இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கம்

தரங்கம்பாடி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தை மே 17 இயக்கம் முன்னெடுத்துள்ளது.

கடந்த 26-2-2023 அன்று காரைக்கால் மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையின் கடல் எல்லையை தாண்டி அத்துமீறி இந்திய ஒன்றிய எல்லைக்குள் நுழைந்து இலங்கை இனவெறி கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் மீது மனித தன்மையற்ற தாக்குதலை நடத்தியது. இச்சம்பவம் தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. அந்த கொதிப்பு அடங்குவதற்குள், இரண்டு நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி மீனவர்கள் ஆறு பேர் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, கடலில் குதிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துவது மட்டுமல்லாமல் வலை, படகு இயக்கம் எந்திரம், ஜிபிஎஸ் கருவி, மற்றும் வாக்கி டாக்கி கருவி போன்ற விலை உயர்ந்த பொருட்களையும், பிடித்த மீன்களையும் கொள்ளையடித்து செல்வது போன்ற கொடுஞ்செயல்களை இலங்கை கடற்படை செய்துள்ளது.

தொடர்ச்சியாக தமிழ் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடைபெறுவதை தமிழர் நலனில் அக்கறைகொண்ட அரசியல் அமைப்புகள் அனைத்தும் வன்மையாக கண்டித்தன. அவ்வாறாக, இரு சம்பவங்களின் போதும் மே 17 இயக்கம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததோடு, அத்துமீறிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இலங்கை தூதரகத்தை இழுத்து மூட வேண்டும், இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியை திரும்பப் பெற வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என்று காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டவுடன் மே 17 இயக்கம் அறிவித்தது.

அவ்வாறாக, மேற்கூறிய கோரிக்கைகளோடு இலங்கை இனவெறி அரசின் தொடர்ச்சியான தமிழர் விரோத தாக்குதல்களை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மே 17 இயக்கத்தின் சார்பில் 28-02-2023 செவ்வாய் காலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மே 17 இயக்கத்தின் தோழமை இயக்கங்களான விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குழந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி.புதியராஜா மற்றும் எண்ணற்ற தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத்தின் சார்பில் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் முன்னின்று முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

முற்றுகை போராட்டம் கண்டன முழக்கங்களுடன் தொடங்கியது. இலங்கை இனவெறி அரசுக்கு எதிராகவும், இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தமிழ்நாடு பாஜக தலைவர்களின் தமிழர் துரோகத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக இலங்கை துணைத் தூதரை வெளியேற்றக் கோரியும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் தடுக்கப் கோரியும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் தரக்கோரியும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

முற்றுகை போராட்டத்தில் முதலில் பேசிய தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் இத்தொடர்ச்சியான தாக்குதலை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து பேசினார். தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார உரிமையும், மீன்பிடி உரிமையும் காப்பாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்ததாக பேசிய தோழர் காசி.புதிய ராஜா அவர்கள் இந்த மிருகத்தனமான தாக்குதலை கண்டிப்பதாக கூறினார். இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால் அடுத்த கட்டமாக 1000 வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களை திரட்டி இந்திய இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றும் ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசுகளை எச்சரித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய தோழர் குடந்தை அரசன் இதற்கு முன்னால் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம், தங்கச்சிமடம் மீனவர்களின் மரணங்களை நினைவு கூறினார்.இச்செயல்கள் மீனவர்கள் மீதான வன்கொடுமை என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பிற மாநில மீனவர்களுக்கும் பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கேரள மீனவர் ஒருவர் இத்தாலி ராணுவ வீரரால் கொலை செய்யப்பட்டபோது ‘இந்திய மீனவர்’ என்று பறைசாற்றிய நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து “எங்கள் மீனவர்களை மட்டும் தமிழ்நாட்டு மீனவர்களின் கூறுவது ஏன்?” என்றார். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி சர்வதேச சட்டம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்பினர். இந்திய எல்லையில் மீனவர்கள் தாக்கப்படுவது என்பது இலங்கை ராணுவத்தின் அத்துமீறல் என்றும் கூறினார். இறுதியாக இலங்கை தூதரகத்தை வெளியேற்ற வேண்டும் என்று முழக்கம் வைத்தார்.

இறுதியாக பேசிய தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 40 வருடங்களாக 700-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை இனவெறி அரசு சுட்டு கொலை செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார். இதை கண்டிக்க வக்கற்ற பாஜக அரசு ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கூறியும், 13-வது சட்ட திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதாக கூறியும் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கவுடன் நாடகமாடுவதாக கூறினார். அண்ணாமலையும் எல். முருகனும் இலங்கை பயணம் செய்த மறுநாளே குஜராத் மார்வாடியும், மோடியின் உற்ற நண்பருமான அதானிக்கு 4000 கோடி அளவில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அடுத்த சில தினங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

பாஜகவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தமிழ்நாட்டில் சுடுவோம் குண்டு வைப்போம் என்று கூறியவுடன் அதை ஆமோதித்து “மோடி இருக்கிறார்! நீங்கள் செய்யுங்கள்!” என்றும் அண்ணாமலை கூறியதையும், அவ்வாறு பேசிய பாஜகவினருக்கு ஆளுநர் வரவேற்பு அளித்ததையும் சுட்டிக்காட்டிய தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இதே போல் “தமிழ் மீனவர்களை சுடுங்கள்! தாக்குங்கள். மோடி பார்த்துக் கொள்வார்” என்ற உறுதிமொழியைத்தான் இலங்கை அரசுக்கும் கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழர்களை கொலை செய்யும் இலங்கை ராணுவத்திற்கு ராணுவ பயிற்சி அளிக்கும் மோடி அரசை, இலங்கை நட்பு நாடு என்று கூறும் மோடியை ஏன் தேசவிரோதி என்று கூறக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டு முதல்வர்கள் கடந்த 40 வருடங்களாக இதுபோன்ற மீனவர்கள் மீதான தாக்குதலின் பொழுது டெல்லிக்கு கடிதம் எழுதியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறிய தோழர் திருமுருகன் காந்தி, “தரங்கம்பாடி மீனவரின் தாக்குதல் தொடர்பாக தமிழ்நாட்டு முதல்வர் திரு.ஸ்டாலின் எழுதிய கடிதம் டெல்லிக்கு சென்று சேரும் முன்னரே காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதை பாருங்கள்” என்றும் “மாநில அரசுகளின் கடிதங்களுக்கு ஒன்றிய அரசு தரும் முக்கியத்துவம் இவ்வளவு” என்றும் கூறினார். மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக திமுக திடமான முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரிய கட்சிகள் எல்லாம் மீனவர்களின் தாக்குதல் உள்ளானதை கண்டு கொள்ளாமல் ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கவலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இதே போல் ஒக்கிப் புயலின் போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நின்ற கட்சிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை கைவிட்டனர் என்றும், அரசியல் இயக்கங்களே மக்களோடு களத்தில் இருக்கிறோம் என்றும் கூறினார்.

இதுபோன்று மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதை இனி மேலும் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது என்று முழங்கிய தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாட்டின் மீனவர்களை தாக்கும் சிங்கள இனவெறி இலங்கையின் நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டில் இயங்குகின்றன என்று கேள்வி எழுப்பினர். குறிப்பாக சிங்கள இலங்கை நிறுவனமான தம்ரோ என்ற பர்னிச்சர் கடை தமிழ்நாட்டில் மட்டும் 60 முதல் 70 இடங்களில் இயங்கி வருவதாக கூறிய தோழர் திருமுருகன் காந்தி, இந்த கடைகள் தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழர்கள் இக்கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தோழர் திருமுருகன் காந்தி, விரைவில் கடைகளுக்கு முன்பு ஜனநாயக ரீதியாக முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இறுதியாக இலங்கை இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜேந்திரன் வழக்கு முதல் தற்போது தரங்கம்பாடி மீனவர்கள் நடத்தப்பட்ட தாக்குதல் வரையிலான வழக்குகள் என்னாயிற்று என்றும், தரங்கம்பாடி தாக்குதல் வழக்கு எந்தெந்த பிரிவுகளில் போடப்பட்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து தோழர்கள் அனைவரும் முழக்கங்கள் எழுப்ப காவல்துறையால் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

படத்தொகுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »