பெட்ரோல் – டீசல் விலை ஏன் உயர்ந்தன?

பெட்ரோல்-டீசல் விலை ஏன் உயர்ந்தன?

மக்களுக்கு தேவையான அனைத்து  அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயமும் பெட்ரோல் டீசல் விலையுடன் தொடர்புடையது என்பது அனைவரும் அறிந்தது. அப்படியான புரிதலில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு ஜனநாயக அரசின் அடிப்படை கடமை. கொரோனோ தொற்று  வேகமாக பரவி  பல லட்சம் மக்கள் இறந்து வரும் இந்த இக்கட்டான  பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய மோடி அரசு அந்த அடிப்படை கடமையை செய்ய தவறியுள்ளது.

பெட்ரோல் மீதான வரிகளின் விவரங்கள். பிப்ரவரி, 2021. finshots

கடந்த வருடம் 2020 மே மாதத்தின் பெட்ரோல் டீசலின் விலையை விட இந்த வருடம் 2021 மே மாத பெட்ரோல் டீசலின் விலை கிட்டத்தட்ட 20 ரூபாய்  அதிகரித்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் கொரோனா தொற்றால் மக்கள் அவதிக்குள்ளாயிருக்கும் இவ்வேளையில், வேலைவாய்ப்பற்று வீட்டில் முடங்கிய நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாய் வரையிலான விலையேற்றம் என்பது  ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல மனிதத்தன்மையற்றதும் ஆகும்.

இந்த விலையேற்றத்தினால் கனரகவாகனங்களின் போக்குவரத்து வாடகை மற்றும் கூலி அனைத்தும் அதிகரித்துள்ளது. அது மக்களின் அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருந்துகளின் விலையேற்றத்திற்கும் காரணமாயிருக்கிறது.

2020 மே மாதத்தில் 69.59ரூபாய்க்கு விற்கப்பட்டு கொண்டிருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் (2021 மே) இன்று 90.40ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை போல் கடந்த வருடம் 62.29 ரூபாய்க்கு விற்கப்பட்டு கொண்டிருந்த ஒரு லிட்டர் டீசல் இன்று 20.32 ரூபாய் அதிகரித்து 82.61 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதாவது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு தலா 20 ரூபாய் உயர்ந்துள்ளது.


கடந்த ஓராண்டில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்.

இவையெல்லாம் இந்திய  சந்தையில்  கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினால் ஏற்ப்பட்ட விலையேற்றம் என்று பலர் கூறிவந்தனர்.  அதற்கான காரணங்களும் உண்டு.  கடந்த வருடம் 2020 மே மாதத்தில் இந்திய சந்தையில் ஒரு பேரலுக்கு $31 ஆக இருந்த கச்சா எண்ணெய்  இன்று $66 ஆக உயர்ந்துள்ளது.  ஆனால் இந்த விலையேற்றத்துக்கும் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்கும் நேரடி தொடர்பு கிடையாது என்றே பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை சர்வதேச எரிபொருள் சந்தையுடன் இணைத்தது பற்றி நாம் அறிந்திருப்போம். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாரு இங்கு எரிபொருள் விலைகளும் மாற்றம் பெரும் என்றும் அது மிகப்பெரிய சாதனை என்றும் பலர் கூறி வந்தனர். ஆனால் அடுத்த சில மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழச்சி அடைந்த பிறகும் இந்தியாவில் எரிபொருள் விலை குறையவேயில்லை. அதாவது கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்தாலும் அதனால் ஏற்படும் நற்பலன்களையோ விலைகுறைப்பையோ  மக்களுக்கு  மோடி அரசு வழங்கவேயில்லை.

மாறாக ஒன்றிய மோடி அரசு பெட்ரோல் டீசல் கலால்வரிகளை உயர்த்தி  மக்களுக்கான பெட்ரோல் டீசல் விற்பனை விலை குறையாமல் பார்த்து கொண்டது.

உதாரணமாக, கடந்த 2020 மே மாதத்தில் 27.95 ரூபாயாக  இருந்த பெட்ரோலின் அடிப்படை விலை ( வரிகளற்ற விலை) 3.53 ரூபாய் மட்டும் அதிகரித்து இன்று 31.48 ரூபாயாக இருக்கிறது. இதை போல் கடந்த 2020 மே மாதத்தில் 24.85 ரூபாயாக   இருந்த டீசலின் அடிப்படை விலை 4.17 ரூபாய் மட்டும் அதிகரித்து இன்று 29.02 ரூபாயாக இருக்கிறது. இந்த 3-4  ரூபாய் விலையேற்றம் என்பது சர்வதேச சந்தையுடன் நேரடி தொடர்புடையது.

    
கடந்த ஓராண்டில் உயர்ந்த அடிப்படை விலை.

ஆனால் மக்களுக்கான விற்பனை விலையோ 20ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த 20 ரூபாய் விலையேற்றத்திற்கு முழுமுதற் காரணம் மோடி அரசின் கலால் வரியேற்றம் தான்.   அதாவது இன்று 90 ருபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் அடிப்படை விலை 31 ரூபாய் மட்டும் தான்.  மீதம் 60 ரூபாயும் ஒன்றிய மாநில அரசின் (Excise + VAT) வரிகள்.

இதில் மோடி அரசு கடந்த வருடம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலின் கலால் வரியை 20ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்த்தியது.  அதாவது 65% அதிகமாக கலால் வரியை உயர்த்தியது. அதே போல்,  ஒரு லிட்டர் டீசலுக்கு 79% அதிகமாக கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.

           
கடந்த ஓராண்டில் கலால் வரி ஏற்றம்.

இது மட்டுமல்லாமல் மாநில அரசின் வரிகளும் உண்டு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொருவிதமான வரிவிகிதம். உதாரணத்திற்கு டெல்லி அரசு 22% VAT வசூலிக்கிறது என்று கூறப்படுகிறது. நாம் 90ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 35% மேல் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் வரி அடங்கியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த கலால் வரிஏற்றம் தான் இன்றைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இதை கண்டித்து பலர் கேள்வி எழுப்பினர். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்றிய மோடி அரசை கண்டித்து வரிவிகிதத்தை குறைக்குமாறு கேட்டுக்கொணடனர். ஆனால் ஒரு சர்வாதிகார மனநிலை கொண்ட அரசு ஒருபோதும் மக்களின் குரல்களை கேட்காது, அவர்களை பற்றி துளி அளவும்  அக்கறை கொள்ளாது. அதையே மோடி அரசும் செய்கிறது.

சவுதி அரேபியாவின் OPEC Plus,  கொரோனா பேரிடர் காரணமாக வீழந்து கொண்டிருக்கும் சர்வதேச சந்தையை மீட்பதற்கான முயற்சியில்  தன்னுடைய உற்பத்தி திறனில் இருந்து  ஒரு மில்லியன்  பேரல்களை நிறுத்துகிறோம் என்று ஜனவரி 2021ல் அறிவித்தது.  இதன் மூலம் கச்சா எண்ணெயின் இருப்பு குறையத் தொடங்கியது.  தேவை அதிகரித்ததும், சரிந்து கொண்டிருந்த விலையும் உயரத் தொடங்கியது.

2020 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கழித்து  கச்சா எண்ணெய் பேரல் விலை $50 ஆக அதிகரித்தது. பங்குச்சந்தைகளில் எண்ணெய் நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் வீழ்ச்சியை கட்டுபடுத்த சவுதி OPEC Plus உற்பத்தியை குறைத்ததே இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்கு காரணமாக மோடி அரசு கூறியது.  இது மட்டுமே காரணம் என்றால் அடிப்படை விலை தான் உயர்ந்திருக்க வேண்டுமே தவிர கலால்வரி உயர்ந்திருக்கக்கூடாது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் டீசலின் அடிப்படை விலை 3-4 ரூபாய் தான் உயர்ந்த நிலையில்,  நுகர்வோர் விற்பனை விலை மட்டும்  20ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னை மாநகரின் பெட்ரோல் ஓராண்டு விலையேற்ற அட்டவணை. (mypetrolprice.com)

வரலாற்றில் முதல்முறையாக 2021 பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் விலை மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் மற்றும்  இன்னும் சில மாநிலங்களில் 100ரூபாயை எட்டியது. பெருந்தொற்று காலத்தில் மோடி அரசின் மிகப்பெரிய நிர்வாகத்தோல்வியாக இதை கூறலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு கீழ் கொண்டுவருவோம் என்று மாபெரும் பொய்யுரைத்து இன்று 100 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது மோடியின் அரசு. இதன் மூலம் ஒன்றிய மோடி அரசு எளிய மக்களுக்கான அரசு கிடையாது என்று மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஒரு மக்களுக்கான அரசு என்பது இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பொருளாதார தேவையையும்  செய்து பாதுகாக்க வேண்டும்.  ஆனால் ஒன்றிய  மோடி அரசானது, இந்த பேரிடர் காலங்களில்  கூட மக்களிடம் இருந்து வரி வசூல் மூலம்  பணத்தை பிடுங்குவதும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை பற்றி கண்டுகொள்ளமல் இருப்பதும், அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரிகளை கூட நீக்க மறுப்பதும் என்று மக்கள் விரோத நடவடிக்கைகளையே செய்து வருகிறது.

கொரோனா பேரிடர் காலம் போல் ஒக்கி புயல், தானே புயல், வரதா புயல் , சென்னை பெருவெள்ளம் என்று தமிழகம் சந்தித்த எந்த பேரிடர்களிலும் மோடி அரசு மாநிலம் கேட்ட நிவாரண நிதி அல்லது  மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகயையோ வழங்கிடவில்லை.

பெரு முதலாளிகளின் லாபத்திற்காக மதவெறுப்பு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வரும் ஒன்றிய மோடி அரசு அமைந்த நாளில் இருந்து இன்று வரை எண்ணம், சொல், செயல் அனைத்தும் சூழ்ச்சி, வன்மம், பொய்கள் மட்டுமே நிறைந்துள்ளது!

Translate »