மோடி அரசு முன்னெடுக்கும் உலக வர்த்தக கழக காப்புரிமை விலக்கு மக்களுக்கானதா வணிக நலனுக்கானதா?
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளை கொரானா நோய்த்தொற்று புரட்டிப்போட்டுக் கொண்டிருக்க, உலக வர்த்தக கழகத்தில் (WTO) மிக முக்கியமான விவாதம் எழுப்பப்பட்டுள்ளது. அவை, கொரானா தடுப்பூசி காப்புரிமை விதிகளை பாதுகாக்கும் “வர்த்தகரீதியான அறிவுசார் சொத்து உரிமைகள்” (TRIPS – Trade-Related Aspects of Intellectual Property Rights) உடன்படிக்கையில் தற்காலிகமாக சில விதிவிலக்குகளை வழங்குவதை குறித்தானதாகும். இது குறித்தான உரையாடல்கள் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச அளவில் நடைபெற்று வந்தாலும், தற்போது தான் அது உச்சத்தை எட்டியுள்ளது.
“ட்ரிப்ஸ்” என்பது 1995-இல் உலக வர்த்தக கழகத்தில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை. அதன்படி, உலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள் அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச தரநிலையுடன் கூடிய சட்டங்களை இயற்ற வேண்டும். அவ்வாறு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைத்தால், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பின் மீதான அறிவுசார் உரிமையை பல நாடுகளுக்கு அளித்து அதன்மூலம் பொருளீட்டிக்கொள்ள முடியும். 1998-இல் தென்னாப்பிரிக்க மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்த அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் மருத்துவ சூத்திரத்தை (formula) அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, மருத்துவ அவசரகாலத்தில் அறிவுசார் உரிமை பயன்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக ஓர் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2001-இல் தோஹா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட இதனை “தோஹா பிரகடனம்” என்பார்கள்.
பொது சுகாதார அவசரநிலையின் போது, மருத்துவ நிறுவனங்கள் தங்கள் காப்புரிமையை உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க அரசுகள் கட்டாயப்படுத்த முடியும் என்பதை தெளிவுபடுத்தியது. இது, “கட்டாய உரிமம் வழங்கல்” (Compulsory Licensing) என்று அறியப்படுகிறது. ஏற்கனவே “ட்ரிப்ஸ்” உடன்படிக்கையில் உள்ள போதும், அதன் பயன்பாட்டினை தோஹா பிரகடனம் மேலும் தெளிவுபடுத்தியது. உலக வர்த்தகக் கழக உறுப்பு நாடுகள் பொது சுகாதார பாதுகாப்பை உறுதிபடுத்த காப்புரிமையை விலக்கிக்கொள்ள முடியும், குறிப்பிட்ட விதிவிலக்குகளை நடைமுறைப்படுத்த முடியும் உள்ளிட்ட சில விதிகள் “ட்ரிப்ஸ் நெகிழ்வுகள்” (TRIPS Flexibilities) எனப்படுகின்றன. மருத்துவ அவசரகாலத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே கொலோச்சுவதை தடுக்க, பொது சுகாதார நலனுக்காக அறிவுசார் சொத்துரிமைகளை விலக்கிக்கொள்ள இந்த ட்ரிப்ஸ் நெகிழ்வுகள் அனுமதிக்கின்றன. இதனடிப்படையில், இந்திய காப்புரிமை சட்டம் 1970 பிரிவு 92-ன் படி, தீவிர காலத்திலோ அல்லது தேசிய அவசரநிலையின் போதோ உரிமங்கள் வழங்க கட்டாயப்படுத்தும் அதிகாரம் இந்திய அரசிற்கு உள்ளது.
“கட்டாய உரிமம் வழங்கல்” மற்றும் “ட்ரிப்ஸ் நெகிழ்வுகள்” சில வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், தற்போது கொரானா நோய்த்தொற்றிற்கான தடுப்பூசியை உற்பத்தி செய்ய அவை போதுமானவையாக இல்லை என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. ட்ரிப்ஸ் விதிகளில் மேலும் சில விலக்குகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று உலக வர்த்தக கழகத்திடம் கோரிக்கை வைத்தன. இதை “ட்ரிப்ஸ் விலக்கு” (TRIPS Waiver) என்கின்றனர். தடுப்பூசி தயாரிக்க காப்புரிமை மட்டும் போதாது, அதனோடு சேர்த்து உற்பத்தி தொழில்நுட்பம், பாதுகாக்கப்பட்ட ரகசியங்கள் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே ட்ரிப்ஸ் விலக்கு கூறுவதாகும். உலக வர்த்தக கழகத்தின் முறையான ட்ரிப்ஸ் கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், ட்ரிப்ஸ் விலக்கு குறித்த பேச்சுவார்த்தை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தடுப்பூசி ஆராய்ச்சிகளும் அதன் காப்புரிமைகளும் நீண்டகாலமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வசம் தான் இருந்து வருகின்றன. இதன் அறிவுசார் உரிமைகள் ஈட்டும் லாபம் பல லட்சம் கோடிகளை தாண்டும். மிகுந்த லாபம் கொழிக்கும் இந்த மருத்துவத்துறையில், தற்போது கொரானா நோய்த்தொற்றிற்கான தடுப்பூசி மற்றும் மருந்துப் பொருட்களை கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரான பில் கேட்ஸின் “பில் & மெலிண்டா கேட்ஸ்” தொண்டு நிறுவனமும் ஒன்று. மேற்குலக நாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரானா தடுப்பூசி காப்புரிமைகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களை ஏழை நாடுகளும் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தான் தற்போது காரசாரமாக நடைபெற்று வருகிறது.
ட்ரிப்ஸ் விலக்கு கடந்த அக்டோபரில் முன்மொழியப்பட்டாலும், மேற்குலக நாடுகள் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. தங்களது தேவைகளை முதன்மைப்படுத்துவதும், தங்கள் நாட்டின் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை சேமித்து வைத்துக்கொண்டு கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் ஏழை நாடுகளுக்கு தர மறுப்பதையும் அமெரிக்க உள்ளிட்ட பணக்கார மேற்குலக நாடுகள் மேற்கொள்கின்றன. இதனை, “தடுப்பூசி தேசியவாதம்” (Vaccine Nationalism) என்கின்றனர். இதனால், ட்ரிப்ஸ் விலக்கிறக்கான ஆதரவு சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன. கொரானா நோய்த்தொற்றிலிருந்து மேற்குலக நாடுகள் மீண்டு, அம்மக்கள் தடுப்பூசிகளை பெரும்பான்மையான போட்டுக்கொண்ட நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளில் கொரானா மிகத்தீவிரமாக பரவத்துவங்குகிறது. இந்நிலையில், ட்ரிப்ஸ் விலக்கை ஆதரிக்க மேற்குலக நாடுகள் மீது சர்வதேச அழுத்தம் வலுத்தது.
அமெரிக்கா இந்த விலக்கை ஏற்க மறுத்தது. ஏழை நாடுகளுக்கு காப்புரிமை வழங்கி, உற்பத்தி தொழில்நுட்பத்தை பகிர்ந்தாலும் தடுப்பூசி தரத்தின் மீதான சந்தேகம் நீடிக்கும். இந்த சந்தேகம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி அவநம்பிக்கையை உண்டாக்கும் எனவும், தடுப்பூசி தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான நிபுணத்துவம் தங்களை போன்ற காப்புரிமை உடையவர்களிடமே உண்டு என்றும் பில் கேட்ஸ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இது குறித்து மே 17 இயக்கக் குரலில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.
இந்நிலையில், தற்போது இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் சூழலை கண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள், பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து, ஏழை நாடுகள் கொரானா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தற்காலிக காப்புரிமை விலக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது அழுத்தம் கொடுக்க துவங்கினர். 20 லட்சம் அமெரிக்கர்கள், 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 100 நோபல் பரிசு பெற்றவர்கள் என்று இந்த கோரிக்கையை முன்னெடுத்தவர்களின் பட்டியல் நீளமானது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச தலைவர்களும் அழுத்தம் கொடுக்க, இறுதியில் அமெரிக்கா இறங்கி வந்தது. கடந்த மே 5 அன்று கொரானா தடுப்பூசிக்கான குறுகியகால காப்புரிமை விலக்கதிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவளிப்பதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கேத்தரீன் தை (Katherine Tai) அறிவித்தார்.
இது உலகளாவிய நெருக்கடி என்றும், கொரானா நோய்த்தொற்று போன்ற அசாதாரண சூழலில் அசாதாரண முடிவுகள் எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது என்றும் கேத்தரீன் தை கூறினார். அமெரிக்காவின் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் வரவேற்றார். “உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ள இது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்” என்றார். தற்காலிக ட்ரிப்ஸ் விலக்கை முன்மொழிந்த நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்த அமெரிக்காவின் முடிவை வரவேற்ற உலக வர்த்தக கழகத்தின் பொதுச் செயலாளர் கோஸி ஓகாஞ்சோ ஐவேலா (Ngozi Okonjo-Iweala), முன்மொழிந்த நாடுகள் தங்கள் திட்டத்தை எழுத்துவடிவில் விரைவாக அளிக்க கோரியுள்ளார். ஜூன் முதல் வாரம் நடைபெறவிருக்கும் ட்ரிப்ஸ் கூட்டத்தில் முன்மொழியப்படவுள்ள வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அனைத்து உறுப்பு நாடுகளுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்த பேச்சுவார்த்தை மே மாத பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பில் கேட்ஸ் மற்றும் பல்வேறு மருந்துவ நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு நடுவே அமெரிக்காவின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர், கேதரின் தையை பில் கேட்ஸ் சந்தித்து காப்புரிமைகளை பாதுகாக்க வேண்டி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தனது நிலைப்பாடை மாற்றிய பின், பில் கேட்சின் தொண்டு நிறுவனம் தனது நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பு வரை ட்ரிப்ஸ் விலக்கிற்கு எதிராக கடுமையாக போராடிய பில் கேட்ஸ், தாம் வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்பதாக கருதப்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில், அமெரிக்க அரசின் முடிவை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கொரானா தடுப்பூசிக்கான அறிவுசார் உரிமைகள் மீதான தற்காலிக விலக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் பில் கேட்ஸ் தொண்டு நிறுவனம் எடுத்த முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எவ்வளவு தயாரிக்க முடியுமோ அவ்வளவு அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிகளை அமெரிக்கா தயாரித்து மே, ஜூன் மாதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் தடுப்பூசி தயாரிக்கும் பல முக்கிய மருந்து நிறுவனங்களின் மதிப்பு பங்குசந்தையில் சரிய துவங்கியது. அமெரிக்காவின் முடிவை எதிர்ப்பவர்கள், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டினருக்கு செல்லும் என்றும், தற்காலிக அறிவுசார் சொத்துரிமை விலக்களிக்கப்படுவதால் தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துவிடாது என்றும் வாதிடுகின்றனர்.
ட்ரிப்ஸ் விலக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இங்கிலாந்து, ஜப்பான் மட்டுமே எதிர் நிலையில் நிற்கின்றன. அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தங்கள் திட்டங்களை வழங்குவார்கள் என்று உலக வர்த்தகக்கழக பொதுச்செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிகப்படியான நெகிழ்வுகளுடன் கூடிய ட்ரிப்ஸ் விலக்கு ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படுமெனில், அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இருந்த ட்ரிப்ஸ் ஒப்பந்த விதிகளில் உள்ள கட்டாய காப்புரிமை வழங்கல் என்பது போதாது என்ற நிலையில், அமெரிக்கா காப்புரிமை விலக்கத்திற்கு ஆதரவளித்துள்ளது. ஆனால், புதிய முன்மொழிவில் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாக்கப்பட்ட ரகசியங்கள் கோரப்பட்டால், அதற்கு அமெரிக்கா என்ன எடுக்கும் என்பது அடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் மூலமே தெரிய வரும். ஒரு வேளை தொழில்நுட்பம் பாதுகாக்கப்பட்ட ரகசியங்கள் மறுக்கப்பட்டு, அறிவுசார் சொத்துரிமைக்கு மட்டுமே தற்காலிகமாக விலக்கு வழங்கபட்டால் அது எந்த விதத்திலும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உதவாது.
மேலும், இந்த முன்மொழிவுகள் குறித்த பேச்சுவார்த்தை அதிக காலம் நீடிக்கும் என்று அமெரிக்காவின் வர்த்தக தூதர் கேத்தரீன் தை கூறியுள்ளதன் மூலம், வரும் ஜூன் முதல் வாரம் நடைபெறும் ட்ரிப்ஸ் கூட்டத்தில், எதிர்பார்த்த முடிவு எட்டப்பட்டு முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே!
இதன் மூலம், மூன்றாம் உலக நாடுகள் மீதான தனது வர்த்தக பிடியை இருக்குவது என்பதை மட்டுமே மேற்குலகம் விரும்புகிறது என்பது அப்பட்டமாக தெரிய வருகிறது. சுவாசிக்க ஆக்சிசன் கிட்டாமல் மருத்துவமனை வாயில்களில் பல மணிநேரம் காத்திருந்து நாள்தோறும் துடிதுடித்து பிரியும் பல்லாயிரகணக்கான மனித உயிர்களின் முகங்கள் பணக்கார நாடுகளின் மனக்கதவுகளை தட்டினாலும், ஏழை நாடுகள் மீதான தங்களின் ஏகபோக வணிக கட்டுபாட்டை தளர்த்திட ஏனோ அவர்களுக்கு மனம் இறங்குவதில்லை!
தற்போது இந்தியாவில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில் ட்ரிப்ஸ் விலக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உடனடியாக எந்த ஒரு பலனும் அளிக்கப்போவதில்லை. அறிவுசார் உரிமைகளை பெறும் முயற்சிக்கு பதிலாக, ஏற்கனவே உள்ள ட்ரிப்ஸ் விலக்கு அளிக்கும் “கட்டாய உரிமம் வழங்கல்” வாய்ப்பினை பயன்படுத்தி, இந்திய அரசு பொது நிறுவனங்களை கொண்டு தடுப்பூசிகளை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ “இந்திய காப்புரிமை சட்டத்தை பயன்படுத்தி கட்டாய உரிமம் வழங்கல் மூலம் கொரானா தடுப்பூசி மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரிக்க முயற்சிப்பது கடும் பின்விளைவுகளை உண்டாக்கும்” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள “கட்டாய உரிமம் வழங்கல்” என்கிற சிறு வாய்ப்பைக்கூட பயன்படுத்த மறுக்கும் மோடி அரசு, ட்ரிப்ஸ் விலக்கை கோரும் என்பது வேடிக்கையாக தான் உள்ளது.
மோடி அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு, தடுப்பூசி உற்பத்திக்கான உரிமம் பெறுவது என்பதை தாண்டி, குஜராத் மார்வாடி-பனியா கூட்டத்தின் வணிக நலனையே முன்னிருத்துகின்றன. தன்நிறைவான அறிவியல் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தாமலும், முதலீடு செய்யாமலும் சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கும் காலனிய காலத்து தரகு வணிகர்கள் இன்று இந்தியாவின் தொழில் துறையை முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த தரகு பனியா-மார்வாடி கும்பலின் “தொழில் முறை” தோல்விக்கு சாட்சியாக சீரம் (Serum) தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் நிற்கிறது.
இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் வியாபரம் செய்யும் வர்த்தக நிறுவனங்களே ஒழிய, உற்பத்தி செய்யும் நிறுவனங்களோ, அறிவுசார் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நிறுவனங்களோ அல்ல. இது காலனிய காலத்தில் வெள்ளையர் அரசோடு ஒட்டி உறவாடி தம்மை வளர்த்துக் கொண்ட இந்திய முதலாளி வர்க்கத்தின் புதிய முகவரியாகவும், இந்திய துணைக்கண்ட மக்களை உரிஞ்சும் சுரண்டல் பேர்வழிகளாகவுமே இருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மோடியின் முதன்மை பணி, இந்த தரகு முதலாளிகளுக்கான தரகு வேலையை செய்வதும், மார்வாடி பனியா முதலாளிகளின் தரகு வணிக நலன்களை பாதுகாப்பது தானே ஒழிய, மக்களின் நலன்கள் அல்ல!