தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு
மோடி அரசின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கிய படைப்புகள் பல பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக, டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டெல்லி பல்கலைகழக்கத்தின் இந்த செயல், அறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் எழுத்துக்களான பாமாவின் ‘சங்கதி’, சுகிர்தராணியின் ‘கைம்மாறு’, ‘என்னுடல்’ ஆகிய படைப்புகளும் மற்றும் வங்க எழுத்தாளர் மறைந்த மகாஸ்வேதாதா தேவியின் ‘திரௌபதி’ என்ற படைப்பும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
அவற்றைப் டெல்லி பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 24 அன்று திடீரென தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறது, இந்தப் படைப்புகளைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கும் முடிவை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக்குழு எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு, பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக்குழு உறுப்பினர்கள் 15 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி இந்தப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இந்து தன்னிச்சையான மற்றும் கல்வி மாற்றங்கள் ஆங்கில துறையின் பாடத்திட்ட குழு அல்லது பாடத்திட்ட குழு பங்களிப்பாளர்களிடருந்து எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் திணிக்கப்பட்டது என்று கல்விக் குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல பல்கலைக்கழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் இருந்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மாற்றாக முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களான சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது போல் பல இடங்களில் தொடர்ந்து ஒன்றிய அரசு இவ்வேலைகளை செய்கிறது. வட இந்தியாவில், தமிழ் படைப்பாளிகளுக்கு மதிப்பு இல்லை என்பதை பல்வேறு இடங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். சாதிய ரீதியிலும், மொழியல் ரீதியிலும் இத்தகைய நடவடிக்கை அத்துமீறலாகவே இருக்கிறது. கடந்த காலங்களில், இதுபோன்ற செயல்பாடுகள் நடந்துள்ளது.
தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் என்பது வெவ்வேறு விதத்தில் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி-யில் தலித் மாணவர்களைப் படிக்க விடவில்லை என்ற மிகப்பெரிய பிரச்சனை வெடித்ததைக் கடந்த காலங்களில் நீங்கள் பார்த்திருக்க முடியும். சென்னை ஐஐடியில் படித்த மற்றும் வேலை பார்த்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்ததற்குக் கண்டனங்கள் எழுந்தது. உயர் சாதி இல்லாத பேராசிரியர் கூட மன அழுத்தம் எற்பட வைத்து வேலையை விட்டு போக வைப்பது, எனினும் இப்பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
பாஜக ஆட்சியில் தலித்துகளுக்குத் தொடர்ந்து ஒடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமே உள்ளது, ஒரே இரவில் பாடநூலிலிருந்து தலித் எழுத்தாளர்களின் பாடங்கள் எந்தவித ஆலோசனைகள் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்பார்வை குழு எப்போதுமே தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக தவறான எண்ணத்தை காட்டுகிறது. பாடத்திட்டத்திலிருந்து இதுபோன்ற குரல்களை அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. மேற்பார்வைக் குழுவில் தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையில் சில நுண்ணுணர்வு உள்ளவர்களை கொண்டு வர வேண்டும் என்று மேற்பார்வைக் குழுவுடன் கருத்து வேறுபாடு கொண்ட உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்பார்வைக் குழு “வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல்” போன்ற துறைகளை கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்போது முடிவில்லாமல் தொந்தரவு தொடர்கிறது. அதுவும் இந்த 5வது செமஸ்டருக்கு மட்டும் தொந்தரவு அளிக்கிறது என்று கல்விக் குழு உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
மறைந்த எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர். வங்கமொழி எழுத்தாளரான மகாஸ்வேதா தேவி, ‘1084ன் அம்மா’ நாவல், ‘மார்பு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு , ‘ஆரன்யெர் அதிகார்’ ‘ஹஜார் சவுரஷிர் மா’, ‘அம்ரிதாஷன்சார்’, ‘அக்னி கர்பா’, ‘பிஷ்-ஏகுஷ்’, ‘சோட்டி முண்டா இவான் தார் திர்’, ‘மூர்த்தி’ உள்ளிட்ட இவரது படைப்புகளை எழுதியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேல் சமூக அக்கறை கொண்ட ஒரு சிறந்த படைப்பாளியாகச் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் உரிமைகளுக்காக செயல்பட்டவர்.
மகாஸ்வேதா தேவி, சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, ஆசிய நோபல் பரிசு, ராமன் மகசேசே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். சமூகப்பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் விருது மற்றும் மேற்குவங்க அரசின் வங்க விபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய எழுத்தாளர் பாமா, தனது முதல் நாவலான ‘கருக்கு’ மூலம் அறியப்பட்டார். தலித்களின் வாழ்க்கையை மிகவும் நுட்பமாக சித்தரித்த பாமாவின் படைப்புகள், சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அவருடைய எழுத்துகள் காத்திரமாக வெளிப்பட்டன. சங்கதி நாவலையும் தாத்தாவும் எருமை மாடுகளும் சிறுகதை தொகுப்பு உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.
மேலும் இவர் கூறுகையில் பட்டியலின படைப்பாளிகள் பற்றிய படைப்புகள் தலித் மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் பற்றி இளம் தலைமுறையினருக்கு தெரிய கூடாது என்று இப்படைப்புக்களை நீக்கியுள்ளனர். நெருப்பை ஊதிவிட்டால் இன்னும் எரியும் அதுபோல என் படைப்புகள் இன்னும் வீரியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கவிஞர் சுகிர்தராணி, ‘கைப்பற்றி என் கனவு கேள்’ கவிதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவிஞராக அறிமுகமானார். இரவு மிருகம், காமத்திப்பூர், தீண்டப்படாத முத்தம், அவளை மொழிபெயர்த்தல் ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். சுகிர்தராணி தனது கவிதைகளில், தலித்களின் கோபத்தையும் பெண் உடலையும் மிகவும் காத்திரமாக எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து கவிஞர் சுகிர்தராணி, தமது கைம்மாறு கவிதை மலம் அள்ளும் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றியது என்றும் இத்தகைய படைப்புகளை நீக்குவது இந்துத்துவத்தின் அரசியல் கண்ணோட்டத்தில் இருந்தே செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பெண் என்பவள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்ற வேண்டும் என்ற இந்துத்துவத்தின் பெண் குறித்த பார்வையும் இதற்குப் பின்னால் இருக்கிறது என்று கூறிய சுகிர்தராணி, ஒருவேளை இதனை ஒடுக்கப்பட்டோர் அல்லாதவர்கள் எழுதியிருந்தால் அதை அனுமதித்திருப்பார்களோ என்றும் கேள்வி எழுப்பினார். ஒடுக்கப்பட்டவர்களே அவர்கள் வாழ்க்கை குறித்து எழுதுவது உறுத்தலாக இருந்திருக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மகாஸ்வேதா படைப்புகள் பழங்குடி மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படைப்புகளாக இருந்தன. சுகிர்தராணி மற்றும் பாமாவும் எழுதிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.
இந்திய நாட்டை இந்ததுத்துவமயமாக்கும் முயற்சியில் ஒரு நீண்டகால திட்டத்துடன் மோடி அரசு ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. மனுநீதியை அடிப்படையாக கொண்ட நவீனகால இந்துத்துவத்திற்கான வரலாறு வெற்றிடமாக இடமாக உள்ளது. மாறாக, வரலாற்றில் முற்போக்கு கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதும், பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் வலிமிகுந்த எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதும் இந்துத்துவம் அச்சுறுத்தலாக பார்க்கிறது. ஆகவே வரலாற்றை மாற்றியமைக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உண்மையான வரலாற்றை நீக்குவதும், இந்துத்துவத்திற்கு ஏற்றவாறு திருத்தி எழுதுவதையும் திட்டமிட்டு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் டில்லி பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை.
ஒடுக்கப்பட்டவர்களின் குரலைக் காணாமல் ஆக்குவதை ஏற்றுக்கொள்ள இயலாது. பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுவதில் சாதிய, இந்துத்துவ பின்புலம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்த கூடாது என்ற எண்ணமே தவிர வேறு என்ன இருக்க முடியும்? மோடி அரசு எப்போதும் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக பேசும் குரல்வளையை நசுக்கும் நோக்கம் தான் இப்பேர்ப்பட்ட படைப்புகளை அழிக்கிறது.