியாத உத்திர பிரதேச பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஒன்றிய பிரதமர் மோடி தங்களுக்கு எதிரான ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரியும் அந்த கணக்குகளை முடக்கவும் ட்விட்டர் மீது கடுமையான அழுத்தத்தை கொடுத்தனர். கொரோனா பெருந்தொற்றை சரியாக கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை விமர்சித்த 52 டிவீட்களை ட்விட்டர் நீக்கியது. பல கணக்குகளை, மே பதினேழு இயக்க தோழர்கள் கணக்குகள் உட்பட, ட்விட்டர் எந்த கேள்வி முறையும் இல்லாமல் முடக்கியது.

இதுபோன்ற ட்வீட்களை பதிவிட்டவர்கள் மீது யோகி ஆத்யநாத் உத்திர பிரதேசத்தில்  வழக்குகளை பதிந்தார். மேலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார்.

“மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முகக்கவசம்” என்ற கிண்டலான ட்வீட்.

 

மோடி அரசு ட்விட்டர் வாசிகள் குரல்வளையை நசுக்குவதாக சித்திரம்.

இந்த பெருந்தொற்று பேரிடர் காலத்திலும் மக்களுக்கு உதவாமல் பாஜக அரசுகளின் “ட்விட்டர் தணிக்கை” நடவடிக்கையை விமர்சித்தும் மக்கள் ட்வீட்களை பதிவிட்டனர்.

இந்திய ஊடகங்களை தம் ஆணைக்கு பணிய வைத்த மோடியால் ட்விட்டரை மட்டும் எப்பாடுபட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. சீனாவை போல இந்தியாவை விட்டு ட்விட்டரை வெளியேற்றுவது என்பது அமெரிக்க அரசுடன் நேரடியாக வணிக போரிடுவதற்கு ஒப்பானதாகும். ஆகையால், சீன தொழில்நுட்ப நிறுவனங்களை (டிக் டாக், பப் ஜி, ஷேர் இட், யுசி ) தடை செய்ததை போல அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய அரசால் ஒருபோதும் தடைவிதிக்க முடியாது.

 

இந்திய சந்தை

தொடர்ந்து இந்திய ஒன்றிய இந்துத்துவ அரசுக்கு எதிராக ட்விட்டர் “சன நாயகம், கருத்துரிமை” போன்றவற்றை பேசினாலும் ட்விட்டர் ஒரு “லாப நோக்கமுடைய கார்பொரேட்” முதலாளித்துவ நிறுவனம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அதுவும் உலகின் இரண்டாம் பெரிய சந்தையான இந்தியாவில் ஏகபோகமாக இயங்கி வருவதாகும். குறிப்பாக, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ட்விட்டர் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக அளவில் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் “மில்லியன்” கணக்கில். ( 1 மில்லியன் = 10 லட்சம்)

தற்போது, இந்தியாவில் 32 கோடி முகநூல் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் ட்விட்டரிடம் வெறும் 1.75 கோடி வாடிக்கையாளர்களே உள்ளனர். இந்தியாவில் முகநூல் ஒரு தேக்க நிலையை எட்டுவதாக கருதப்படும் சூழலில் ட்விட்டர் தனக்கு இந்திய சந்தையில் ஆரோக்கியமான வளர்ச்சி இருப்பதாக கருதுகிறது. மேலும், முகநூலை போன்று ட்விட்டர் ஒரு பொழுதுபோக்கு தளமல்ல. அதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்கள் துறையில் தேர்ந்தவர்களாக உள்ளனர். ட்விட்டர் பதிவுகள் நேரடியாக அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக உள்ளது. அநேக நாடுகளின் அரசுகள் தங்கள் மக்களுடனான இருவழித்தொடர்பு ஊடகமாக ட்விட்டரை பயன்படுத்துகின்றன. ஆகையால், ட்விட்டரில் கிடைக்கும் தரவுகளுக்கு விளம்பரதாரரிடையே அதிக மவுசு உண்டு.

மற்ற சமூக வலைத்தளங்களை போலவே ட்விட்டரும் விளம்பரம் மற்றும் பயன்பாட்டாளர்களின் தரவுகளை விற்பதன் மூலம் அதன் லாபத்தை ஈட்டுகிறது. 2020ம் ஆண்டில் ட்விட்டர் ரூ.8051 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ட்விட்டர் ஆண்டு வருவாய். (*மில்லியன் அமெரிக்க டாலர்)

இந்திய துணைக்கண்டம் அளவிலான ஒற்றை சந்தை அதுவும் உலகின் இளம் வயதினர் பெருகி வரும் சந்தையை தவறவிடுவது ட்விட்டரின் எதிர்காலத்தை முட்டுச்சந்தில் தான் நிறுத்தும்.

மிக முக்கியமாக, அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்தை தனது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம். உலகெங்கும் நிறுவி வருகின்றது. அந்த வகையில் இந்தியாவின் ஆளும் வலதுசாரி அரசியல் விவாதங்களை முகநூல் மூலம் கட்டுப்படுத்தும் அதே வேளையில் அதன் எதிர்தரப்பு இடதுசாரி அரசியல் விவாதங்களை  ட்விட்டர் மூலம் கட்டுப்படுத்துவதும் சாத்தியமாகிறது. ஆக, 130 கோடி இந்தியர்களின் அரசியல் எதிர்கால சமூக விவாதங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் அதன் “மெய்நிகர் வெளியில்” (Virtual Space) நடைபெறுகிறது என்றால் மிகையாகாது.

பொதுவாக, சமூக வலைத்தளங்கள் தாங்கள் இயங்கும் சமூகங்களில் நிலவும்  அசாதாரன சூழ்நிலைகள் காரணமாக தான் அதிகமாக வளர்கின்றன. பேரிடர், கலவரம், தேர்தல், அரசியல் சண்டை போன்ற நிகழ்வுகளை சமூக வலைத்தளங்கள் தங்கள் வளர்ச்சிகான வாய்ப்பாக தான் அணுகும். உலகின் பெரிய சந்தையான இந்தியாவில் இந்த சமூக சூழலுக்கு குறைவேதுமில்லை.

 

லாபமா – கருத்துரிமையா?

ட்விட்டர் நிறுவனம் தனது கொரோனா நிவாரண நிதி எதற்காக பயன்படுத்தப்படும் என்று தீர ஆராயாமல் வழங்கிட வாய்ப்பில்லை. சேவா இன்டர்நேஷனல் இந்துத்துவ பேரினவாதத்தை இந்தியாவில் வளர்த்திடும் என்று அறிந்தே நிதி வழங்கியுள்ளது.

சேவா இன்டர்நேஷனலுக்கு ட்விட்டர்  நிவாரண நிதி வழங்கியதை நாம் இந்தியாவில் நிலவும் பாஜக அரசுடனான மோதல் போக்கையும் அதே நேரம் இந்தியாவில் ட்விட்டரின் எதிர்கால வளர்ச்சியும் கருத்தில் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பாஜக மோடி அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ட்விட்டர் தனது இந்திய சந்தையை தக்க வைத்துக் கொள்ள தனக்கான இந்துத்துவ ஆதரவு தளத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஏதோ, ஓரளவு சமூக அக்கறை கொண்ட நிறுவனமாக தன்னை நிறுவ நினைத்தாலும் ட்விட்டர் அடிப்படையில் ஒரு லாப நோக்கமுள்ள கார்பொரேட் நிறுவனமே. அதன் எதிர்கால இருப்பிற்கு நெருக்கடி வரும் வேளையில் அது ஒரு முதலாளித்துவ நிறுவனமாக அதன் வியாபார நலன்களை முதன்மையாக கொண்டு முடிவெடுக்கும். அந்த முடிவுகளால், சமூகத்தில் பிற்போக்கு சக்திகள் வலுப்பெறும் என்பதை பற்றி முதலாளித்துவம் ஒருபோதும் யோசிக்காது.

முதலாளித்துவம், அதன் லாப குவியலுக்கான சந்தையை தான் தேடுமே ஒழிய அது “முற்போக்கு சனநாயக” சந்தையா,  “பிற்போக்கு சர்வாதிகார” சந்தையா என்று கிஞ்சித்தும் கவலை கொள்ளாது!

Translate »