வீரியமடையும் இசுரேல் – ஈரான் போர்

மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்த போர் அடுத்த கட்டத்தை எட்டும் பதட்டமான சூழலை நோக்கி நகர்ந்திருக்கிறது. அக்டோபர் 25-ல் இசுரேல், ஈரானின் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருப்பதை இசுரேல் இராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் ஈரான் தலைநகரான ‘டெஹ்ரானை‘ நோக்கி வரும் ஏவுகணைகளை தங்களின் வான் தடுப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தி விடுவதாக ஈரான் இராணுவம் கூறியுள்ளது.  

இசுரேல் மீது ஈரான் அக்டோபர் 1, 2024-ல் 180-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதற்கு பதிலடியாக அக்டோபர் 26, 2024-ல் தாக்குதலைத் தொடுத்ததாக இசுரேல் இராணுவ அமைப்பு (IDF) தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலால் ஈரானிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதலை முறியடிக்க தங்களது ஏவுகணைகள் தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. 

இசுரேல் மீது ஈரான் அக்டோபர் 1, 2024 அன்று நடத்திய தாக்குதலின் பின்னணி :

இசுரேலால் படுகொலை செய்யப்பட்ட போராளிகளான ‘இஸ்மாயில் ஹனியே, நசருல்லா, நில்ஃப்ரௌசன்’ போன்ற தியாகிகளுக்காக, இசுரேல் ஆக்கிரமிப்பு எல்லையின் மையத்தை குறிவைத்து, அக்டோபர் 1-ல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் அன்று தெரிவித்திருந்தது. 

மத்திய கிழக்கு நாடுகளில் சியோனிச இனவெறி இசுரேல் அரசு நடத்தும் நில ஆக்கிரமிப்பு போர் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்கிறது. நில ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீன மக்களை, சிறு பிள்ளைகளை முதற்கொண்டு சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது. இந்தப் பின்னணியில், இசுரேலிய சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை மீட்பதற்காக, அக்டோபர் 7, 2023 -ல் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள சிலரை பிணையக் கைதிகளைப் பிடித்துச் சென்றனர். அன்றிலிருந்து இசுரேல் தொடங்கிய போர் இன்று ஈரான் மீதான தாக்குதல் வரை நீடித்து தொடர்கிறது.

இசுரேல் இனவெறி ராணுவத்தால் அக்டோபர் 8, 2023-லிருந்து தொடங்கப்பட்ட இந்தப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். பாலஸ்தீனத்தின் காசா நகரத்தையே முற்றிலும் அழித்த இசுரேல், இப்போது லெபனானின் ஹிஸ்புல்லா படையை நோக்கி போரிடுகிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இசுரேல் – ஹமாஸ் போர் உச்சத்தில் இருந்த போது, ஈரானின் அதிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் விமான விபத்தில் இறந்த துயர சம்பவமும் நடந்தது. அதன் பின்பு புதிய அதிபர் பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இசுரேலிய படையினரால் ஈரானில் வைத்தே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொன்றது இசுரேல். அவரைப்போலவே, சமீபத்தில் லெபனானின் ஹிஸ்புல்லா போராளி அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து செப்டம்பர் 27, 2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். அதே நாள் இசுலாமிய புரட்சிகர காவல் படை(IRGC)-ன் தளபதிகளில் ஒருவரான நில்ஃப்ரௌசனும் கொல்லப்பட்டதும் ஈரானின் சீற்றத்தை அதிகரித்தது.

ஈரானினால் நட்பு அமைப்புகளாக உருவாக்கப்பட்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்கள், 40 ஆயிரத்திற்கும் மேல் இனப்படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன மக்கள் என இசுரேல் நடத்திய இனப்படுகொலைகளுக்கு ஒவ்வொரு முறையும் கடுமையான கண்டனங்களை விடுத்தது ஈரான். ஆனாலும் இசுரேலின் தாக்குதல் நிற்கவில்லை. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்ட போதே, பதிலடி கொடுக்காததால் ஈரான் நாட்டினர் பலரிடமும் ஒருவித அதிருப்தியும், விரக்தியும் நிலவியது.

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான்

இந்த அதிருப்திக்கு பதில் சொல்ல, ஈரானின் அதிபரான மசூத் பெசஷ்கியான் பாராளுமன்றத்தில் பேசும் போது, போரினால் நாட்டின் பகுதிகளில் நிலையற்றத் தன்மை ஏற்படும். அதுவே போர் சூழலை விரும்பாததற்கு காரணமென பேசினார்.  ஈரானியர்கள் போர் வெறியர்கள் அல்ல, போருக்கு செல்ல பயப்படுபவர்களும் அல்ல, போருக்கு தயாராக இருப்பதாகவே ஈரானின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையின் செய்தி தொடர்பாளர் பாராளுமன்றத்தில் கூறினார்.

மேலும், அந்த சமயத்தில் அமெரிக்கா காசா மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ளப் போவதாக உறுதி அளித்திருந்தது. இசுரேல் இஸ்மாயில் ஹனியே கொலைக்கு பொறுப்பு ஏற்காமல் இருந்தது. அதனால் அமைதி காத்ததாக ஈரான் அதிபர் பேசினார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் அமெரிக்கா காலம் கடத்தியதை  வெளிப்படுத்தி, இசுரேலின் தொடர் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கப்படும் எனவும் செப்டம்பர் மாத இறுதியில் ஈரான் அதிபர் கூறியிருந்தார். 

மேலும் இசுரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் என்கிற சந்தேகத்தின் பேரில், செப்டம்பர் 17, 2024 அன்று 2800 நபர்களின் பேஜர், செல்பேசி, லேப்டாப், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்தது. இதில் 3 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் தூதரான மொத்தபா அமானியும் இதில் பலந்த காயமடைந்தார். இவையெல்லாம் சேர்ந்த சூழலே ஈரானின் இசுரேல் மீதான தாக்குதலாக மாறியிருக்கிறது.

மத்திய கிழக்கு பகுதி ஒரு போருக்கான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதில் நாங்கள் பார்வையாளராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் நாங்கள் அழிக்கப்பட்டு விடுவோம்’ என்று ஈரானின் ராணுவ தளபதி பேசியது குறிப்பிடத்தக்கது. ஈரானின் கண்டனத்தையும், எச்சரிக்கையும் மீறி தொடர்ந்து இசுரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானும் திருப்பித் தாக்கியது. 

ஈரானின் தாக்குதல் விவரம் :

ஈரானிய அரசு ஊடக அறிக்கை, அக்டோபர் 1-ல் சுமார் 200 ஏவுகணைகள் ஏவியதாக கூறியது. இவைகளில் 90% இலக்குகளைத் தாக்கியதாக ஈரானிய படையான ICRG தெரிவித்தது. முதல் முறையாக ஹைபர்சோனிக் நடுத்தர வகை ‘Fattah-2’ பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியது. இது இசுரேலின் Arrow 2 மற்றும் Arrow 3 என்ற தடுப்பு ஏவுகணைகளை அழித்ததாக அறிவித்தது. இசுரேல் அமெரிக்கா, இங்கிலாந்திடம் வாங்கிய F-35, F-16 விமானங்களைக் கொண்ட நெவாடியம் விமான தளம், நெகேவ் பாலைவனத்தில் உள்ள ஹிட் செரிம் விமானதளம், டெல் அவிவ் அருகே உள்ள டெல் நாஃப் விமான தளம் போன்ற இடங்களை குறிவைத்து தாக்கியது. இராணுவத்தின் சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால் சேதத்தின் முழுவிவரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் 180-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஈடுபடுத்தப்பட்டதாக இசுரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியது. விமான தளங்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும், விமானங்கள், ஆயுதங்கள், உள்கட்டமைப்பு பெருமளவில் சேதமடையவில்லை எனவும் இசுரேலிய ராணுவம் அறிக்கை விடுத்தது.

நெகேவ் பாலைவனத்தில் உள்ள நெவாடிம் விமானத்தளத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள மொசார்ட் உலக அமைப்பின் தலைமையகத்தை சுற்றியுள்ள பகுதிகளையும் பல ஏவுகணைகள் தாக்குவதை காட்சிகள் காட்டுவதாக பிபிசி செய்திகள் தெரிவித்தன.

இதற்கிடையில் இசுரேல் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தொடர்ச்சியாக ஐந்து தாக்குதல்களை நடத்தி சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. தெற்கு பெய்ரூட் என்பது ஆயுதத் தளவாடங்கள் சேகரிக்கப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி கார்டியனின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆசிரியர் டான் சபாக்,  ஈரானின் இராணுவ நகர்வுகளைப் பற்றி நுணுக்கமான சில விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதல் யுக்தி என்பது, ‘..பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவுவதன் மூலம், இசுரேலின் வான்பாதுகாப்பு வளையமான ஐயன்-ட்ரோம் என்பதை முறியடித்துவிடும். மேலும் ஏவுகணைகளை தடுக்கும் இசுரேலின் தடுப்பு-ஏவுகணைகள் விலை உயர்ந்தவை. மேலும் அவை போதுமான அளவில் இருப்பவை அல்ல… இவ்வாறு இடையறாது தாக்குவதன் மூலமாக இசுரேலின் தடுப்பு-ஏவுகணைகள் தீர்ந்துவிடும் அல்லது குறைந்துவிடும் சாத்தியமுண்டு..’. ஈரானின் தாக்குதல் யுக்தி இத்தகைய தன்மை வாய்ந்தது எனக் கூறியிருந்தார்.

இசுரேலுக்கு அமெரிக்காவின் உதவி:

அமெரிக்காவின் பென்டகனின் செய்தி தொடர்பாளரான விமானப் படையின் மேஜர் ஜெனரல். பார்ட் ரைடர் கூறும் போது, அமெரிக்காவும், இங்கிலாந்தும் இசுரேலுக்கு உதவுவதற்காக தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களை தொடர்ந்து அனுப்புகிறது எனவும், இந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவம் இசுரேலிய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் ஈரான் நடத்திய  தாக்குதலை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக தற்போது தாக்குதல் நடந்துள்ளதாக ரைடர் கூறி உள்ளார். மேலும் முன்பு போலவே இப்போதும் இசுரேலைப் பாதுகாக்க அமெரிக்கா இசுரேலுக்கு உதவி செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இசுரேலை காப்பதற்காக USS Cole, USS Bulkeley என இரண்டு ஆர்லே பேர்க் வகை (ஏவுகணை இயக்கும் வகை) கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடலில் நிறுத்தியிருந்தது அமெரிக்கா. ஈரான் தாக்கிய போது ஏவுகணை கருவிகளை ஏவிய இந்த கப்பல்கள், ஈரானிய ஏவுகணைகளை வீழ்த்தியதாகத் தெரியவில்லை என்றும் ரைடர் கூறி இருக்கிறார்.

மேலும் அமெரிக்க ஏவுகணை தாக்குதலுக்கு முன்பும், தாக்குதல் நடக்கும் போதும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் III இசுரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டுடன் இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசியதையும் ரைடர் உறுதிபடுத்தி உள்ளார். இந்த செய்திகளை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் இணைப்பு – குறிப்பு 1 ல்.

மத்திய கிழக்கு நாடுகளில் உருவான இப்போரின் விரிவாக்கம் தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போகும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் ராணுவ சீரமைப்பு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் வல்லாதிக்க நலனே இசுரேல் நடத்தும் போருக்கான பின்னணி எனும் போது, தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கிய இடமாக இருக்கக்கூடிய தமிழ்நாடும், தமிழீழமும் வருங்கால போர் ஆபத்து சூழும் பகுதிகளாக மாறக்கூடிய சாத்தியங்களே அதிகமிருக்கிறது.

காசாவில் ஏவிய எறிகணைகளில், இந்திய அதானியின் தயாரிப்பு எறிகணைகளும் அடக்கம். இந்தியப் பார்ப்பனிய அரசு இப்போரை கவலையுடன் பார்ப்பதாகக் கூறுகிறது. ஆனால் அம்பானி, அதானியின் ராணுவத் தளவாடங்களில் இருந்து ஆயுதங்கள் இப்போதும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன.

இசுரேலின் சியோனிச இனவெறி அரசு நிகழ்த்தும் இனப்படுகொலை வடிவங்களுக்கு இலங்கையின் சிங்கள இனவெறி வடிவங்கள் சற்றும் மாறுபட்டதல்ல என்றே கூறலாம். இசுரேல் கடந்த சில ஆண்டுகளாக ஈரானின் முக்கியத் தளபதிகளைக் கொன்றிருக்கிறது. அதைப் போல பிரிகேரியர் பால்ராச் உள்ளிட்ட பல தளபதிகளைக் கொன்றது இசுரேல். பாலஸ்தீனத்தின் சமாதான உடன்படிக்கை பற்றி பேசிய இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றது. ஈழத்திலும் சமாதான உடன்படிக்கை நடந்த காலத்தில், அதை முறிக்க பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய சுப. தமிழ்ச்செல்வனைக் கொன்றது. பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழர்களை வரச்சொல்லி கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்தது சிங்கள இராணுவம். பாலஸ்தீனத்திலும் பாதுகாப்பு முகாம்களில் குண்டு போட்டு பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றது இசுரேலின் இராணுவம்.

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள இனப்படுகொலை அரசு கொன்று குவித்ததைப் போல, பாலஸ்தீனத்தின் காசாவிலும் கொன்று குவித்து விட்டு இப்போது லெபனான் மக்களை நோக்கி போரை நடத்துகிறது. ஈரான் அக்டோபர் 1-ல் மக்கள் நெரிசல் உள்ள டெல் அவிவ் பகுதியில் இசுரேலிய மக்கள் மீது எந்த பாதிப்பும் இல்லாமல் குறிப்பிட்ட இசுரேலிய விமான, இராணுவ இலக்குகளை குறிவைத்தே நடத்தியிருக்கிறது. ஆனால் இசுரேல், பாலஸ்தீன மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்ததோடு, அவர்களின் பாதுகாப்பு முகாம்கள் மீதும் குண்டு வீசி அழிக்கிறது. இன்று ஈரான் தலைநகர் மீது எறிகணைகளை வீசி போரை விரிவாக்கும் வேலையை செய்திருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் போன்று இனப்படுகொலைக்கு பாலஸ்தீன, ஈரான், லெபனான், ஏமன் மக்கள் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய லட்சக்கணக்கான மனித நேயர்கள் இதனை எதிர்த்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இசுரேல் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து மே 17 இயக்கம், அக்டோபர் 05-ம் நாள் சென்னையில் பேரணி நடத்தியது. வெகுமக்கள் திரளாக கடந்த வருடமும் பேரணியை நடத்தியிருந்தது.

மேற்குலகத்தின் ஏகாதிபத்திய ராணுவ வெறியும், இசுரேலின் சியோனிச இனவெறியும் போரை விரிவு  செய்யும் எண்ணத்தில் இருக்கின்றன என்பதையே இசுரேல் ஈரான் மீது நடத்திய இன்றைய தாக்குதல் நிரூபிக்கின்றன.

 குறிப்புகள் :

1.https://www.defense.gov/News/News-Stories/Article/Article/3923123/us-assets-in-mediterranean-again-helped-defend-israel-against-iranian-missiles/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »