
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ எனும் தமிழ் நில விடுதலைப் பிரகடனத்தின் 224ம் ஆண்டை கொண்டாடும் விதமாக, மே பதினேழு இயக்கம் சார்பாக கடந்த ஜூலை 12, 2025 அன்று திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பலவேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழர்கள் நாம் இழந்த உரிமைகளை மீட்க முடியாமல் இருப்பதற்கு காரணம் நம்மிடையே உள்ள சாதி மத வேறுபாடுகள் தான் என்றும், எப்படி 200 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மதம் கடந்து பொது எதிரியை வீழ்த்திட மருது பாண்டியர்கள் தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்தனரோ, அதன் தொடர்ச்சியை இன்று நாம் பின்பற்ற வேண்டிய சூழலில் உள்ளோம் என்பதால் இது போன்று தொடர் கூட்டங்களை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கின்றது என நோக்கவுரையாற்றினார் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள்.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன் முருகேசன் அவர்கள் பேசும் போது, தொண்டைமான் போல வெள்ளையருக்கு அஞ்சாமல் எட்டப்பன்கள் போல சமூகத்தை காட்டி கொடுக்காமல் துணிந்து தமிழின விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து சாதி மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து போரிட்ட வரலாறே மருது பாண்டியர்கள் வரலாறு. அதுபோல தமிழ்நாட்டில் நாம் ஒன்றிணைந்து நின்றால் பாஜக RSS போன்ற சனாதன கும்பலை விரட்டி அடிக்கலாம் என்று எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் ச.ப. பாபு அவர்கள், ’GST என்ற பேரில் வணிகர்களிடம் இருந்து பிடுங்கும் பணத்தில் பாதியாவது திருப்பி கொடுத்தால் தமிழ்நாடு மக்கள் நிம்மதியாக வாழமுடியுமே… அதைத் தடுத்து அதற்காக எத்தனையோ போராட்டம் நடத்தி உண்மையான சுதந்திரம் இன்றும் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே நாம் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராக துணிந்து கேள்வி கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தில் பங்கெடுத்துள்ளோம்.’ என பேசினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் மனவை தமிழ் மாணிக்கம் அவர்கள், ’1857ல் நடந்த சிப்பாய் கலகமே முதல் சுதந்திரப் போர் என வரலாற்றை திரித்தவர்கள் மத்தியில், அதற்கு முன்னரே 1800ல் மருது சகோதரர்கள் தலைமையில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற போரே முதல் சுதந்திரப் போர் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக பேரறிவிப்பு செய்துள்ளது மே பதினேழு இயக்கம். 200ஆண்டுகளுக்கு முன்பே சாதி மதம் கடந்து நாம் எல்லாம் தமிழர்கள் என்றே ஒற்றை சிந்தனையில் மக்களை அணிதிரட்டிய பெருமைமிகுந்த இனமாக தமிழர்கள் இருக்கிறோம். தீரன் சின்னமலை , வீரன் சுந்தரலிஙகனார், ஒண்டிவீரன், திப்பு சுல்தான் போன்றோர் விட்டுச்சென்ற போராட்ட மரபு இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது.’ என்பதை எடுத்துரைத்தார்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப் அவர்கள், ’நீண்ட காலத்திற்கு முன்பாகவே மருது பாண்டியர்களுக்கு விழா எடுத்தவர் தலைவர் வைகோ அவர்கள். அதன் தொடர்ச்சியாக எங்களை போன்றோர் சிவகங்கை தொடங்கி இன்று தமிழ்நாடு முழுவதும் பாளையக்காரர்கள் வரலாற்று கூட்டங்களை நடத்தி வருகிறோம். பாரம்பரியமாக மன்னர்களாக இருந்தவர்களை சாதி-மதங்களின் பெயரால் தூக்கி சுமப்பவர்கள் மத்தியில் சாமானியர்களுள் இருந்து தலைவர்களாக வந்த மருது பாண்டியர்களையோ மற்ற பாளையக்காரர்களையோ உலகிற்கு அடையாளப்படுத்தும் வேலையை யாரும் செய்ய முன்வராததால் மே 17 இயக்கத்துடன் இணைந்து உழைக்கும் மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்.’ என்று பேசி ஜம்புத் தீவு பிரகடனத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்கினார்.
விடுதலைத் தமிழ்ப்புலிகளின் மாநில செயலாளர் தை. சேகர் அவர்கள், மறக்கடிக்கப்பட்ட தமிழர் வரலாறுகளை கோவை புரட்சி, வேலூர் புரட்சி, ஈரோடு தீரன் சின்னமலை – திப்பு சுல்தான், இன்று திருச்சி மருது பாண்டியர்கள் விழா என அனைவரையும் சாதி கடந்து மதம் கடந்து சாதி ஒழிப்பு களத்திலே இந்த கால இளைஞர்களை ஒன்றுதிரட்டி எங்கள் தலைவர் குடந்தை அரசன், தோழர் ஷெரீப் உள்ளிட்டோருடன் தொடர்ந்து களப்பணி ஆற்றுவதை நன்றியுடன் வரவேற்கிறேன் என எடுத்துரைத்தார்.
தமிழர் ஆட்சிக் கழகத்தின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள், ’மருது பாண்டியர்களோ , வ.உ.சி போன்ற தலைவர்களை பற்றி பேசவேண்டும் என்றால் அந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும் மருது பாண்டியர்கள் விழாவில் சிறப்புரையாற்றிட வேறு சமூகத்தை சார்ந்த நான் பேசுவதற்கு மே பதினேழு இயக்கம் தான் வழிகோலிட்டது. மருது பாண்டியர்கள், அழகுமுத்து கோன், வ.உ.சி. போன்ற தலைவர்களை சாதியாக முன்னிறுத்தும் சூழலில் இவர்கள் சாதி கடந்து இனத்திற்கான தலைவர்கள் என்பதை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அடையாளப்படுத்தி வருகிறது.’ என கூறினார்.
இறுதியாக பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

“224 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நகரத்தில், இந்த சாலை வழியாக, ஒரு புரட்சி முழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டு, மருது சகோதரர்கள் சாதி மதம் கடந்து இந்த நிலத்தை வெள்ளையனிடமிருந்து மீட்க வாருங்கள் என்ற வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்டார்கள். அந்த சாலைகளில் நிற்பதிலே பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இது வரலாற்று சிறப்புமிக்க சாலை. வரலாற்று சிறப்புமிக்க நகரம். அதுவரை இந்தியாவில் எந்த அரசனும் எந்த படைத்தளபதியும் சொல்லாத வார்த்தைகளை எழுதி சாசனமாக மருதுபாண்டியர்கள் வெளியிட்டார்கள்.
அரசனோ, தளபதிகளோ, அமைச்சர் பெருமக்களோ அந்த காலத்தில் விடுதலை பெற வேண்டும் என்று முழங்கினால் எங்கள் அரசன் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய அந்த நாட்டை விடுதலை செய்யுங்கள் என்றுதான் முழக்கத்தை வைப்பார்கள். எங்கள் அரசன் ஆள்கின்ற சோழ நாடோ, பாண்டிய நாடோ, பல்லவ நாடோ, சேர நாடோ என்று நாட்டின் பெயரை சொல்லி அதனை விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் படை கட்டுவார்கள். ஆனால் வரலாற்றிலே முதல் முறையாக மக்கள் வாழ்கின்ற நிலத்தை மீட்க வாருங்கள் என்று ஜம்பு தீபகற்ப நிலத்தை வெள்ளையனிடமிருந்து விடுதலை செய்யுங்கள் என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டவர்கள் மருதுபாண்டியர்கள். ’ஜம்பு தீபகற்பம்’ என்ற வார்த்தை நமக்கு புதிய வார்த்தை. தமிழ் மக்கள் வாழ்கின்ற இந்த தமிழ்நாடுதான் ஜம்பு தீபகற்பம் என்று அன்றைக்கு அடையாளப்படுத்தப்பட்டது. ’நாவலம் தீவு’ என்று சிலப்பதிகாரம் காலம் தொட்டு சொல்லுவார்கள். நாவலம் தீவில் இருக்கக்கூடிய ஜம்பு தீபகற்பம் என்றுதான் தமிழர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிலத்தை விடுதலை செய்யுங்கள் என்ற பிரகடனத்தை எப்படி நாம் புரிந்து கொள்வது? தமிழர்கள் வாழ்கின்ற இந்த தமிழ் நிலத்தை வெள்ளையனிடமிருந்து மீட்டெடுங்கள் என்கின்ற முழக்கமாகத்தான் பார்க்க முடியும். அப்படி மக்கள் வாழ்கின்ற நிலத்தை, தமிழன் வாழ்கின்ற நிலத்தை மீட்டெடுக்க வாருங்கள் என்ற ஒரு முழக்கத்தை 224 வருடங்களுக்கு முன்பாக புரட்சியாளர்களால் யோசிக்க முடியும் என்றால், அவர்களுடைய அரசியல் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மருதுபாண்டியர்களுக்கு நாங்கள் நடத்துகின்ற இந்த நிகழ்வானது, பாளையக்காரர்கள் புரட்சியை எந்த மண்ணில் இருந்து அவர்கள் நடத்தினார்களோ, அந்த மண்ணில் எல்லாம் நாம் ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். பாளையக்காரர்கள் புரட்சி என்பது எளிய தமிழ் மக்களின் எழுச்சி என்பதை வரலாறு வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டிருக்கிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘குடியானவர் கலகம்’ என்ற ஒரு கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அரசியலை நான் பார்க்க முடிந்தது, கவனிக்க முடிந்தது.
15ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து பாளையக்காரர்கள் காலம் வரை 300 ஆண்டுகளாக தமிழ் நிலத்தில் ஏழை எளிய மக்கள் அரசுக்கு எதிராகவும், வரி கொடுமைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போர் நடத்தி கொண்டிருந்திருக்கிறார்கள். 15/16 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே நாங்கள் வரி கொடுக்க மாட்டோம் என்று சாதி கடந்து இந்த ’வரிகொடா’ இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற பிரகடனத்தை கல்வெட்டாகவே பொறித்து வைத்திருக்கிறார்கள். 99 வலங்கை சாதிகளும், 99 இடங்கை சாதிகளும் இணைந்து நின்று நாங்கள் இந்த பிரகடனத்தை வெளியிடுகிறோம் என்று கூறியதன் மூலம், இன்றைய தினத்திலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் மண் தனது அரசியல் என்ன என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஆட்சியாளர்கள் வழியாக எங்கள் மீது திணிக்கப்படுகின்ற இந்த வரிக் கொடுமையை எதிர்த்து நாங்கள் கலகம் செய்வோம் என்று 500 ஆண்டு காலமாக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய உச்சபட்ச நிகழ்வாகத்தான் பாளையக்காரர் நிகழ்வு நடந்தது. பாளையக்கார நிகழ்வு என்பது நமக்கு வரலாற்று பாடத்தில் சொல்லித் தருவதை போல வெள்ளையரை எதிர்த்து அங்கங்கே சண்டை நடத்தினார்கள், போரிட்டார்கள், தோற்றுப் போனவர்கள் தூக்கில் ஏற்றப்பட்டார்கள் என்கிற கணக்கல்ல. அதை தொகுத்துப் பார்க்க வேண்டும்.
பாளையக்காரர்கள் என்றாலே பெரும் படையை கொண்டவர்கள் அல்ல, அரசர்கள் அல்ல, மன்னர்கள் அல்ல, ஆண்ட பரம்பரை அல்ல. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்து கொண்டுதான் அவர்கள் அந்த நிலத்தை பராமரிப்பது, அரசர்களுக்கு படை கொடுப்பது, போருக்கு துணைக்கு செல்வது என்கின்ற அளவில் இருக்கக்கூடியவர்கள். அதிகபட்சம் அவர்களது படையிலே 300லிருந்து 500பேர் இருப்பார்கள். மேலதிகமாக தேவை என்றால் ஆயிரம் பேர் திரட்டி கொள்ளக்கூடிய அளவில்தான் இவர்கள் படைகள் எல்லாம் இருந்தன.
ஏன் பாளையக்காரர்கள் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டோம் என்றால், தமிழ்நாட்டினுடைய எதிர்கால வரலாறையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான் ஒரு வகையில் இந்த அரசியலை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் மரியாதைக்குரிய தோழர் கே. எம். செரீப் அவர்கள். அவர் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாக திப்பு சுல்தான் பற்றியான ஒரு கருத்தரங்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்விற்கு அரசாங்கத்தினுடைய அனுமதி மறுக்கப்பட்டது.

நான் திப்பு சுல்தானை பற்றி படிக்க ஆரம்பிக்கும் பொழுது பலவேறு வரலாற்று தகவல்கள் ஆச்சரியப்படத்தக்க வகையிலே வெளிப்பட்டது. ஏற்கெனவே இந்த மருதுபாண்டியர்களுடைய போரைப் பற்றி நான் வாசித்து கொண்டிருந்த போது, அந்த வரலாற்று தகவல்களோடு திப்பு சுல்தான் அவர்களுடைய அரசியலையும் இணைத்து பார்க்கும் பொழுது ஒரு முழு அளவிலான அரசியலை இந்த நிலம் எப்படி உள்வாங்கி இருக்கிறது என்பது புரிந்தது. அப்படி புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் தோழர் கே. எம். செரீப் அவர்கள். அந்த வகையில்தான் மே 17 இயக்கம் இந்த பாளையக்காரர்களுடைய புரட்சியை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலே, தொடர்ச்சியாக பல்வேறு நகரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநாடு நடத்தி வருகிறோம். 10 மாநாடுகளுக்கும் அதிகமாக, இந்த நிகழ்வு எங்கள் சக்திக்கு உட்பட்டு நாங்கள் நடத்தி விட்டோம்.
அந்த வகையிலே திருச்சி மாநகரத்தில் வெளியிடப்பட்ட மருதுபாண்டியர்களுடைய பிரகடனத்தை கொண்டாடுகின்ற விதமாக ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என்ற நீண்ட கனவு இன்றைக்கு எங்களுக்கு சாத்தியமாகி இருக்கிறது. அந்த நிகழ்வு சாத்தியமாவதற்காக பல்வேறு இயக்கத்தோழர்கள் எங்களுக்கு துணை இருந்திருக்கிறார்கள். மே17 இயக்கத்திற்கு இந்த பொதுக்கூட்டம் என்பது ஒரு வரலாற்று மைல்கல்லாக நாங்கள் பார்க்கின்றோம். அந்த வகையிலே இந்த நிகழ்விலே பங்கெடுத்து இந்த நிகழ்வை சிறப்பு செய்து கொண்டிருக்கக்கூடிய, இந்த நிகழ்விலே மிக விளக்கமான உரையை வரலாற்று தகவல்களோடு நம்மிடத்திலே பகிர்ந்து கொண்ட எனது அருமை தோழர். கொண்டல்சாமி அவர்களுக்கும், வணிகத்திற்கும் இந்த புரட்சிக்குமான தொடர்பை குறித்து விரிவாக பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர். பாபு அவர்களுக்கும், இந்த பிரகடனத்தினுடைய மிக முக்கியமான வரிகளை எடுத்துரைத்து அதனுடைய அரசியலை விளக்கமாகவும் சமகால அரசியலோடும் இணைத்துப் பேசிய அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினுடைய தலைவர் தோழர். பொன் முருகேசன் அவர்களுக்கும் மற்றும், பாளையக்காரர் வரலாறு என்பது தமிழினத்தினுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் பிரிக்க முடியாத அங்கம் என்று ஐயா. வைகோ அவர்கள் உலகத்தினுடைய பல்வேறு மூலைகளில், தமிழர் வாழக்கூடிய பகுதியில் எல்லாம் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறை சொல்லுகின்ற நாடகத்தை நிகழ்த்தி இந்த வரலாறை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றார். அந்த பாரம்பரியம் இன்றும் மே 17 இயக்கத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்விலே பங்கெடுத்திருக்கக்கூடிய நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தோழர் தமிழ் மாணிக்கம் அவர்களுக்கும், ஐயா வெல்லமண்டி சோம்பு அவர்களுக்கும், மற்றும் இந்த நிகழ்விலே மே 17 இயக்கம் தமிழ் தேசிய அரசியலை பல்வேறு களங்களில் முன்னெடுக்கின்ற பொழுதெல்லாம் தோளோடு தோள் கொடுத்து நிற்பது மட்டுமல்ல, எமது தோழர்களை உற்சாகப்படுத்தி தமிழ்நிலம் முழுவதும் அரசியலை விரிவுபடுத்துகின்ற எங்களது முயற்சிக்கு துணை நிற்கக்கூடிய தமிழர் ஆட்சி கழகத்தினுடைய தலைவர் மரியாதைக்குரிய தோழர். எஸ்.ஆர். பாண்டியன் அவர்களுக்கும், இன்றைக்கு நாங்கள் இந்த நிகழ்வை எந்த தடையும் இன்றி, தங்கு தடையும் இன்றி நடத்துகிறோம் என்றால் அதற்கு துணையாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய மரியாதைக்குரிய ஐயா. மதிவாணன் அவர்களுக்கும் மற்றும் இங்கே பங்கேற்க இருக்கக்கூடிய, இந்த நிகழ்வில் பங்கெடுக்க இருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய தோழர். சீனி விடுதலை அரசு அவர்களுக்கும் மற்றும் இந்த அரசியலை எல்லாம் தொகுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியுடைய தலைவர் தோழர் கே.எம். செரீப் அவர்களுக்கும், இந்த நிகழ்வை சிறப்போடு நடப்பதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சார்ந்த அனைத்து தோழமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மே 17 இயக்கத்தின் சார்பாக நன்றிகளையும் வணக்கங்களையும் இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒற்றை குரலில் பேசுகிறோம் என்று எதிரிக்கு சொல்லவேண்டும். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இங்கே ஆங்கிலேயர்கள் இல்லையே, அப்படி என்றால் எதிரிகள் என்று யாரை சொல்லுகிறீர்கள், எந்த எதிரிக்கு எதிராக ஒற்றை குரலில் நாம் பேசுகிறோம் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அன்றைக்கு வெள்ளையன் இருந்தான், வெள்ளையன் இடத்திலே இன்றைக்கு பார்ப்பனருக்கான ஆட்சி செலுத்துகின்ற பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. ஆக எதிரிகள் எங்கும் செல்லவில்லை, டெல்லியிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான குரலாகத்தான், ஒற்றை குரலாகத்தான் இந்த குரல் எழுகிறது. ஜம்புதீபகற்ப பிரகடனம் இன்றும் உயிரோடு இருக்கிறது.
அந்த பாளையக்காரர்களுடைய எழுச்சியை பார்த்தோம் என்றால் நான் முன்பு சொன்னதை போல ஒரு பாளையக்காரர்கள் படை திரட்ட வேண்டும் என்றால் அதிகபட்சம் ஐநூறு, ஆயிரம் பேரை திரட்டி விட முடியும். இன்னும் அதிகமாக சொல்ல வேண்டுமென்றால் 2000 பேரை திரட்டி விட முடியும். ஆனால் மருதுபாண்டியர் உருவாக்கிய மாபெரும் கூட்டமைப்பு எத்தனை மக்களைத் திரட்டியது என்று வெள்ளைக்காரன் ஒரு கணக்கு சொல்கிறான். அது கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்களை அன்றைய காலத்தில் போருக்கு தயார் செய்தது என்று வெள்ளைக்காரன் எழுதி வைத்திருக்கிறான். 20ஆயிரம், 30 ஆயிரம் தமிழர்கள் திரண்டு நின்று மருதுபாண்டியர்களுக்கு பின்னால் அன்று அணிதிரண்டார்கள். நன்றாக நினையில் வைத்து கொள்ளுங்கள். மருதுபாண்டியர்களோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, மயிலப்பனோ, விருப்பாச்சி கோபால நாயக்கரோ, தீரன் சின்னமலையோ, கனிஜா கானோ இவர்கள் எல்லாரும் பாளையக்காரர் புரட்சியிலே தங்கள் குருதியைக் கொடுத்தவர்கள். இவர்கள் எவரும் ஆண்ட பரம்பரையை சார்ந்தவர்கள் அல்ல, அரச பரம்பரையை சார்ந்தவர்கள் அல்ல, எளிய மக்களிடமிருந்து உயர்ந்து நின்ற ஒரு புரட்சியை வழிநடத்தியவர்கள்,
அரசர்கள் எல்லாம் வெள்ளையனோடு கைக்கோர்த்து நிற்கிறார்கள். அது பேஷ்வாக்களாக இருந்தாலும் சரி, அல்லது நிஜாம்களாக இருந்தாலும் சரி, நவாபுகளாக இருந்தாலும் சரி, இவர்கள் எல்லாம் வெள்ளையனோடு கைகோர்த்து நிற்கும் பொழுது, அரசனுக்கு எதிராகவும் வெள்ளையனுக்கு எதிராகவும் இந்த பாளையக்காரர்களோடு 30ஆயிரம் மக்கள் ஒன்று திரண்டார்கள் என்றால் அந்த புரட்சியை நாம் என்னவென்று சொல்வது? வட இந்தியாவில 1857-ல் சிப்பாய் கலகம் நடந்தது, அதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரம் என்று சொல்லுவார்கள். சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்த மங்கள் பாண்டேவை கொண்டாடுவார்கள். மங்கள் பாண்டே இந்த நிலத்தை மீட்க வேண்டும், சாதி மதம் கடந்து வாருங்கள் என்றெல்லாம் கோரிக்கை விடவில்லை. அவனது பார்ப்பன தர்மம் பிரச்சனைக்கானதாக மாறிவிட்டதனால், அதனால் வெள்ளையனை எதிர்க்க வேண்டும் என்று வீதிக்கு வந்தான். அவனுக்கு அவனது சனாதன தர்மத்தின் மீதான பிரச்சனை. அதை வெள்ளையன் குலைத்து விடுவான் என்பதற்காகத்தான் மங்கள் பாண்டே வீதிக்கு வந்தான்.
ஆனால் மக்கள் அரசியலை, இந்த மக்கள் வாழ்கின்ற நிலத்தை சூறையாடி கொண்டிருக்கக்கூடிய வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பதற்காக ஜாதி கடந்து சனாதனத்தால் பிளக்கப்பட்ட இந்த மக்கள் அதையெல்லாம் கடந்து ஒன்று திரள வேண்டும் என்று மிக தெளிவான அறிக்கையை வெளியிட்டவர்கள் மருதுபாண்டியர். இது ஏதோ மருதுபாண்டியரை சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காக நான் பேசிய வார்த்தை அல்ல. இந்த ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் அவர் சொல்லுகின்றார்- “நீங்கள் பிராமணராக இருக்கலாம், சத்திரியராக இருக்கலாம், வைசியராக இருக்கலாம், சூத்திரராக இருக்கலாம், முசல்மான்களாக இருக்கலாம், நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள், இந்த வெள்ளையனை விரட்டுங்கள்” என்று சொல்கிறார். அப்படி என்றால் 225 வருடத்திற்கு முன்பு மக்கள் ஒற்றுமை பற்றி பேசிய அந்த ஜனநாயகக் குரலை நாம் போற்றாமல் வேறு யார் போற்றுவது?

மங்கள் பாண்டேவுக்கு படம் எடுப்பார்கள், மங்கள் பாண்டேவை நமது பாடத்திட்டத்தில் வைப்பார்கள், ஆனால் மருதுபாண்டியர்களை வைக்க மாட்டார்கள். அதற்கு காரணம் மருதுபாண்டியர்கள் சாதி கடந்து வாருங்கள் என்று சொன்னார்கள், மதம் கடந்து வாருங்கள் என்று சொன்னார்கள். ஆனால் மங்கள் பாண்டேவினுடைய அரசியல் அதுவல்ல. நாம் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களது காலத்தை கடந்து இந்த மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற ஒரு ஜனநாயக சிந்தனையோடு அவர்கள் இல்லை. ஆனால் எமது மருதுபாண்டியர்கள் அந்த சிந்தனையோடு நின்றார்கள்.
இத்தனைக்கும் 1856ல் வடநாட்டில் நடந்த புரட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாடு எழுந்து இந்த புரட்சி கூட்டமைப்பை உருவாக்கியது. இன்னும் ஆழமாக சொல்ல வேண்டும் என்றால் 1856க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூலித்தேவன் அந்த போரை ஆரம்பித்துவிட்டார். ஒண்டிவீரனும், பூலித்தேவனும் அழகுமுத்துக்கோனும் அன்றைக்கு வெள்ளையனுக்கு எதிராக அந்த சண்டையை நடத்தினார்கள். அதற்கு பிறகு கான்சாகிப், இந்த பாளையக்காரர்கள் எல்லாம் தனித்தனியாக போரிட்டு மாள்வது, அல்லது தனித்தனியாக போரிட்டு வெள்ளையனை வெல்லுவது என்பது சாத்தியமில்லை, ஆகவே நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று ஒரு கூட்டமைப்பை உருவாக்கி சண்டை நடத்தினார்கள். நாம் இன்று படிப்பது போல வீரபாண்டிய கட்டபொம்மன் தனியாக சண்டை போட்டார், மருதுபாண்டர்கள் தனியாக அங்கே சண்டை போட்டார்கள், தீரன் சின்னமலை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு மூலையில் சண்டை போட்டார் என்றெல்லாம் இல்லை. இவர்களுக்குள்ளாக நெருக்கமான நட்பு இருந்தது. இவர்களுக்குள்ளாக ஒரு புரிந்துணர்வு இருந்தது. இவர்களுக்குள்ளாக ஒரு கூட்டமைப்பு இருந்தது. எப்படி தோழர் கே. எம். செரீப் அவர்களும், குடந்தை அரசன் அவர்களும், தோழர் எஸ்.ஆர் பாண்டியன் அவர்களும், மே 17 இயக்கமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும், இஸ்லாமிய இயக்கங்களும் என எல்லாரும் ஒன்று சேர்ந்து இந்த சனாதன அரசியலுக்கு எதிராக களத்தில் நிற்கிறோமோ அதுபோல ஒரு கூட்டமைப்பினை 225 வருடத்திற்கு முன்பே மருதுபாண்டியர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதுதான் முக்கியம்.
அன்றைக்கு அவர்கள் தமிழ் நிலத்தை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். அது இந்த மண்ணிலே இந்த தெருவின் வழியாக சென்றது. ஒருவேளை சின்ன மருது இங்கு சென்றிருக்கலாம், அப்பேற்பட்ட திருவாளர் சென்ற இடத்தில் நின்று பேசுவதை விட வேறு என்ன பெருமை நமக்கு வேண்டும், வேறு என்ன சிறப்பு வேண்டும். இந்த நிலம் வரலாற்று சிறப்புமிக்க நிலம். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் செல்லும் பொழுது நினைத்துக் கொள்ளுங்கள், உங்களோடு சின்னமருதுவும் பிரகடனத்தை எடுத்து உங்களோடு நடந்து வருகிறார் அல்லது குதிரையில் வருகிறார் என்பதை ஒருக்காலும் மறந்துவிடாமல், அவர் சொன்ன முழக்கத்தை நினைத்துப் பாருங்கள். வெள்ளையர்களுக்கு எதிராக நீங்கள் அணிதிரளவில்லை என்றால் நீங்கள் தமிழர்களுக்கு பிறந்தவர்களாக இருக்க முடியாது என்று சொல்கிறார். தமிழ் மக்களுக்கு பிறந்தவனாக நான் பார்க்க முடியாது என்று சொல்கிறார் என்றால், அவர் உள்ளத்தில் குடிக் கொண்டிருக்கக்கூடிய அந்த விடுதலை வேட்கையை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலத்திலிருந்து 225 வருடத்திற்கு முன்பு பார்த்தாலுமே அந்த பிரகடனம் அவ்வளவு நுணுக்கமாக, அவ்வளவு அரசியலாக இருக்கிறது. நாங்கள் இந்த கூட்டத்தை கடந்த மாதம் நடத்துவதாக இருந்தோம். ஜூன் மாதம் 16ஆம் தேதி 1801-ல் இந்த பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் நடத்த வேண்டும் என்று விரும்பினோம். எங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக உடனடியாக நடத்த முடியவில்லை. காரணம் அதே தினத்திலே எங்களுக்கு கோயம்புத்தூரில் கோவை புரட்சிக்காக மருதுபாண்டியர்களும், தீரன் சின்னமலையும், விருப்பாச்சி கோபால நாயக்கரும் சேர்ந்து நடத்திய அந்த போரைப் பற்றியான நிகழ்விற்கான கூட்டம் எங்களுக்கு அங்கு இருந்தது. அதனால் அடுத்த நாள் இங்கே நடத்த முடியாது. நாம் 27ஆம் தேதி நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறையிடம் நாங்கள் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் ஜம்பு தீபகற்பம் என்றால் என்னவென்று தெரியாத, மருதபாண்டியர் அரசியல் என்றால் என்னவென்று புரியாத, திருச்சியின் வரலாறு தெரியாத சங்கி, ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவனும் இதே நாளில் நாங்கள் கூட்டம் நடத்துகிறோம் என்று அறிவித்தார்கள்.

மருது பாண்டியர்கள் பிரகடனம் செய்தார்கள். அதனால் கூட்டம் நடத்துகிறோம் என்றதும், ஒருவேளை அறிவு வந்துவிட்டதா, தமிழர்கள் குறித்து இவ்வளவு அக்கறையோடு இருக்கிறார்களா என்று அவர்கள் கொடுத்த அறிக்கையை எடுத்துப் பார்த்தோம். அதில் அகண்ட பாரதத்திற்காக மருதுபாண்டியர்கள் அறைகூவல் விடுத்ததாக ஒரு அறிக்கை போட்டிருக்கிறார்கள். நாம் சங்கிகளிடம் கேட்க வேண்டியது, ‘ஏன்டா ஆப்கானிஸ்தான் விடுதலைக்காக மருது பாண்டியர்கள் போவதாக சொன்னார்களா’ எனக் கேட்க வேண்டும். அகண்ட பாரதம் என்று ஆப்கானிஸ்தானிலிருந்து, பர்மாவிலிருந்து, மலேசியா வரை ஒரு மேப் போட்டு வைத்திருக்கிறார்கள் இந்த சங்கிப் பயல்கள். இந்த மேப் போட்டதுக்காகவே இவங்களையெல்லாம் தேசத்துரோகி என்று இந்த அரசு கைது செய்திருக்க வேண்டும். ஆனால் விட்டு வைத்திருக்கிறார்கள். அகண்ட பாரதத்திற்காக எல்லாம் மருதுபாண்டியர்கள் போரிட வரவில்லை. இந்த தமிழ்நிலம் விடுதலை அடைய வேண்டும் என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். தீபகற்பம் என்றால் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த நிலப்பரப்பு, அதைவிட வேறு என்ன தெளிவு வேண்டும்?
இவர்களிடமிருந்து நமக்கு நம்முடைய வரலாறை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இல்லையென்றால் நமது வரலாறை எல்லாம் அவன் (சங்கி) கணக்கில் எழுதிவிட்டு போய்விடுவான். ஆர்எஸ்எஸ்காரனுக்கு மருதுபாண்டியரைப் பற்றி என்ன அக்கறை? மருதுபாண்டியர்கள் ஒரு கூட்டமைப்பு உருவாக்கினார்கள் என்பதை நான் சொன்னேன். அவர்கள் தமிழ்நாட்டை கூட்டாக உருவாக்குகிறார்கள். தெற்கு பகுதியிலே நெல்லை பகுதியில் இருக்கக்கூடிய பாளையங்களை எல்லாம் இணைத்து நெல்லை புரட்சி குழு, இராமநாதபுரம் பகுதியில் இருக்கக்கூடியவர்களை எல்லாம் இணைந்து அந்த சேது புரட்சி குழு, சிவகங்கை புரட்சி குழு, திண்டுக்கல் விருப்பாட்சி நாயக்கர் அமைக்கும் திண்டுக்கல் பகுதியினுடைய புரட்சி கூட்டமைப்பு, கொங்கு பகுதியில் தீரன் சின்னமலை, கனிஜா கான் போன்றவர்கள் அமைக்கும் கொங்கு பகுதியினுடைய கூட்டமைப்பு என பல கூட்டமைப்புகள் உருவாக்குகிறார்கள். இத்துடன் நிற்காமல், இவர்களோடு கேரளாவில் பழசி அரசர் கேரள வர்மனையும் தனது கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் கேரள கடற்கரையின் வழியாக வெள்ளையர்கள் கப்பற்கடை வருகிறது, ஆயுதங்கள் வருகிறது, அதைத் தடுக்க வேண்டும் என்றால் கேரளப் பகுதியில் நமக்கு கூட்டணியில் இணைவதற்காக கூட்டாளிகள் வேண்டும் என்று கேரள பழசி வர்மனை இணைத்துக் கொள்கிறார்கள். அதனுடனும் நிற்கவில்லை, கர்நாடகத்திலே திப்பு சுல்தானோடு உறவை மேற்கொள்கிறார்கள். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு கர்நாடகத்தின் வடக்கு பகுதியான இன்றைய கோவா பகுதி சொல்கிறோமே, அந்த பகுதியிலே ஹைதர் அலியினுடைய படையில் இருந்த ஒரு மாபெரும் வீரன் தூந்தாஜி வாக் என்கின்ற ஒரு போர்வீரன் இணைகிறான். அவன் 5 ஆயிரம் குதிரைகளை கொண்ட படையை வைத்து கொண்டு வெள்ளையரை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு தூது அனுப்புகிறார்கள். எதிரிக்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்டுவது என்பது மருதுபாண்டியர்கள் யுக்தி. இதில் எங்கே சாதி வந்தது, எங்கே மதம் வந்தது, இனம் என்கின்ற அடையாளம் கூட வரவில்லை. அவர் மலையாளத்தில் கேரளாவில் இருக்கக்கூடிய மலையாள அரசனையும், கன்னட பகுதியினுடைய அரசர்களையும், கன்னட பகுதிகளுடைய தளபதிகளையும், இஸ்லாமிய தளபதிகளையும் இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார். தமிழ்நாட்டில் அனைத்து சாதியைச் சார்ந்தவர்களும் அந்தப் படையிலே, அந்த கூட்டமைப்பில் இருக்கிறார்கள். துந்தாஜி வாக் ஒரு மாபெரும் போர்வீரன். இவர்களை எல்லாம் இணைத்து அந்த போர்த் திட்டம் என்பதை அவர்கள் கோவை பகுதியிலே, கோவை கோட்டையை தாக்க வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு தீரன் சின்னமலையாக இருக்கிறார். ஒவ்வொரு பகுதியிலிருந்து அந்த கோவை கோட்டையை நோக்கி படையை நகர்த்துகின்ற பொறுப்பை திப்பு சுல்தானுடைய படையிலிருந்த தளபதிகள் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ரோனுல்லா கான் பொறுப்பேற்கிறார். முகமது ஆசம் பொறுப்பேற்கிறார். இப்படி பலர் அதைப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
இப்படி படை நகர்த்துவதும், இதற்கு பயிற்சி அளிக்கக்கூடிய வேலையை விருப்பாச்சி கோபால நாயக்கர் செய்கிறார். அவர் பழனியில் இருக்கக்கூடிய காடுகளுக்கு உள்ளாக அவர்களுக்கு பயிற்சியை கொடுக்கின்றார். இந்த திட்டத்தை வரையறை செய்து வகுத்து கொடுக்கக்கூடிய பணியை மருதுபாண்டியர்கள் செய்கிறார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு இருக்கக்கூடிய அவரது தளபதிகள் எல்லாம் இந்த போரில் இணைந்து கொள்கிறார்கள். கேரளாவிலிருந்து கேரள வர்மன் 100 பேரை அனுப்புகிறார். வடநாட்டிலிருந்து தூந்தாஜி வாக் 5000 படைவீரர்களோடு நான் போரில் கலந்து கொள்கிறேன் என்று முடிவெடுக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கூட்டமைப்பை 220 வருடத்திற்கு முன்பாக திட்டமிட்டு நடத்திய நிலம் தமிழ் நிலம். இப்பேர்பட்ட வரலாறை தமிழ்நாடு முழுவதும் சொல்ல வேண்டும் என்றுதான் மே 17 இயக்கம் பல ஊர்களில் கூட்டங்களாக நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வரலாறை கேட்கக்கூடிய உங்களுக்கு என்று ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது. இது மற்ற பொதுக்கூட்டத்தை போல ஒரு அரசியல் முழக்கத்தோடு இருக்கக்கூடிய பொதுக்கூட்டம் அல்ல. இந்த வரலாற்று தகவல்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பந்தோறும் பேச வேண்டும். இன்று நினைத்தவுடன் உலகத்தில் எங்கு இருந்தாலும் செய்தி அனுப்ப முடியும். மின்னஞ்சல் அனுப்ப முடியும். தொலைபேசியில் பேச முடியும். நேரில் சென்றுவிட முடியும். விமானத்தை எடுத்து சென்று அவர்களை நாம் பார்த்துவிட முடியும். ஆனால் 220 வருடத்திற்கு முன்பாக வெள்ளையர்களுடைய உளவுப்படை ஊர் முழுவதும் விரவி நிற்கக்கூடிய காலகட்டத்தில், தெருக்களில் எல்லாம் துரோகிகள் நிறைந்திருக்கக்கூடிய அந்த சூழலில், அரசன் எதிர்த்து நிற்பதை எல்லாம் அறிந்த பிறகும் கூட இந்த புரட்சியாளர்கள் தங்களுக்குள்ளாக கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய உழைப்பு, எவ்வளவு பெரிய புரட்சிக்கான வித்து என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒரு சம்பவத்தை சொல்கிறேன். பழனியிலே கோவையை தாக்குவதற்கான படையை தயாரிக்கிறார்கள். பயிற்சி எடுக்க வைக்கிறார்கள். இந்த படை பழனியிலிருந்து ஜூன் மாதத்தில் கோவை கோட்டையை தகர்க்க வேண்டும் என்கின்ற திட்டம் இலக்குடன் வரையறை செய்யப்படுகிறது. 1800யிலே ஜூன் மாதம் 10ஆம் தேதி கோவைக்கோட்டையை தகர்ப்பதற்கு பழனியிலிருந்து படை கிளம்ப வேண்டும் என்றால், இன்றைக்கு பழனியில் பஸ் ஏறினால் இரண்டு மணி நேரத்தில் கோயம்புத்தூர் சென்று விட முடியும். அந்த காலத்தில் ஒருவேளை குதிரையில் ஏறினால் கூட ஒரு நாளில் சென்று விடலாம். ஆனால் இரண்டு மாதங்கள் காடுகளில் மறைந்து மறைந்து புரட்சியாளர்கள் கோவையை நோக்கி நெருங்கி செல்கிறார்கள் என்றால், அவர்கள் திட்டம் எவ்வளவு நுணுக்கமானதாக இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். இரண்டு மாத காலம் ஏப்ரல் மாதத்தில் கிளம்புகின்ற அந்த புரட்சிப்படை காடுகளில் மறைந்து, ஒளிந்து, பொதுமக்களோடு பொதுமக்களாக கோவையை ஊடுருவுகிறார்கள். அவர்கள் செல்லும்பொழுது ஆயுதங்களை எடுத்து செல்ல முடியாது. அன்றைய காலகட்டத்தில் வெள்ளையர்கள் அனைத்து இடங்களிலும் உளவாளிகளை வைத்திருந்தார்கள். எனவே ஆயுதங்களை கொண்டு செல்ல முடியாது. ஆயுதங்கள் எப்படி எடுத்து செல்லப்பட்டது என்றால் பழனியிலிருந்து கோவை வரை இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுடைய மசூதிகள் தான் ஆயுத கிடங்குகளாக மாறி இருந்தன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தர்காக்களும், மசூதிகளும் இந்த ஆயுதங்களை பாதுகாத்து வைத்து இந்த புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் பொறுப்பை சுமந்தன. இன்று சிக்கந்தர் தர்காவை இடிக்கிறேன், முஸ்லிம்கள் உங்களுக்கு எதிரி என்று பேசுறான். ஆனால் அன்றைக்கு அவர்கள்தான் தங்களது வழிபாட்டுத் தலங்களை எல்லாம் திறந்து வைத்து இந்த புரட்சியாளர்களை பாதுகாத்தவர்கள் என்கின்ற வரலாறை ஊர் முழுவதும் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஊர் முழுதும் சொல்ல வேண்டும். இந்த வரலாறை சொல்ல வேண்டும். மசூதியின் மீது கை வைத்தால் நமது புரட்சிகர வரலாறின் மீது கை வைப்பதாக அர்த்தம் என்பதை அவனுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டும்.
மருதுபாண்டியர்கள் வெளியிட்ட இந்த அறிக்கை சாதி மதம் கடந்து, மதம் கடந்து தமிழனாய் ஒன்றுபட்டு இந்த நிலத்தை மீட்பதற்காக வரவேண்டும் என நடத்திய அந்த புரட்சியை நினைவு கூறுகின்ற இந்த நாளில் மே 17 இயக்கம், இந்துத்துவ அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுகிறோம். எங்கள் மண்ணில், எங்கள் நிலத்தில் இருக்கக்கூடிய எந்த வழிபாட்டு தலத்தின் மீதும் உன் கை வைக்கப்படும் என்றால் அந்த விளைவுகளை எதிர்கொள்ளக்கூடிய திராணி உனக்கும், உன் தலைமை நாக்பூருக்கும் கிடையாது என்பதை உறுதியுடன் சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பின்னால் மருதிருவர் வரலாறு இருக்கிறது. எங்கள் பின்னால் தீரன் சின்னமலையின் வரலாறு இருக்கிறது. திப்பு சுல்தான் வரலாறு இருக்கிறது. ஹைதரின் வரலாறு இருக்கிறது. தூந்தாஜி வாக்கின் வரலாறு இருக்கிறது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது? தூந்தாஜி வாகை காட்டி கொடுத்த பேஷ்வாக்கின் வரலாறு உனக்கு இருக்கிறது. அன்றைக்கு மராத்திய அரசர்கள் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டு இந்த புரட்சிக்கு முதுகாய் நின்ற தூந்தாஜி வாகை அழிக்க வெள்ளையருக்கு காட்டி கொடுத்த வரலாறுதான் உன்னுடையது.
அந்த மராத்தி பேஷ்வாக்களின் வழித் தோன்றல்கள்தான் ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்புகள், பாரதி ஜனதா கட்சி என்பதை மறந்துவிடாதீர்கள். இவர்களது துரோகம் 224 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உனது (ஆர்.எஸ்.எஸ்.) அரசியலை வேரறுக்கக்கூடிய மண்ணாக திருச்சி இருக்கும் என்பதை இச்சமயத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இங்கேயே எங்கேயாவது நின்று கேட்டு விட்டு இருப்பான் ஆர்எஸ்எஸ்காரன். நீ மற்ற ஊரில் இருப்பது போல தமிழ்நாட்டில் வாலாட்டி விட்டு போய்விட முடியாது. தமிழ்நாடு வேறு. எங்களுடைய வரலாறு வேறு. நாங்கள் காலம் காலமாக அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக சாதி மதம் கடந்து ஒன்று கூடக்கூடிய வரலாறைக் கொண்டவர்கள்.
மருதுபாண்டியர்கள் அன்று சாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு வெள்ளையரை எதிர்த்து பிரகடனம் செய்தார்களே, வெள்ளையர்களை எதிர்த்து போராடவில்லை என்றால் தமிழ் மண்ணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் பிறந்தவனே கிடையாது என்று சொன்னார்களே, அந்த முழக்கத்தை, புரட்சி முழக்கத்தை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? எங்கள் தமிழ் மொழியில் இருந்து கற்றுக் கொண்டார்கள். எங்கள் தமிழ் நிலம் அந்த உணர்வைக் கொடுத்தது. எங்கள் தமிழ் மொழியை அங்கீகரிக்க வக்கில்லாத பாரதிய ஜனதா கட்சி ஆர்எஸ்எஸ் காரனுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஒரு கொடி கூடப் பறக்க முடியாத நிலையை உருவாக்குவதுதான் தமிழினத்தின் விடுதலை. தமிழினத்தின் விடுதலை அதுதான். அன்றைக்கு வெள்ளையன் கொடி பறந்தது. இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி கொடியும், ஆர்எஸ்எஸ் கொடியும் பறக்கிறது என்றால் அவர்கள்தான் அந்நியர்கள். அவர்கள்தான் எதிரிகள். அந்த எதிரிக்கு எதிராகத்தான் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்.
எங்களுக்கு எந்த மாநில கட்சியும் எதிரி கிடையாது. இல்லாத தேசியத்தை தூக்கிப் பிடித்து கொண்டு வந்திருக்கக்கூடிய கட்சிகள்தான் எங்களுக்கு எதிரிகள். தமிழ் எதிரிகள், தமிழகத்தின் துரோகிகளுக்கு எதிராக நாங்கள் அனைத்து அமைப்புகளோடும் கை கோர்ப்போம். நாங்கள் தேர்தல் அரசியலை சார்ந்தவர்கள் அல்ல. எங்களுக்கு என்று தனியாக பதவி ஆசை கொண்டோ, நலத்தைக் கொண்டோ நாங்கள் எங்கள் அரசியலை வடிவமைத்துக் கொள்வதில்லை. நாங்கள் மேதகு பிரபாகரன் வழியில் வந்தவர்கள் என்பதை இந்த சமயத்தில் இந்து அமைப்பினருக்கு எடுத்து சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கழுத்தில் நஞ்சுக் குப்பியை மாட்டிக் கொண்டு களத்துக்கு சென்ற ஒரு போர் மரபு எங்களுக்கு இருக்கிறது. வெள்ளையனுடைய பூட்ஸ் காலை நாக்கினாலே தடவி பாலிஷ் போட்ட வரலாறு அவர்களுக்கு இருக்கிறது. இந்த வரலாற்று எதிரியைக் கண்டால் எங்களுக்கு அச்சமில்லை, நான் மரணிப்பதற்கு தயாராக வந்திருக்கிறேன் என்று சயனைடு குப்பியை எடுத்துக்காட்டி போருக்கு சென்ற விடுதலைப் புலிகள் இந்த தமிழ் நிலத்தினுடைய, இந்த தமிழ் இனத்தினுடைய அடையாளம்.

நம் எல்லாருக்கும் ஒரு கடமை இருக்கிறது. தேர்தல் சமயத்தில் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இருக்கக்கூடியவர்களை ஆதரிக்கிறோம். அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. தேர்தல் முடிந்த பிறகு என்ன செய்யப் போகிறோம், தேர்தலுக்கு முன்னால் என்ன செய்ய போகிறோம்? மக்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற அரசியலை நாம் அனைவரும் கையில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீடாக பேசுகிறான் இந்துத்துவவாதி, ஆர்எஸ்எஸ்காரன். ஒவ்வொரு பள்ளிக்கூடமாக பேசுகிறான், பயிற்சி கொடுக்கின்றான். தமிழ்நாட்டு துரோகிகள் ஆர்எஸ்எஸ்-சின் பயிற்சி முகாமுக்கு இடம் கொடுக்கிறார்கள். பள்ளிகளை திறந்துவிடுகிறார்கள். இந்துத்துவ அமைப்பினருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழினத்தின் துரோகிகள். மருது பாண்டியர்கள் சொன்னதைப் போல, இவர்களைல்லாம் தமிழ் பெண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் சம்பந்தமில்லாத இந்த மண்ணிலே பிறக்காதவர்கள் என்று சொல்கிறாரே, அந்த வார்த்தைக்கு அடையாளமானவர்களே பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க கூடியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் இன்றைக்கு வரைக்கும் நடக்கிறது.
நான் முன்பு சொன்னேனே, வெறும் 100 பேர், 200 பேர், 500 பேர், 1000 பேர் என்று திரண்ட பாளையக்காரர்கள் பின்னால் 10 ஆயிரம் பேர், 20 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் ஏன் திரண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. வெள்ளையனுடைய வரிக் கொடுமை அத்தனை மோசமாக இருந்தது. உங்கள் விளைச்சலின் அளவை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வெள்ளையர்கள் வரி போட்டார்கள். அதற்கென ஒரு கணக்கு இருக்கிறது. பேராசிரியர் ’ராஜையன்’ அவர்கள் தனது நூலில் இவ்வாறு எழுதுகிறார்- கிட்டத்தட்ட 20/30 கிராமங்களுடைய ஒட்டுமொத்த விளைச்சலின் மதிப்பு அன்றைய பண மதிப்பின்படி 54ஆயிரம் பகோடாக்கள் என்று கணக்கிடுகிறார்கள். 20/30 கிராமத்தில் மொத்தமாக உற்பத்தியாவதன் மதிப்பு 54000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். பகோடா என்றால் ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வெள்ளைக்காரன் வரி 76000 பகோடாக்களாக இருக்கிறது. என்ன செய்வார்கள் அந்த மக்கள்? என்று சொல்கிறார். உற்பத்தி செய்வதே 54000 தான், ஆனால் வரி 76000 என்றால் அந்த மக்கள் அந்த நிலத்தை விட்டு, கிராமத்தை விட்டு, தொழிலை விட்டு வரிகட்ட முடியாமல் வெளியேறுகிறார்கள். அந்த மக்கள்தான் பாளையக்காரர்களுக்கு பின்னால், மருதுபாண்டியர்களுக்கு பின்னால் படையாக அணிதிரள்கிறார்கள். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு படைக்கு செல்கிறார்கள்.
பாளையக்காரர்களால் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது என்றால் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை, அவர்களிடத்தில் விடுதலை உணர்ச்சி மட்டும்தான் இருந்தது, நவீன ஆயுதங்களோ போர் பயிற்சியோ அவர்களிடத்தில் இல்லை. அது கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை. அதற்கான பொருளாதாரம் அவர்களிடத்தில் இல்லை. 20 ஆயிரம் பேருக்கோ, 30 ஆயிரம் பேருக்கோ பயிற்சி கொடுப்பதற்கான தளம் இல்லை. பணம் இல்லை. உணவு கொடுப்பதற்கான வசதிகள் வாய்ப்புகள் இல்லை. ஆனால் விடுதலை உணர்வு இருக்கிறது. வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற விடுதலை உணர்வு இருக்கிறது. வெள்ளையன் விதித்த அந்த வரியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற நினைத்தார்கள் மக்கள். வெள்ளைக்காரன் கட்டுப்பாடு, அரசர்களினுடைய காட்டிக் கொடுத்தல் என இதை எல்லாம் மீறி வெள்ளையர்களுடைய கோட்டையாக விளங்கக்கூடிய திருச்சி நகரத்திற்குள் நுழைந்து, வெள்ளையன் தேடிக் கொண்டிருக்கக்கூடிய சின்ன மருதினால் மக்கள் ஆதரவில்லாமல் இங்கு வந்து இந்த பிரகடனத்தை இந்த மதில் சுவரில் ஒட்டிவிட்டு சென்றுவிட முடியுமா என சொல்லுங்கள். மக்கள் ஆதரவில்லை என்றால் வீதிக்குள் வந்துவிட முடியுமா, நகரத்திற்கு வந்து விட முடியுமா, ஒற்றர்கள் கண்ணிலிருந்து தப்பிவிட முடியுமா, அப்படையிலிருந்து அவர்கள் மீண்டு விட முடியுமா? இதையெல்லாம் கடந்து சின்னமருது இங்கே வந்து சுவரிலே பிரகடனத்தை ஒட்டுகிறார் என்றால் மக்கள் ஆதரவு இருந்த காரணத்தினால்தான் அந்த புரட்சி முழக்கத்தை முன்வைக்க முடிந்தது. மக்கள் பாளையக்காரர்கள் பின்னால் நின்றார்கள். அரசர்கள் வெள்ளையர்கள் பின்னால் நின்றார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ்காரனைப் போல, இன்றைக்கு இருக்கக்கூடிய பாரத ஜனதா கட்சிக்காரனைப் போல, இன்றைக்கு இருக்கக்கூடிய இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவாதிகளைப் போல, மக்கள் விரோதிகளாக அரசர்களும், ஒற்றர்களும் ஒன்று திரண்டு நின்றார்கள். மக்கள் எப்படி இன்றைக்கு திராவிட அரசியலுக்குப் பின்பும், தமிழ் தேசிய அரசியலுக்குப் பின்பும், அணிதிரண்டு நிற்கிறார்களோ, அதுபோல அன்றைக்கு மருதுபாண்டியர்கள் பின்னால் அணிதிரண்டு நின்றார்கள் .
நான் தமிழ் தேசியம் என்று சொன்னால் நீங்கள் ஏதோ நினைத்து கொள்ள வேண்டாம். ஆடு மாடுகளுக்கு முன்னால் பேசுபவன் எல்லாம் தமிழ் தேசியவாதி அல்ல. ஆயிரம் மணி நேரம் நீங்கள் பேசினாலும் ஆடு மாடு போர்வீரர்களாக மாறிவிடாது. அதற்கு தேவை மேய்ச்சல் நிலம். அந்த மேய்ச்சல் நிலத்தை கட்டுப்படுத்துவது இந்தியப் பேரினவாதம். அந்த இந்திய பேரினவாதத்திடமிருந்து நிலத்தை மீட்பதுதான் தமிழ் தேசிய அரசியலே ஒழிய, அதற்கு ஆடுமாடுகளை வைத்துக் கொண்டெல்லாம் படை கட்ட முடியாது. பைத்தியக்காரர்கள். அதுவெல்லாம் தமிழ் தேசியமல்ல.
இந்த பிரகடனத்தினுடைய அரசியலை நான் சொன்னேன். இந்த மக்கள் அணிகள் வரிக்கு எதிராக, வரி கொடுமைக்கு எதிராக அணி வகுத்தார்கள். அன்றைக்கு உயிர் போய்விடும் என்கிற நிலை இருந்தாலும் தங்கள் நிலத்தை மீட்க வேண்டும், வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் பாளையக்காரர்களுடைய படைகளிலே அணிதிரண்டு கொண்டார்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. மருதுபாண்டியர்கள அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்தார். அனைத்து சமூக மக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.’ அழகு முத்துக்கோன்’ இருக்கிறார் என்றால் அவர் சாதிக்காரருக்காக போரிடவில்லை. ’பூலித்தேவன்’ இருந்தால் அவர் சாதிக்காரருக்காக வரவில்லை. ’தீரன் சின்னமலை’ அவர் சாதிக்காக வரவில்லை. ’ஒண்டிவீரன்’ சாதிக்காக இல்லை, ’மருதுபாண்டியரோ, விருப்பாச்சி கோபால் நாயக்கரோ’ அவரவர் சாதிக்காக போரிடவில்லை. அப்படியென்றால் அந்த சாதிக்காரர்கள் மட்டும்தான் போருக்கு போயிருக்க வேண்டும். இத்தனை சாதிகளிலிருந்து போர்வீரர்கள் எப்படி வந்தார்கள்? அவர்கள் சாதியை கடந்த அரசியலை முன்வைத்தார்கள். ஆகவே அவர்களை சாதித் தலைவர்களாக நாம் ஒருபொழுதும் மாற்றிவிடக்கூடாது. அப்படி மாற்றினால் அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய அவமரியாதை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மருதுபாண்டியர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, பூலித்தேவன், ஒண்டி வீரன், அழகுமுத்துக்கோன் என இவர்களுக்கெல்லாம் நாம் மரியாதை செய்யக்கூடிய நிகழ்வை சடங்காக செய்யக்கூடாது. அந்த போர் மரபை, புரட்சிகர வரலாறை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுகின்ற நிகழ்வாக மாற்றிட வேண்டும். இதை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநில கட்சிகளும் ஒவ்வொரு வீதிதோறும் இந்த நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்பது மே17 இயக்கத்தினுடைய அன்பான வேண்டுகோள்.

நாம் பேச வேண்டும். நாம் வரலாறு பேசவில்லை என்றால் ஆர்எஸ்எஸ்காரன், இப்போது வந்து அகண்ட பாரதத்திற்காக மருதுபாண்டியர் போராடினார்கள் என்று பேசுகிறானே, அப்படி திரிக்கப்பட்டுவிடும். அவர்கள் அகண்ட பாரதத்துக்காகவா போராடினார்கள்? அகண்ட பாரதம் என்பது எங்கு இருக்கிறது? எந்த வரலாற்றில் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ். சொல்லக்கூடிய அந்த ‘பாரதம்’ என்கின்ற சொல் குறிப்பிடக்கூடிய நிலப்பரப்பு எங்கு இருக்கிறது? சிந்துவெளியிலிருந்து, யமுனை நதிக்கரை வரை இருக்கக்கூடிய அந்த நிலப்பரப்புதான் ‘பாரதம்’ என்கின்ற சொல். அதற்கும் காவிரிக்கும் என்ன தொடர்பு? அதற்கும் பாலாறுக்கும் என்ன தொடர்பு? அதற்கும் வைகைக்கும் என்ன தொடர்பு? அதற்கும் எங்கள் தாமிரபரணிக்கும் என்ன தொடர்பு?
உனது (ஆர்.எஸ்.எஸ்.) புராணத்தில் சொல்லப்பட்ட நிலப்பரப்புதான் பாரதம் என்கிற நிலப்பரப்பு. அந்த நிலப்பரப்பிற்குள் தமிழ் நிலப்பரப்பை எப்படி நீ திணிக்க முடியும்? உன் வரலாறுக்கு முன்பாக நீண்ட நெடிய வரலாறு கொண்ட இனம் எங்கள் தமிழினம். இந்த வரலாறை கீழடி தெளிவாக சொல்லிவிட்டது. தமிழனின் காலத்தை, தமிழ் மொழியினுடைய தொன்மையை உலகறிய ஊரறிய அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிட்டது கீழடி. அதைப் பார்த்து பதறிப் போய் உட்கார்ந்திருக்கிறான்.
சரஸ்வதி நதி பற்றி கூறுகிறான். ஆனால் அவன் சாமிக்கு கோவில் கிடையாது. பிரம்மனுக்கு அல்லது இந்திரனுக்கு கோவில் இருக்கிறதா? சூரியனுக்கு கோவில் இருக்கிறதா? அவன் சொல்லக்கூடிய அண்ட சராசரம் இருக்கக்கூடிய கடவுளுக்கெல்லாம் இங்கு கோவில் இருக்கிறதா? இல்லை. இயற்கை வழிபட்ட தமிழனுக்குதான், இயற்கையை கடவுளாக வைத்திருக்கக்கூடிய தமிழனுக்குதான் கோவில் இருக்கிறது. அந்த தமிழ் கடவுளுக்குதான் கோவில் இருக்கிறது. ஆரிய கடவுளுக்கு கோவில் கிடையாது. எந்த வழிபாடும் கிடையாது. ஆனால் இங்கு இருக்கக்கூடிய கடவுளை எல்லாம் திருடப் பார்க்கிறான். இன்றைக்கு அவன் முருகனை திருடப் பார்க்கின்றான்.
அன்பானவர்களே! இங்கே அவன் திருடி, கொள்ளை அடித்து திரட்டிய வரலாறுதான் அவன் வரலாறு. அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வரலாற்று ஆசிரியர்கள்/ தத்துவ ஆசிரியர்கள் இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த சண்டை பற்றி ஒன்று கூறுவார்கள். கோவர்த்தனகிரி மலையைத் தூக்கி இந்திரன் பொழியக்கூடிய மழையிலிருந்து ஆடுமாடுகளை கிருஷ்ணன் காப்பாற்றுவதாகக் கூறுவார்கள்.
இரண்டு பேரும் ஒரே மதத்தின் சாமிகள். பின் இரண்டு சாமிக்கும் எதற்காக சண்டை வருகிறது என்று கேட்டால் அதற்கு ஒரு பதில் கூறுவார்கள். எந்த மதத்திலாவது அந்த மதத்தினுடைய சாமிகளுக்குள் சண்டை வந்திருக்கிறதா? ஆசாமிகளுக்குள் சண்டை வந்திருக்கிறது. பூசாரிகளுக்குள் சண்டை வந்திருக்கிறது. ஆனால் சாமிகளுக்குள் எப்படி சண்டை வரும்? காரணம் என்னவென்றால் ஆடு மாடு மேய்க்கக்கூடிய பழங்குடியினுடைய தலைவனாக இருக்கக்கூடியவனை இவன் கிருஷ்ணன் என்று பெயரிட்டுவிட்டான். இந்த பூர்வக்குடி மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய ஆரியனுடைய கடவுள்தான் இந்திரன். இந்திரன் என்கின்ற அந்த ஆரியகுடி கடவுளுக்கும் இந்த மண்ணினுடைய பூர்வகுடிக்கும் நடந்த சண்டையை சாமிக்குள் நடந்த சண்டையாக எழுதி வைத்திருக்கிறான். அதுதான் அந்த புராணத்தில் தெரிகிறது. அவன் புராணத்தை எடுத்து படித்தோம் என்றால் அவனுக்கும் நமக்கும் நடந்த சண்டை தான் இந்த வரலாறாகவே இருக்கிறது.
இன்றைக்கு அவன் முருகன் மீது கை வைக்கின்றான். நமக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. அறுபடை வீடுகளோ மருதமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனியோ அல்லது திருச்செந்தூரோ எல்லா இடத்திலும் ‘சுப்பிரமணியசாமி கோவில்’ என்று சொல்லுகிறார்கள். அது ‘முருகன் கோவில்’. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. சுப்பிரமணிய சாமி என்பது தமிழ் பெயரல்ல. சூத்திரர்களுடைய சாமி என்றுதான் முருகனை அடையாளப்படுத்துகிறான். எந்த பார்ப்பனரும் முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா? வடிவேல் என்கின்ற பெயரை வைத்திருக்கிறார்களா? இவை மட்டுமல்ல பழனிச்சாமி, செந்தில், சரவணன் போன்ற பெயர்களையும் பார்ப்பனர் ஏன் வைப்பதில்லை? இதெல்லாம் தமிழ் பெயர். தமிழ் கடவுளின் பெயர். தமிழை கொண்டாடுகின்ற பெயர். தமிழ் திணை நிலத்தினுடைய தலைமகனாக முருகனை முன்னிறுத்துகின்ற பெயர். அதை வைக்க மாட்டான். சுப்பிரமணியன் என்று வைப்பான். அந்தப் பெயரைதான் நமது கோவில்களுக்கு பெயராக பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள். நாம் யாரும் ’திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு’ போகிறோம் என சொன்னதே கிடையாது. ’முருகன் கோவிலுக்கு’ போவதாகத்தான் சொல்கிறோம். பழனி சுப்பிரமணிய சாமி கோவில் என்று சொல்வது கிடையாது. பழனிமுருகன் கோவில் என்றுதான் கூறுகின்றோம்.
இதை நுணுக்கமாக மாற்றுகிறான். எச். ராஜா பேசுவதைக் கேட்டால் தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் பேசுகிறார். ஆர்எஸ்எஸ்-காரர்கள் திட்டமிட்டு தூய தமிழ் வார்த்தைகளை நிராகரித்துவிட்டு அந்த இடத்தில் எல்லாம் வடமொழி சொல்/சமஸ்கிருத சொல்லை சேர்த்து அந்த வார்த்தையைதான் பயன்படுத்துவர்.
சனம் என்றால் ’ஜனம்’ என்று சொல்லுவான். சாதி என்றால் ’ஜாதி’ என்று சொல்லுவான். ஒவ்வொரு இடத்திலும் சமஸ்கிருத சொல் வரவேண்டும் என்று அவன் (ஆர்.எஸ்.எஸ்.) கவனமாக இருப்பான். எச். ராஜா பேசுவது நமக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது சமஸ்கிருத வழியில் வரக்கூடிய வெறுப்புசொல். வெறுப்புப் பேச்சில் நாம் வெறுக்கக்கூடிய வடமொழி சொல்லும் வருகிறது என்றால் தமிழ் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவன் தெளிவாக இருக்கிறான், திட்டமிட்டு அவன் இந்த மொழிக் கலப்பை செய்கின்றான். வரலாற்றுக் கலப்பை செய்கின்றான். இறைவணக்கத்திலே அவனது ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று அதற்கான கலப்புகளை செய்து கொண்டிருக்கின்றான்.

அன்பானவர்களே! நாம் எதையெல்லாம் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்? நமது நிலத்தை காப்பாற்ற வேண்டிய நிலையிருக்கிறது. நமது பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டிய நிலையிருக்கிறது. நமது கடவுளை, நமது வரலாறை காப்பாற்ற வேண்டிய நிலையிருக்கிறது. பட்டியல் மிகப்பெரியதாக இருக்கிறது. எப்படி காப்பாற்றப் போகிறோம்? தேர்தலில் மட்டுமல்ல, தேர்தலுக்கு அப்பாற்பட்டு நாம் எல்லாம் சேர்ந்து வேலை செய்யவேண்டும். தேர்தல் என்பது ஒரு ஆட்சிக்கு அவர்கள் வாக்களிக்கக்கூடிய கட்சிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய நிலை என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் கருத்தியலை எப்படி கொண்டு செல்வது?
தந்தை பெரியார் பேசினார், அவர் இறுதி காலத்தில் கூட 200க்கும் அதிகமான கூட்டங்களில் பேசினார். பேசிக்கொண்டே இருந்தார், எழுதிக்கொண்டே இருந்தார், புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். பதில் மறுப்புரை கொடுத்து கொண்டே இருந்தார். பத்திரிக்கை நடத்திக்கொண்டே இருந்தார். ஒரு இயக்கமாக அதை செய்து கொண்டே இருந்த காரணத்தினால் தான் பார்ப்பனர் புரட்டுகளை எல்லாம் அந்தந்த தினத்தில், அந்தந்த இடத்திலே அந்தந்த நேரத்திலே அவரால் உடைக்க முடிந்தது. அதை நாம் 40 ஆண்டுகளாக கைவிட்டுவிட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதை விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்வோம். தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பணியை நாம் செய்யவில்லை. தேர்தலுக்கு அப்பாற்பட்டு மற்ற காலத்தில் எல்லாம் நாம் பேச வேண்டும். வீதிதோறும் பேச வேண்டும், இளைஞர்களிடத்தில் பேச வேண்டும், மாணவர்களிடத்தில் பேச வேண்டும், அரசியலை பெண்களிடத்தில சொல்ல வேண்டும். அதை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
பாளையக்காரன் வரலாறை நாம் எடுக்கிறோம் என்று தெரிந்த உடனே அகண்ட பாரதத்திற்காக மருதுபாண்டியர் போராடினார் என்று ஆர்.எஸ்.எஸ். பொய் சொல்லுகிறது. நேற்று முன்தினம் வேலூருடைய புரட்சி தினம். 199 வருடங்களுக்கு முன்பாக வேலூரில் நடந்த புரட்சி தினம். ஆர்.எஸ்.எஸ்.காரன் எங்கேயுமே மேடை போட்டு பேசுவது இல்லை. வாட்ஸப்பில் அறிக்கையாக அனுப்பிக் கொண்டே இருப்பான். செய்தியைப் பார்த்தால் சாதாரண செய்தியாக இருக்கும். படித்துப் பார்த்தால் உள்ளுக்குள் ராஜநாகத்தினுடைய விஷம் இருக்கும்.
வேலூர்ப் புரட்சி என்பது கொல்லப்பட்ட திப்பு சுல்தானுடைய மகன்கள் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட, ஜாதி மதம் கடந்து நடந்த ஒரு மாபெரும் புரட்சி. மாபெரும் எழுச்சி. வெள்ளையர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். மயிரிழையில் அது தோற்று போனது. இல்லை என்றால் தமிழ்நாட்டின் வரலாறு வேறாக இருந்திருக்கும்.
திப்பு சுல்தானுடைய மகன்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். அவர் வம்சாவளியைச் சேர்ந்த இன்னொரு இளைஞன் தூக்கில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றான். இவ்வாறு மதம் கடந்து இந்த நிலத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று வேலூர் கோட்டையில் திட்டமிட்டு நடத்திய அந்த மிகப்பெரும் புரட்சியைப் பற்றி ஆர்எஸ்எஸ்காரன் அறிக்கை போடுகிறான். அது என்னவென்றால், மத மாற்றத்தை தடுப்பதற்காக அங்கே மக்கள் போரிட்டார்கள் என்று பொய்ச்செய்தி எழுதுகிறான்.
இவ்வாறு தமிழருடைய ஒவ்வொரு வரலாறையும் அவன் திரித்துக் கொண்டிருக்கின்றான். மருது சகோதரர்களின் ஜம்பு தீவு பிரகடனம், வேலூர் புரட்சி என ஒவ்வொரு இடத்திலும் சாதியாக, மதமாக அவன் ஒவ்வொரு வரலாறையும் நுணுக்கமாகப் பிரித்துக் கொண்டிருக்கிறான். இங்கேதான் நமது போரை நடத்த வேண்டும். எங்கேயோ ஏதோ ஒரு இடத்தில் மேடையில் பேசுகின்ற அறிக்கையை, உங்களது வரலாறை உங்கள் கண்ணுக்கு கீழாகவே அவன் மாற்றி எழுதி கொண்டிருக்கிறானே, அந்த அறிக்கையைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அனைவரும் பதில் எழுதுங்கள், திருப்பி எழுதுங்கள். கூட்டம் நடத்துங்கள். மக்களிடத்தில் சொல்லுங்கள். இல்லை என்றால் எந்த வரலாறும் நமக்கு இல்லை என்று எழுதிச் சென்று விடுவான்.
பாளையக்காரர்கள் சாதி, மதம் கடந்து நின்றார்கள். ஒரு விவரத்தை நான் சொல்ல விரும்புகின்றேன். மருதுபாண்டியர்கள் ஆதரித்த, மருதுபாண்டியர்களால் பாதுகாக்கப்பட்ட இஸ்லாமிய வழிபாட்டு தலங்களைப் பற்றி ஒரு பட்டியல் இருக்கிறது. நரிக்குடி பள்ளிவாசல், பாசிப்பட்டினம் தர்கா, பெரியக்கோட்டை பள்ளிவாசல், மேப்பல் அல்லா கோவில், மதுரையில் இருக்கக்கூடிய மின்னா நூர்தீன் பள்ளிவாசல், சருக்கன் மாதா கோவில், திருப்பத்தூர் இரண்டு தர்காக்கள்- இப்படி அனைத்தையும் மருதுபாண்டியர்கள் ஆதரித்தார்கள், பாதுகாத்தார்கள். அது கிறிஸ்தவமோ இஸ்லாமோ அவர்கள் தடையாகப் பார்க்கவில்லை.
இந்த நரிக்குடி பள்ளிவாசலைப் பற்றி நாம் சொல்ல வேண்டும். (திருச்சியில்) இங்கிருக்கக்கூடிய ஜமால் முகமது கல்லூரியை நிர்வகிக்கக் கூடிய ஜமால் முகமது டிரஸ்ட் என்கின்ற அந்த தொண்டு நிறுவனத்தின் மூல தர்காதான் அந்த நரிக்குடி தர்கா. ஜமால் முகமது கல்லூரியின் வரலாறுக்குப் பின்னால் மருதுபாண்டியரின் பங்களிப்பும் இருக்கிறது. அதற்கென்று தனியாக ஒரு கிராமத்தை அவர்கள் அந்த தர்காவிற்காக எழுதி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு ஒற்றுமைதான் இந்த மண்ணின் ஒற்றுமையாக பாளையக்காரர் போராட்டமாக இருந்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ்-காரன் இந்த வரலாறை மாற்றிப் பேசினால் உடனடியாக வழக்கை பதிவு செய்யுங்கள். உடனடியாக அதற்கான வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். காவல்துறைக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. இந்த வரலாறுகளை மாற்றி பேசக்கூடியவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது. ஏனென்றால் பொய் செய்திகளை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனியாகத் துறையை வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ்-காரர்கள் பேசுகின்ற அனைத்துமே பொய்ச்செய்திதான். ஒன்று கூட உண்மை கிடையாது.
மருதுபாண்டியர்களுக்கு துணையாக நின்ற தூந்தாஜி வாகை ஆர்எஸ்எஸ்-யினுடைய மூதாதையரான பேர்ஷூவாக்கள் காட்டிக் கொடுத்தார்கள். பேர்ஷூவாக்களின் வம்சாவளியினர்தான் தஞ்சாவூரில் அரசர்களாக இருந்தார்கள். அந்த அரசர்களிடத்திலே இந்த புரட்சிக்கு துணை செய்ய வேண்டும் என்று மருதுபாண்டியர் தூது அனுப்புகிறார்கள். மயிலப்பன் சென்றார் என்று நினைக்கின்றேன். அவரை கைது செய்து வெள்ளையரிடம் ஒப்படைத்து புரட்சியினுடைய திட்டத்தை மொத்தமாக அழித்த வரலாறுதான் இந்த ‘வீர சிவாஜி’யின் வம்சாவழியினர் வரலாறு. இந்த ‘வீர சிவாஜி’ யை (ஆர்.எஸ்.எஸ்.) உன் மராத்தியோடு வைத்துக்கொள்ளவும். எனக்கு அவர் அந்நியர்தான். எனக்கு அவர் ஆக்கிரமிப்பாளர்தான். வீர சிவாஜிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
‘உன்னுடைய ஆட்சி/சரபோஜி ஆட்சி இங்கு என்ன செய்தது?’ என்பதை நாங்கள் வேறு ஒரு கூட்டத்தை வைத்து கேள்வி கேட்போம். நீ (ஆர்.எஸ்.எஸ்.) சிவாஜியை உங்கள் ஊரில் வைத்துக்கொள், எங்கள் ஊருக்கு கொண்டுவராதே. எங்களுக்கென்று அரசர்கள் இருக்கிறார்கள், எங்களுக்கென்று வரலாறு இருக்கிறது, எங்களுக்கென்று புரட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
பேர்ஷூவாக்களின் ஆட்சி யாருக்கு எதிராக இருந்தது? வெள்ளையருக்கு எதிராக யாரெல்லாம் போரிடுகிறார்களோ அவர்களை எல்லாம் காட்டி கொடுப்பதுதான் பேர்ஷூவாக்களின் ஆட்சி. யாரந்த பேர்ஷூவாக்கள்? ஆர்எஸ்எஸ்காரர்களின் மூதாதயர்கள்தான் பேர்ஷூவாக்கள்.

ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு, தலைமறைவான பயங்கரவாத அமைப்பு. காந்தியடிகளை படுகொலை செய்த அமைப்பு, சுபாஷ் சந்திர போஸை காட்டி கொடுத்த அமைப்பு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்காக படை திரட்டி கொண்டிருக்கும் பொழுது, சுபாஷ் சந்திர போஸ் படைகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வெள்ளையனுக்காக படை திரட்டி கொடுத்தவர் சாவர்கர். இதை இதுவரைக்கும் கிட்டத்தட்ட 50-60 கூட்டங்களில் சொல்லி இருக்கிறோம்.
சாவர்கர்தான் ஆங்கிலேயருக்கு படையை திரட்டிக் கொடுத்து, சுபாஷ் சந்திர போஸ் படையை அழியுங்கள் என்று அவர்களுக்கு உதவி செய்தவர். அதே சாவர்கர்தான் ஆயுதத்தை கொடுத்து கோட்சேவின் வழியாக காந்தியை படுகொலை செய்தார். ஆக சாவர்கரினால் படுகொலையான இரண்டு பெரும் தலைவர்கள் -ஒருவர் சுபாஷ் சந்திர போஸ், இன்னொருவர் காந்தியடிகள்.
நீங்கள் இனிமேல் மேடையில் பேசும்போது தெளிவாக சொல்லுங்கள்- ஆர்எஸ்எஸ்காரன், இந்து முன்னணிக்காரன், இந்துத்துவ அமைப்பை சார்ந்தவன்- இவன் செய்த மிகப்பெரும் படுகொலை என்பது காந்தி படுகொலை மட்டுமல்ல, சுபாஷ் சந்திர போஸின் படுகொலை மட்டுமல்ல, சுபாஷ் சந்திர போஸின் படையில் இருந்த இந்திய தேசிய ராணுவத்தினுடைய பல்லாயிரக்கணக்கான போராளிகளை காட்டி கொடுத்து அழித்தவர் சாவர்கர். ஒவ்வொரு நகரத்திலும் வெள்ளையனுக்காக படை திரட்டுகின்ற ராணுவ முகாமை நடத்தியவர் சாவர்கர். அன்றைக்கு சுபாஷ் சந்திர போசின் படையை தடுத்து நிறுத்தக்கூடிய ராணுவ வலிமை ஆங்கில அரசுக்கு கிடையாது. காரணம் அன்று ஆங்கில அரசு இங்கிலாந்தை பாதுகாக்க முடியாமல், லண்டன் நகரை பாதுகாக்க முடியாமல் ஹிட்லரிடம் மாட்டி சிக்குண்டு சிதறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவை காப்பாற்ற முடியாது என்று நன்றாக அறிந்த ஆங்கில அரசு, சிங்கப்பூரை, மலேசியாவை, பர்மாவை கைவிட்டு ஓடி வந்த ஆங்கில அரசு, இந்தியாவிற்குள் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் பொழுது, ஜப்பானிய படை வருகிறது. அதற்கு முன்னணி படையாக சுபாஷ் சந்திர போசின் படை வருகிறது. அவர் பர்மாவைக் கடந்து, மலேசியாவின் வழியாக பெரும் படையை திரட்டி அவர்கள் வடகிழக்கு மாகாணங்களின் வழியாக, அசாமின் வழியாக உள்ளே நுழைய போகிறார் என்ற செய்தி வந்ததைக் கண்டு அஞ்சி நடுங்கி குலை நடுங்கிக் கிடந்த ஆங்கில அரசை சந்தித்துப் பேசினார் சாவர்கர். “கவலைப்படாதீர்கள், உங்களுக்காக நான் படைத்திரட்டித் தருகிறேன்” என்று சொல்லி, ஒருவர் அல்ல, இருவர் அல்ல 10 லட்சம் பேரை திரட்டி கொடுத்தவர் சாவர்கர். மதுரை, திருச்சி, சென்னையில் கேம்ப் போட்டு இந்து மகாசபைக்காரன் (ஆர்எஸ்எஸ்-காரன்) வெள்ளையனுக்கு படைதிரட்டியது வரலாறு.
முத்துராமலிங்க தேவர் ஒருபுறம் சுபாஷ் சந்திர போசிற்காக படை திரட்டிக் கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு நேர் எதிராக, அவர் திரட்டிய படையை வீழ்த்துவதற்காக சாவர்க்கர் படை திரட்டிக் கொண்டிருந்தார். இன்று ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணிக்காரர்கள் முத்துராமலிங்கத் தேவர் படத்தை தூக்கி கொண்டு வந்தால் அதை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டிய பொறுப்பு அந்த இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு இருக்கிறது.
இதை கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு மேடையிலும் சொல்லி வருகிறோம். எங்களுக்கு இதுவரைக்கும் இந்து முன்னணி, இந்து மகாசபை, பிஜேபி என ஏழு ஆண்டுகளில் யாரும் பதில் சொல்லவில்லை, மறுப்பு சொல்லவில்லை. மருதுபாண்டியர்களுக்கு துணையாக நின்ற தூந்தாஜி வாகை காட்டி கொடுத்தவன் இங்கே சுபாஷ் சந்திர போஸ் படையையும் காட்டி கொடுத்திருக்கின்றான். அவனுடைய வரலாறு என்பது நமது புரட்சியை காட்டி கொடுப்பது, நமது நிலத்தை காட்டி கொடுப்பது. அந்த ஆர்எஸ்எஸ்காரனை விரட்டி அடிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. 225 வருடங்களாக நம்மை வீழ்த்துகின்ற சக்தியாக இருக்கக்கூடிய இந்துத்துவ அமைப்பை விரட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதிலே கட்சி கடந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்கின்ற கோரிக்கையை ஒவ்வொரு மேடையிலும் சொல்கிறோம், இங்கும் நாம் சொல்கிறோம்.
தேர்தல் வரும்போது கட்சியாக நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நில்லுங்கள், எந்த கூட்டணியிலும் நில்லுங்கள். ஆனால் இனத்தை காக்க வேண்டும் என்று வந்துவிட்டால் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நில்லுங்கள் என்றுதான் மே 17 இயக்கம் ஒவ்வொரு மேடையிலும் சொல்லுகின்றோம். எங்களுக்கு தேர்தல் கடந்த அரசியல், இனத்தின் அரசியல் வேண்டும். இந்த இனம், இந்த நிலம் விடுதலை அடைய வேண்டும். அதுதான் தந்தை பெரியாரின் முழக்கம். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்கின்ற முழக்கம்.

அந்த முழக்கத்தை முன்னெடுத்து செல்வதுதான் நமக்கு வரலாற்றில் இருக்கக்கூடிய மாபெரும் கடமை. மருதுபாண்டியர்கள் அன்றைக்கு வெள்ளைக்கார வரிக் கொடுமைக்கு எதிராக மக்களைத் திரட்டினார்கள். சுயமரியாதை உணர்வை மூட்டி மக்களைத் திரட்டினார்கள். இன்றைக்கும் வரி கொடுமை மிக அதிகமாக இருக்கிறது. நம் வரி கட்டாத பொருள் என்று எதுவும் கிடையாது. பிறந்தால் வரி, இறந்தால் வரி. ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் வரி. எல்லாத்துக்கும் வரி போடுகின்ற கொடும் அரசு, கொடுங்கோல் அரசு டெல்லியிலே உட்கார்ந்திருக்கிறது.
(மோடி அரசு) வசூலிக்கக்கூடிய வரியை மக்களிடத்தில் பகிர்ந்து கொடுப்பதில்லை. நமக்கு பலன் தரக்கூடிய நலத்திட்டங்களை அங்கீகரிப்பதில்லை. நம்முடைய நலத்ததிட்டங்களுக்கான சட்டங்களை நிராகரிக்கிறார்கள். தமிழ் மொழியினுடைய தொன்மையை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். கீழடி அறிக்கையை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். இந்த இனத்தினுடைய வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்.
திமுக அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு பன்னாட்டு நிறுவனத்தை சென்னைக்கு அருகில் கொண்டு வருவதற்காக ஒரு பெரும் முயற்சி எடுத்து, அதில் வேலை செய்யக்கூடியவர்களுக்காக வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் செலவு செய்து 18000 வீடுகளைக் கட்டினார்கள். அந்த கம்பெனி திறக்கப்பட போகிற சமயத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படக்கூடிய காலகட்டத்தில் அந்த கம்பெனியை மிரட்டி உத்திரப் பிரதேசத்திற்கு கொண்டு போய் விட்டான். இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் நமது வரிப்பணத்தில் போட்ட அந்த 800 கோடி ரூபாய் என்ன ஆனது? முதல் என்ன ஆனது? நிலம் என்ன ஆனது? அதற்கான அனைத்து வசதிகளும் உருவாக்கிக் கொடுத்த கட்டமைப்புகள் என்ன ஆயின? இதுபோல ஒன்றல்ல, இரண்டுல்ல நூறு திட்டங்கள் தமிழ்நாட்டிலே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
எனக்கு தெரிந்த நண்பர், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர், அவர் சொன்னார்- கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயை நாங்கள் முதலீடு செய்து இங்கே (தமிழ்நாட்டில்) எங்கள் நிறுவனத்தினுடைய கிளையைத் திறக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் மோடி அரசு எங்களுக்கு தமிழ்நாட்டில் இந்த கிளையைத் திறப்பதற்கு நாங்கள் அனுமதி தர முடியாது, வேண்டுமென்றால் உத்தரபிரதேசத்திலோ குஜராத்திலோ திறந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

“உத்தர பிரதேசத்திலும் குஜராத்திலும் எங்களுக்கு தேவையான தொழிலாளர் கிடைக்க மாட்டார்கள். அதற்கான வசதி வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. நாங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் எங்கள் தொழிலை நடத்த முடியும். ஆகவே நாங்கள் இந்த திட்டத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது என்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் கொண்டு வருவோம். அனுமதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இந்தியாவிற்கு வரவில்லை” என்று சொல்லி சென்றுவிட்டார். இதை அவர் (நண்பர்) நேரடியாக என்னிடத்தில் கூறினார். இவ்வளவு அநியாயம் அட்டூழியம் பிஜேபிக்காரன் செய்து கொண்டு இருக்கிறானே, இவனை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டாமா? சொல்லுங்கள்!! இது வெறும் கட்சி அரசியலா?
கீழடியை அங்கீகரிக்க மாட்டார்கள், தமிழ் மொழியை அங்கீகரிக்க மாட்டார்கள், நிதி தரமாட்டார்கள், நீட் தேர்வுக்கு விலக்கு தரமாட்டார்கள், எங்களுக்கு வரக்கூடிய முதலீடுகளை எல்லாம் வடநாட்டுக்கு மாற்றி விடுகிறார்கள். இவ்வளவு செய்யும் பாஜக வினை எவ்வளவு காலம் பொறுப்பது?
இதோடு எங்களுக்கு தலைக்கு மேல் வரி. சப்பாத்தி மெஷினுக்கு 5% வரி, இட்லி மெஷனுக்கு 18% வரி, என்ன கணக்கு இது? ஏனென்றால் சப்பாத்தி உண்பது வடநாட்டுக்காரன், இட்லி உண்பது தென்னாட்டுக்காரன். தமிழனுக்கு 18% வரி வடநாட்டுக்காரனுக்கு 5% வரி. இப்படி நம்மை இரண்டாம்தர மக்களாக நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக கட்சிக்கு எதிரான ஒரு மாபெரும் எழுச்சியை செய்ய வேண்டும் என்றால் மருதுபாண்டியர் பிரகடனத்தை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். அதிலே வெள்ளையன் என்று போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்று எழுதி வைத்து கொள்ளுங்கள். இங்கிலாந்து என்று சொல்லக்கூடிய இடத்தில் எல்லாம் டெல்லி அரசு என்று எழுதி வைத்து கொள்ளுங்கள். அறிக்கை இன்றும் உயிரோடுதான் இருக்கிறது.
அன்பானவர்களே, இந்த ஜம்பு தீபகற்ப பிரகடனம் என்பது தமிழ் நிலத்தினுடைய, தமிழ் இனத்தினுடைய பெருமைமிகு பிரகடனம், ஜனநாயக பிரகடனம். காரணம் பிரெஞ்ச் புரட்சியோடு தொடர்பு கொண்டவர்கள் மருதுபாண்டியர்கள். இந்த பிரெஞ்ச் புரட்சியாளர்களோடு தொடர்பு கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் திப்பு சுல்தான். அமெரிக்காவினுடைய புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர் திப்பு சுல்தான். அந்த வழியிலேதான் மருதுபாண்டியர்களும் ஜனநாயக புரட்சியை ஆதரித்தார்கள். ஜக்கோபியன் கிளப் என்று ஒரு கிளப் இருக்கிறது. அந்த காலத்தில் ‘சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்’ என்கின்ற முழக்கங்களை முன்வைத்த அந்த குழுவிலே தன்னையும் இணைத்துக் கொண்டவர் திப்பு சுல்தான். அவர் வழியிலே மருதுபாண்டியர்களும் அதற்கு ஆதரவாக நின்றார்கள். மருதுபாண்டியரை சந்திப்பதற்காக பிரெஞ்ச் புரட்சியுடைய தூதர்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததாக வெள்ளையர் அரசு ஆவணம் வைத்திருக்கிறது. அந்த ஆவணத்தின்படி அவர்கள் கரூர் வரை வந்தார்கள். அரவக்குறிச்சி வரை சென்றார்கள் என்று குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆக உலகளாவிய அளவிலே தொடர்பு கொண்ட ஒரு மாபெரும் புரட்சி கட்டமைப்பில் தங்களை இணைத்துக் கொண்ட மருதுபாண்டியர்களின் இந்த தமிழ் நில விடுதலை என்கிற பிரகடனம், அடுத்த ஆண்டு 225ஆம் ஆண்டாக நடக்க இருக்கிறது. இந்த மேடையில் இருக்கக்கூடிய ஆளுமைகளுக்கு நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம்-அடுத்த ஆண்டு ஒரு மாபெரும் எழுச்சி கூட்டத்தை நாம் நடத்தவேண்டும். அனைத்து அமைப்புகளும் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டுவோம். 225ஆம் வருடம் என்கின்ற ஒரு மாபெரும் வரலாற்று காலகட்டத்தை அடையாளப்படுத்தி, 225ஆம் ஆண்டில் அந்த பிரகடனத்தினுடைய முக்கியத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் சொல்வோம். லட்சக்கணக்கான தமிழர்களை, சாதி, மதம் கடந்து, கட்சி கடந்து ஒன்று திரட்டுவோம். தமிழர்களாக அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற முயற்சிக்கு நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அனைவரும் இணைந்து பொது பெயரில் கூட நாம் மாபெரும் மாநாட்டை நடத்தி, லட்சக்கணக்கான தமிழர்களை திரட்டுவோம். தமிழர் வரலாறு எவ்வளவு சிறப்பானது என்று உலகத்திற்கு காட்டுகின்ற அந்த எழுச்சி கூட்டத்தை நடத்தி, பாரதிய ஜனதா கட்சி எனும் நரிக் கூட்டத்தை வடநாட்டை நோக்கி ஓட ஓட விரட்டுவோம் என்று சொல்லி, நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி! வணக்கம்!!” என்று மிக விரிவாக பல வரலாற்று தகவல்களுடன் தலைமை உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கத்தின் தோழர் ஜீவா அவர்கள் கூட்டத்தினை நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார். பெருந்திரளான மக்களின் ஆதரவுடனும் பங்கேற்புடனும் இந்நிகழ்வு நடைபெற்றது.