பெரியாரின் சிந்தனைகளுக்கு கவிதை வடிவம் கொடுத்த பாரதிதாசனின் பாடல்கள் அத்தனையும் கனியிடை ஏறிய சுளைகளாகவே இனிப்பவை. “பாரதிதாசன் பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் பாரதிதாசனாகவே மாறுகின்றோம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழாரத்திற்கு ஏற்ப பாடல்கள் அனைத்தும் எழுச்சியை விதைப்பவை. அவரின் பாடல்களில் இயற்கை மீதான நேசிப்பு தென்றலாக வீசும். தமிழ் மீதான காதல் மழையாகப் பொழியும். ஆரியம், இந்தி, மூடத்தனம் மீதான எதிர்ப்பு புயலாக சீறும்.
தமிழருக்கு இன்னல் விளைவிப்பவருக்கு சங்காரம் எனப்படும் பேரழிவு நிசமென்று சங்கநாதம் முழங்கும் போது புரட்சியாளர்களை நினைவூட்டுவார்.
“கொலை வாளிடை எட்டா மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா”
– பாரதிதாசன் அவர்கள் உயர் குணமேவிய தமிழர்களை புலிகள் என்று வரையறுக்கிறார். இந்த உயர் குணங்களை வரித்தவர்களாக பின்னாளில் தோன்றிய விடுதலைப் புலிகளையே இவரின் வரிகளுக்கு உரியவர்களாக தமிழர்கள் பொருத்திப் பார்க்க முடியும்.
“தமிழர் என்று சொல்வோம் – பகைவர்
தமை நடுங்க வைப்போம்!
இமய வெற்பின் முடியிற் – கொடியை
ஏற வைத்த நாங்கள்
….
……
பெய்யும் முகிலின் இடிபோல் – அடடே
பேரிகை முழங்கு”
– சிங்களப் பகைவரை நடுங்க வைத்த புலிகளுக்கு உற்ற பாடலாக இருக்கிறது. புலிகள் இயக்கம் உருவான காலத்திற்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டவர் பாரதிதாசன். அவர் புலிகளின் காலத்தில் வாழ்ந்திருந்தால், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களாய், புலிகளின் படை ஈழத்தில் காட்டிய வீரத்திற்கு புரட்சிக் கவிகளாலே வாகை சூட்டி மகிழ்ந்திருப்பார். தமிழரின் வீர வரலாறு குறித்த அவரின் எண்ணத்தில் விளைந்த வரிகளை நம் சமகாலத்தில் பொருத்திப் பார்ப்பதற்கு உரியவர்களாக புலிகளையே நாம் பார்க்க முடியும்.
“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத்தாலும் விடேன்
….
….
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர்; அவர் வழி வந்தோர்
புலி நிகர் தமிழ் மாந்தர்”
– தமிழரின் மேன்மை இலங்கையில் சிங்கள இனவெறியர்களால் குலைக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய நிலம், கல்வி, வாழ்வுரிமை, அரசியல் உரிமை உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டன. தமிழர்களின் அறிவுப் பெட்டக மேன்மையைக் காத்து வைத்திருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. தமிழரின் மேன்மை அழிக்கப்பட்ட அநீதிக்கு மானமே நல் வாழ்க்கையெனக் கருதிய புலிகள் சீறினர். புலி நிகர் தமிழ் மாந்தர்களாய் எழுந்தனர். தாய்மொழியும், தாய் நிலமும் உயிராகக் கொண்டு இனவாத சிங்களப் படைகளை எதிர்த்தனர். பாரதிதாசன் புரட்சி வரிகளை வெற்றுச் சொற்களாய் பார்ப்பவர்களே, தமிழரின் மேன்மையை பாதுகாக்கும் ஒரே இலக்கான தனி ஈழம் அடைவதற்கு புலிகள் முன்னெடுத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பார்ப்பார்கள். விடுதலைப் புலிகளால் பாரதிதாசன் கவிதை உயிர்ப்புப் பாடலாய் என்றும் எடுத்து ஆட்கொள்ளப்படும்.
“எமை நத்துவாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்”
– என்ற பாரதிதாசன் அறம் சார் வரிகளுக்கு உரியவர்கள் புலிகள். விடுதலைப் புலிகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டப்பட வில்லையா? எதிரிகள் பசப்பு வார்த்தைகளால் சுகபோக வாழ்க்கையை பரிசளிக்க காத்திருந்தனர். நயவஞ்சகன் கருணாவைப் போன்ற ஈனப் பிழைப்பைத் தர விலைபேசினர். சமரசம் துளியும் ஏற்காத வீரத்தின் விளைநிலங்களாக புலிகள் ஈழ மண்ணிற்கு எருவானார்களே தவிர, எதிரிகளிடம் சரணடையவில்லை. வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு! என்ற பாடலில் ‘தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்‘ என்பார் பாரதிதாசன்.
அவரின் எண்ணத்தில் விளைந்த விருப்பங்களை புலிகளின் செயல்பாடுகளின் ஊடாக காண முடியும். தாங்கள் உருவாக்கிய துறைகளுக்கெல்லாம் தமிழைச் சூடி அழகு பார்த்தவர்கள் புலிகள். புலிகளின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட ‘அரசியல் துறைகள், இராணுவப் படைப் பிரிவுகள், காவல், சட்டம், நீதித் துறைகள், மருத்துவத் துறைகள், ஆதரவற்றோர் நிலையங்கள், கலை இலக்கியத் துறைகள், பத்திரிக்கைகள், கல்லூரிகள், அரங்குகள், பண்டக சாலைகள்‘ என அனைத்திலும் தமிழைச் சூடி அழகு பார்த்தவர்கள். இராணுவ ஒழுங்கு முதற்கொண்டு தமிழிலேயே நடத்தப்பட்டது. “இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே” என்ற பாவேந்தரின் பாடலுக்கேற்ப தன்னாட்சியை நிறுவத் தொடங்கியதும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தமிழ்த்தாய்க்கு பெருமை சூட்டியர்கள் புலிகள்.
“எண்ணாயிரம் தமிழ் மக்களைக் கழுவால்
இழித்த குருதியைத் தேனென்றான் விழியால்!
பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை”
– என ‘கொலைப்படை வேண்டும்!’ என்கிற தலைப்பில் பாரதிதாசன் கூறிய கவிதை ஈழ விடுதலையை உயிராகக் கருதி ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் புலிகளுக்கான ஊக்கப் பாடலாகவே பார்க்கலாம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இலங்கையின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பரப்பிய இனவெறியால் பல்லாயிரம் தமிழர்களை இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனைக் கண்டு மனம் கொதித்த புலிகளின் உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளின் உந்துதலே ஆயுதம் ஏந்தியப் போருக்கு காரணமாக இருந்தது. தங்களை தாக்க வந்த சிங்கள இராணுவத்தை எதிர்த்து தாக்கும் போது நிகழும் படுகொலைகள் யாவும் ஈழ விடுதலைக்கு உயிரூட்டவே என்று எண்ணியவர்கள் புலிகள்.
“பீரிட் டடிக்கும் உடற்குருதி கண்டால்
சோரா திருந்திடப் பழகு – வரும்
போர்வீர னுக்கிதே அழகு!”
– பாரதிதாசன் கூறிய போர்வீரனின் இலக்கணத்திற்கு உரியவர்களாய் போரிட்டவர்கள் விடுதலைப் புலிகள்.
“தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென்பார் எனில்
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?…
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
– தமிழரின் உரிமைப் பறிப்பை செய்பவர்கள் மீது சீற்றம் கொள்ளாதிருப்பவர்களை நோக்கி வழிவழியாக வந்த மறத்தனம் எங்கே என கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்விக்கு பதிலாக வெளிப்பட்டவர்கள் புலிகள். ‘தரப்படுத்தல்’ என்னும் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழுக்கு கல்வியில் விலங்கிட்டார்கள், தமிழருக்கு வேலைவாய்ப்புகளில் தடையிட்டார்கள், இதனால்தான் தங்கள் கையிருப்பைக் காட்ட எழுந்தார்கள் புலிகள்.
“பண்டைப் பெரும் புகழ் உடையோமா? இல்லையா!
பாருக்கு வீரத்தைச் சொன்னோமா? இல்லையா!”
– பண்டைப் பெரும் புகழுக்கு இன்றைய சொந்தக்காரர்களாக பாருக்கு வீரத்தைக் காட்டிய புலிகளை பாரதிதாசனின் இவ்வரிகளுக்கு பொருத்திப் பார்க்காத தமிழ் உணர்வாளர்கள் இருக்க முடியாது. உலகின் இன உரிமை சார்ந்து அறத்துடனும், நேர்மையுடனும் நிகழும் தேசிய இனப் போராட்டங்களில் முன்னணியாய் உலகிற்கே வீரத்தைச் சொன்னவர்கள் புலிகள்.
தமிழ் மீதும், தமிழர் உரிமைகள் மீதும் கொண்ட அதீதப் பற்றினை பாரதிதாசன் தனது பாடல்களால் வெளிப்படுத்தினார். அதனால்தான் இந்தித் திணிப்பையும், பார்ப்பனீயத்தின் குள்ளநரித்தனத்தையும் வெகுண்டெழுந்து கவிதைகளாலேயே தூற்றினார். அவர் இலக்கியத் தளத்தில் செய்ததை விடுதலைப் புலிகள் இனத்திற்கான களத்தில் செய்தனர். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தொடுக்கப்பட்ட சிங்கள இனவாதத்தை முறியடிக்க தங்கள் உயிரையே தந்தார்கள். சிங்களப் பேரினவாத அரசை தமிழர் உரிமைகள் மீதான அதீதப் பற்றினால்தான் எதிர்த்து நின்றார்கள். கலை, இலக்கிய வடிவில் தான் காலாகாலத்திற்கும் தங்கள் போராட்டத்தின் உயிர்ப்பு பேணப்படும் என்றார் தேசியத் தலைவர். மறத்தமிழர் மாண்புகளைப் போற்றிய பாடல்களே உயிர்ப்பாய் புலிகளின் களத்திற்கும் பொருத்துமளவுக்கு பாடல்களை வடித்திருக்கிறார் புரட்சிக் கவிஞர்.
“தாயகத்தின் மீட்சிப் போரினில்
சாவும், தமிழர்க்கு அமிழ்தாய் இனிக்கும்!”
– ஆம், சாவும் இனித்தது. ஈழத் தாயகத்தின் மீட்சிப் போருக்கு மறத் தமிழர்களான புலிகளுக்கு அமிழ்தாகத்தான் இனித்தது. பாரதிதாசனின் புரட்சி வரிகளை புலிகளோடு இணைத்துப் பார்த்தால் புரட்சியை போர்த்தியிருக்கும் தமிழும் இனிக்கும்.