நாட்டின் இறையாண்மையை விற்ற மோடி அரசு
கெய்ர்ன் எனர்ஜி (Cairn Energy) என்ற இங்கிலாந்தை சேர்ந்த எண்ணெய் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான பாரிஸ் நகர சொத்துக்களை, தனக்கு தர வேண்டிய சுமார் 8,000 கோடி நிலுவை தொகைக்காக ஏலத்திற்கு விட, பிரான்ஸ் நீதிமன்றத்திடம் கடந்த நான்கு நாட்களுக்கு முன் 08-07-2021 அன்று உத்தரவு பெற்றுள்ளது. இந்திய அரசோ, தனக்கு எந்த உத்தரவும் வரவில்லையென்று மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற ரீதியில் பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை ஏலத்தில் விட்டு, அதன்மூலம் 20 மில்லியன் யூரோ திரட்ட உத்தரவு வாங்கியிருக்கிறது கெய்ர்ன் நிறுவனம். கெய்ர்ன் எனர்ஜி தனக்கு வரவேண்டிய 1.2 பில்லியன் (120 கோடி) டாலர்களுக்காக கடந்த டிசம்பர் 2020-லேயே Permanent Court Of Arbitration தீர்ப்பாயத்தில் இப்படியான ஒரு தீர்ப்பை கெய்ர்ன் நிறுவனம் பெற்றிருக்கிறது. அத்தோடு இல்லாமல், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளில் உள்ள இந்திய அரசு சொத்துக்களையும் தன் நிலுவைக்காக இணைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி இந்திய அரசுக்கு சொந்தமான் ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவின் எந்த விமான தளத்திற்கு வந்தாலும் அதை பிடித்துவைத்து ஏலம் விடவாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது இந்திய அரசுக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலேயே இந்திய நிதித்துறையை சந்தித்து இதுபற்றி இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அப்பொழுது, அரசு மேல்முறையீட்டுக்கு போகப் போவதாக தெரிவித்தது. இன்று பிரான்ஸ் நாட்டின் நீதிமன்ற ஆணையேதும் வரவில்லை என்கிறது.
கெய்ர்ன் நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தின் துணை நிறுவனம். 2006 இல் இதன் பங்குகளை கெய்ர்ன் இந்திய நிறுவனத்திற்கு விற்றது. இதனால் இந்திய அரசுக்கு கிடைத்த லாபத்திற்கு கெய்ர்ன் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய வருமான வரியே இந்த தொகை. மீண்டும் 2011இல் இந்நிறுவனம் இந்திய பெரு முதலாளியான வேதாந்தாவிற்கு தன் பங்குகளை விற்றது. அதாவது வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் நிறுவனத்தை வாங்கியது. அந்த காலகட்டத்தில், வரி நிலுவைக்காக 10 சதவீத பங்குகளை முடக்கியது இந்திய அரசு. அத்துடன், டிவிடண்ட் தொகையையும் முடக்கியது.
இந்திய அரசின் இந்த செயல் செல்லாது என்று தொடர்ந்து முறையிட்டு வந்தது கெய்ர்ன் நிறுவனம். இதனால், ”வருமான வரிச் சட்டம் 1961” இல் இருக்கிற சரத்தையே அப்போதைய காங்கிரஸ் அரசு மாற்றியது. ஏனென்றால், ஏற்கனவே வோடபோன் வழக்கில் இதுபோன்று தான், வோடபோன்-ஹட்சிசன் இரு நிறுவனமும் இந்தியாவுக்கு வெளியே தங்கள் பரிவர்த்தனையை அதாவது விற்பனையை வைத்து கொண்டன. ஆனால் விற்கப்பட்ட நிறுவனம் இந்தியாவில் இருந்தது. இதனால் இந்திய அரசு அதற்கு வரிபோட்டது. இதை மறுத்து வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்து, இந்திய அரசுக்கு எதிராக வெற்றியும் பெற்றது. ஆகவே தான் சட்டத்திருத்தமாகவே இதனை காங்கிரஸ் அரசு கொண்டு வந்து விட்டது.
இப்படி ஒரு சட்டத்திருத்தம் தங்களுக்கு செல்லாது என்றும் தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இந்திய அரசு தரவேண்டுமென்று தான் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச சட்டத்தை நாடி இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. இந்தியா இதை எதிர்த்து தி ஹேக் (The Hague) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பில் இரண்டு முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறது.
- இங்கிலாந்துடன் செய்து கொண்ட இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தமே (Bilateral Investment Protection Agreement – BIPA) செல்லுபடியாகுமே தவிர, இந்திய அரசின் இறையாண்மைச்சட்டம் செல்லாது என்று சொல்லுகிறது. அதாவது இந்திய அரசின் சட்டத்தினை விட இருநாட்டு ஒப்பந்தமே மேலானது என்கிறது. நமது நாடாளுமன்றத்தைவிட, அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தமே மேன்மைச் சட்டம் என்றாகியது. இவையெல்லாம் “வணிகம் செய்ய எளிது” (Ease Of Doing Business) என்ற கொள்கையை சொல்லியே, ”அன்னிய முதலீட்டை” ஈர்க்க செய்யப்பட்ட ஒப்பந்தங்கள்.
- எல்லாவற்றையும் விட தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிடுவது 2014-ல் பாஜக அரசு, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வரி விதிப்பு சட்ட திருத்தத்தை “வரி தீவிரவாதம்” (Tax Terrism) என்று தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியதோடு, அந்த தீர்ப்பு, 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதுபோன்று பின்தேதியிட்ட சட்டத்திருத்தம் தேவையற்றது என்று பேசியதையும் சுட்டிக் காட்டியது.
இந்த இரு செய்திகளின் அடிப்படையிலேயே நாட்டின் இறையாண்மையை காக்கும் சட்டத்தைவிட இருநாட்டு ஒப்பந்தம் தான் பெரிது என்று அந்த தீர்ப்பாயம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆக பாஜக அரசு பெரிய பெரிய வெளிநாட்டு முதலாளிகளுக்காக இந்திய நாட்டின் இறையாண்மையை சட்டத்தை காவுகொடுத்துவிட்டது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.
இப்படி நாட்டின் இறையாண்மையை விற்று முதலாளிகளுக்கு சாதகமான நிலையை பாஜக எடுத்ததனால் அவர்களிடமிருந்து அதிக நிதியை பெற்ற கட்சி என்ற இடத்தையும் பாஜக பிடித்தது. இதற்காகவே 2018-ஆம் ஆண்டில் FCRA (Foreign Contribution Regulation Act) சட்டத்தின்படி அன்னிய நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறக்கூடாது என்ற சட்டத்தை மாற்றி, பட்ஜெட் கூட்டத்திலேயே ஒப்புதல் பெற்று எவ்வளவு வேண்டுமானாலும் வெளிநாட்டு கம்பெனிகளிடம் நிதி பெறலாமென்று சட்டத்தை திருத்திக்கொண்டது. அதுவும், 1976 ஆம் ஆண்டு சட்டத்தை, 1976 ஆம் ஆண்டு தேதியிட்டு திருத்தியது பாஜக அரசு. ஏனெனில் இந்த சட்டத்தை மீறியதாக பாஜக மற்றும் காங்கிரஸ் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் இணைந்து சட்டத்தைத் திருத்திக் கொண்டன.
இதில் சம்பந்தப்பட்ட அன்னிய நிறுவனம் வேறு ஏதும் இல்லை; மீண்டும் ”வேதாந்தா” தான். இது அன்று லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். 02-10-2018-இல் தான் லண்டனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது (Delisting). காந்தி ஜெயந்தியான அன்றுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வலியுறுத்தி போராடிய அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற வேதாந்தா நிறுவனத்தை கண்டித்து பேசியதற்காக சிறையிலடைக்கப்பட்ட மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த Delistingக்கு தடை வந்து விடக் கூடாது என்று அரசு நினைத்திருக்கலாம்.
அந்நிய முதலீடு என்பதற்காக, தன் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தக்காரர்களை எப்படி அரசு ஏற்றுக்கொள்கிறது? தேசபக்தி என்பதெல்லாம் தெருவில் போகும் குடி மக்களுக்கு மட்டுந்தானா? தீர்ப்புக்குப் பிறகாவது நாட்டின் மானத்தைக் காக்க ஏதாவது செய்திருக்க வேண்டாமா?
வெளிநாட்டு கம்பெனிகளிடம் தேர்தல் நிதி வாங்கிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தெரிந்த அரசுக்கு, நாட்டின் மானத்தை ஏன் காக்கத் தெரியவில்லை? இது பாஜகவிற்கு உரிய அகங்காரம்.
பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே ”ரஃபேல்” ஊழலால் தலைகுனிந்து நிற்கும் இந்தியாவிற்கு மேலும் இந்த வழக்கால் மீண்டும் தலைகுனிவை பிஜேபி அரச ஏற்படுத்தியிருக்கிறது.