வெறுப்பு பிரச்சாரத்தினால் பாலஸ்தீன மக்களுக்கும் தமது மக்களுக்கும் இடையே எழுப்பியிருக்கும் உணர்வு ரீதியான சுவர் போதாதென்று கான்கிரீட்டாலும், இரும்புகளாலும் சுற்று சுவர்களை எழுப்பி இருக்கிறது இஸ்ரேல். வாழத்தகுதியற்ற நிலையில் ஒரு திறந்தவெளிச் சிறையைப் போலுள்ள இடத்தில்தான், சுமார் 20 லட்சம் மக்கள் பாலஸ்தீன பகுதியான காசாவில் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய நிலப்பரப்பில், அடர்த்தியான மக்கள் தொகையுடன் வாழ்ந்துவரும் காசா நிலப்பகுதிக்குள் தான் கடந்த 6 நாட்களாக வான்வழித் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். கூடுதலாக அவர்களது குடிநீர், உணவு, மருத்துவ உதவிகள், மின்சாரம், எரிபொருள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் இத்தாக்குதலில் அக்டோபர் 7, 2023-ல் இருந்து பாலஸ்தீனியர்கள் சுமார் 1537 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் 276 பேர் பெண்கள்; 500 பேர் குழந்தைகள். இது போன்றே கடந்த 75 ஆண்டுகளாக தொடர் இனப்படுகொலையை பாலஸ்தீன மக்களின் மீது நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல்.
உண்மை கள நிலவரம் இவ்வாறிருக்க, இஸ்ரேல் மற்றும் மேற்குலக ஊடகங்கள் இதற்கு நேர் எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. அடுக்கடுக்கான பொய் செய்திகளை கட்டமைத்து இஸ்ரேலிய ஆதரவு- பாலஸ்தீன எதிர்ப்பு மனநிலையை உருவாக்க முயன்று வருகின்றன. எடுத்துக்காட்டாக, இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் 40 குழந்தைகளின் தலையை கொய்து கொன்றனர் என்கிற ஒரு பொய் செய்தியை மேற்குலக ஊடகங்கள் அனைத்தும் பரப்ப தொடங்கின. இப்பிரச்சாரத்தில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசுகள் நேரடியாகவே ஈடுபட்டன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தீவிரவாதிகள், குழந்தைகளின் தலையை கொய்து கொன்ற படங்களை தான் பார்க்க நேரிட்டது என பேசினார்.
இஸ்ரேலிய அரசும் அதிகாரப்பூர்வமாக இதை மேற்கோள் காட்டியே பேசிவந்தது. இது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய் என்பதை சுயாதீன ஊடகவியலாளர்கள் சில அம்பலப்படுத்தினர். அதன் பின்னர், இஸ்ரேல் அரசு அச்சம்பவத்திற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது. வேறு வழியில்லாமல் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து “ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில்தான் அதிபர் அக்கருத்தைச் சொன்னார்” என்று கூறி பின்வாங்கியது.
மேற்குலகின் ஊதுகுழலான இந்திய ஊடகங்கள்
ஆனால், மிக குறுகிய காலத்தில், மேற்குலகங்களின் கருத்துருவாக்க அடியாட்களாக பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் பத்திரிக்கைகளில் இச்செய்தி பரப்பப்பட்டன. இந்தியாவில் முண்ணனியில் இருக்கும் பல பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில், இப்பொய்ச் செய்தியை அடிப்படையாக வைத்து, ஹமாசையும் பாலஸ்தீன மக்களையும் பயங்கரவாதிகளைப் போல சித்தரித்தனர்.
குறிப்பாக, இந்திய பார்ப்பனியத்தின் ஊடக முகமாக செயல்பட்டு வரும் இந்துக் குழுமத்தைச் சொல்லலாம். இந்து குழுமத்தின் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘காமதேனு’ ஆகிய இணையதளங்களின் இந்த பொய் செய்தி பகிரப்பட்டது. அவை பொய் என்பது அம்பலப்பட்ட பின்னரும், இஸ்ரேல் அரசே அதற்கான ஆதாரங்கள் இல்லை என அறிவித்த பின்னும்கூட அதற்கான மறுப்பு செய்தியை பல மேற்குலக ஊடகங்களும் இந்து குழுமம் போன்ற பல இந்திய ஊடகங்களும் வெளியிடவில்லை.
மேற்குலக ஊடகங்கள் போர் துவங்கிய நாளிலிருந்து இது போன்ற பல பொய் செய்திகளை பரப்பி வருகிறது. இந்து பத்திரிக்கை, அவர்களை ஒற்றி, பாலஸ்தீன மக்களின் தேசிய விடுதலைக்கு எதிரான கருத்துருவாக்க வேலைகளை இந்தியாவில் செய்து வருகின்றது. இஸ்ரேலிய ராணுவத்துக்கு எதிராக போரிடும் ஹமாஸை குறிக்கும்போது மேற்கத்திய ஊடகங்கள் ‘தீவிரவாத ஹமாஸ்’ என்றும் அவர்களது எதிர்தாக்குதலை 9/11 உடன் ஒப்பிட்டும் குறிப்பிடுகிறது. அதே வேளை, போரில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் கொத்துக்குண்டுகளை பாலஸ்தீன மக்கள் மீது பயன்படுத்துகிறது இஸ்ரேல் அரசு. ஆனால் இந்த செய்திகளையெல்லாம் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டு “பொதுமக்கள், ராணுவம் என்கிற பாரபட்சம் இல்லாமல் இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் போர் புரிந்து வருவதாக” எழுதுகிறது இந்து பத்திரிக்கை. ஈழ இனப்படுகொலையின் போதும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலின்போதும் இந்து பத்திரிக்கை இத்தகைய புரட்டுக்களையே செய்தது.
இந்து பத்திரிக்கையின் தலையங்கம், செய்திகள், தொடர் கட்டுரைகள் என அனைத்திலும் இத்தகைய மேற்குலக சார்பு ஒளிந்திருப்பைதை காணலாம். இத்தகைய பொய் பிரச்சாரமும் கருத்துருவாக்கமும் மேற்குலகுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ராணுவ தோல்வியை மறைக்க பொய் பிரச்சாரம்
இதுநாள்வரை, ராணுவ ரீதியில் அசைக்க முடியாத சக்தியாக தன்னைக் கருதிக் கொண்டிருந்தது இஸ்ரேல். மேற்குலகுக்கும் அதனை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் தேவைப்படும் உளவு பார்க்கும் பெரும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஹமாஸ் நடத்தியிருக்கும் இந்த எதிர் தாக்குதல் அந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேலின் ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் அடைந்திருக்கும் தோல்வி இன்று உலக மக்களிடையே வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இஸ்ரேலின் இருப்பு தனது பிராந்திய ஏகாதிபத்திய நலனிற்கு முக்கியம் என மேற்குலகம் கருதுகிறது. அதனால்தான் இத்தனை ஆண்டுகாலம் அதனை இங்கிலாந்தும் அமெரிக்காவும் பிற மேற்குலக நாடுகளும் மாற்றி மாற்றி வளர்த்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேல் உள்நாட்டிலேயே அடைந்திருக்கும் ராணுவ தோல்வியின் மூலம் “மத்திய கிழக்கு நாடுகளின் மேற்குலக கங்காணி” என்கிற நிலையை அது இழக்க நேரிடும் என்கிற பயத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றது. கூடவே அதற்கு தார்மீக நியாயம் கற்பிக்கும் வகையில் திட்டமிட்ட பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு உதவியாக மேற்குலக ஊடகங்களும் அதன் கருத்துருவாக்க அடியாட்களும் ஒவ்வொரு நாட்டிலும் களம் இறக்கி விடப்பட்டிருக்கின்றன.
கருத்துருவாக்க அடியாட்கள்
கருத்துருவாக்க அளவில் செல்வாக்கு செலுத்தக் கூடிய ஊடகங்களில் பெரும்பான்மையானவை மேற்குலக பெருநிறுவனங்களாக இருக்கின்றன. மேற்குலக பெருநிறுவனங்கள் மேற்குலக பெருமுதலாளிகளின் நலனில்தான் இயல்பாக அக்கறைக் கொள்ளும். அதில் ஏ.எஃப்.பி. (Agence France-Presse), ராய்டர்ஸ் (Reuters), ஏ.பி. (Associated Press) ஆகிய செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மிக முக்கியமானவை. இவை பிரான்ஸ், இங்கிலாந்து, மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனங்கள் ஆகும். பி.பி.சி. உலக அளவில் மிகப் பிரபலமான இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் செய்தி ஊடகம். மேலும் அந்தந்த நாடுகளுக்கென மிகப்பெரிய ஊடக நிருவனங்கள் இருக்கின்றன.
இந்த மேற்குலக செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பான்மை செய்தி ஊடகங்கள் தங்களது செய்திகளை வெளியிடுகின்றன. இந்து, ஏ.பி.பி. (ABP) குழும ஊடகங்கள் (குறிப்பாக பிசினஸ் ஸ்டாண்டார்ட்), டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இதுபோன்ற பல ஊடகங்கள் பிற இந்திய சிறு- ஊடகங்களின் கருத்துருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அந்த அடிப்படையில்தான் மேற்குலகம் என்ன செய்தியை எந்த நிகழ்ச்சி நிரலில் சொல்ல நினைக்கிறதோ அதே போல பெரும்பாலான ஊடகங்கள் பேசுகின்றன.
அதே அடிப்படையில்தான் மேற்குலக ஆதரவு- தேசிய இன எதிர்ப்பு அரசியலை பெரும்பான்மை ஊடகங்கள் அனைத்தும் ஒரேபோல பேசுகின்றன. அதையும் மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஊடகங்கள் பாதிக்கப்படுகிற மக்கள் பக்கம் நின்று உண்மை செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்கின்றன. அல்ஜசீரா (Al Jazeera) அந்த வகையில் உலக அளவில் குறிப்பிடும்படியான மிக முக்கிய ஊடகமாக இருக்கின்றன. பாலஸ்தீனத்தில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையை வெளியுலகிற்கு கொண்டுவருவதில் அதன் பங்கு மிக முக்கியமானது. அதுவும் பெரும் விலை கொடுத்து அதை செய்துக் கொண்டிருக்கிறது. அல்ஜசீராவின் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Akleh) என்பவர் கடந்த 2022ல் இஸ்ரேலிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இவரைப்போல 12 அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் களமுனையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் இதுபோல பல சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் பக்கம் நின்று ஊடக பணி புரிந்துக் கொண்டிருக்கின்றனர். பெரும் பலத்துடன் இருக்கும் மேற்குலக பிரச்சாரத்தினை இவர்களே அம்பலப்படுத்துகின்றனர்.
தற்போது காசாவில் நடப்பது போலவே தான் 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை நடைபெற்றது. அங்கு நடந்த போர்க்குற்றங்கள் இன்றும் வெளியுலகிற்கு தெரியாத நிலையே இருக்கிறது. மேற்குலக நாடுகள் தங்கள் அரசியல் தேவைக்கேற்ப அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டதே இன்றும் தமிழீழ இனப்படுகொலைக்குச் சாட்சியங்களாக உள்ளது. ஆனால் ஒரு தசாப்தம் கடந்து மிக தீவிரமாக தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் காசாவில் நடைபெறும் அனைத்து கொடூரங்களையும் நாம் காணொளியாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. கைப்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சுதந்திர ஊடகமாக மாறும் நிலை இன்று உருவாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் கூட மேற்குலக ஊடகங்களும் அதன் அடி ஒட்டி எழுதும் இந்து பத்திரிகையும் உண்மையை மறைக்கும் அப்பட்டமான முயற்சியில் ஈடுபடுவதை தான் தமிழர்கள் கவனமாக புரிந்துகொள்ள வேண்டிய அரசியலாக நம் முன் இருக்கிறது. 14 ஆண்டுகள் கடந்தும் ஈழத்தின் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் வன்மம் தீராத இவர்கள்தான் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனம் பற்றிய செய்திகளை எழுதுகிறார்கள். இஸ்ரேலின் இராணுவ பயங்கரவாதத்தையும் அதிலிருந்து பாலஸ்தீன மக்களை காக்கும் ‘ஹமாஸ் வீரர்களின்’ எதிர்வினையும் எழுத ஊடகங்களுக்குத் தேவைப்படுவது தராசு அல்ல அறம்!.