தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள்

தங்கள் பிரசவத்திற்கு விடுமுறை மறுக்கப்படும் எம்.ஆர்.பி. செவிலியர்கள்!

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பிற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்று தோற்று போன ‘குஜராத் மாடல்’, ‘உ.பி. மாடல்’ அனைத்தும் சமூகநீதி காக்கும் ‘தமிழ்நாடு மாடலை’ வியப்புடன் பார்ப்பதற்கு இந்த மருத்துவ கட்டமைப்பும் ஒரு காரணம். கொரோனா உச்சத்தில் இருந்த 2020-21 ஆண்டுகளில்கூட சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு சிறந்து விளங்கியதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்தது.

ஆனால் இந்த மருத்துவக் கட்டமைப்பில் பெருந்தொண்டாற்றிய எம்.ஆர்.பி. (MRB) செவிலியர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகிறார்கள்.

தற்போது போராடிக் கொண்டிருக்கும் செவிலியர்கள் அனைவரும், மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (Medical Services Recruitment Board-MRB) மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள். தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட எம்.ஆர்.பி, மருத்துவத்துறையில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு பணி நியமனம் செய்யும் நோக்கத்துடன் கடந்த 2012 ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு, அதன் பின்னர் நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்று போராடும் எம்.ஆர்.பி செவிலியர்கள் 8 ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியமும் தொகுப்பூதிய அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

செவிலியர் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையிலும் இவர்கள் பணிபுரிய வேண்டியிருக்கிறது. இந்நிலையிலும் அயராது மக்கள் பணியை மேற்கொண்டு வரும் இவர்களின் நிலையை அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

தினந்தோறும் பிரசவம் பார்க்கும் இந்த செவிலியர்களுக்கு, தன் பிரசவத்திற்கு முறையான மகப்பேறு விடுப்பு கிடையாது. மேலும் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார மையங்களில் தன்னலமின்றி பணிபுரியும் இவர்களுக்கு அவசர விடுப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன், நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வீரியமாகிய பரவத் தொடங்கிய வேளையில், மக்களின் உயிர் காக்கும் பணியில் முன்னணியில் இருந்தவர்கள் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும். அதிலும் குறிப்பாக எம்.ஆர்.பி. செவிலியர்கள் மற்றும் ஆய்வக நுட்பணர்கள். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பினால் மட்டுமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதை நாம் அறிவோம். அன்றைய சூழலில், மருத்துவப் பணியாளர்களின் சேவை மிக அதிகமாகத் தேவைப்பட்டதால், தமிழ்நாட்டில் சுமார் 6000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.

இதில் 3000 செவிலியர்கள் தற்காலிகப் பணியிலிருந்து நிரந்தர பணிக்கு பின்னர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3290 செவிலியர்களும் தற்காலிகப் பணியிலேயே தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்த செவிலியர்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக தன்னலம் பாராது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டவர்கள். இவர்களில் பலர் தங்கள் விடுமுறை நாட்களைக் கூட புறக்கணித்து கொரோனா நோயாளிகளை கவனித்ததால் மக்களின் பாராட்டுகளையும் பெற்றவர்கள். நோயாளிகளின் உறவினர்கள் கூட செல்லத் தயங்கும் கொரோனா வார்டுகளில், இந்த செவிலியர்கள் கிட்டத்தட்ட 10 முதல் 12 மணிநேரம் பணி புரிந்துள்ளனர். ஆனால் கடந்த டிசம்பர் 31, 2022 அன்று பணி நிறைவு பெற்றதாகக் கூறி கிட்டத்தட்ட 3000 எம்.ஆர்.பி. செவிலியர்களையும் பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

எம்.ஆர்.பி செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-இல் வழக்கு தொடுக்கப்பட்டது. 2018-இல் செவிலியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும், அவர்கள் முறையாக பணி நிரந்தரம் செய்யப்படாததால், மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஜுலை மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் செவிலியர்களுக்கு 6 வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செப் 25, 2023 அன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு தற்போது திமுக அரசை நோக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தும் நிலையில் எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 10 அன்று தங்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DMS) அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் செவிலியர்கள்

இன்று போராடும் பெரும்பான்மை செவிலியர்கள், குறைந்த வருமான வரம்பைக் கொண்டுள்ள அடிதட்டுக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கிராமங்களில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து தங்கள் குடும்பத்தை உயர்த்தப் போராடும் பெண்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுக்கு, அரசு வேலை என்பது சமூக நீதி அடிப்படையில் ஒரு தலைமுறையை உயர்த்தக் கூடியது. இன்று அரசு வேலையை இழந்தால், தனியார் மருத்துவமனைகளில்தான் இந்த செவிலியர்கள் வேலைக்கு செல்ல நேரிடும். ஆனால் பணம் ஈட்டுவதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட எந்த தனியார் மருத்துவமனையும் இவர்களுக்கான பணி பாதுகாப்பையும் உரிமைகளையும் வழங்காது. எனவே இவர்களின் இந்தப் போராட்டத்தோடு செவிலியரின் எளிய பின்புலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

TNPSC போன்ற அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான போட்டித்தேர்வுகளின் மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் இயல்பாக அரசு ஊழியராக அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆனால் அரசின் மருத்துவமனைகளில் தேவைப்படும் செவிலியர்களுக்கான போட்டி தேர்வு எழுதி எம்.ஆர்.பி. மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் அரசு செவிலியர்கள் இல்லை என்பது அரசின் கொள்கை முரண்பாடாகத் தான் பார்க்க முடிகிறது.

செவிலியர்களின் பணிநிரந்தரம் மட்டுமே அரசு மருத்துவர்களின் பணிச்சுமையை பெருமளவில் குறைக்கும். நோய்ப் பெருந்தொற்று காலத்தில், தங்கள் உடல் நலனையும் பொருட்படுத்தாது, கிராமங்கள் தோறும் தடுப்பூசிகளை கொண்டு சென்றவர்கள் இவர்கள். இவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து தற்காலிக செவிலியர்களும் பணி நிரந்தரம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.

குறிப்பாக “திராவிட மாடல் வழி ஆட்சி நடத்துகிறோம்” என்று கூறும் திமுக அரசு,
தமிழ்நாட்டில் சமூக நீதிக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றால், செவிலியரின் பணி நிரந்தர ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும். ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு திமுக அரசினுடையதே.

அவுட்சோர்சிங் மூலம் பணியமர்த்தக் கூடிய அரச நிறுவனம் போல எம்.ஆர்.பி (Medical Services Recruitment Board) செயல்படுகிறது. இதனை தமிழ்நாடு அரசு, கொள்கை முடிவெடுத்து, சட்டத்திருத்தம் மூலம் உடனடியாக நிறுத்த வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்கள் பணியமர்த்தப்பட்ட நாள் முதல் அவர்களை அரசு செவிலியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை திமுக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »