மதுரையில் கனிமவள சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை திரும்பப் பெறச் சொல்லி தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் பொருட்படுத்தாமல், மீண்டும் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதனை அனுமதிக்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தும், மோடி அரசு அத்துமீறி தமிழர்களை அழித்த வேதாந்தா நிறுவனத்தை அழைத்து வருகிறது.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுக்கா, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு கடந்த நவம்பர் 7, 2024 அன்று ஏலம் விட்டது. சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் கனிம வளம் எடுக்க ஏலம் எடுத்த ’இந்துஸ்தான் சிங்க் லிமிடெட்’ ஸ்டெர்லைட் வேதாந்தாவின் கிளை நிறுவனம். இது மட்டுமல்ல, கிட்டத்தட்ட 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரிட்டாபட்டியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல்லுயிர் மரபு சூழல் தளமாக உள்ளது. இந்தப் பகுதியில் சுரங்கம் அமைப்பதால் தமிழர்களின் பண்பாட்டு சின்னங்களும், கல்வெட்டுகளும், தொல்லியல் ஆய்வுகளும் அழிக்கப்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும், இதை முழுமையாக கைவிட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முற்போக்கு அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றனர். தமிழக அரசும் முன்வந்து சட்ட மசோதா இயற்றி டிசம்பர் 9, 2024 அன்று தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. ஆனால் மீண்டும் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு டிசம்பர் 24, 2024 அன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டங்ஸ்டன் கனிமம் என்பது கடினத் தன்மையையும், 3,600° C வெப்பத்தையும் கூட தாங்கும் திறன் உடையது. யுரேனியம் பொருளுக்கு மாற்றாக பயன்படக் கூடியது. மின்சார, மின்னணுப் பொருட்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், ராணுவ கவசங்கள், ஏவுகணைகள், செயற்கைகோள், ராக்கெட் மற்றும் விமானம், சாயம், அச்சு என பல பொருள்கள் தயாரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் இதன் உற்பத்தி குறைவாகவே இருக்கிறது.
இதனைக் கண்டறிதல் தொடர்பான ஆய்வுகள் 1990-ல் தொடங்கி 1996ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு ஆய்வு நிறுவனமான ’ஹைதராபாத் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர்’- செய்தது. ஏப்ரல் 2, 1996-ல் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது அந்நிறுவனம். மேலும் ஒன்றிய அரசின் நிறுவனமான ’ஜியோலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’ 2019-ல் மதுரை நாயக்கர்பட்டி பகுதியில் உள்ள சில கிராமங்களில் கனிமவளம் இருப்பதை உறுதி செய்துள்ளது.
கடந்த காலங்களில் மட்டும் 110க்கு மேற்பட்ட சோதனை குழிகள் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2018ல் ரவிச்சந்திரன் என்ற சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரால் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்னர் சோதனை தடுத்து நிறுத்தப்பட்டது. இது போன்ற சோதனை வேறு பகுதியில் நடத்தப்பட்டதா என்று கூட மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. இந்த சோதனை குறித்து வட்டாட்சியர் அலுவலரும் “ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொண்டது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை” என பத்திரிகையாளரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சுரங்கம் அமைப்பதற்காகவும் ஆலை நிறுவுவதற்காகவும், நல்ல நீர் தேவைக்காக சுமார் 16,000 கோடியில் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவது என்ற பெயரில், காவிரி- தென்வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் செறிவூட்டல் என அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி காவிரியிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் மூன்றில் இரண்டு (2/3) மடங்கு தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் என 2021 நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து மக்களுக்கு முழுமையாக தகவல்கள் அளிக்கப்படாமல் இது ரகசிய திட்டமாகவே செயல்பட்டு வருகிறது.
மேலும் ஒன்றிய அரசு இருபதுக்கு மேற்பட்ட ’ அரிதான கனிமங்கள்’ (Critical Minerals) தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. இவ்வாறு முழுக்க முழுக்க மாநில உரிமையை பறிக்கும் சட்டங்கள் மூலம் மாநில அரசை அடிமையாக நடத்தும் திட்டமே ஒன்றிய அரசிற்கு இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே ‘மீத்தேன் ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிராக நாம் போராடியபோது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை கூட ஏற்று அங்கீகரிக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்தது. தற்போது வரை மதுரையை ‘தமிழ் பண்பாட்டு மண்டலம்’ எனவும், முல்லை பெரியார் பாசன பகுதியை ‘பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என அறிவிக்கவும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களின் எதிர்ப்புக்குரலை கண்டுகொள்ளாமல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளில் ஒட்டுமொத்த 35 ஆயிரம் ஏக்கள் பரப்பளவில் கனிம வளங்களை சூறையாடுகிறது ஒன்றிய அரசு.
மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சட்டமன்றம் ஒரு மனதாக சட்ட மசோதா இயற்றி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ‘நாயக்கர்பட்டி பிளாக்’ என்று தந்திரமாக பெயர் வைத்து அரிட்டாபட்டி வளத்தை அழிக்க வருவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களான தோழர். சு.வெங்கடேசன் அவர்கள் கேள்வி எழுப்பியதும்தான், மற்ற மாநில பிரதிநிதிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 25 இடங்களில் உள்ள கனிம வளங்களை, மக்களும் அறியாது, நாடாளுமன்றமே அறியாது ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்றுவரை அரிதான உலோகங்கள் வரிசையில் டங்ஸ்டன் உலோகமும் அதனை எடுக்கும் சுரங்கமும் சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தும் பெருங்கேடுகளை பல வேதியியல் வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். பெரும்பாலும் சயனைடுகள், அமிலங்கள் போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி பாறையிலிருந்து உலோகத்தை பிரித்தெடுப்பதால், இவை அந்தப்பகுதியில் உள்ள இயற்கை வளம் அனைத்தையும் மாசுபடுத்தி விடுகின்றன. இந்த ரசாயனங்கள் கலந்தால் ஆறுகளும் பாழ்பட்டு, அதிலிருந்து நீர் பருகும் பல்லுயிர்களும் நோய்வாய்ப்படும் நிலை ஏற்படும். மேலும் அங்கிருக்கும் நிலப்பரப்பு நஞ்சாவதால் வேளாண்மையும் பெருமளவில் பாதிக்கப்படும்.
மேலும், டங்ஸ்டன் போன்ற கன உலோகங்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகள் புற்றுநோய்க்கு வாயிலாகவும் உள்ளன. இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் பிரச்சினைகள், கருவுறாமை போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் உலகெங்கிலும் இத்தகைய சுரங்கங்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள்.
மேலும் லண்டன் வாழ் நபரான ‘அனில் அகர்வால்’ எனும் மார்வாடிக் கும்பலுக்கு சொந்தமானது வேதாந்தா நிறுவனம். இது தொழில் நடத்துவதற்கு ஏற்கனவே தூத்துகுடியில் 15 தமிழர்களை சுட்டு படுகொலை செய்துள்ளது. இத்தகைய நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் வாழ்வியலை பறித்து, உடல் நலனை சீரழித்து லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் லாப வெறிக்கு நம் வருங்கால தலைமுறைகளும் பலியாக வேண்டுமா என்கிற கேள்வியை போராடும் மக்கள் எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு முதற்கொண்ட மாநிலங்களின் வளத்தை குஜராத்தி பனியா நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏலம் விடுகின்றது ஒன்றிய அரசு. மேலும் மாநிலங்களுக்குரிய வளத்தை ஏலம் விட ஒன்றிய அரசிற்கு மட்டுமே அனுமதி என சட்டம் கொண்டு வருகிறார்கள். பல்லாண்டு காலங்களாய் மக்களுக்கு சேர வேண்டிய பல்லாயிரம் கோடிகள் அளவிலான வளம் குறிப்பிட்ட சில குசராத்தி மார்வாடி பனியா பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சேர்கிறது. மாநிலங்களுக்கு சூழலியல் சீர்கேட்டையும், கனிமக் கொள்ளையை குசராத்தி நிறுவனங்களுக்கும் என மாநிலங்களுக்கு மோசடியை துணித்து செய்கிறது மோடி அரசு. சூழலியல் சீர்கேடு மட்டுமல்லாமல், தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், வரலாற்று கல்வெட்டுக்களை அழிக்கும் மோடி அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்.