தெருக்கூத்துக் கலைஞர்களின் பட்டறையில், அவர்களிடையே உருவாகும் உணர்வுச் சிக்கலை சலிப்பு தட்டாமல் கொண்டு போகும் படமாக ’ஜமா’ இருக்கிறது. கூத்து நடத்தும் குழுவினை ஜமா என்று அழைக்கிறார்கள். அறிமுக இயக்குநரான ‘பாரி இளவழகன்’ இப்படத்தை எடுத்திருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அழகான கிராமத்தில் கதை நகர்கிறது.
பான் சினிமா (Pan Movies) என்ற பெயரில் பிரம்மாண்டம், நம்பவே முடியாத கதைக்களம், கதாநாயக பிம்பம் மிகைப்படுத்தல் போன்றவை திணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், பெரிய கதாநாயகர்கள், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் என எதுவும் இல்லாமல், சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மிகுந்த நம்பிக்கையைத் தருகின்றன. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ளார்ந்த பண்பாடுகளாக இருக்கும் வாழ்வியல் தன்மைக்கும், கலைக்கும், வட்டார மொழிகளுக்கும் உரிய கதைக்களங்கள் காணாமல் போய், கற்பனையான கதைத் திணிப்புகள் பிரம்மாண்டங்களின் வாயிலாக தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து விடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், பெரும் பொருட்செலவு எதுவுமில்லாமல் எடுத்திருந்தாலும் நல்ல திரைக்கதைகளாக இருந்தால் தமிழர்கள் ரசிக்கவே செய்வார்கள் என்பதை சமீபத்திய படங்கள் உணர்த்துகின்றன. இனி தமிழ் திரையுலகம் ‘பான் மூவிஸ்’ என்கிற இரைச்சலில் இருந்து காப்பாற்றப்பட்டு விடும் என்பதை தமிழ் திரையுலக இயக்குநர்கள் நிரூபிக்கிறார்கள்.
ஜமா திரைப்படத்தின் கதாநாயகன் ‘கல்யாணம்’, ஜமா குழுவின் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞன். அம்பலவாணன் நாடக சபையை ஜமா என்று அழைக்கிறார்கள். கதாநாயகனான கல்யாணம், திரௌபதி, குந்தி கதாபாத்திரங்களாக நடிக்கும் போது, பெண்களின் அசைவுகள், நளினங்கள் யாவும் அப்படியே பொருந்திப் போகும் அளவிற்கு அருமையாக நடித்திருக்கிறார். பெண் பார்க்கப் போகும் இடத்தில் எல்லாம் இவர் மணப்பெண்ணுக்கு உதவிகள் செய்ய வலியப் போகும் காட்சிகள் புதுமையானவை.
கூத்தில், பெண் வேடம் ஏற்பதிலிருந்து வெளியில் வந்தால்தான் திருமணம் ஆகும் என அம்மாவின் வலியுறுத்தலால், அர்ச்சுனன் வேடம் கேட்க கூத்து வாத்தியாரிடம் செல்லும் போது, அவமானப்படுகிறான். கூத்து வாத்தியாராக தாண்டவம் கதாபாத்திரத்தில் ‘சேத்தன்’ நடித்திருக்கிறார். கல்யாணத்தின் திறமை தெரிந்தும், அவனை மட்டப்படுத்துகிறார். இருப்பினும், வாத்தியாரை விட்டு நீங்காமல் கல்யாணம் அங்கேயே நீடிப்பதற்கும் முன்காரணம் இருக்கிறது.
ஒரு குழுவாக இணைந்து இருப்பவர்களில் சிலரிடம் ஏற்படும் தலைமை ஆசை, முரண், கர்வம் போன்றவை பிரிவினைக்கு வழிவகுக்கும். இதில் காட்டப்படும் தெருக்கூத்து மட்டுமல்ல, பொது நோக்கத்திற்காக குழுவாக இணைந்து இயங்கும் அனைத்து மட்டத்திலும் இந்த தன்மை எழும்பக்கூடியதே. தான் சார்ந்திருக்கும் நோக்கத்தை முதன்மைப்படுத்துவதை விட தன்முனைப்பு அதிகம் இருப்பது பிரிவினைகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இந்த படத்திலும் தெருக்கூத்தின் வாத்தியாராக இருக்கும் கல்யாணத்தின் தந்தைக்கும், தாண்டவத்திற்கும் (சேத்தனுக்கும்) ஏற்படும் பிரிவிற்கு தன்முனைப்பே இருக்கிறது. தனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் மீது முரண் ஏற்பட்டு பிரிவது என்பது வேறு, தன்முனைப்பு ஏற்பட்டு அவர்களின் குழுவையே தன்னுடன் இழுத்துக் கொள்ளும் துரோகம் என்பது வேறு என்பதை காட்சியாக உணர்த்தி விடுகின்றன கதாபாத்திரங்களின் முகப் பிரதிபலிப்புகள்.
தந்தைக்கு நடந்த துரோகத்திற்காக அந்த ஜமாவை கைப்பற்ற நினைக்கிறான் கல்யாணம். ஆனால் வாத்தியாரிடம் பெரும் பகையை எதுவும் காட்டாமல் அவருடனேதான் இருக்கிறான். அதற்காக அவன் தியாகம் செய்து படிக்க வைத்த காதலியையும் துறக்கிறான். தன் நலனுக்காகவே வாழ்ந்த அம்மாவையும் இழக்கிறான். அதே குழுவில் உள்ளவர்களை அழைத்து அதே ஜமாவை உருவாக்க நினைத்து அவமானப்படுகிறான். இவ்வளவு இழப்புகள் சந்தித்தும், இறுதியில் அர்ச்சுனன் வேடம் அவனுக்கு கிடைத்ததா, அந்த ஜமா அவனுக்கு கிடைத்ததா? என்பதே கதைக் கருவாக நகர்கிறது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் உள்ள வறுமையும், நலிந்து போகும் கலையாக இருக்கும் அவலமும் இன்னமும் தொடரவே செய்கிறது. அவற்றைப் பற்றியான கதைக்களங்களும் தேவையானதே. ஆனால் இத்திரைப்படத்தின் கதைக்களம் வேறு தன்மை உடையது. தெருக்கூத்து கலைஞர்களுக்குள் ஏற்படும் சிக்கலையே படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
தெருக்கூத்துக் கலையையும் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் மூலம் அறிந்தவர்களே பெரும்பான்மை நகரத்தவர்கள். அவர்களுக்கு இக்கலையில் இடம்பெறும் ஒப்பனை, பாடல், வசன உச்சரிப்பு, பாவனை, நடிப்பு போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் நுண்மையான காட்சி அமைப்புகளை கையாண்டிருக்கிறார் புதிய இயக்குனர். அவரே கல்யாணம் பாத்திரத்தையும் ஏற்று உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். குந்தியாக அவர் கண்ணீர் விட்டு கதறும் காட்சி அற்புதம்.
மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீரமான தோற்றத்துடன் சாதிப் பெருமைப் பேசித் திரியும் ஆண்களை வீரமான ஆணாக சித்தரித்து வைத்திருக்கும் சாதிய சமூகத்தில், ஆம்பளை என்றால் யார்? என்று கதாநாயகி கேட்கும் ஒரு காட்சியும், அதன் விளக்கமும் கைதட்டல் ரகம். துணிச்சலான பெண்ணாக வருகிறார்.
முன்பணம் கொடுத்து பண்ணையத்திற்கு கூலியாள் சேர்ப்பது, சாமி கரகம் தூக்கும் சடங்கில் கல்யாணத்தை ஒதுங்கி நிற்க வைத்திருப்பது போன்ற காட்சிகள் சாதி அமைப்பின் மறு பக்கங்களை சொற்களில் வழியாக இல்லாமல் காட்சிகள் ஊடாக கடத்தி விடுகிறது.
ஜமா திரைப்படம், எடுத்துக் கொண்ட கதைக் களனுக்கேற்ற திரைக்கதையை மனதில் பதிய வைக்கிறது. ஆனால் பொதுவான தெருக்கூத்தைப் பொறுத்தவரை, இவை வடநாட்டு புராண, இதிகாசக் கதைகளை எளிய மக்கள் தலையில் கட்டுவதாகவே இன்றும் நீடிப்பது ஏனென்கிற கேள்வி எழுகிறது? கல்வி அறிவில்லாத அன்றைய காலகட்டத்தில் கிராம மக்களிடத்திலும் இந்தப் புராணப் புளுகுகளை கொண்டு சேர்த்த அரசியல் பிழையாகவே, தெருக்கூத்து தேர்ந்தெடுத்த கதைகளை சொல்லலாம்.
தெருக்கூத்து கலையின் நடிப்புத் திறன் என்பது எளிய மக்களின் ஒட்டு மொத்த உணர்வையும் ஒரே காட்சியில் ஆட்டம், பாடல், பாவனை, வசனம் என குவிக்க வைப்பதில் தானிருக்கிறது. திரைப்படம் போல மறுபடி எடுக்கும் (ரீ டேக்) வாய்ப்பு கிடையாது. பல் திறமைகள் குவியும் கலையில் தமிழர்களின் பண்பாடுகளை விடுத்து, வட நாட்டு புராணங்கள் ஏன் திணிக்கப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. காலங்காலமாய் இறுகிப் போன இதன் வடிவத்தில், நவீன காலத்திற்கேற்ப தமிழர் பண்பாட்டுக் கதைகளை கடத்த வேண்டும். அதற்கு கூத்துக் கலைஞர்களும், இன்றைய தலைமுறையும் கைக்கோர்க்க வேண்டும்.
இன்று ராப் சாங் (Rappers) எனப்படும் மேற்கத்திய பாணி இசை வடிவத்தை உள்வாங்கி நவீன வடிவத்தில் ஆங்கிலமே கலக்காமல் இனிய தமிழ் சொற்களை நிரப்பியும் பாட முடியும் என்று இளைஞர்கள் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் திறமையுடன் வருகிறார்கள். தெருக்கூத்தும் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் கலையாக வலம் வர வேண்டும். எளிய மக்களிடத்தில் புளுகுகள் அல்லாமல் வரலாறுகளும் சென்று சேர வேண்டும் என்பதே நம் விருப்பமாக இருக்கிறது.
குறிப்பாக கதா’நாயகன்’/ ‘நாயகி’ எனும் பிம்பத்தை கட்டமைக்கும் வணிக திரைப்படங்கள் (commercial cinema) பாணியில் இருந்து வேறுபட நினைக்கும் அறிமுக இயக்குனர்கள், இத்தகைய புது முயற்சியில் ஈடுபடுவது பாரட்டிற்குரியது. முன்பு நாடகங்களில் ‘ஸ்திரீபார்ட்’ எனப்படும் பெண் வேடமிடும் ஆண் பாத்திரங்களில் இப்போதைய காலகட்டத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் நடிப்பது அவரின் கலை ஈடுபாட்டை காட்டுகிறது. இளையராஜாவின் இசை இப்படத்தின் மகுடம் ஏற்றியிருக்கிறது. இத்திரைப்படத்தை எடுத்த குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். ஒரு கிராமத்தையே வெகு இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஆகஸ்டு 2, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது அமெசான் பிரைம் வீடியோ (Amazon Prime OTT) தளத்தில் இருக்கிறது.