பரந்தூரில் அமையப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் 500 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமும் கட்சி கடந்த ஆதரவுத் தளமும் வலுப்பெற்று வரும் நிலையிலும் அரசு இத்திட்டத்தினை கைவிட முன்வரவில்லை. மாறாக நில கையகப்படுத்தலுக்கு ஏற்ப புதிய சட்டங்களை இயற்றி இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்றிய மற்றும் மாநில அரசால் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற இடம் காஞ்சிபுரம் அருகில் அமைந்துள்ள பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அமைந்த பகுதி. இப்பகுதி, தற்போது இருக்கிற சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெறும் 70 கிலோமீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது. இருப்பினும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான காரணமாக சிலவற்றை அரசு கூறுகிறது.
“மீனம்பாக்கம் விமான நிலையம் விரைவில் அதன் கொள்ளவை எட்டி விடும். அதன் புவியியல் அமைப்பின் காரணமாக அதனை விரிவுப்படுத்த இயலாது. ஆகையால் சென்னையின் எதிர்கால வளர்ச்சியை இவ்விமான நிலையத்தைக் கொண்டு பூர்த்தி செய்ய இயலாது. சென்னையில் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பார்க்கையில் இப்புதிய விமான நிலையம் அவசியம் தேவை.” என்பன போன்ற காரணங்கள் அரசுத் தரப்பிலிருந்து கூறப்படுகின்றன.
இது ஒரு புறம் இருக்க, சுமார் 20,000 கோடி செலவில் ‘பசுமை விமான நிலையமாக’ உருவாக இருக்கிற இப்புதிய விமான நிலையம் அமைய இருக்கிற இடத்தின் புவியியல் அமைப்பினை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தின் 4,750 ஏக்கர் பரப்பளவில், சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் அமைய இருக்கிறது. பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் விவசாயம், கால்நடைகள், செங்கல் சூளை போன்ற தொழில்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கிற 3500 ஏக்கர் விவசாய நிலங்கள், கம்பன் கால்வாய், ஓடை போன்ற 1000 ஆண்டு பழமையான நீர் வழித்தடங்கள், 13 ஏரிகள் உட்பட 1200 ஏக்கர் நீர்நிலைகள் ஆகியவை விமான நிலையத்திற்காக அழிக்கப்பட இருக்கிறது. 13 கிராமங்களில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம் மற்றும் மேலேறி ஆகிய கிராமப் புறங்களில் விளைநிலங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளன. அவற்றில் 1000-க்கும் அதிகமான பாரம்பரிய வீடுகளும் அடங்கும்.
மேலும் வேடந்தாங்கல் வரும் பல வெளிநாட்டு பறவைகள் கடக்கும் பாதையான பரந்தூர் – திருப்பெரும்புதூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் கம்பன் கால்வாயின் 7 கிலோமீட்டர் பரப்பளவு, இந்த விமான நிலைய திட்டத்தில் அழிந்து போக வாய்ப்புள்ளது என்கின்றனர் சூழலியல் செயல்பாட்டாளர்கள். சென்னையின் தாகத்தை தீர்க்கும் செம்பரப்பக்கம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதும் இந்த கம்பன் கால்வாய் தான்.
இத்தகைய வாழ்வாதார மற்றும் சூழலியல் அழிவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அரசு கூறுகிற எதிர்கால வளர்ச்சி என்பது பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கானது இல்லையா என்கிற கேள்வியும், இம்மக்களது வாழிடங்களும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு, பெரும் சூழலியல் அழிவுக்குப் பிறகு வரப்போகிற “வளர்ச்சி” யாருக்கானது என்பதும் நம்முன் எழுகிற கேள்வியாக இருக்கிறது.
மக்கள் போராட்டம்
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் துவங்கி, அதனை கைவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்ட வடிவங்களை மேற்கொண்டு தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தினால் வருங்காலத்தில் தங்களின் வாழ்வாதாரம் இவ்வாறுதான் இருக்குமென மொட்டை அடித்து, நாமம் போட்டு, பிச்சை எடுத்து அடையாள கண்டன போராட்டம் நடத்தினார்கள். கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 முறை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். 300-ஆவது நாள் போராட்டமாக நீர்நிலைகளை காக்க ஏரிகளை சுற்றி நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இப்படி பல்வேறு வடிவிலான ஓராண்டு போராட்டத்திற்குப் பிறகும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திலிருந்து அரசு பின்வாங்கவில்லை.
மாறாக, அமைச்சர்கள் மூலம் பரந்தூர் மக்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது தமிழ்நாடு அரசு. அதன்பின்னர், விமான நிலையம் அமையவிருக்கிற இடத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவொன்றை அமைத்தது. இதை அறிந்த ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆய்வு மேற்கொள்ளவரும் பேராசிரியர் மச்சேந்திரநாதன் குழுவை எதிர்த்து அம்பேத்கர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
ஒருபுறம் உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், 200-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியுடன், மாற்று பாதையில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த அம்மக்கள், உண்ணாவிரத போராட்ட களத்தில் இருந்து மதுரமங்கலத்திலுள்ள ஆர்.ஐ. அலுவலகத்தை நோக்கி நடைபயணமாக சென்றனர். ஆய்வு நடக்கும் இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய மக்கள், இந்திய ஒன்றியத்தின் 77-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவன்று தங்கள் பிள்ளைகளை, பள்ளிகளில் நடைபெற்ற கொடியேற்ற விழாவிற்கு அனுப்ப மறுத்தனர். மேலும் ஏகனாபுரம் கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்பு கொடி தோரணம் கட்டியும், வீடுகள் தோறும் கருப்பு கொடியை ஏற்றி வைத்தும் அக்கிராம மக்கள் விமான நிலையம் அமைப்பதில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
போராட்டம் துவங்கி 400-வது நாளன்று நடந்த கண்டன போராட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்களில் கருப்பு துணி கட்டியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றது. தங்கள் வாழ்வாதாரமும் நம்பிக்கையும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் போக்கால் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி போல உருகுவதாக துயரத்துடன் முறையிட்டனர் போராட்டக் குழுவினர்.
போராட்டத்தின் 433-ஆம் நாள் நீர் நிலைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திரநாதன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்ய சென்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்களும் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பு குழுவினரும் பரந்தூர் – கண்ணந்தங்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 200-க்கும் அதிகமான கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
இத்துடன் ‘தொடர்ந்து ஆறு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை’ எனக்கூறி அக் 2, 2023 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி புறக்கணித்தனர். இதனால் அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். இப்படியாக தொடரும் பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் துணை நிற்கின்றனர். ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகளேகூட அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா
பல்வேறு வடிவிலான மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையிலும் அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. மாறாக, இதே போன்ற பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் நடைமுறைகளை முறைப்படுத்தும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்ட மசோதாவை (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
இம்மசோதாவின்படி, 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருக்கும்பட்சத்தில், அவ்விடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண்மை சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அதில், அந்த நிலப்பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான நீரியல் திட்டம் மற்றும் மேலாண்மைத் திட்டத்தையும் இனைத்து, அப்பகுதியின் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பித்தால் அத்திட்டத்திற்கான அனுமதியை ஒருவர் பெற முடியுமென இம்மசோதா கூறுகிறது.
அதாவது, 100 ஏக்கருக்கு குறையாத எந்த இடமாயினும் “நீர்நிலைகள் காப்போம்” என்ற வாக்குறுதி மட்டும் இருந்தால் போதும், அரசு அதை சிறப்பு திட்டமாக ஏற்று, ஒப்புதல் அல்லது நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளிக்கும் என்பதே இம்மசோதாவின் சாரம். ஆனால், ஒரு திட்டத்தால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவ்விண்ணப்பத்தை ரத்து செய்ய இம்மசோதாவில் எந்த சரத்தும் இல்லை. மேலும் இம்மசோதாவில் இருக்கும், “நீர்நிலைகளை உள்ளவாறு பாதுகாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்” எனும் சரத்திலிருந்து, நீர்நிலைகளை, ஓடைகளை, வாய்க்காலை அதன் சூழலியல் முக்கியத்துவத்துடன் அரசு அணுகவில்லை என்பது தெளிவாகிறது.
அரசு நிலம் என்பது அரசுக்கு சொந்தமான மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை உள்ளடக்கியது. இதில் “1980 வன பாதுகாப்பு சட்டத்தின்” கீழ் வராத வன நிலங்களும் அடங்கும். ஆகையால் இச்சட்டத்தின் மூலம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர் பரந்தூர்- ஏகனாபுரம் பகுதி மக்கள். தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்போம் என்று கூறிய திமுக இன்று விவசாயிகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது. இனி தனியார் பெறுநிருவனங்கள் நிலப்பறிப்போ, நீர்நிலை ஆக்கிரமிப்போ செய்ய வேண்டுமெனில் அதைச் “சிறப்புத் திட்டம்” என்ற பெயரில், தமிழ்நாடு அரசின் உதவியுடன், செய்வதற்கு இச்சட்டங்கள் உதவியாக இருக்கின்றன.
இது அரசு தனது தேவைக்காக, அதாவது பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சாமானிய மக்களை துன்புறுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே உள்ளது. இப்போது நிறைவேற்றி இருக்கிற நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் வழியாக பரந்தூர் பகுதியிலுள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட நிலங்களைப் பறிப்பதற்கான சூதான திட்டம் தீட்டியிருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் இந்த திமுக அரசு. தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதிக்கு துரத்தும் வேலையையே இந்த அரசு செய்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 73வது திருத்தம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 73 வது சட்டத்திருத்தம், இந்திய கிராமப்புற சனநாயக கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு சீர்திருத்தமாகும். இது தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புக்களை உருவாக்குவதற்காக 1993-ல் கொண்டு வரப்பட்டது. இத் திருத்தத்தின் கீழ் உள்ள 1-வது இணைப்பு பட்டியல் 29 அதிகாரங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் தங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சிகளை தாங்களே செய்து கொள்ளும் உரிமை ஒரு கிராமத்திற்கு உள்ளது. இந்நிலையில், ஏகனபுரம் மக்கள் 6 முறை கிராம சபை கூட்டத்தில் பசுமை விமான நிலையம் வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகும் மாநில அரசு ஒப்புக்கொள்ளாதது என்பது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும்.
73-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தையொட்டி மாநில அரசு “தமிழ்நாடு ஊராட்சி சட்டம்-1994” னை உருவாக்கியது. இந்தச் சட்டம் 73-வது சட்டத்திருத்தத்தின் அமைப்பு முறைகளை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் அதன் முக்கியக் கோட்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து விட்டது. 73-வது சட்டத் திருத்தம், உள்ளாட்சி என்பது சுயாட்சியாக அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தங்கள் ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் தங்களுக்குள்ளே தன்னிறைவு பெற்றதாக ஊராட்சி இருக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசுச் சட்டம், உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் உருவாக்கிவிட்டது.
தமிழ்நாடு அரசின் இச்சட்ட உருவாக்கத்தின்போது, இதற்காக உருவாக்கப்பட்ட எல்.சி. ஜெயின் தலைமையிலான குழு, கிராமங்களில் அதிகாரப் பரவலாக்கம் நடைபெறும் வகையிலும், உள்ளாட்சியை, “உள்சுய ஆட்சியாக” உருவாக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியது. ஆனால் அப்போதைய உள்ளாட்சி அமைச்சர். கோ.சி. மணி தலைமையிலான பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு எல்.சி ஜெயின் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனால், மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் மாவட்டத் திட்டக் குழு என்கிற இரு அமைப்புகளும் வெறும் பெயரளவில் மட்டும் இயங்கும் அமைப்புகளாக வைத்துச் செயல்பட முடியாமல் செய்துள்ளது தமிழக அரசு. இந்த இரண்டு அமைப்புக்களும், மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவதும் அதனை நடைமுறைப் படுத்துவதுமான ஒரு தன்னிறைவு கொண்ட அலகாக செயல்படுவதற்காக கொண்டுவரப்பட்டவையாகும்.
இவ்வாறு இரண்டு அமைப்புகளும் முடக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு சாதகமான திட்டங்களை எல்லாம் எப்படி அரசுகள் தங்களுக்கு சாதகமாய் மாற்றி கொண்டுள்ளது என்பதை நாம் அறியலாம். எந்த ஆட்சி வந்தாலும் மக்கள் விரோத ஆட்சி தான் இங்கு நடைபெறுகிறது . ஏகனாபுரத்தில் 7-வது முறையாக கூடிய கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததின் மூலம் மக்களுக்காக தான் சட்டமே தவிர கார்ப்பரேட் வளர்ச்சிக்காக இயற்றப்படும் சட்டத்திற்காக மக்கள் இல்லை என்பதை உணர்த்தியுள்ளனர்.
வளர்ச்சி யாருக்கானது?
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ளதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் கொண்ட ஸ்ரீபெரும்புதூருக்கு மிக அருகில் இருப்பதால், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் தினமும் பல தலைமைச் செயல் அதிகாரிகளும், பல்வேறு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சாலை வழியாகத் தங்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்ல கஷ்டப்படுவதால் புதிய விமான நிலையம் தயாரானதும், நிறுவன அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சேர 30 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.என்று ஒரு மூத்த திமுக அதிகாரி கூறியுள்ளார்.
பரந்தூர் விமான நிலயத்திற்கான இடத்தை தமிழகத்தை ஆளும் திமுக அரசு தான் தேர்ந்தெடுத்ததாகவும் மக்கள் போராட்டத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் வி கே சிங் கூறியுள்ளார். பல சூழலியல் ஆர்வலர்கள் அறிக்கை படி வேடந்தாங்கல் வரும் பல வெளிநாட்டு பறவைக்குள் கடக்கும் பாதை இந்த பரந்தூர் மற்றும் திருப்பெரும்புதூருக்கு நீர் தரும் கம்பன் கால்வாயின் 7 கிலோமீட்டர் இந்த விமான நிலைய திட்டத்தில் அழிந்து போக வாய்ப்புள்ளது. சென்னையின் தாகத்தை தீர்க்கும் செம்பரப்பக்கம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதும் இந்த கம்பன் கால்வாய் தான்.
இவ்வாறு நீர் நிலைகள் நிறைந்த இந்த பரந்தூர் நிலப்பரப்பு ஓடுதளம் அமைக்க சிறந்த இடம் இல்லை என்று கூறிய போதும் அமெரிக்கா நாட்டை சார்ந்த லூயிஸ் பெர்கர் எனும் தொழில்நுட்ப-பொருளாதாரக் குழு விமான நிலையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தண்ணீர் பிரச்சினைகளை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கபட்டுள்ளது. இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தினை அதே பகுதியில் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது.
“நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் துரோகிகள் அவர்களை அப்புறப்படுத்த ராணுவத்தை உபயோகிக்க கூடதயங்க மாட்டோம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 1000 ஏக்கர் நீர்நிலைகளை அழித்து பரந்தூரில் வரவுள்ள பசுமை விமான நிலையத்தை எதிர்த்து குரல் கொடுக்குமா இந்த நீதிமன்றம்? ஆற்று கரைகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பதை எதிர்க்கும் இந்த நீதிமன்றம் இந்த நாட்டின் பூர்வகுடிகளை துரத்தியடித்து பனியாக்களின் வளர்ச்சிக்காக நம் வரி பணத்தை நம் மக்களின் நிலத்தை பிடுங்கும் அரசை கேள்வி கேக்குமா?
ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி சென்னையில் பல்வேறு இடங்களில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் வாழ்விடங்களை இடித்துத் தரைமட்டமாக்கும் இதே அரசு, பெரும்திட்டங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றி பெரும் சூழலியல் சீர்கேட்டினையும் செய்கிறது. சென்னை என்னும் இந்த பெரு நகரத்தை உருவாக்கியவர்கள் இங்குவாழும் விளிம்புநிலை மக்களே. இவர்களே “சிங்கார சென்னை” , “சிறப்பு திட்டம்”, “வளர்ச்சி திட்டம்” என்னும் பல்வேறு பெயர்களில் இந்த பலி ஆக்கப்படுகின்றனர்.
ஒருபுறம் மக்கள் போராட்டம் 500 நாட்களை நெருங்கியும் வீரியம் குறையாமல் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் அரசின்மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் பாஜக தனது இரட்டை வேட அரசியலை செய்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை திமுக அரசுதான் தேர்ந்தெடுத்தது என்றும் ஒன்றிய அரசுக்கும் இப்பிரச்சனைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் ஒன்றிய அமைச்சர் வி கே சிங் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் விரோத பாஜக தன்னை இப்பிரச்சனையில் இருந்து விலக்கிக்கொண்டு திமுக அரசை மக்களின் முதன்மை எதிரியாக முன்னிறுத்துகிறது.
இவ்வரசியல் சூழலை உணர்ந்து இம்மக்களின் அடிப்படை ஜனநாயக கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கைவிடவேண்டும். மேலும் வரும்காலத்திலும் இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தாதிருக்கவும் வேண்டும். அவ்வாறில்லாத சூழலில் அரசுக்கு எதிரான ஜனநாயக போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் போராடும் மக்களுடன் துணை நின்று வலுசேர்க்கவும் மே பதினேழு இயக்கம் முன்னிற்கும்.