ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் எதிரா பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்த அமெரிக்கா, இன்று அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி வெளியேறுகிறது! ஆனால், ஆப்கானிஸ்தான் மக்களோ அமெரிக்கா தான் தங்களை காக்க வந்த மீட்பர் என்பது போல, வெளியேறும் அமெரிக்க படையுனருடன் சொந்த மண்ணை விட்டு வெளியேற துடிக்கின்றனர். இத்தகைய சூழலை தான் அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.

மூன்றாம் உலக நாடுகளை தொடர்ந்து சுரண்டி வரும் அமெரிக்க மற்ற நாட்டு மக்களின் மத்தியில் மட்டுமல்லாது அமெரிக்க நாட்டு மக்களிடமும் சரிந்த தன்னுடைய போலியான நற்பெயரை மீட்க, ‘பிம்ப கட்டமைப்பு’ என்ற வேலையை செய்து வருகிறது. பொருளாதார பலம், பண பலம் அதன் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் ஊடகங்களை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் கூட தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மறந்து அமெரிக்காவுக்கு ஆதரவாக பேசும் நிலையை உருவாக்கும் அளவுக்கு திட்டமிட்டு வேலை செய்யும். அப்படியான வேலையை ஆண்டுக்கணக்கில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மற்ற நாடுகளுக்கிடையில், குறிப்பாக ஜப்பானிய மக்களிடம் தனக்கான நற்பெயரை உருவாக்கியது. இதன் பின்னணியில், கொலை செய்தவனே கொல்லப்பட்ட குடும்பத்திடம் உறவாடுவதை போன்ற இந்த வேலையை பொறுக்க முடியாது, உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா (Akira Kurosawa) 1991-ஆம் ஆண்டு உருவாக்கிய படைப்பு தான் “ராப்சோடி இன் ஆகஸ்ட்(Rhapsody in August)”

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதலை மையப்படுத்தி “கியோகோ முராட்டா’வால் (Kiyoko Murata) எழுதப்பட்ட”நாபே நோ நாகா (Nabe No Naka)” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் “ராப்சோடி இன் ஆகஸ்ட்”. ராப்சோடி என்றால் உணர்சிக் கொந்தளிப்பு என்று பொருள்.

1945 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அனு ஆயுத தாக்குதலால் நாகசாகியில் பலியான பல லட்சம் மக்களில் ஒருவரின் மனைவி, கேன் (Kane). போருக்கு பிந்தைய சூழிலில் வளர்ந்த கேனின் மகன் மற்றும் மகளுக்கு, ஜப்பானிய பொருளாதார அதிசய காலகட்டத்தில் பிறந்து வளரும் நான்கு குழந்தைகள். சிறுவயதில் தொலைந்து போன கேனின் அண்ணன் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ளதாகவும், தான் மரணப்படுக்கையில் இருப்பதால் தன் சகோதரியை தான் கான விரும்புவதாக கேனுக்கு தந்தி அனுப்பப்படுகிறது. கேனின் பேரக்குழந்தைகளை கோடை விடுமுறைக்காக நாகாசகியில் இருக்கும் கேனின் வீட்டில் விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு வர மறுக்கும் கேனை எப்படியாவது அமெரிக்கா வர சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற பொறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அமெரிக்கா செல்கிறார்கள் கேனின் மகன் மற்றும் மகள்.

ஒரு நாள் முழுவதும் நாகசாகியின் சீரமைக்கப்பட்ட நகர்ப்புறத்தை சுற்றிப்பார்க்க செல்லும் கேனின் பேரக்குழந்தைகள் நால்வரும், அணுகுண்டு தாக்குதலில் தங்களின் தாத்தா கொல்லப்பட்ட இடத்தை கண்டு தங்களின் வாழ்நாளில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலை நினைத்து உணர்ச்சிவசப்படுகிறார்கள். அவர்களின் தாத்தா ஒரு பள்ளி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருக்கும் போது நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு பள்ளியிலேயே பல குழந்தைகளுடன் இறக்கின்றார். அடையாளம் கண்டுகொள்ள முடியாத வண்ணம் இறந்தவர்களின் சிதைந்து போனதால் அவர்களின் உடல் கூட கிடைக்கவில்லை.

அணுகுண்டு தாக்குதலை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கும் தங்களில் பாட்டியை நினைத்து மிகவும் பெருமைபட்டு, அதே நேரத்தில் ஜப்பானின் மீது இரு அனுகுண்டுகளை வீசிய அமெரிக்காவின் முடிவை தார்மீக முறையில் கேள்வி எழுப்பி தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். குறிப்பாக போர்ச்சுகல், கியூபா, பிரேசில் போன்ற நாடுகள் எல்லாம் அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜப்பானின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக நினைவுத் தூண் அனுப்பி வைத்திருகின்றன. ஏன் அமெரிக்கா அனுப்பவில்லை என்று பேரக் குழைந்தைகள் நால்வரில் ஒருவர் கேட்கையில், தாக்குதல் நடத்திய அவர்களே எப்படி துக்கத்தில் பங்கெடுப்பார்கள் என்பதாக வசனம் இருக்கிறது.

முதலாளித்துவம் காட்டும் மாடமாளிகைகள், புதிய நவீன வாகனங்கள், செல்வம் என்பதற்கு பின்னால் ரத்தம் தோய்ந்த கைகள் இருக்கின்றன என்பதை குழந்தைகள் முதல்முறையாக உணர்கின்றனர். அதுவரை அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆவலில் இருந்த குழந்தைகள், ஜப்பானிய மக்கள் குறிப்பாக தங்களின் பாட்டி அனுபவித்த இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனவேதனையை உணர்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் பணக்காரர்களாக இருக்கும் கேனின் தம்பியின் வாரிசுகள், ஹவாயில் இருக்கும் தங்களது அன்னாசி தோட்டங்களை அங்கு தங்கி பார்த்துக்கொள்ள கேனின் மகன் மற்றும் மகளை கேட்கின்றனர். அதற்கு பதில் கடிதம் எழுதும் குழைந்தைகள், அமெரிக்கா செல்ல விருப்பம் இல்லாத பாட்டியின் பதிலை நேரடியாக சொல்லாமல் பதில் எழுதி பாட்டி வர மறுப்பதை உணர்த்துகின்றனர். அமெரிக்காவில் இருப்பவர்கள் மீண்டும் அழைப்பதால் நாகசாகி குண்டு வெடிப்பு தினமான ஆகஸ்ட் 9-ஆம் தேதி தங்களின் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திவிட்டு வருவதாக பதில் எழுத, இதையறிந்த கேனின் மகன் மற்றும் மகள்கள், தங்கள் தாய் எழுதிய பதில் கடிதத்தால் அமெரிக்கமயமாக்கப்பட்டு அமெரிக்காவில் வசிக்கும் கேனின் தம்பி வாரிசுகள் கோபம் கொள்ளலாம் என அச்சப்படுகின்றனர். பாட்டியின் மனநிலையை புரிந்து கொள்ளும் பேரப்பிள்ளைகளின் மனநிலையையும், அதைப் பற்றி கவலைப்படாது புதிய பணக்கார அமெரிக்க சொந்தங்கள் வருத்தப்படுவார்கள் என்று சிந்திக்கும் பிள்ளைகளின் மனநிலையில் உள்ள வேறுபாட்டை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் குரசோவா. இதை ஜப்பானிய சமூகத்திற்கு குரசோவா சொல்லும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

நாகாசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட நாளான ஆகஸ்ட் 9 நெருங்க, நாகாசாக்கியே குண்டு வீச்சில் கொல்லப்பட்ட ஜப்பானியர்களை நினைவுகூர தயாராக, கேனின் தம்பி மகனான கிளார்க் (Clark) கேனின் கணவனின் நினைவு நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகாசாகிக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்காலிருந்து வருகை தருகிறார்.

நாகசாகி முழுவதும் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் விதமாக பல நிகழ்சிகள் அங்கு அனுசரிக்கப்பட்டன. குறிப்பாக அங்கு நடக்கும் புத்த சடங்கு ஒன்று கிளார்கை மிகவும் பாதிக்க, திடீரென கிளார்க்கின் தந்தை இயற்கை எய்தியதாக தந்தி வர, அமெரிக்கா திரும்புகிறார் கிளார்க்.

கேனின் மன ஆரோக்கியம் தடுமாற்றமடைய ஆரம்பிக்கிறது. தனது சகோதரர் இறந்தது அவரை வெகுவாக பாதிக்கிறது. தன் கணவர் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதை நம்ப மறுக்கும் கேனின் மனம் அவரை பித்து பிடித்தது போல் ஆக்குகிறது. இறந்த கணவர் திரும்ப வருவார் என அவருக்கு கொடுக்க அவருடைய பழைய ஆடைகளை எடுத்து வைத்துகொண்டு காத்திருக்க ஆரம்பிக்கிறார் கேன். திடீரென புயல் மழை அடிக்க, அணுகுண்டு வெடிக்கும் முன் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞைக்கு ஒத்த சூழல் அன்று புயல் மழையால் இருக்க, தன் குழந்தைகள், மற்றும் பேரக்குழந்தைகளை காக்க தங்கள் வழக்க பரிகாரங்களை செய்ய ஆரம்பிக்கிறாள். இதைக்கண்டு கேனின் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் குழப்பமடைகின்றனர். மேலும் புயல் மழை தீவிரமடைய அணுகுண்டு வெடித்த அன்று பாதுகாப்பான தூரத்தில் நின்று அவ்வெடிப்பை பார்ததுப்போல் வானம் காட்சியளித்தது.

அகிரா குரசோவா

நிலையில்லா மனநிலையால், கேன் தன் கணவர் இன்னும் சாகவில்லை, உயிருடன் தான் உள்ளார், குண்டு வெடிப்பிலிருந்து தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று, தீவிரமாக அழுதுகொண்டிருக்கும் புயல் மழையில் தன் சக்தி அனைத்தையும் திரட்டி ஒரு குடையை எடுத்துகொண்டு தன் கணவனை காப்பாற்ற செல்கிறார் கேன். இப்படியாக முடிகிறது அகிரா குரசோவாவின் ‘ராப்சோடி இன் ஆகஸ்ட்’.

இப்படத்தில், மூன்று தலைமுறைகளுக்குள் ஒரு போர் எப்படிபட்ட நினைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மிகவும் ஆழமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் தலைமுறையான பேரக்குழந்தைகள் நாகாசாக்கியை சுற்றிப்பார்க்க செல்லும் இடமெல்லாம் அனுகுண்டால் கொல்லப்பட்ட மக்களின் நினைவு சின்னங்களை காண்கிறார்கள். குறிப்பாக ஒரு பள்ளியில், இரும்பினால் ஆன ஒரு விளையாட்டு அமைப்பு கம்பிகள் குண்டு வெடித்த கணம் எப்படி உருகி, உருக்குலைந்து போனதோ, அந்த உருக்குலைந்த கம்பிகளையே ஒரு சின்னமாக வைத்து அதை இப்பேரக்குழந்தைகள் கண்டு மனமுடைந்து போகும் காட்சி, ஒரு சமூகம் போரினால் அடையும் பாதிப்புகள் தலைமுறைகளை தாண்டி கடத்தப்படவேண்டிய ஒரு நினைவு என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.

அணுகுண்டு வெப்பத்தால் உருக்குலைந்த விளையாட்டு பூங்கா கம்பிகளை காட்டும் காட்சி

போரினால் ஜப்பானிய மக்களின் ஏற்பட்ட பாதிப்புகள் – உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்கள் 90 களில் நிலவுவதை அழுத்தமாக பதிந்திருக்கிறார். அணுகுண்டுவினால் தன்னுடைய தலை முடியை கேன் மற்றும் அவரின் இன்னொரு சகோதரர் இழந்திருக்கிறார்கள். வெடிகுண்டின் மையப்பகுதியை நம்முடைய கண் போல் உருவகப்படுத்தி சொல்லிய விதம் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் போர் வெறியோடு பலலட்சம் மக்களை கொல்லும் அமெரிக்காவை நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

“போரை நிறுத்தவே அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நிற்கவில்லை! இன்றுவரை அவர்கள் மக்களை கொலைசெய்து கொண்டிருக்கின்றனர்! போரில் வெல்ல அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!” என்ற வசனம் மிக முக்கியமானது. இந்தப் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும், முதலாளித்துவ மேற்கத்திய சிந்தனையாளர்கள், குரசோவா அமெரிக்காவை மட்டுமே குறை சொல்லி, போரில் ஜப்பானின் பங்கை மறைத்துள்ளார் என்று கடுமையான விமர்சனத்தை வைத்தனர். அதற்கு குரசோவா, “போர் என்பது இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே அல்லது இராணுவங்களுக்கு இடையே நடப்பது. ஆனால் நாகசாகியில் அமெரிக்காவின் அணுகுண்டு பயன்பாடு அந்நகர மக்களை மையப்படுத்தி நடந்த நிகழ்வு” என்று பதிலளித்து அவர்களின் வாயை மூடினார்.

உலகம் முழுவதும் பரப்பபட்ட ஒரு படம்

20 ஆண்டு கால ஆப்கான் போரில் தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் குழந்தைகள் உட்பட எண்ணற்ற ஆப்கானியர்களை கொன்று குவித்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை சிதைத்துள்ளது. தலைமுறைகள் கடந்து நிற்கவேண்டிய வடுக்களை அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகள் தங்கள் பொருளாதார வலிமையின் மூலம், ஊடகங்களை கையில் வைத்து தங்களை புனிதப்படுத்தும் பிம்பத்தை கட்டமைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆப்கான் குழந்தைகளுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் மருத்துவ உதவி செய்து மீண்டும் ஒப்படைக்கும் படங்கள் வெளியானது எல்லாம் இப்படியான வேலைகள் தாம். சமீபத்தில் ஒரு பெண் குழந்தை ஆப்கானிலிருந்து பெல்ஜியம் சென்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த படம் உலகம் முழுக்க வைரலாக பரவியது. மேற்குலக நாடுகளுக்கு செல்வதே தாலிபான்களிடமிருந்து தப்பிக்க வழி என்ற கருத்தை கொண்டதாக அந்தப் புகைப்படம் ஊடகங்கள் மூலம் நமக்கும் சேர்க்கப்பட்டது.

ராப்சோடி இன் ஆகஸ்ட் படத்தில், “போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின் குரலில் குரசோவா கேட்பார். நாமும் ஆப்கானில் வாழும் ஏதோ ஒரு கேனின் குரலாக கேட்போம்! “தாலிபான்களை ஒழிப்பதாக போரை தொடங்கினீர்கள்! தாலிபான்களை ஒழிந்தார்களா? தாலிபான்களால் இன்றுவரை மக்கள் கொல்லப்படுகிறார்கள்! தாலிபான்களை யார் உருவாக்கியது?”, நாமும் கேட்போம்.

One thought on “ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

  1. ஆழமான கட்டுரை! சிந்திக்க வேண்டிய கோணம்! நன்றி!

    ஆனால் இவ்வளவு சிறப்பான கட்டுரையில் ஏன் இத்தனை எழுத்துப்பிழைகள்? கணித்தமிழறிஞர் ‘நீச்சல்காரன்’ ராசா அவர்கள் உருவாக்கியுள்ள ‘வாணி’ பிழைதிருத்தியைப் பயன்படுத்தலாமே? ஒவ்வொரு கட்டுரையையும் வெளியிடும் முன்னர் வாணியில் ஒட்டி (paste) அதிலுள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும். பின்னர் ஒருமுறை படித்துச் சரிபார்த்துக் கொண்டு வெளியிட்டு விடலாம். அரிதான படைப்புகளை வெளியிடுகிறீர்கள். கூடவே மொழிப்பிழையும் இல்லாதிருந்தால் நலமாக இருக்குமே என்பதற்காகத்தான் சொல்கிறேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! வாணி பிழைதிருத்திக்கான இணைப்பு இதோ: http://vaani.neechalkaran.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »