மனித உடலில் கண்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் போல் மனித வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் அய்யா காமராஜர். கண்களைக் கொண்டே இவ்வுலகத்தை காண முடிவதுபோல் கல்வி என்ற கண்கொண்டு தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதத்தை அதிகரித்தவர் அவர். தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், குறிப்பாக கல்வி கற்க இயலாத நிலையில் இருந்த பாமர எளிய மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்த தலைவர், அய்யா காமராஜர்.
1903-ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் அய்யா குமாரசுவாமிக்கும் சிவகாமி அம்மாளுக்கும் பிறந்த காமராஜரின் இளமைப்பருவம் கடின உழைப்பும் சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
தன் இளமை பருவத்திலேயே தந்தையை இழந்ததால், கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டாமல் காமராசர் தனது மாமாவின் துணிக்கடையில் பணி செய்தார். தனது 16வது வயதில் காங்கிரஸ் தலைவர் வரதராசுலு நாயுடு அவர்களின் பேச்சால் கவரப்பட்டு அக்கட்சியில் உறுப்பினராக சேர்ந்து ஆர்வத்துடன் அரசியல் கற்க ஆரம்பித்திருக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, அய்யா காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமே இன்று ஒன்றியத்தால் பின்பற்றப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் கல்வி கற்கவும் அவர்கள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு தற்போதும் பின்பற்றும் திட்டம்தான் இந்த மதிய உணவுத் திட்டம். பசியுடன் இருக்கும் குழந்தைகள் எப்படி படிப்பில் கவனம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு உணவும் கல்வியும் அளிக்க 1956-ம் ஆண்டு மதிய உணவு திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகம் செய்தார். ஏழை மாணவர்களுக்கும் வசதிபடைத்த குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கும் இடையே உடை வேற்றுமையால் ஏற்ற தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்பதற்காக 1960ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி சீருடை வழங்கும் திட்டத்தையும் தொடங்கினார்.
அவர் ஆட்சி புரிந்த ஒன்பது ஆண்டுகளில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்தது. அது மட்டுமன்றி கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆய்வகம் தொடங்குவது, இடப்பற்றாகுறையை சமன் செய்வதோடு மாணவர்கள் விரும்பிய பாடத்தை கற்க கல்லுரிகளில் மாலைநேர வகுப்பு (Evening College) என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். அரசியலில் நேர்மையான செயல் வீரராக இருந்து மற்றவர்களை நேர்மையாக இருக்கச் செய்த தைரியமான தலைவர் என்பதை நிரூபித்தார். தான் பெறாத கல்வியை அனைத்துக் குழந்தைகளும் பெற வேண்டும் என்ற மன உறுதி பூண்ட தலைவராக இருந்தார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30,000 பள்ளிகளைத் திறந்து வைத்ததோடு ஏற்கெனவே இருந்த பள்ளிகளையும் மேம்படுத்தினார். இவரது காலத்தில் தான் தமிழ்நாடு 7% கல்வி கற்றவர்கள் என்ற நிலையில் இருந்து 37% கல்வி கற்றவர்கள் என்ற மாநிலமாக மாறியது.
அரசியல் போராட்டங்கள்
வேல்ஸ் இளவரசருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், ஒத்துழையாமைப் போராட்டம், பெரியாரின் வைக்கம் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று காமராஜர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1930ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்காக கைதான காமராஜருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே, தனது பொதுவாழ்வில் காமராஜர் எதிர்கொண்ட முதல் சிறைவாசம்.
1936ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டிக்கானத் தேர்தலில் அவரது அரசியல் வழிகாட்டியான சத்தியமூர்த்தி போட்டியிட்டு வெல்ல கட்சியின் செயலாளராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1940ல் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவராகி, 1954ஆம் ஆண்டுவரை (14 ஆண்டுகளுக்கு) அப்பதவியில் நீடித்தார்.
1953-ல் ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை நாசமாக்கும் குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகப்படுத்தியதை எதிர்த்தார். காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும், தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், தி.மு.க போன்ற கட்சிகளும் குலக்கல்வித் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால், ராஜாஜி பதவி விலகும் சூழல் ஏற்பட காமராஜர் தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், காமராஜர் அவ்வளவு எளிதில் ஒப்பு கொள்ளவில்லை. பிறகு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இன் நிறுவனரான வரதராஜுலு நாயுடுவும், தந்தை பெரியாரும் காமராஜரை சந்தித்து பேசியதன் பின்னரே ஒப்புக் கொண்டு 1954ல் காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். (அரசியல் தளத்தில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.)
தொடர்ந்து 9 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பில் இருந்தபோது மூன்று முறை மூன்று பிரதமர்களை காமராஜர் தெரிவு செய்தார். அதாவது நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து இந்திய அரசியலிலும் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார்.
முதல்வராக பதவியேற்ற பின்னரும் சாதாரணமான எளிய வாழ்க்கையே வாழ்ந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் காமராஜர். பதவியை வைத்து தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த பலனும் அடையாத நேர்மையான தலைவராகவே வலம் வந்தார். அதே போல் தனது அமைச்சரவை உறுப்பினர்களும் நேர்மையாக இருக்கவும் அரசு அதிகாரிகளுடன் நல்ல சுமுகமான உறவை பேணும்படி அறிவுறுத்துவார். அப்போது தான் மக்களுக்கான அரசுபணி சரிவர விரைந்து செய்ய முடியும் என நம்பினார். தனது காருக்கு சைரன் வைத்த வண்டியை தவிர்த்து முன்னும் பின்னும் அதிகாரிகள் புடைசூழ வருவதையும் தவிர்த்து இருக்கிறார். எளிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வளித்தவர். குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற நினைத்தார்.
தான் ஆட்சியில் இருந்தபோது, கிராமப்புறங்களில் மூலை முடுக்கெல்லாம் மின்சார வசதி கிடைக்க செய்தார். அவர் பட்டப்படிப்பு பெறாவிட்டாலும் சிறந்த அறிவுகூர்மையும் திட்டமிட்டு செயல்படுவதில் வல்லமையும் கொண்டிருந்தார் என்பதற்கு சில நிகழ்வுகளை நினைவுகூறலாம்.
ஒருமுறை திண்டுகல்லில் தனியார் கம்பெனி ஆரம்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கு உடனே சம்மதம் தெரிவித்து காமராஜர் கையொப்பமிட்டுள்ளதை பார்த்து அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர். அதற்கு அவர் சொன்ன பதில், “தனியார் கம்பெனி ஆரம்பிக்க மின்சார கம்பம் போட்டு இணைப்பு எடுப்பார்கள். அந்த இணைப்புகள் மூலமாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைக்கும்” என விளக்கியுள்ளார் அவர்.
ஒரு மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில், ஒரு மாணவர் எதிர்கட்சியை வசைபாடி பேசிக்கொண்டு இருந்தபோது அவரை அழைத்து, “இப்போது நீ உன் படிப்பில் கவனம் செலுத்தி உன் தாய் தந்தை விருப்பத்தை நிறைவேற்று. பிறகு அரசியலுக்கு வரலாம்” என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார் கல்வியின் அருமை தெரிந்த காமராஜர்.
ஒருமுறை எளிய குடும்பத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது இல்ல திருமணத்திற்கு இவரை அழைத்துள்ளார். அப்போது மறுப்பு தெரிவித்துவிட்டு திருமண நாளன்று சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு சென்றார் காமராஜர். “நண்பரின் செலவை குறைக்க அவ்வாறு நடந்து கொண்டேன்” என பின்னாளில் தெரிவித்த மனித நேய ஏழைப்பங்காளர் அவர்.
அவரது ஆட்சியில் மதுக்கடைகள் இல்லா மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது மிகப்பெரிய சாதனையாகும். (மதுவுக்கு எதிராக 1948ல் அமல்படுத்தப்பட்ட தடை, காமராஜர் தலைமையில் நடந்த ஆட்சியின் கீழும் தொடர்ந்தது.) எந்த அரசாக இருந்தாலும் மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை பெரிதாகக் கருதும் நிலையில் மக்களின் உடல்நலத்திலும் அக்கறை கொண்ட முதல்வராகவே காமராஜர் வாழ்ந்தார்.
கல்விக்கு அடுத்து இவர் அக்கறை செலுத்திய துறை விவசாயம். காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட பல அணைகள் இன்றும் தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு உயிர் கொடுத்து வருகின்றன. பவானித்திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், மணிமுத்தாறு, அமராவதி, கிருஷ்ணகிரி, மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், வைகை, ஆரணியாறு ஆகியவை இவற்றில் சில. காமராஜரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த தொட்டிப் பாலத்தை கட்டி இருந்தார்.
அடுத்து இவரது ஆட்சியில் ஏரிகள், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன. 1957-61க்கும் இடைப்பட்ட காலத்தில் 1600 ஏரிகளும், 1628 குளங்களும் தூர்வாரப்பட்டன. விவசாயிகளுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காகவும் அவர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.
தொழிற்சாலைகளை அமைப்பதில் அக்கறை கொண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, சென்னை இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ், உதகையில் சுருள் பட தொழிற்சாலை, பெரம்பூர் ICF (இரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை), சேலம் மோகனூர் சக்கரை ஆலை என பல பெரியத் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்து அன்றைய பிரதமர் நேரு அவர்களின் பாராட்டையும் பெற்றார்.
மேலும் அடிக்கடி பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இன்று ஊடக சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவே வெளிநாடு செல்லும் மோடி போன்றவர்களும், பத்திரிக்கையாளர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகளும் இருக்கும் அரசியல் தளத்தில், காமராசரின் இந்த உயரிய பண்பு போற்றுதலுக்கு உரியது.
இப்படி 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் தனது தாயாரின் இறுதி சடங்கின் போது கூட தன் சட்டை பையில் ஒரு ரூபாய் இல்லாமல் இருந்தவர். அவரது நண்பர் இறுதி காரியம் செய்யும் தொழிலாளிக்கு கொடுப்பதற்காக பணம் கொடுக்க அதை வாங்க மறுத்திருக்கிறார். இவ்வாறு தனது இறுதி காலம் வரை எளிமையை கடைப்பிடித்தார்.
(படம்: இறக்கும்போது அய்யா காமராஜர் வைத்திருந்த சொத்துக்கள்)
இன்று அரசியலில் சிறு பதவியில் இருக்கும் நபர்கள் கூட பல கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்து, கொள்கைக்காக வாழாமல் தன் நலத்திற்காக சாதி சண்டைகளை தூண்டி விட்டு அரசியல் செய்கின்றனர். ஆனால் பெருந்தலைவர் முதல்வராக ஆட்சி ஏற்றதும் பட்டியலின சமூகத்தை சார்ந்த பரமேஸ்வரன் என்பவரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். எதிர்கட்சியை சார்ந்தவர்களுக்கும் பதவி கொடுத்து, “யாரும் யாருக்கு எதிரியல்ல, அனைவரும் ஒர் நிறை” என்பதை நிருபித்து காட்டியவர் பெருந்தலைவர்.
தன்னலம் கருதாது மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட காமராஜாரின் வாழ்க்கை வரலாறு, அரசியல்வாதிகள் அனைவரும் கற்க வேண்டிய பாடமாக இருக்கிறது. ஆனால் இன்று அவருக்கே சாதி சாயம் பூசி சொந்தம் கொண்டாட பாஜக – ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அய்யா காமராஜர் அவர்களை தில்லி இல்லத்தில் வைத்து கொல்ல முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ் தமிழர்களிடையே அம்பலப்படுத்தப்பட வேண்டும். (விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/the-assassination-gandhi-and-the-murder-attempt-on-kamarajar/).
ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்தாமல் சில போலி தமிழ்த்தேசியவாதிகள் காமராஜரை ‘நாடார்’ என்று சொல்லி சாதியவட்டத்திற்குள் அடைக்க முற்படுகின்றனர். இவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டு மக்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து விழிப்படைவதொன்றே இன்றைய தேவை.