மோடி அரசின் மோசடி தடுப்பூசி சாதனை!
தோல்வியுற்ற தடுப்பூசி கொள்கையை வைத்து எப்படி உலக சாதனை படைத்தார் மோடி?
இந்திய மக்கள் தொகையில் 3.5% மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி போட்டு ‘உலக சாதனை’ படைத்ததாக சொல்லி இருப்பது எந்தளவு உண்மை?
இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் போது மருத்துவமனையில் படுக்கைகள் எல்லாம் நிரம்பி, நோயாளிகள் வெளியே காத்திருக்க, ஆக்சிசன் வாயு கிடைக்காமல் பிணவறைகள் நிரம்பிக் கொண்டிருந்தபோது, தடுப்பூசி போடுவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு தொலைக்காட்சியில் தோன்றி நீலிக்கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடுப்பூசிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று அரசை தலையில் கொட்டி கேட்டவுடன் தடுப்பூசி போடுவதை மாநிலங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஒரே நாளில் அதிகபட்சமாக தடுப்பூசி போட்டு புதிய ‘உலக சாதனை’ படைத்ததாக தனக்குத்தானே பாராட்டிக் கொண்டது மோடி அரசு. உண்மையிலயே எதாவது உலக சாதனை படைத்துவிட்டதா மோடி அரசு அல்லது வழக்கம் போல வெறும் மோடிமஸ்தான் விதியா என்று பார்ப்போம்.
35 ஆயிரம் கோடி எங்கே? உச்ச நீதிமன்றம் கேள்வி!
கொரோனா இரண்டாம் அலையில் கொரோனா பாதிப்பும், இறப்புகளும் உச்சத்தை தொட்ட நிலையில் இதிலிருந்து மீள ஒரே வழி தடுப்பூசி தான் என்று மக்களுக்கு விளங்கிய பினனர் தடுப்பூசி எங்கே என்று ஒன்றிய அரசை நோக்கி நாம் அனைவரும் கேட்கத் தொடங்கினோம். இந்த அழுத்தத்தினால் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, மற்ற நாடுகளெல்லாம் தடுப்பூசிகளை பல மாதங்களுக்கு முன்னரே வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டிருந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசு தூங்கிக்கொண்டிருந்ததால் தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை அடுத்து ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு கொள்முதல் கொள்கையை மாற்றிக் கொண்டு, மேற்கு வங்கத்தைத் தவிர்த்து, 18-44 வயதுடையவர்களுக்கு செலுத்துவதற்காக மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக மட்டும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கிவந்தது.
ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு 35,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. “உலக நாடுகளெல்லாம் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வந்த நிலையில் இந்தியா மட்டும் 18 – 44 வயதுடையவர்களுக்கு கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற மனிதாபிமானமற்ற அறிவிப்பினை ஏன் வெளியிட்டது?” என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்ப, வேறு வழி இல்லாமல் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது மோடி அரசு.
அதாவது சூன் 7-ம் தேதி, ஒன்றிய அரசு தனது கொள்கையை மறுபடியும் மாற்றியமைத்தது, மாநிலங்களுக்கான தடுப்பூசிகளை வாங்குவதற்கான பொறுப்பை தானே மீண்டும் ஏற்றுக் கொண்டது. இருப்பினும், தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்து உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளில் குறிப்பிடத் தகுந்த அளவு தனியார் அவர்களுக்கு ஒதுக்குவதன் மூலம், மாநில அரசின் மூலம் போடப்படும் தடுப்பூசிகள் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில், குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்கின்றனர். இப்படி தட்டுபாடு ஏற்படும் நேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசி ஒதுக்குவது அவர்களின் லாபத்தை பெருக்குவதற்காகவே தவிர வேறு எதர்க்கும் அல்ல.
‘உலக சாதனை’யின் உண்மைத்தன்மை என்ன?
‘சீனாவோ’ ஒரு நாளைக்கு “2 கோடி” மக்களுக்கு தடுப்பூசி போட்டதாக நேச்சர் இதழ் கூறியுள்ளது. சீனா கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் “10 கோடி” பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் 21-06-2021 திங்கள் அன்று மட்டும் “86 லட்சம்” தடுப்பூசிகள் போடப்பட்டது என சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்வீட் செய்தார். ஒரே நாள் என்பது, ஜூன் 21 திங்கட்கிழமை. ‘உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி திட்டம்’ என, பிரதமர் படத்துடன், அனைத்து மொழிகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது. பாசக அரசு இதை உலக சாதனையாக அறிவித்தது.
இந்த உலக சாதனையை எப்படி மோடி அரசு சாத்தியமாக்கியது தெரியுமா? பாஜக, ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவதை, சில நாட்கள் நிறுத்தி விட்டு அல்லது குறைத்து விட்டு, ஜூன் 21 அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலகசாதனை படைத்துள்ளது மோடி அரசு.
எ.கா. மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 17 முதலே தடுப்பூசி போடுவதில் மந்தநிலை தொடங்கியுள்ளது. ஜூன் 16 அன்று 338,847 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டாலும், அடுத்த நான்கு நாட்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதை புள்ளி விவரம் காட்டிகிறது. ஜூன் 17 அன்று 124,226 டோஸ், ஜூன் 18 அன்று 14,862 டோஸ், ஜூன் 19 அன்று 22,006 டோஸ், மற்றும் ஜூன் 20 அன்று 692 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூன் 21 அன்று 17.44 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கியது, இது அடுத்த நாள் ஜூன் 22 அன்று 5,000 க்கும் குறைந்தது. இது ஜூன் 21 திங்கட்கிழமை மொத்தத்தில் 0.3% மட்டுமே.
உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.
குஜராத் மாநிலத்தில் திங்களன்று 5,10,434 தடுப்பூசி போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 1,89,953 தடுப்பூசிகளே போட்டப்பட்டன. இது 17 நாட்களில் மிகக் குறைந்த அளவாக உள்ளதாக புள்ளி விவரம் காட்டுகிறது.
தொடர்ந்து நான்கு நாட்கள் அசாமில் தடுப்பூசி உயர்ந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 20 அன்று 33,654 தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளது. திங்களன்று 360,707 என்ற அதிகபட்ச சாதனையை எட்டியதாக பா.ஜ.க. அரசுகள் தம்பட்டம் அடித்தன.
பா.ஜ.க. ஆட்சிபுரியாத பல பெரிய மாநிலங்களும் ஜூன் 20 அன்று தடுப்பூசி அளவைக் குறைத்தன. ஆனால், இது ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் வழக்கமான வீழ்ச்சிக்கு ஏற்ப இருந்தது. அதுபோல, ஜூன் 21 அன்று தடுப்பூசி அளவு முந்தைய நாட்களை விட மிக அதிகமாகவும் இல்லை.
உதாரணமாக, மகாராஷ்டிரா ஜூன் 21 அன்று 3,83,495 தடுப்பூசி மருந்துகளை வழங்கியது, ஜூன் 19 அன்று வழங்கப்பட்ட 3,81,765 அளவை விட இது மிக அதிகமானது இல்லை. ஜூன் 20 அன்று 1,13,109 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், முந்தைய ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட 87,273 என்ற அளவுகளை விட அதிகமாக இருந்தது .
ராஜஸ்தானிலும் இதே நிலைதான், ஜூன் 11 அன்று செய்ததைப் போலவே, ஜூன் 21 அன்று 4.46 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.
கர்நாடகா, உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் பல பெரிய மாநிலங்களும் ஜூன் 20 ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசி அளவைக் குறைத்து ஜூன் 21 அன்று முந்தைய நாட்களை விட மிக அதிகமாக தடுப்பூசி போட்டு உலகசாதனை படைத்துள்ளது மோடியரசு. உண்மையில் தன் நாட்டு மக்களின் உயிரை விட தன்னுடைய பிம்பத்தை உடையாது பாதுகாப்பதே முக்கியம் என்று செயல்பட்டு உலகசாதனை படைத்துள்ளார் மோடி.
135 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 3.5 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுவரை 15 சதவீத மக்களுக்கு மட்டுமே ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3.3 கோடி பேருடன் அமெரிக்க முதலிடத்திலும், 2.9 கோடி பேருடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 1.75 கோடி பேருடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. அதே போல மூன்று லட்சம் கொரோனா மரணங்களைக் கடந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் அடுத்து மூன்றாவது நாடாக இருக்கிறது இந்தியா.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ‘தடுப்பூசி எங்கள் வலிமையான ஆயுதமாக உள்ளது’ என்று மோடி ஒரு ட்வீட்டில் சொல்லி இருந்தார். ஆனால் அப்படி பட்ட வலிமையான ஆயுதம் போதிய அளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தடுப்பூசி தயாரிக்க எந்த புது நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுக்கவில்லை. செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி ஆலையை பராமரித்து உற்பத்தி செய்யவும் வழிவகுக்கவில்லை. இதை ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன் வர வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் மே மாதம் 14 ஆம் தேதி இணையதள போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
போதிய அளவு தடுப்பூசி இல்லை என்று மாநில அரசுகள் சொல்வதும், தடுப்பூசி இல்லாமல் மக்கள் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிலிருந்து திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு நெருக்கடி காலகட்டத்தை கையாளத்தெரியாத அதை எதிர்கொள்வதற்கான கொள்கை திட்டமிடலை மேற்கொள்ள தகுதியற்ற அரசை வைத்திருக்கும் மோடி தான் உலக சாதனை படைத்தாராம். நம்புங்கள்! இல்ல விட்டால் ஆண்டி இந்தியன் என்கிற பட்டம் தேடி வரும்.
தடுப்பூசி போட்டுகொள்வது ஒரு நாட்டுக் குடிமகனின் அடிப்படை உரிமை. அதை நிறைவேற்ற வேண்டியது அரசுகளின் கடமை என்ற அடிப்படையிலயே மற்ற உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட மக்களின் உயிரை பற்றி சிறிது கவலைகொள்ளது தடுப்பூசியை வியாபாரமாக்கி, மருந்து நிறுவன முதலாளிகள் லாபம் பார்க்க வலுவகுத்த தடுப்பூசி கொள்கையை முன்மொழிந்ததன் மூலம், கார்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதில் உலக சாதனை படைத்துவிட்டார் மோடி.