கருத்து சுதந்திரத்தை முடக்கும் புதிய ஐ.டி. விதிமுறைகள்

கருத்து சுதந்திரத்தை முடக்கும் மோடி அரசின் புதிய ஐ.டி. விதிமுறைகள்

“நாட்டின் எந்த ஒரு உண்மை அல்லது பொய் சம்பவத்தையோ பிரபலபடுத்தும் ஆற்றல் ஆளும் பாஜக அரசுக்கு மட்டுமே உண்டு” இது 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த பாஜக கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது.

இன்றைக்கு கிட்டத்தட்ட முழுமையாக இந்திய ஒன்றியத்தின் மைய நீரோட்டத்தில் (mainstream) இயங்கும் ஊடகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் என தன்னுடைய ’பத்து லட்ச குர்த்தாக்களின் ஜோப்பு பைக்குள்’ மோடி அரசு வைத்திருக்கிறது. ஊடகத்துறையின் முக்கிய முதலீட்டாளர்களான அம்பானி-அதானிகள் மூலம் இதனை மிகவும் எளிமையாக இந்த பாசிச அரசு செய்து முடித்திருக்கிறது. தற்போது மக்கள் தங்களது கருத்துக்களை குறைந்தபட்சம் பிரதிபலிக்கும் வெளியாக, ஊடகமாக சமூக வலைத்தளங்களை கருதுகின்றனர். தற்போது இதனையும் மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர எத்தனிக்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்துத்துவ மோடி அரசு.

சமூக வலைதள-இணைய முடக்கம்:

2012-2013 கால கட்டத்தில் 19 பதிவுகள் குறித்தான தகவல்களை டிவிட்டர் நிறுவனத்திடமிருந்து கேட்டிருந்த இந்திய அரசு, 2020-இல் சுமார் 2613 க்கும் அதிகமான பதிவுகளின் தகவல்களை கேட்டுள்ளது என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது மட்டுமல்லாமல், மோடி அரசின் உழவர் விரோத  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 1 அன்று பரப்பப்பட்ட சில ஹேஷ்டேக்குகளையும், கிட்டத்தட்ட 1,200 சமூக செயற்பாட்டாளர்களின் டிவிட்டர் கணக்குகளையும், பதிவுகளையும் அகற்றுமாறு அந்நிறுவனத்திற்கு மோடி அரசு அழுத்தம் கொடுத்தது. அதற்கு இணங்காத டிவிட்டர் நிறுவனத்தை இந்திய ஒன்றியத்தில் தடை செய்வோம் என மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மோடி அரசிற்கு எதிராக கருத்துக்களை கூறும் நபர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது. அதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் ஒன்று.

அதோடு, விவசாயிகளின் கருத்துக்களை முடக்க இணைய சேவையை அப்பகுதியில் முடக்கி சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தியது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 இல் வழங்கப்பட்ட காசுமீருக்கான சிறப்பு அந்தஸ்தை சர்வாதிகாரத்தனமாக நீக்கியபோது, கிட்டத்தட்ட 18 மாதங்கள் அரச பயங்கரவாதத்தை மறைக்க இணைய சேவையை ரத்து செய்யததையும், தூத்துக்குடி படுகொலையின் போது இணைய சேவையை துண்டித்ததையும், கொரோனா பெருந்தொற்றில் மக்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மரண குழியில் விழுந்துகொண்டிருந்தபோது ஒன்றிய அரசின் நிர்வாகத் திறனை கேள்வி எழுப்பிய பதிவுகள் நீக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். இப்படியாக தொடர்ந்து அரச பயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டங்களை தடுக்க, அரச பயங்கரவாதத்தை மறைக்க என்று இணைய முடக்கத்தையும், சமூக ஊடகங்களில் இடப்படும் பதிவுகளை நீக்குவதையும் ஒரு ஆயுதமாக இந்திய ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது.

2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, மக்களுக்கான இணைய சேவை முடக்கத்தில் சில மத்திய கிழக்கு நாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து, இந்திய ஒன்றியம் முதலிடத்தை பெற்றிருக்கிறது!

புதிய ஐடி (IT) விதிமுறைகள்:

டிவிட்டருக்கு சமூக செயற்பாட்டாளர்களின் கணக்குகளை முடக்க நெருக்கடி கொடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஒன்றிய அரசு சமூக வளைதளங்களுக்கு பிப்ரவரி 25, 2021 அன்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகள் மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். சமூக வலைதள நிறுவனங்கள் இது குறித்து அரசுடன் கலந்துரையாடவும், இதர பணிகளுக்கும் 6 மாதம் அவகாசம் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், எந்த கோரிக்கையும் ஏற்க தயாராக இல்லை என்றும் இன்னும் 3 மாதத்துக்குள் (மே 25) இதை கண்டிப்பாக அமல்படுத்த போவதாக திட்டவட்டமாக ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும், இந்த கொள்கைக்கு உடன்படாத சமூக வலைதளங்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாசிச அரசு தெரிவித்தது!

இந்த புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு பயனர்களின் தரவுகளும் கண்காணிக்கப்படும். அரசு விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கருத்துக்களையும் 36 மணி நேரத்துக்குள் நீக்கவேண்டும் என்றும் இந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்காணிக்க 50 லட்சம் பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் சமூக வலைதள குறைதீர்ப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரி, புகாரை கவனித்து தீர்வு காணும் அதிகாரி, ஆதரமற்ற பொய்யான கருத்துக்களை கண்காணித்து அதை நிக்குவதற்கான அதிகாரி என அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசு இந்த விதிமுறையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் செயலாக்கத்தை கண்காணிக்கும் குழு அமைக்கப்படும்; இக்குழுவில் பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள், உள்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். விதிமுறைகளை மீறியதாக புகார்கள் மீதான விசாரணையை தானே முன்வந்து நடத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய விதிமுறைகளின் படி பகிரப்படும் குறுஞ்செய்திகளின் முதல்-அனுப்புநரை கண்டறிந்து அரசு கேட்கும் பட்சத்தில் அதை தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கூகுள், முகநூல் போன்ற பிரபல நிறுவனங்கள் இந்தச் சட்டத்திற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், வாட்ஸ்அப் நிறுவனமானது, ‘தங்களுடைய செயலி பயனர்களின் தரவுகளை பாதுகாக்க End to end encryption முறையில் செயல்படுகிறது என்றும் இந்தியாவில் அதிக பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் உரையாடலை காண்பிப்பது குடிமகளின் தனியுரிமையை பாதிக்கும்’ என்று கூறி இந்த சட்டத்தை ஏற்க மறுத்து இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டிவிட்டர் நிறுவனமும் இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ‘கவலை அளிக்கிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தது. புதிய ஐடி விதிமுறைகளுக்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம், ஐடி விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியதோடு, டிவிட்டர் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அதற்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. அதாவது, பயனர்களின் கணக்குகளை லாபத்துக்காக கண்காணிப்பதாக குற்றம் சாட்டப்படும் பெருநிறுவனங்களே, இந்திய அரசின் புதிய ‘கண்காணிப்பு’ சட்டங்களைப் பற்றி ‘கவலை’ கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, முகநூலில் அரசுக்கு எதிராக பதிவிடப்படும் பதிவுகள், அரசை விமர்சிக்கும் தனிநபர்களுடைய கணக்குகள், தமிழீழ இனப்படுகொலை தொடர்பான பதிவுகள் தொடர்ந்து முடக்கப்பட்டுவருகின்றன. இந்த காரணத்தால் மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி தான் பெயரில் தனிப்பட்ட கணக்கு உருவாக்கிக்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தான் யூடியூபிலும் தொடர்கிறது. பல்லாண்டுகளாக வெளியிடப்பட்ட முக்கிய காணொளிகள் கொண்டு மே 17 இயக்கத்தின் சேனலும் முடக்கப்பட்டது.

’கூ’ செயலி – ஆர்.எஸ்.எஸ் -இன் கருத்துருவாக்க அடியாள்:

இதற்கு நடுவே மோடி அரசிற்கு ஆதரவான கருத்துக்களை மக்களிடம் பரப்ப ‘கூ’ (Koo) என்ற செயலி டிவிட்டருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘கூ’ நிறுவனம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  தொடங்கப்பட்டது. 59 சீன செயலிகளுக்கு  மத்திய அரசு தடை விதித்தபோது, ’ஆத்ம நிர்பர் திட்டம்’ என்று கூறி தொடங்கப்பட்ட அந்நிறுவனம், பிப்ரவரியில், சீன முதலீட்டாளரான ‘ஷன்வே கேபிடல்’ (Shunwei Capital) நிறுவனத்தில் தனது பங்குகளை விற்றிருக்கிறது. அண்மையில் நியூயார்க்கை தலைமை இடமாக  கொண்ட டைகர் குளோபல் நிறுவனம், ‘கூ’வில் 30 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.  இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு  இணங்கவில்லை எனக் கூறி  டிவிட்டர் நிறுவனம் அரசாங்க ஆய்வை எதிர்கொண்டுள்ள நேரத்தில் ‘கூ’ நிறுவனத்திற்கு இந்த நிதி கிடைத்திருக்கிறது.

ஐடி விதிமுறைகளுக்கான இணக்க அறிக்கையை பொதுவில் வெளியிட்ட முதல் சமூக ஊடகம் என்ற ’பெருமையை’ கூ பெற்றிருக்கிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய கணக்கை கூவில் தொடங்கியிருக்கிறது; ஒன்றியத்தின் புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷவ் கணக்கினை தொடங்கியிருக்கிறார். ஹரியானாவின் முதல் அமைச்சர், ஒன்றிய விளையாட்டுத்துறை என்று கூவில் இணையும் காவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அதாவது, ஒருபுறம் இணைய முடக்கம், மறுபுறம் சமூக வலைதளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், இன்னொருபுறம் தன்னுடைய பொய் கருத்துக்களைப் பரப்பும் அடியாளாக-காப்புப்பிரதியாக (backup) ஒரு செயலியை ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணி வளர்க்கிறது.

பாசிசத்தின் மொத்த உருவமாக நிற்கும் மோடி அரசு:

ஊடகங்களையும், முகநூல், டிவிட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களையும் முதன்மை பரப்புரை தளமாக பயன்படுத்தியே, ‘குஜராத் மாடல்’ என்ற பொய்களைப் பரப்பி 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது மோடி அரசு. ’டிஜிட்டல் இந்தியா’ என்ற பெயரில் சமானியர்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பதும், பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு சென்றது. இதே சூட்சுமத்தை வைத்து 2019 தேர்தலிலும் மோடி அரசு வெற்றி பெற்றது. சமூக ஊடகங்களின் வலிமையை உணர்ந்த மோடி அரசு அந்த ஆயுதம் வேறு யார் கையிலும் கிடைக்காமல் இருக்க எல்லாவிதமான முயற்சிகளையும்  செய்துவருகிறது.

ஸ்வீடன் நாட்டில் இயங்கிவரும் வி-டெம் நிறுவனம் வெளியிட்ட ’ஜனநாயக அறிக்கை 2020’ என்பதில், பரந்த கொள்கையுடைய மக்களாட்சிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 97வது இடத்தை பிடித்துள்ளது. உலகின் மாபெரும் ஜனநாயகங்களில் ஒன்றான இந்தியாவின் ஜனநாயகத் தன்மை குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இதற்கு காரணம் தற்போதைய பாஜக அரசு என்றும், மோடியின் கண்காணிப்பின் கீழ், மனித உரிமைகள் குழுக்கள் மீதான அழுத்தம், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் வி-டெம் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவை சுதந்திர சனநாயகத்தில் இருந்து, ஒரளவு சுதந்திர சனநாயக நாடாக குறிப்பிட்டதோடு, இந்தியாவை குறை சனநாயகம் என்றும் தேர்தல் எதேச்சதிகார நாடு என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறது; இந்தியவில் தேர்தலின் தரத்தையும் இந்த ஆய்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஊடகங்களைக் கைப்பற்றுவதையும், எதிர்ப்பாளர்களை முடக்குவதையும் பாசிசத்தின் முக்கிய பண்புகளாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசானது பாசிசத்தின் மொத்த உருவாகி நிற்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »