சுங்கத்துரைத் தேர்வில் வடமாநிலத்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்ட அறிக்கை.
சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள் முறைகேடாக கைப்பற்றுவதை தடுக்க வேண்டும்! தமிழ்நாட்டின் ஒன்றிய அரசுப் பணிகள் தமிழருக்கே என்பதை உறுதி செய்ய வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
சென்னை சுங்கத்துறையின் காலிப் பணியிடங்களுக்காக பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 14 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில், வடமாநிலத்தவர்கள் சிலர் புளுடூத் கருவியின் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது வேலைவாய்ப்பிற்காக போட்டியிடும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் துணையின்றி இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பில்லை. ஆகையால், மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
ஓட்டுனர், கேண்டீன் உதவியாளர், எழுத்தர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட 17 காலி பணியிடங்களுக்காக சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்வில் தான் இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 1600 பேர் எழுதிய இந்தத் தேர்வில், சந்தேகப்படும்படியான நடத்தையை கொண்டிருந்த சிலரை சோதித்த போது அலைபேசியில் இணைப்பட்ட புளுடூத் கருவியின் மூலம் தேர்வு அறைக்கு வெளியில் இருந்தவர்களிடம் கேள்வியை சொல்லி பதிலை பெற்று தேர்வெழுதியுள்ளனர். ஹரியானாவை சேர்ந்த 28 பேர் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 பேர் ஆகிய 30 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு காவல்துறையினரிடமும் கையளிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டித் தேர்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல முறைகேடுகள் மூலம் ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள் கைப்பற்றுவது இச்சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது. ஒன்றிய அரசுப் பணிகளில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்களை தவிர்த்து வடமாநிலத்தவர்களையே பணியமர்த்த வடமாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதற்காக கையூட்டு பெறுவதும், முறைகேடுகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்காக வடமாநிலங்களில் முகவர்களை வைத்துக்கொண்டு ஆட்களை இழுத்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் அஞ்சல் துறையில் நடைபெற்ற தமிழ் தேர்வில் தமிழர்களே தோல்வியுற்ற போது வடமாநிலத்தவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது அதிர்ச்சியை உண்டாக்கியது. இதே போல் ஆவடி இராணுவ தொழிற்சாலை பணிக்காகவும், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையிலும் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானது. ரயில்வே துறையில் அப்ரெண்டிஸ் முடித்து தமிழர்கள் காத்திருக்க, வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவதும், வங்கி தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை அளித்து வடமாநிலத்தவர்கள் அந்த இடங்களை பெறுவதற்கும் உயர் அதிகாரிகள் துணைபோகின்றனர். இவ்வாறு ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும், முறைகேடாக வடமாநிலத்தவர்கள் அந்த பணிகளை பெறுவதும் வாடிக்கையாகி போனது, படித்த தமிழ் இளைஞர்களிடையே நம்பிக்கையின்மையை உண்டாக்குகிறது.
நீட் தேர்வில் துப்பட்டா அணியக் கூடாது, தாலி அணியக் கூடாது என்று தமிழ்நாட்டில் கெடுபிடி காட்டப்படும் அதே நேரத்தில், வடமாநிலங்களில் எவ்வித வழிமுறைகளும் பின்பற்றப்படாததால் இந்தியில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றிபெறுகின்றனர். ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வை இந்தியில் எழுத அனுமதிக்கும் ஒன்றிய அரசிடம் தமிழில் எழுத ஒவ்வொரு முறையும் தமிழர்கள் போராட வேண்டியதாக உள்ளது. இவை அனைத்திற்கும் ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களும் அரசு உயர் அதிகாரிகளும் துணைபோகின்றனர். எனவே தான் சுங்கத்துறைத் தேர்விலும் அதிகாரிகள் துணையின்றி மோசடி நடைபெற்றிருக்காது என்று கூற முடிகிறது. பிடிபட்டவர்களிடம் உரிய முறையில் விசாரித்திருந்தால் உண்மைகள் வெளிவந்திருக்கலாம். ஆனால், எவ்வித விசாரணையுமின்றி அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஒன்றிய அரசுப் பணிகளை தமிழர்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை. இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விசாரித்து முறைகேட்டிற்கு உதவிய வடமாநில அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்து தமிழர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய முடியும். இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, தேர்வெழுத வரும் வடமாநிலத்தவர்களை கண்காணிக்கவும், தேர்வு அறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழ்நாட்டின் ஒன்றிய அரசு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் எதிர்கால தலைமுறையை காக்க தமிழர்கள் விழிப்புடன் இயங்குவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
16/10/2023