பாலஸ்தீனம்- மேற்காசியாவின் தமிழீழம்.

பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்!


மோனா: யாகோப் இது உன்னோட வீடு இல்லன்னு உனக்கு தெரியும்.

யாகோப்: ஆமா, நான் இத எடுத்துக்கலனா வேற யாராவது எடுத்துக்க தான் போறாங்கன்றது உனக்கு தெரியும். அப்புறம் என்ன பிரச்சனை ஏன் என்கிட்ட கத்துற?

மோனா: நீ என் வீட்டை திருடுற.

யாகோப்: நான் திருடலனா வேற யாராவது திருடிக்குவாங்க.

மோனா: முடியாது, அது எப்படி யாராவது திருட முடியும்?! யாரும் திருட முடியாது.

கடந்த மே 8ம் தேதி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதியான ஷேக் ஜராஹ்-ல் பாலஸ்தீனத்தின் மோனா எல்-குர்ட் எனும் பெண் தன் வீட்டை அபகரிக்க முற்படும் ஒரு இஸ்ரேல் தீவிர வலதுசாரி நபரை தடுக்க முற்படும் போது நடந்த விவாதம் தான் இது, இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலகெங்கும் வாழும் பாலஸ்தீனர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை கிளர்ந்தெழுந்து போராட தூண்டியது.

ஆனால், இஸ்ரேல் போலீசார் மோனாவையும், அவரது சகோதரரையும் வெளியேற்றி யாகோப்பின் கூற்றை உண்மையாக்கினர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன நூற்றாண்டு கால வரலாற்றை இந்த யாகோப்-மோனா சண்டை விளக்குவது போல் வேறதுவும் துல்லியமாகவும், தெளிவாகவும் விளக்கிவிட முடியாது. யாகோப் இடத்தில் இஸ்ரேலையும், மோனா இடத்தில் பாலத்தீனத்தையும் இட்டு நிரப்பினால் அதுதான் இந்த பிரச்சனையின் நூற்றாண்டு கால வரலாறு.

இந்த மோனாவின் குடும்பம் 1948இல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த போது இப்போது இஸ்ரேலின் பகுதியாக இருக்கும் ஹைஃபா என்னும் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட குடும்பம். மீண்டும் ஒரு முறை அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையின் வரலாறை தெரிந்துகொள்ள நாம் ஒரு 50 ஆண்டு காலம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

1948 இங்கிலாந்தின் ஒப்புதலுடன் தனக்கான நாட்டை உருவாக்குவதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது இஸ்ரேல்-ஜோர்டான் போர் மூண்டது. அந்த போரில் இஸ்ரேல் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களை விட்டு பாலஸ்தீனர்களை விரட்டியது. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேலின் ஆக்கிரப்பு நடவடிக்கையால் உடமையிழந்து வெளியேறினர்.

1950ல் கிழக்கு ஜெருசலேமை ஒட்டிய பகுதியான ஷேக் ஜராஹ் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அலுவலகம் (UNRWA) மேற்பார்வையில் ஜோர்டானிய அரசு குடியிருப்புகளை உருவாக்கி போரினால் பாதிக்கப்பட்ட 28 பாலஸ்தீன குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கிறது. இந்த வீடுகளிலிருந்து தான் இப்போது இரண்டாவது முறையாக மோனாவின் குடும்பம் வெளியேற்றப்பட்டுள்ளது.

1967 நடந்த சண்டையில் கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க் மற்றும் காசா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்த இஸ்ரேல் இந்த பகுதிகளை இஸ்ரேலின் பகுதிகளாக அறிவித்துக்கொண்டது. ஆனால் உலக சமூகம் இதனை அங்கீகரிக்கவில்லை. 1972ல் இஸ்ரேல் அரசு யூத மக்கள் 1948க்கு முன் தங்களுக்கு இருந்த சொத்துக்களை உரிமை கோரலாம் என சட்டமியற்றியது. ஆனால் 400 நகரம் மற்றும் கிராம பகுதிகளிலிருந்து 1948 சண்டையின் போது வெளியேற்றப்பட்ட கிட்டத்தட்ட 9,00,000 பாலஸ்தீனிய அரபு மக்கள் தங்கள் சொத்துக்களை உரிமை கோருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இன்றும் வெளியேறிய பாலஸ்தீன மக்கள் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தம் சொந்தமண்ணில் மீள்குடியமர்வதற்கு வாய்ப்புகள் முற்றுமாக மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு எந்த நாட்டிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேல் குடியுரிமை பெற்று பாலஸ்தீன மக்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்வு செய்யப்படுகிறார்கள்.

1972 சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2009 ம் ஆண்டு மோனாவின் குடும்பம் தங்கள் வீட்டின் 50 சதவீத பகுதியை இழக்க நேரிட்டது. மீதி பகுதியையும் கடந்த ஆண்டு ஷேக் ஜராஹ் நீதிமன்ற தீர்ப்பின் படி இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன் மேல் முறையீட்டு மனு இஸ்ரேலிய உச்சநீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று கடந்த மே10ம் தேதி தீர்ப்பு வெளியாவதாக இருந்து, போராட்டங்களின் காரணமாக ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் கடந்த மே 8ம் தேதி மோனாவின் வீட்டை கைப்பற்றுவதற்கு இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகள் முயற்சித்தனர். இதுதான் ஒட்டுமொத்தமாக  ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் பாலத்தீன மக்களின் தற்போதைய நிலை. ஷேக் ஜராஹ்வில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் காலம் காலமாக நடந்து வரும் தொடர் நிகழ்வாகும்.

ஐநாவின் அகதிகள் முகாமுக்கான சிறப்பு செயலாளரின் செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில் கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் இஸ்ரேல் அரசாங்கத்தின் அரசியலமைப்பு அங்கு செயல்படுவது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அது ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் உலக மனித உரிமை சட்டமே அங்கு பொருந்தும் என்றும் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று கடந்த காலங்களில் Amnesty International, Human Rights Watch, International Criminal Court மற்றும் UNESCO போன்ற நிறுவனங்களும் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் சட்ட நடைமுறைகள் செல்லாது என்றும் அங்கு உலக மனித உரிமை சட்டங்களே செல்லும் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

எனவே சட்டத்துக்கு புறம்பாக நீதிமன்றங்கள் செயற்படுவதாகவே மேற்கூறிய அமைப்புகளின் கூற்றுகள் இருக்கின்றன.

மனித உரிமைகளுக்காக செயல்படும் உலகின் பல்வேறு அமைப்புகள் இஸ்ரேலின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து இருந்தும் தெளிவுபடுத்தி இருந்தும் இஸ்ரேல் அரசாங்கம் அவற்றை மதிப்பதில்லை மனித உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை தொடர்ந்து ஷேக் ஜராஹ்-ல் பலஸ்தீனியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அமைதியாக போராடிய பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறை ரப்பர் புல்லட்களாலும், கண்ணீர் புகை குண்டு வீசியும், ஸ்டன் கிரானைட் வீசியும் தாக்குதல் நடத்தியது.

At least 53 Palestinians wounded as Israeli police fire rubber bullets at protesters | Al Arabiya English

அதே சமயம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் இருக்கும் இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கியமான வழிபாட்டுத் தலமாக விளங்கும் அல் அக்ஸா மசூதியில் ரமலான் மாதத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களின் மீது தாக்குதலைத் தொடுத்தது. வழிபாடு செய்து கொண்டிருந்த பாலஸ்தீனிய மக்கள் ரப்பர் புல்லட்களாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும், ஸ்டன் கிரைனைட் கொண்டும் தாக்கப்பட்டனர். இந்த மனிதகுல விரோத தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கண்களை இழந்தனர். அல் அக்ஸா மசூதியின் கட்டமைப்பின் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தியது இஸ்ரேலிய பாதுகாப்பு படை. இதனால் கோபமுற்ற பாலஸ்தீனிய இளைஞர்கள் அல் அக்ஸா மசூதி பகுதியில் போராடத் துவங்கினர்.

இதற்கிடையில் போராட்டம் தீவிரம் அடைய இஸ்ரேலின் மற்ற நகரங்களிலும் பாலஸ்தீனர்கள் போராடத் தொடங்கினர். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்களும் குறிப்பாக அரேபியர்களும் அந்தந்த நாடுகளில் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கினர். உலக நாடுகளின் தலைவர்கள் மனித உரிமை அமைப்புகள் இஸ்ரேலின் இத்தகைய மனித விரோத செயலுக்கு எதிராக பேசினார்கள். இவற்றை எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத இஸ்ரேலிய அரசாங்கம் தொடர் அடக்கு முறைகளில் இறங்கியது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் ரப்பர் புல்லட் தாக்குதலால் கண்களை இழந்தும், படுகாயமடைந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ உதவி புரிந்தவர்கள் கூட இஸ்ரேலிய அரசு பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டனர். பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷேக் ஜராஹ்வில் நடந்த சம்பவம் வெளியுலகத்தின் கவனைத்தை பெற காரணமாக அமைந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 13ம் தேதி, வெஸ்ட் பேங்க் பகுதியிலிருந்தும், காசா பகுதியிலிருந்தும் பாலஸ்தீனர்கள் ரமலான் தொழுகைக்கு கிழக்கு ஜெருசலேமில் இருக்கும் தங்களின் புனித தலமான அல் அக்ஸா மசூதிக்கு செல்வதை தடுத்து நிறுத்துவதற்காக டமஸ்கஸ் கேட் எனும் இடத்தில் தடுப்பு அரண்கள் அமைத்து பாதுகாப்பு பரிசோதனைகளை செய்து பாலஸ்தீனியர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது இஸ்ரேலிய காவல்துறை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் அப்பொழுதே போராட துவங்கி விட்டனர்.

எனவே இந்த பிரச்சனையின் தொடக்கம் ஷேக் ஜராஹ் சம்பவத்திற்கு முன்பாகவே துவங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக ஆவதற்கு தேவையான பெரும்பான்மையை பெறத் தவறியதால் ஒரு நிலையான அரசாங்கத்தை இஸ்ரேலில் நிறுவ முடியவில்லை.  இச்சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்கு முறை தேர்தலை சந்தித்திருக்கிறார். நான்கு தொடர் முயற்சிகளுக்கு பின்னாலும் இஸ்ரேலில் ஒரு நிரந்தரமான அரசாங்கம் நிறுவப்படவில்லை. இப்பொழுது நெதன்யாகு அவர்கள் தனது பிரதான எதிரியுடன் கூட்டணி வைத்து ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் மேலும் பல குற்றவியல் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளின் படி அவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் நிலையில்லாமல் போயிருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மீண்டும் தான் பிரதமராக வர வேண்டும் அதுவும் பெரும்பான்மையுடன் வர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இருக்கிறார். எனவே இஸ்ரேலியர்களின் வாக்கை பெறுவதற்காக ஒரு போர்ச் சூழலை பாலஸ்தீனர்களுக்கு எதிராக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அவர்மீது குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.

அவரின் சுய நலத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலை இஸ்ரேலின் பல நகரங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்வதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. தீவிர வலதுசாரி அமைப்புகள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். கடந்த சில நாட்களாக பல பாலஸ்தீனர்கள் இந்த தீவிர வலதுசாரி கூட்டத்தினரால் நடுரோட்டில் அடித்துக் கொல்லப் படுகிறார்கள். பல பாலஸ்தீனர்களின் உணவகங்களும் கடைகளும் இஸ்ரேல் நகரங்களில் அடித்து நொறுக்கப்படுகின்றன. பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் இந்த கும்பல் பல பாலஸ்தீனர்களின் வீடுகளில் நுழைந்து அடித்து உதைத்து அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

இதேபோன்று ஒரு சில பகுதிகளில் சிறு சிறு சம்பவங்கள் பாலத்தீன இளைஞர்களால் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன, ஆனால் இந்த வன்முறை வெறியாட்டங்களில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீன மக்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் அதிகாரங்களை முற்றுமுழுதாக அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் முழுவதும் பாலஸ்தீன மக்கள் தங்களது சொந்த வீடுகளில் இருந்து பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் வெளியேற்றப்படுகிறார்கள். பாதுகாப்புப்படையினருடன் தீவிர வலதுசாரி அமைப்புகளின் ரவுடிகளும் இணைந்து மிகப்பெரிய வன்முறையை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

இந்நிலையில் காசாவை மையமாக கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன விடுதலை போராட்ட இயக்கம் ஹமாஸ் மே 10ம் தேதி ஷேக் ஜராஹ், அல் அக்ஸா மசூதி பகுதிகளில் பாலஸ்தீனர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அளவுக்கதிகமாக குவித்திருக்கும் பாதுகாப்பு படையினரை உடனடியாக அப்பகுதிகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும் மற்றும்  1967 ஜெருசலேம் நகரை ஆக்கிரமித்தத்தை கொண்டாடும் “ஜெருசலேம் நாள்” பேரணியை இஸ்ரேலிய தீவிர வலதுசாரிய அமைப்புகள் நடத்துவதை தடுக்கவேண்டும் இந்த நிபந்தனைகளை 6 மணிக்குள் நிறைவேற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

ஹமாஸ் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர் அடக்குமுறைகளை இஸ்ரேலிய பாதுகாப்புப்படை நிகழ்த்தி வந்தது. நிபந்தனைக்காலம் முடிந்ததும் ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்கள் காசாவிலிருந்து இஸ்ரேலின் நகரங்களில் ஏவுகணை தாக்குதல் தொடுத்தார்கள். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் நகரத்தில் கிட்டத்தட்ட 9 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய அரசின் தகவல் கூறுகிறது.

அதற்கு பதிலடியாக அன்றிலிருந்து இஸ்ரேல் விமானப்படை தொடர் குண்டு வீச்சுத் தாக்குதல்களை காசா நகர் முழுவதும் நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸும் தொடர் ஏவுகணை தாக்குதலை தொடுத்து வருகிறது.

Israel-Gaza Violence: Israeli Jets Flatten 14-Story Building in Gaza - Bloomberg

வான்வழி தாக்குதல்களை நிகழ்த்திகொண்டிருக்கும் இஸ்ரேல் அரசாங்கம் கடந்த மே14ம் தேதி காசா நகரத்தின் 3 அடுக்குமாடி குடியிருப்புகளை குண்டு வீசி தரைமட்டமாக்கியது. அந்த குடியிருப்புகளில் ஹமாஸ் அமைப்பினர் இருந்ததாகவும் ஆகவே தான்  தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது. ஆனால் மே15ம் தேதி அல்-சலா என்னும் அசோசிட்டேட் பிரஸ் மற்றும் அல்ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடங்கங்கள் செயற்படும் அடுக்குமாடி காட்டிடத்தையும் தாக்குதல் நடத்தி தரைமட்டம் ஆக்கியது.

இந்தத் தொடர் வான்வழி தாக்குதலில் மே16 ல் கிடைத்த தகவல் படி 188 பாலஸ்தீன பொது மக்கள் மடிந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் தோராயமாக 47க்கும்  சிறுவர்களும் அடக்கம். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மிகப்பெரிய வான்வெளி தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை. இந்த தாக்குதலிகளில் 160க்கும் மேற்பட்ட அதிநவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி கொண்டுள்ளது.

ஒரு படி மேலே சென்று தனது ராணுவத்தை தரைவழியாக காசா பகுதிகளில் முன்னகர்த்தி தரைவழி தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேலிய அரசு. ராணுவ டாங்கிகள் அணிவகுத்து காசா பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றன. காசா காசா மின்கட்டமைப்பு தாக்குதல் நடத்தப்பட்டு முற்றிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. குடியிருப்புகள், குடிநீர் இணைப்புகள், சேமிப்பு தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் முற்றிலும் சேதப்படுத்த பட்டுள்ளன.

ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான தாக்குதலாக ஐக்கியநாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் கூறுகிறார். காசாவில் இருந்து தான் ஹாமாஸ் ஏவுகளைகளை செலுத்துகிறது, ஹாமாஸ் தளம் என்பதும் காசா பகுதி தான் ஆனால் வெஸ்ட் பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளிலும் அமைதியாக ஆயுதமில்லாமல் போராடும் மக்கள் மீதும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் தாக்குதல் தொடர்கிறது. இந்த உண்மை அவரின் கூற்றை கேள்விக்குள்ளாக்குகிறது.

உலகெங்கிலும் இருந்து மனிதநேய சக்திகள் தங்களது எதிர்ப்பை இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரஷிதா தலைப் மற்றும் இல்ஹான் உமர் போன்றோர் அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளும் உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிந்து வருகிறார்கள். ஐநாவின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து உடனடியாக இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் இருதரப்பும் போர் நடை முறைகளை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த சிக்கல் பல்வேறு காலகட்டங்களில் மிகக்கொடூரமான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறது. 2008-2009 காலப்பகுதிகளில் மிகக்கடுமையான ஒடுக்குமுறையை இஸ்ரேலிய அரசாங்கம் கையாண்டது. அதன்பிறகு 2014 காலகட்டத்தில் மிகப்பெரிய அடக்கு முறை நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த போது மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் பாலஸ்தீனர்களால் முன்னெடுக்கப்பட்டது. 2018 காலகட்டத்தில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரிய ஒடுக்குமுறைக்கு உள்ளானது. பல பாலஸ்தீனிய இளைஞர்களும் சிறுவர்களும் இஸ்ரேலிய காவல்துறையினரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் கைது செய்யப்பட்டார்கள் தொடர் அடக்குமுறைகள் நடந்துகொண்டிருந்தன. இந்த காலகட்டத்தில் பாலஸ்தீனிய போராட்டத்தில் ஒரு செவிலியராக மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த ஒரு இளம் செவிலியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அது அன்று உலக அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கான நீதி இன்று வரை வழங்கப்படவில்லை.

கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கான மிகப் பெரிய வன்முறை வெறியாட்டங்கள் அடக்குமுறைகளும் உயிரிழப்புகளையும் பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்கிறார்கள். இஸ்ரேலின் மனித விரோத கோரத்தாண்டவம் பாலஸ்தீன மக்களுக்கு கடும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்களுக்கும், நம்மைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

தொடர் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் இஸ்ரேல் அரசாங்கம், தனது அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் உள்ள செல்வாக்கால் தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களும் மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கண்டிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் ஊக்குவிக்கப்படுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ச்சியாக இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தம், ஆயுத வணிகம், ராணுவ பயிற்சிகள், அதிநவீன தொழில்நுட்ப பகிர்வு, உளவு தகவல் பரிமாற்றம் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றை அளித்து வருகின்றன.

ஆகவேதான் உலக சமுதாயத்திற்கு தாம் எந்த விதத்திலும் பதில் சொல்லத் தேவையில்லை என்கிற ஒரு அகம்பாவம் தலைக்கேறி கடுமையான விதிமீறல்களை மனித உரிமை மீறல்களை தனது ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் மனிதாபிமானம் கொண்ட மக்கள் அனைவரும் திரண்டெழுந்து இஸ்ரேலின் இந்த மனித விரோத செயலை கண்டிக்க முன்வர வேண்டும். பாலஸ்தீனிய மக்களின் விடுதலை உத்தரவாதப்படுத்தபட வேண்டும். இந்த இஸ்ரேலின் மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கு துணைபோகும் உலக நாடுகள் அந்தந்த நாடுகளில் கண்டிக்கப்படவேண்டும்.

பாலஸ்தீன இளம்தலைமுறையினர் எந்தவித அச்சமுமின்றி இஸ்ரேலின் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர் என்பது நம்பிக்கை தருவதாக உள்ளது. மக்கள் போராட்டங்களை நீண்ட காலத்திற்கு ஒடுக்கமுடியாது, ஆக்கிரமிப்பு சக்திகள் இந்த இளைஞர்களிடம் தோல்வியை தழுவுவார்கள்! வெல்லட்டும் பாலஸ்தீன மக்களின் விடுதலை கோரிக்கை!!

Translate »