எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

யானையைக் கட்டி தீனி போட முடியாது என்பது பழமொழி. சிலிண்டரை மாட்டி இனி தீனி சமைக்க முடியாது என்பது புதுமொழியாகி விடும் போலிருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் ரூ.595 ரூபாய்க்கு விற்கப்பட்ட எரிவாயு உருளையின் இப்போதைய 2021 ஆகஸ்ட் மாத விலை 875 ரூபாய். எட்டு மாதத்திற்குள் 280 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. சாமானிய மக்களுக்கு கட்டுப்படியாகாத இதன் விலையேற்றத்திற்கு காரணங்கள் மிகவும் நுணுக்கமான வலைப்பின்னல்களைக் கொண்டது. எளிதில் புலப்படாத விலை நிர்ணய முறைகளை உடையது.

பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலமும் சமையல் எரிவாயு கிடைக்கிறது. முதலில் கழிவு வாயுவாக வீணாக்கிக் கொண்டிருந்த சமையல் எரிவாயு 1973-க்கு பிறகு தான் ஆலைகள் உருவாக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டது. படிப்படியாக விரிவடைந்த அதன் அதிவேக வளர்ச்சியால் எரிவாயுச் சந்தை உலகளாவிய சந்தையாக மாறியது..

நமது எரிவாயுத் தேவையானது உள்நாட்டில் உற்பத்தி செய்யும் 50% எரிவாயு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் 50% எரிவாயு மூலம் பூர்த்தியாகிறது. சமையல் எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்படும் விலையானது டாலரிலும் மற்றும் இறக்குமதி ஒப்பீட்டு விலை (Import Parity price) அளவிலும் கணக்கிடப்படுகிறது. இந்த இறக்குமதி ஒப்பீட்டு அளவானது சவுதி அராம்கோ என்கிற LPG தயாரிப்பு நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, கப்பலில் ஏற்றும் செலவு, சுங்க வரி, காப்பீடு, போக்குவரத்து கட்டணம் போன்ற இதர செலவீனங்களை உள்ளடக்கியது. அது தவிர இங்கு இறக்குமதியானதும் இறக்கும் செலவு, உள்நாட்டு போக்குவரத்து செலவு, விளம்பர செலவு, சிலிண்டரில் அடைக்கும் செலவு, வரி விதிப்பு போன்ற உள்நாட்டு செலவீனங்கள் தனியானவை.

இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும் என்ற கேள்வியில் தான் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. இதில் தான் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தின் வழியும் திறந்திருக்கிறது.

இந்தக் கொள்ளை லாபத்தை தான் அரசு நிர்ணயிக்கும் விலையினால் குறைவான வசூலே கிடைக்கிறது என எண்ணெய் நிறுவனங்கள் கண்ணீர் விட அரசும் எண்ணெய் நிறுவனங்களே விலைகளைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கண்ணீரைத் துடைத்து விட்டிருக்கிறது. முதலில் நட்டத்தில் இயங்குகிறது எனக் கருதிய அரசின் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை அரசு செய்து கொண்டிருந்தது. இன்றைய மோடி அரசு குறைவான வசூல் கிடைக்கிறது என பொய்க் கணக்கு காட்டி அரசுத் துறைகளை தனியாருக்கு விற்கிறது. இதன் படியே பாரத் பெட்ரோலியத்தின் (BPCL) எரிவாயுப் பயனீடு உட்பட 100% பங்குகளையும் விற்றிருக்கிறது.

சர்வதேச சந்தையில் என்ன விலை நிலவுகிறதோ அதையே இந்திய விலையாக நிர்ணயிக்கும் மோசடியில் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேறும் போதும் இங்கு எடுக்கப்படும் 50% இயற்கை எரிவாயுவிற்கும் சேர்த்து அந்த விலையின் தாக்கம் எதிரொலிக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும் சிலிண்டரின் விலை ஏற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாகும்.

எண்ணெய் நிறுவனங்கள் சுலபமான வயல்களில் எடுக்கும் இயற்கை எரிவாயு விலை 1 MBtu அளவிற்கு (MBtu என்பது மெட்ரிக் (1000) பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) $1.79 (௹134) மற்றும் கடினமான, அதாவது ஆழமான கடல் படுகை, வெப்பம், அழுத்தப் பகுதி போன்ற இடங்களில் எடுக்கும் எரிவாயு விலை 1 MBtu அளவிற்கு $3.62 (௹ 271) எனவும் உள்நாட்டு எரிவாயு விலையாக இருக்கின்றன. சர்வதேச விலை சராசரி அளவீட்டின் படி உள்நாட்டு எரிவாயு விலைகள் மூன்று மாத கால தாமதத்துடன் கணக்கிடப்படுகின்றன. அதாவது அக்டோபர் 2021-மார்ச் 2022-க்கான விலை ஜூன் 30 வரையிலான உலகளாவிய விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அங்கு கச்சா பொருட்களின் விலை ஏறிக் கொண்டிருப்பதால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையும் சேர்த்து அக்டோபர் 2021 விருந்து மார்ச் 2022 வரை 50-60% உயரும் என ONGC நிர்வாக அதிகாரி கூறுகிறார். இதனால் அம்பானி குழுமம் உட்பட இங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அதிக அளவில் லாபமீட்டும் நுகர்வோரான நமக்கு இனி சிலிண்டரின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது.

அடித்தட்டு மக்களின் தலையில் சிலிண்டர் விலை பெரும் சுமையாக இறங்கியிருப்பதற்கு சிலிண்டருக்காக வழங்கப்பட்ட மானியம் பலருக்கும் நிறுத்தப்பட்டிருப்பதும், பெரும்பான்மையினருக்கு குறைக்கப்பட்டதும் முக்கியக் காரணம். மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக மோடி அரசு அறிவித்து படிப்படியாக அதன் தொகையையும் குறைத்து விட்டது. 2015-ல் சிலிண்டர் 998 ரூபாய் விற்றபோது 563 ரூபாயை மானியமாக வழங்கப்பட்டது. ஏப்ரல் 2019-ல் சிலிண்டர் விலை 722 ரூபாய் விற்கப்பட்டது. அப்போதும் 238.27 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது 875 ரூபாய் தாண்டிய நிலையிலும் 25 ரூபாய்க்குள் தான் மானியம் கிடைக்கிறது. மானியத்துக்காக 2019-21ல் ஒதுக்கப்பட்ட நிதி தொகையான 40,915 கோடியை 2021-22ல் 12,995 கோடியாக மோடி அரசு குறைத்தும் விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள் மாதம் 5,000 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களையும் மானியத்தை குறைத்து சந்தை விலையான 850 ரூபாய்க்கே வாங்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த அரசு.

உள்நாட்டுச் சந்தையில் இயற்கை எரிவாயுத் தேவையானது சமையலைத் தவிர உரம் (28%), மின்சாரம் (23%), எரிவாயு பகிர்மான நிறுவனங்கள் (16%), சுத்திகரிப்பு நிலையங்கள் (12%) மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் (8%) ஆகியவற்றிற்கும் பயன்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 1 ரூபாய் குறைந்தாலே மின் உற்பத்தி விலை 1 யூனிட்டுக்கு 4-7 பைசா வரை அதிகரிக்கிறது. இயற்கை எரிவாயு இல்லாமல் மின்சாரத்திற்கு மாற்று வழி தேடினால் சமையல் எரிவாயுவிற்கான இறக்குமதி எரிவாயுத் தேவையை குறைக்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியே(GST) விதிக்கப்படுகிறது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஒன்றிய அரசு வரி (CGST) மற்றும் மாநில அரசு வரி (SGST) என இரண்டும் சேர்ந்து மொத்தம் 5% வரி விதிக்கப்படுகிறது. வீட்டு பயன்பாடு இல்லாத வணிகரீதியான சிலிண்டர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் விலை உயர்வுக்கு மாநில அரசு 55% வரி விதிப்பது தான் காரணம் என அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். ஆனால் உண்மையில் 5% வரியே விதிக்கப்படுகிறது. அதிகபட்சம் 25 ரூபாய்க்குள் தான் இந்த வரியும் அடங்கும். ஒன்றிய அரசின் மீது ஏற்படும் மக்களின் கோவத்தை திசைதிருப்ப சங்கிகள் எந்த பொய்யையும் கூச்சமின்றி பரப்பும் செயல்களில் இதுவும் ஒன்று.

NELP எனப்படும் புதிய எரிபொருள் தேடல் மற்றும் உரிமம் கொள்கையின் படி தனியாருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் உரிமை வழங்கப்பட்டதன் விளைவாக கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப் படுகையில் 2002-ல் இயற்கை எரிவாயுவை உறிஞ்சத் துவங்கிய அம்பானி நிறுவனம் இப்போது வரை நிறுத்தவில்லை. இன்றைய 2021 முதல் காலாண்டின் நிகர லாபம் மட்டுமே ௹ 13,806 கோடியாம். அப்படியென்றால் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் மூலம் இந்த 19 ஆண்டுகளில் அம்பானி எவ்வளவு கோடியை ஈட்டியிருப்பார் என்பது மலைக்க வைக்கும் கணக்கு.

பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரி மூலம் அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு எளிய மக்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மக்களுக்கு உரிமையான இயற்கை வளங்களை சுரண்டி மக்களிடமே அதிக விலைக்கு விற்கும் அம்பானி முதலான தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் கொழுத்து வளர்கிறார்கள். புகையற்ற சமையலை சாத்தியப்படுத்திய சமையல் எரிவாயுவின் விலைக்குள் புகை மூட்டமாய் விலை நிர்ணயக் கொள்கை நீடிக்கிறது. அதில் இந்த அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து மக்களை சுரண்டுவதும் தொடர்கிறது.

உலக வர்த்தக கழகம் (WTO) மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதை மே பதினேழு இயக்கம் 2017-ம் ஆண்டிலேயே அம்பலப்படுத்தியது. அதனடிப்படையிலேயே உணவு தானியங்களை மானியத்தில் வழங்கும் ரேஷன் கடைகளை மூடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அதற்கான திட்டத்தை உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் நிறைவேற்ற முயற்சித்த போது, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில உழவர்கள் 6 மாதமாக டில்லியை முற்றுகையிட்டு போராடி வருவதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. WTO ஒப்பந்தத்தின் ஒரு பகுதி தான் எரிவாயு உருளைகளுக்கான மானியத்தையும் நிறுத்துவது. அதற்கு, ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தி, மானியத்தை வங்கியில் செலுத்துவதாக சொன்ன ஒன்றிய அரசு, இன்று ஏறத்தாழ நிறுத்திவிட்டது.

மானியங்கள் என்பது அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவது தான். ஆனால், மேற்குலக நாடுகளை சேர்ந்த பெருநிறுவனங்கள் தங்க லாபத்திற்காக WTO மூலம் மானியங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றன. மக்களுக்கான அரசு என்றால் இதனை எதிர்க்க வேண்டும். ஆனால், அதனை செயல்படுத்துவதோடு, உள்நாட்டின் உற்பத்திக்கும் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்து அம்பானிக்கான லாபத்தை அதிகரிக்க சொந்த நாட்டு மக்களையே சுரண்டுகிறது, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இதனை மக்கள் விரோத அரசு என்று கூறுவதே பொருத்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »