மக்கள் விடுதலை முன்னணி என அழைக்கப்படும் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) கட்சி இலங்கையில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இடதுசாரி கட்சியாக சொல்லப்படும் ஜேவிபி-யின் திசநாயக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கட்சி அமெரிக்க எதிர்ப்பை பேசினாலும், நீண்ட காலமாக அமெரிக்காவுடன் மறைமுக நட்புறவு கொண்டு செயல்பட்டதை விக்கிலீக்ஸ் இணையதளம் 2002-ம் ஆண்டிலேயே அம்பலப்படுத்தியது.
இலங்கை அரசு – புலிகள் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 2002 காலகட்டத்தில், ஆகஸ்ட் 30 – அன்று, ஜேவிபி-யின் பொதுச் செயலாளராக இருந்த டில்வின் சில்வா, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பொல்லாஃப்-யை சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருந்தது. அந்த உரையாடலில் “ஜேவிபி கட்சி இலங்கையின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்காக தனியார் மயம் மற்றும் உலக மயத்தை ஆதரிப்பதாக சில்வா பேசுகிறார். சர்வதேச சந்தையில் இலங்கையை நிலைநிறுத்திக் கொள்ள உலகமயமாக்கலே அவசியம்” எனக் கூறுகிறார். மார்சிய, சோசலிச இடதுசாரிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜேவிபியின் வலதுசாரித்தனத்தை 2002-லேயே அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்.
மேலும், ஜேவிபியின் நாடாளுமன்ற குழு தலைவர் விமல் வீரவன்ச அமெரிக்கத் தூதுவரை அக்டோபர் 1, 2007-ல் சந்தித்திருக்கிறார். அப்போது நடந்த உரையாடலில், விமல் வீரவன்ச, “ராஜபக்சே ஆட்சி இலங்கையில் ஊழல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக பேசியுள்ளார். இலங்கையில் அப்போதுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்து பேசிய பின்பு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அமெரிக்கா கொல்ல மறுப்பது ஏன் எனவும், ஈராக்கின் சதாம் உசேனை கொல்ல முடிந்த அமெரிக்காவினால் பிரபாகரனை கொல்ல முடியாதது ஏன் எனவும் பேசுகிறார். ஊழல், பணவீக்கம் போன்ற குறைபாடுகள் இருந்த போதும், விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை ராஜபக்சே அரசின் கூட்டணியில் இருந்து ஆதரிப்பதாக சொல்கிறார்“. மேலும் அமெரிக்காவிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்தது குறித்து பாராட்டும் வண்ணம் விமல் வீரவன்ச பேசியிருப்பதையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசுக்கும் – புலிகளுக்கும் சமாதான உடன்படிக்கை அமலில் இருந்த காலகட்டத்தில், 2005 – ஏப்ரல் 7-ல் தெற்காசிய பிராந்திய உதவி செயலாளரான இருந்த திருமதி. ரொக்கா மற்றும் அமெரிக்கத் தூதுவருடன் ஜேவிபியின் தலைவர் அமரசிங்கே பேசும் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை, சுதந்திர நாட்டிற்கான போராட்டத்தை கைவிடுவது குறித்தான எந்த உத்தரவாதமும் இல்லாமல், இலங்கை அரசு அதிகமாக சலுகை அளிக்கிறது. “இலங்கையின் மற்ற கட்சிகளைப் போல தங்கள் கட்சியும் அமைதி உடன்படிக்கையை விரும்புகிறது, ஆனால் நார்வே பாரபட்சமாக நடந்து கொள்கிறது, நார்வேயின் ஆயுத உபகரணங்களை விடுதலைப்புலிகளுக்கு இறக்குமதி செய்வதற்காக இலங்கை மீது அளவுக்கு மீறி தலையீடு செய்கிறது, நார்வே பிரதிநிதிகள் தங்களைத் திருத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும்” எனப் பல புகார்களை அவர்களிடம் ஜேவிபியின் அமரசிங்கே கூறுவதையும் விக்கிலீக்ஸ் பதிந்துள்ளது.
இவ்வாறு ஜேவிபி தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அமெரிக்காவிடம், சதாம் உசேனைப் போல பிரபாகரனை கொல்ல மறுப்பது ஏனென்கிற மிகையான உரிமையுடனும், புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்யும் சட்டவிரோத அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாராட்டும் விதமாகவும், நார்வே பற்றி புகார் அளித்து அதன் மீதான நடவடிக்கை கோரும் விதமாகவும் ஆழ்ந்த நட்புறவுடன் பேசியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.
இவ்விதம் ரகசியமாக பேசிய ஜேவிபி கட்சி 2020-ல், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலரான மைக் பொம்பியா இலங்கைக்கு வருகை தந்த போது, இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக தன் ஏகாதிபத்திய ஆசைகளை நிறைவேற்ற அமெரிக்கா நினைக்கிறது எனக் கூறி இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தெற்காசியாவில் தனது பிராந்திய நலனை நிலைநிறுத்தவும், தனது இராணுவ, வணிக நலனுக்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவும், இலங்கை மீதான ஐ.நாவின் விசாரணை நடவடிக்கையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது என குற்றம் சுமத்தியது. மேலும் MCC, SOFA, QUAD ஒப்பந்தங்களின் கையொப்பமிட இலங்கையை வற்புறுத்தும் ரகசிய நடவடிக்கைகளை வெளியிடக் கோரியது.
MCC – (Millenniam Challenge Corporation) என்பது வளரும் நாடுகளின் வறுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பல நிபந்தனைகளுடன நிதி வழங்கும் திட்டமாகும். SOFA – (Status of forces Agreement) என்பது அமெரிக்க சார்பு நாடுகளில் இராணுவத்தை நிலைநிறுத்துதல் திட்டமாகும். QUAD – Quadrilateral Security Dialogue) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்திய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு போராட்டங்கள் நடந்த சமயத்தின் போதும், அதற்குப் பின்னரும் அமெரிக்க தூதுவரான ஜூலி சாங் – வுடன் JVP கட்சியினர் நடந்த சந்திப்பு குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே அரசிற்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டத்தை தூண்டி விடுவதற்கு முக்கிய காரணமாக, அன்றைய காலத்தில் ஜூலி சாங்-கின் டிவிட்டர் செய்திகள் இருந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தை நடத்தி முடித்ததற்கு முக்கிய விளம்பர தூதராக ஜூலி சாங் இருந்ததாக சிங்கள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அரகலயா என்று அழைக்கப்பட்ட அந்த போராட்டத்தில் சிங்களர்களைத் தூண்டி விட்டதில் ஜேவிபி கட்சியினரும், திசநாயக்கவும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. வேலை நிறுத்தம் மற்றும் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்வதிலிருந்து ராஜபக்சே இல்லம் தாக்கப்பட்ட வரை ஜேவிபி கட்சியின் வலுவான பின்னணி இருந்ததாக கூறப்பட்டது. ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த கட்சியின் முக்கிய தலைமைகள் ஜேவிபி கட்சி கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி (NPP) கூட்டணியில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் மே 14, 2022-ம் ஆண்டு திசநாயக்கவை ஜூலி சாங் சந்தித்தார். ஜூலை 5, 2022, அன்று அமெரிக்க தூதர் ஜூலி சுங் ஒரு நிகழ்வின் போது, ஜேவிபி கட்சியை மாற்றங்கள் ஏற்படுத்தும் கட்சியாக பார்ப்பதாக புகழ்ந்திருக்கிறார். மறுபடியும் 2023-ம் ஆண்டு அக்டோபர் 19 அன்று அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜூலி சுங் இருவரும் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக நடந்த சந்திப்புகள் அமெரிக்காவுடனான, ஜேவிபி-யின் நல்லுறவை கூறுகிறது, கடந்த தேர்தலில் 3% வாக்கு வாங்கிய ஜேவிபி இந்த தேர்தலில் 48% அளவுக்கு உயர்ந்ததன் பின்னணியையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இலங்கையை பிளவுபடுத்த சதி செய்யும் ஒரு ஏகாதிபத்திய சக்தி என்று வெளிப்படையாக கண்டனமும் செய்து போராட்டங்களும் நடத்தி கொண்டு, மறைமுகமாக அமெரிக்காவுடன் ஜேவிபி நல்லுறவையும் வளர்த்து கொண்டிருக்கிறது என்பதையே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய செய்திக் குறிப்புகளிலிருந்து இன்றைய அரசியல் நிலவரம் வரை கூறுகிறது.
ஜேவிபி கட்சியின் அமெரிக்கா தொடர்பில் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியதாக 13வது சட்டத்திருத்தத்தை மறுத்த நிலைப்பாடு இருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுகளே ஒப்புக் கொண்ட, “தமிழர்களின் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்தை மறுப்பதாக இன்றளவும் ஜேவிபி கூறுகிறது. ஆனால் இந்திய-இலங்கை இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் சரத்துகளில், திரிகோணமலை அமெரிக்கா வசமாகக் கூடாதென்பது மிகவும் முக்கியமான சரத்தாக இருக்கிறது. ஜேவிபி 13-வது சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதற்கு வடக்கு கிழக்கு இணைப்பு காரணமாக இருக்க முடியாது, மாறாக திரிகோணமலை அமெரிக்கா வசமாக வேண்டுமென நினைத்திருக்கிறது” என்பதற்கு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்களே சாட்சியமாக உள்ளன. ஜேவிபி 2002-லேயே உலகமயமாக்கலுக்கு பச்சைக் கொடி காட்டியதையும், தொடர்ந்து நீண்ட காலம் அமெரிக்கத் தூதர்களுடன் மிகவும் நல்லுறவு கொண்டு உரிமையாக பேசியதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது இதற்கு சான்றாக இருக்கிறது.
இடதுசாரி முலாம் பூசிக் கொண்டு தொடர்ந்து அமெரிக்காவுடன் நல்லுறவு பேணிக் கொண்டு இருக்கும் கட்சியின் பிரதிநிதியே இலங்கையின் அதிபராகியிருக்கிறார். இன்றும் வணிக மாநாடுகளில் சென்று தனியார் நிறுவனங்களை வளர்ப்பதன் அவசியத்தை திசநாயக்க பேசுகிறார். உலகமயமாக்கலையும், தனியார் மயத்தையும் ஆதரித்துப் பேசி விட்டு, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் செய்து விடும் குழப்பவாத கட்சியாக ஜேவிபி இருக்கிறது. முதலாளித்துவ சார்பு நிலையும், அமெரிக்க சார்பு அரசியலும் கொண்ட ஜேவிபியின் திசநாயக்கவின் வெற்றி உண்மையில் இடதுசாரி வெற்றியை குறிக்கிறதா என்கிற கேள்வியே எழுகிறது, மக்களின் உரிமைக் குரலாக இந்துத்துவ மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நிற்கும் இங்குள்ள இடதுசாரிகள், இலங்கையில் இடதுசாரி ஆட்சி அமைந்து விட்டதாக கொண்டாடுவது அர்த்தமற்றது.
இனவெறியை மூலதனமாக்கி சிங்கள பாட்டாளிகளை திரட்டிவிட முயற்சித்த ஜேவிபி கட்சி அமெரிக்காவுடனான தொடர்பை பேணி வந்தது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல. இனவாதம், மதவாதம் ஆகியன முதலாளித்துவத்தின் கூறுகள். ஏகாதிபத்தியம் இவ்வகையான பிற்போக்குத்தனத்தை தனது பிராந்திய நலனுக்காக பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இசுலாமிய மதவாத சக்திகளை பயன்படுத்தி சனநாயக, இடதுசாரி ஆற்றல்களை அழித்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பாட்டாளிகள் இடதுசாரி ஆற்றலாக எழுவதை தடுக்க இந்த யுக்திகளைப் பயன்படுத்தியது.
தனது நாட்டிற்குள்ளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கிளைகளை வளர்க்க அனுமதிக்கும் அமெரிக்காவானது, சனநாயக ஆற்றல்களை தடுப்பதை கவனமாக மேற்கொள்கிறது. இலங்கைக்குள்ளாக புது இனவாத ஆற்றல்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவதும், தமக்கான அடியாட்களை பலவேறு கட்சிகளின் மூலமாக வளர்த்தெடுப்பதையும் நீண்டகாலமாக மேற்குலகம் செய்துவருகிறது.
ஜேவிபியின் இனவெறி அரசியல் நீண்டகாலத்திற்கு முன்பாகவே அம்பலமானவை. இதனாலேயே தமிழ் பாட்டாளிகளை ஜேவிபியை இடதுசாரி கட்சியாகவோ, சனநாயக கட்சியாகவோ அங்கீகரித்ததில்லை. 2005-ல் ராஜபக்சே அரசோடு கூட்டணி ஆட்சியை அமைத்த ஜேவிபி, தமிழர்களுடனான அமைதி ஒப்பந்தத்தை முறிக்க வேண்டுமென வெளிப்படையாக கோரியது. இராணுவரீதியாக தமிழர்களை எதிர்க்கவேண்டுமென முழங்கியது. இக்கோரிக்கைகளை சிங்கள மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து இராணுவத்திற்கு ஆதரவை திரட்டியது.
2009ல் நடந்த இனப்படுகொலைக்கு சனநாயக முலாம் பூசியதும் ஜேவிபி கட்சியே. ஜேவிபியின் பாராளுமன்ற பொறுப்பாளரான விமல் வீரவன்ச பலவேறு போராட்டங்களை அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாகவும், ஐ.நா அமைப்புகளுக்கு முன்பாகவும் நடத்தி இனப்படுகொலை, போர்க்குற்றம், பாலியல் குற்றங்களைச் செய்த இலங்கை இராணுவத்தினரை விசாரிக்கக் கூடாதென முழங்கியவர். அமெரிக்காவின் நிலைப்பாடுகளும் இதை ஆதரிப்பவையே. ஜேவிபியின் சந்தர்ப்பவாத, முதலாளித்துவ சார்பு அரசியல் காலம் காலமாக ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதாகவே இருந்திருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வழியாக வெளியான அமெரிக்க தூதரகம் குறித்த ஆவணங்கள் வெளிப்படுத்தியது.
இவ்வாறான இடதுசாரி அரசியலுக்கு எதிராக இயங்கும் ஜேவிபி கட்சியை இடதுசாரி மாற்று அரசியல் கொள்கை கொண்ட கட்சியாக சித்தரிப்பதை இந்திய இடதுசாரிகள் பரிசீலனை செய்வது மிக மிக அவசியம். இந்த நிலைப்பாடுகள் இந்திய இடதுசாரிகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் என்பதை கவனத்தில் எடுக்காமலும், ஜேவிபியின் அரசியல் வரலாறு குறித்த ஆய்வுகள் இல்லாமலும் ஆதரிப்பது ஆபத்திற்குரியது. ஜேவிபி ஏகாதிபத்தியத்தின் நலனையே இலங்கைக்குள் முன்னிறுத்தும் கட்சியாகவே இதுகாறும் இருந்து வந்துள்ளது என்பதே நிதர்சனம்.
குறிப்புகள்:
[1] https://wikileaks.org/plusd/cables/02COLOMBO1599_a.html
[2] https://wikileans.org/plusd/cables/07colombo1372_a.html
[3] https://wikileaks.org/plusd/cables/05COLOMBO788_a.html
[4] https://ceylontoday.lk/2022/05/16/us-envoy-meets-jvp-leader/