பிணத்தில் மிதக்கும் கங்கை, மயானத்தில் எழும்பும் பாராளுமன்றம்

பிணத்தில் மிதக்கும் கங்கை, மயானத்தில் எழும்பும் பாராளுமன்றம்.

கொள்ளியுடன் காத்திருக்கும் பாஜக கூட்டம்

தாமரை வடிவில் மைய கட்டிடம்

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மடிந்து வருகின்றனர். அவர்களை எரிப்பதற்கு கூட இடமின்றி உறவினர்கள் திணறி வருகின்றனர். நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்பூசியும் தட்டுப்பாடு என அடுக்கடுக்கான பல சிக்கல்களை இந்திய ஒன்றியம் சந்தித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கப்போகிறது என சர்வதேச ஊடகங்கள் பலவும் விமர்சித்த வண்ணம் உள்ளன.

தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மாநில அரசு அவசர நடவடிக்கையாக பல்வேறு வகையில் சூழலை சமாளிக்க போராடி வருகிறது. ஆனால் மோடி அரசு இது எதையும் பொருட்படுத்தாமல், தனது கனவு திட்டமான புதிய நாடாளுமன்றம் கட்டி, வரும் 75வது சுதந்திர நாளன்று திறப்பு விழா நடத்துவதற்காக மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சென்ட்ரல் விஸ்டா (Central Vista Redevelopment Project) திட்டத்தின் கீழ், நான்கு விதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். முதலாவது புதிய நாடாளுமன்றக் கட்டிடம். இரண்டாவது ஏற்கனவே உள்ள பல அரிய கட்டிடங்களை இடித்துத் தள்ளுவது. அதில் புகழ்பெற்ற இந்தியாவின் நேசனல் மியூசியமும் ஒன்று.

விஸ்டா திட்டத்தின் முழு வரைவடிவம்

மூன்றாவது ராஜபாதையை ஒட்டி 3 கிமீ நீளத்திற்கு ஏழு மாடி கட்டிடம். இதில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இடம்பெறும். மரங்களும் புல்வெளியும் நிறைந்த மக்களுக்கு மிகவும் பிடித்த இடம் இது. இனி அந்த இடம் முழுவதும் பசுமை நீங்கி கட்டிடங்களாக காட்சியளிக்கும். நான்காவது பிரதமருக்கும், குடியரசு துணைத் தலைவருக்கும் வீடும் அலுவலகமும் கட்டப்படும்.

இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இது இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று. இது சனநாயகத்தின் அருங்காட்சியகமாக மாற்றப்படுமாம். அருங்காட்சியகங்கள் என்பவை இறந்துபோன அல்லது இல்லாமல் போன விடயங்களைக் காட்சிப்படுத்த உருவாக்கப்படுபவை என்கிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.

சென்ட்ரல் விஸ்டா திட்டமானது 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாகும். அதில் புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தின் மதிப்பு மட்டும் 971 கோடி ரூபாயாகும். இந்த விஸ்டா திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. மிகப்பெரிய அளவில் கட்டப்படும் இந்த கட்டிடங்களுக்கு எவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெரிசலான டெல்லியின் மையத்தில் இந்த வளாகம் அமைய உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பல மாடி அலுவலக கட்டிடங்களை அடித்தளங்களுடன் அமைப்பது மேலும் நெரிசலை உருவாக்கும் மற்றும் மீளமுடியாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் என பல்வேறு தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் பாஜக மோடி அரசு இந்த கட்டுமான பணியை  கைவிடுவதாய் இல்லை. தலைநகர் டெல்லியை தன்வயப்படுத்த துடிக்கும் இவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் முக்கியமானது, முதன்மையானது. தலைநகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன என்று வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நமக்கு பாஜகவின் சூட்சுமம் தெளிவாக புரியும்.

வரலாற்றில் தலைநகரை கைப்பற்றுவது என்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சமமாக இருந்துள்ளது. முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சிலகாலம் கொல்கத்தா தலைநகராக விளங்கியது. பிறகு கிங் ஜார்ஜ் மன்னர் தலைநகரை டெல்லிக்கு இடம் மாற்றியுள்ளார். முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போதும் டெல்லியே தலைநகரமாக இருந்துள்ளது.

ஹிட்லர் மற்றும் முசோலினி காலத்திலும் இதுபோலவே நடந்துள்ளது. ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அவன் விருப்பப்படி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்துள்ளான். அங்கிருந்த கட்டிடங்களின் அமைப்பு, அதன் பெயர்கள், தெருக்கள் பெயர்கள் என அனைத்தையும் தன்னுடைய அதிகாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளான்.

இதே பாணியை பின்பற்றும் பாஜக மோடி அரசு, முகலாயர்களின் இஸ்லாமிய மற்றும் ஆங்கிலேய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தும் வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவில் மிகப்பெரிய கட்டுமானத்தை கட்டுவது அவர்களின் இந்துத்துவ கோர முகத்தை வெளிக் காட்டியுள்ளது.

கி.பி. 67ல் ரோமானிய சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது அதன் அரசனாக இருந்தவன் லூசியஸ் டொமிடியஸ் ஆஹனோபார்பஸ். அவரது சுருக்கமான பெயர், நீரோ! அதாவது ரோம் நகரம் பற்றி எரியும்போது ஃபிடில் வாசித்ததாக சொல்லப்படும் அதே நீரோ!

இந்த நீரோவுக்கு ரோம் நகரத்தை சமகாலத்திய நவீனமாக மாற்ற ஆசை. ஆனால் அவனது ஆசைக்கு அமைச்சர்கள் யாரும் ஒத்துக் ‌கொள்ளவில்லை. அதன் பின்னர் சில நாட்களில் ரோம் நகரம் பற்றி எரிந்தது. ரோம் நகரின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் முற்றிலுமாக தீயில் எரிந்தன.

அந்த மாபெரும் தீயின் தணல் ஆறாத நிலையில், நீரோ தனக்கென ஒரு “தங்க மாளிகையை” கட்ட உத்தரவிட்டான். 200 ஏக்கர் பரப்பில் பொன் முலாம் பூசப்பட்ட, வைரங்கள் பதிக்கப்பட்ட அந்த அரண்மனையை கட்டினான். கொடுந்தீவிபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் எஞ்சியதை வைத்து தங்கள் வாழ்க்கையை வாழ தடுமாறி கொண்டிருந்தபோது தான் அந்த வைர மாளிகையை எழுப்பினான்.

மோடியை நீரோ பேரரசனாக தீட்டப்பட்ட சித்திரம்.

மேலே சொன்ன நீரோவின் கதைக்கும் மோடியின் விஸ்டா திட்டத்திற்கும் ஏதாவது வேற்றுமை உள்ளதா? தற்போது டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதை கட்டுபடுத்த கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி மிகஅவசியம் என்று கூறி தொடர்ந்து வருகிறது.

இந்த கொடிய தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவ சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை இடைநிறுத்த கோரி 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் அவர்கள் இந்த கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளை வாங்கவும், தனியார் அறக்கட்டளை நிதியில் உள்ள அனைத்து பணத்தையும் விடுவிக்கவும், அதிக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றிடவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீட்டுவசதி அமைச்சகத்தின் 60 முன்னாள் அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தை நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மறுசீரமைப்பு பணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கொரோனா நோய் தொற்றின்போது இந்த பணியை மேற்கொள்வது பொறுப்பற்றதாகவும், தேவையற்றதாகவும் கருதப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக கட்டிடக்கலை கவுன்சில், இந்திய கட்டிடக்கலை நிறுவனம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை,  நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் அமைப்பு மற்றும் இந்திய இயற்கை கட்டிடக் கலைஞர்கள் சங்கம் போன்ற முக்கிய தொழில்முறை அமைப்புகளும் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதியுள்ளன. ஆனால் மோடி அரசோ இவை எதற்கும் செவி சாய்க்காமல் தன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க இத்தனை துறைசார்ந்த அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரின் கோரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக செயல்படும் மோடியின் இந்துத்துவ இந்திய அரசு ஒரு சனநாயக நாடா என்கிற கேள்வி எழுவது இயல்பானது.

இந்த கேள்வி தனக்குள் எழுந்ததால் தான் என்னவோ குஜராத்தின் புகழ்பெற்ற பெண் கவிஞர் பாருல் காக்கர் கங்கையில் மிதந்து வரும் பிணங்களை கண்டு ஆற்றாமையால் “பிணத்தில் மிதக்கும் கங்கை” என்ற தலைப்பில் ஒரு குஜராத்தி கவிதையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இவர் ஒரு பாஜக மோடி ஆதரவாளராக இருந்தாலும் தன் கண் முன்னே அரங்கேறும் அவலத்தை பொறுக்க முடியாமல் தனது கோபத்தை கவிதையாய் பதிவு செய்துள்ளார்.

கங்கையில் மிதந்து வரும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள், உத்திர பிரதேசம்.

 

பிணத்தில் மிதக்கும் கங்கை

– பாருல் காக்கர்

கவலைப்படாதீர்கள்! மகிழ்ச்சியாக இருங்கள்!

அனைத்துப் பிணங்களும் ஒரே குரலில் பேசின.

ஓ மன்னனே! உனது ராமராஜ்யத்தில், கங்கையில் பிணங்கள் மிதப்பதைக் கண்டோம்.

ஓ மன்னனே! சுடுகாட்டு மரங்களில் கூட சாம்பல் படிந்து கிடக்கிறது.

சுடுகாட்டில் இடமேயில்லை.

ஓ மன்னனே! ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.

பிணத்தைத் தூக்கிச் செல்லவும் யாரும் இல்லை.

அழும் ஆட்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.

வார்த்தைகளே இல்லாத எங்கள் புலம்பல் பாடலுடன்  நாங்கள் ஒன்றுமற்றுப் போனோம்.

 

மரண தேவதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைகிறாள்.

அவள்  துள்ளல் நடை போடுகிறாள்.

ஓ மன்னனே! நாங்கள் பிணங்களாகக் கங்கையில் மிதக்கிறோம்.

உருகும் நிலையில் உள்ள புகைபோக்கிகள் நடுங்குகின்றன.

வைரஸ் எங்களைத் துவைத்து எடுத்துவிட்டது.

ஓ மன்னனே!  எங்களின் வளையல்கள் உடைந்துவிட்டன.

மூச்சுக்கு ஏங்கிய எங்கள் மார்புகள் நொறுங்கி விழுந்துவிட்டன.

 

மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தபோது மாநகரம் எரிந்து கொண்டிருந்தது,

கொடியவர்கள் தங்கள் ஈட்டியை எங்கள் மீது

பாய்ச்சிக் கொண்டிருந்தனர்.

ஓ மன்னனே!  நீங்கள் ஒளிர்ந்து பிரகாசித்து பகட்டொளி வீசும்போது உங்கள் ஆடையில்  பொறி பறக்கிறது.

ஓ மன்னனே! உன் உண்மையான முகத்தை மாநகரம்

கண்டுகொண்டு விட்டது.

 

வாருங்கள் மக்களே! வெளியில் வந்து உரக்கக் கூவி உண்மையைச் சொல்லுங்கள்

“நிர்வாணமாக நிற்கும் மன்னன் ஒரு முடம், பலவீனமானவன்”

எங்களுக்குக் காட்டுங்கள் மக்களே,

இனியும் மக்கள் அடங்கிப் போக மாட்டார்கள் என்று காட்டுங்கள்!

தீயின் நாக்குகள் உயர்ந்து எழுந்து வானைத் தொடுகின்றன,

கோபம் கொண்ட நகரம் பொங்கி எழுகிறது.

ஓ மன்னனே! உனது ராம ராஜ்ஜியத்தில் பிணங்கள் கங்கையில் மிதப்பதை இன்னுமா காணவில்லை?

(தமிழாக்கம் நன்றி திரு.மதிவாணன், முகநூல் பதிவு.)

இராமர் கோயிலை எழுப்பி, ராம ராஜ்ஜியத்தை அமைத்து இந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த மோடி இன்று பெருந்தொற்றால் ஈசல்களை போல மடிந்து கொண்டிருக்கும் இந்து மக்களை நிராதரவாக கைவிட்டுள்ளார். சிறுபான்மையினர் மீதான மதவெறுப்பை வளர்த்து  பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கி அதிகாரத்தை கைபற்றிய மோடி அரசிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது “ஓநாயிடம் கருணை கேட்கும் ஆட்டுக்குட்டி” கதை தானே!

Translate »