பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளை ஊழல்வாதிகள் என முடக்கும் மோடி
“குடும்பத்தால் குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் கொள்கை” என்கிறார் மோடி. குடும்ப அரசியலைப் பேசி பிற கட்சிகளை ஊழல் கட்சிகளாக சித்தரிக்கும் மோடி அப்பழுக்கற்ற பிரதமரா?
பிற கட்சிகள் குடும்ப அரசியல் செய்வதாகவும், அவர்கள் குடும்பத்திற்காக சொத்து சேர்க்க ஊழல் செய்வதாகவும் மோடி பேசுவது கேட்போருக்கு நியாயாமென தோன்றலாம். தான் திருமணம் செய்த பெண்ணை நிர்கதியாக கைவிட்டு ஆர்எஸ்எஸ்-க்கு சென்றுவிட்டதால் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்த ஒற்றை காரணத்தை வைத்துக்கொண்டு மோடி “அதிகாரத்துக்கு ஆசைப்படாதவர், ஊழலற்ற நேர்மைவாதி” என்று பேசுபவர்களை கண்டு அச்சம் தோய்ந்த பரிதாபமடைய தான் தோன்றுகிறது.
மோடியின் அதிகார வெறி பற்றி எதிர்கட்சிகளை விட அவர் சொந்த கட்சியான பாஜகவினரே சொல்வார்கள். அத்வானி முதல் பிற மூத்த மற்றும் தகுதி வாய்ந்த தலைவர்களை எல்லாம் மோடி எப்படி மூலையில் அமரச் செய்தார் என்பதற்கு அவர்களே சாட்சி. மேலும், மோடி சொந்தமாக சொத்து சேர்த்துக்கொள்ள குடும்பம் இல்லை என்றாலும் அவர் சேர்க்கும் சொத்துக்களை தன்னை சூழ்ந்துள்ள பனியா நண்பர்களிடம் குவித்து வைத்துள்ளார். இந்தியாவின் சொத்துக்களை தனது நண்பர்களிடம் குவிப்பதையே மோடி தனது ஆட்சியின் பொருளாதார கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறார். தனி விமான பயணத்திற்கு விமானத்தை வழங்க அதானியும், தங்கும் விடுதிகளை வழங்க அகர்வாலும் இருக்கும் போது மோடி எதுக்கு அவர் பெயரில் சொத்துக்களை சேர்க்க வேண்டும்?
மோடியின் ஊழல்கள் பெரும்பாலும் இடைத்தரகு பணியில் நடப்பதால் வெகுமக்கள் தளத்தில் பேசப்படுவதில்லை. அந்த ஊழலே பனியா நண்பர்களிடம் மற்றும் அவர்கள் வழியாக பாரதிய ஜனதா கட்சியின் நிதியாக வந்து குவிகிறது. இது, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ மதவெறி சங்பரிவார் கும்பலின் வளர்ச்சிக்கு பொருளாதார அடித்தளம் அமைத்து தருகிறது. பிரசித்தி பெற்ற பல ஊழல்களில் மோடியின் பங்கையும், மோடியடைந்த பிரதிபலன்களையும் சிலவற்றைப் பார்ப்போம். இவை மலையென குவிந்து கொண்டிருக்கும் மோடியின் திரைமறைவு ஊழல்களில் எள்ளின் முனையே!
ரஃபேல் ஊழல்
இந்திய மக்களின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட இராணுவ கருவிகளிலும் ஊழல் நடந்தது. முந்தைய காங்கிரசு ஆட்சியில் 126 ரஃபேல் விமானங்களை 600 கோடிக்கு வாங்க பிரான்சுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும் 2015-ல் 1670 கோடிக்கு 36 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு (HAl) வாய்ப்பு மறுத்து, விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத தன் நண்பரான அனில் அம்பானியை இந்த 60 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் மோடி நுழைக்கிறார். முந்தைய ஒப்பந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகமான விலைக்கு ஏன் மோடி வாங்குகிறார்? என விவாதம் எழுந்தது. இந்த ஒப்பந்தத்தினால் பல்லாயிரம் கோடிகள் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த ஊழல் குறித்து, இந்தியாவில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மேலிட நெருக்கடியால் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், பிரான்சில் இன்றும் இந்த ரஃபேல் விமான ஊழலுக்கான வழக்குகள் நடக்கிறது. பிரான்சு பத்திரிக்கைகள் இந்த ஊழலை அம்பலப்படுத்தி அந்நாட்டின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடைத்தரகருக்கு பண பரிமாற்றம், அனில் அம்பானிக்கு அளித்த வரித் தள்ளுபடி பற்றி அங்குள்ள நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
பிரான்சில் அனில் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனம் செலுத்த வேண்டிய வரி தொகையான சுமார் ரூபாய் 1200 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என பிரான்சு இதழான ‘லெ மாண்டே‘ ஒரு செய்தி வெளியிட்டது. இதை அனில் அம்பானி மறுத்தார். ஆனால் வரித் தள்ளுபடி அளிக்க பிரான்சு அதிபருக்கு அனில் அம்பானி எழுதிய கடிதத்தை பிரான்சு இணையதள செய்தி நிறுவனம் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. மோடி எதற்கு அம்பானிக்கு இடைத்தரகராக செயலாற்றுகிறார்? அனில் அம்பானியிடம் இருந்து என்ன ஆதாயத்தைப் பெற்றார்? என்ன காரணத்திற்காக பிரான்சு அனில் அம்பானிக்கு வரித்தள்ளுபடி அளித்தது? கடந்த ரபேல் விமான ஊழலுக்கே முடிவு அறியப்படாத நிலையில், தற்போது ஜூலை-14, 2023 அன்று மேலும் 26 விமானங்களையும், நீர் மூழ்கிக் கப்பல்களையும் பெற 90 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை மோடி தனது பிரஞ்சு பயணத்தின் போது கையெழுத்திட்டு வந்திருக்கிறார்.
‘பண மதிப்பிழப்பு’ ஊழல்
“கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறோம்” என்று நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையை மோடி அறிவித்தார். 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தபோது 136 கோடி மக்களும் பெண்கள் முதியவர்கள் செய்வதறியாது வங்கி வாசலில் காத்துக்கிடந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரையும் பறிகொடுத்தனர். ஆனால், மோடியின் அறிவிப்புக்கு முன்னதாகவே அமீத்சா தலைமையில் பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இரகசிய குழு ரூபாய் 3 இலட்சம் கோடியை வெளிநாட்டில் அச்சடித்து இங்குள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 15-40% கமிசனில் விநியோகம் செய்துள்ளனர் என்பது இந்திய வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகாரி ரகசியமாய் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபில் வெளியிட்ட இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பைக் கிளப்பியது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனுக்கு பதில், அவரை அடுத்துப் பதவியேற்ற உர்ஜித் பட்டேல் கையெழுத்து அந்த நோட்டுகளிலிருந்தது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது. இந்த 3 இலட்சம் கோடி ஊழல் மோடி ஆட்சியில் புதைந்து தான் கிடக்கிறது.
(விரிவானக் கட்டுரை- மோடி ஒழித்த கருப்பு பணம்!)
பி.எம். கேர்ஸ் (PM Cares) ஊழல்
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட 2019 – காலகட்டத்தில், பி.எம். கேர்ஸ் திட்டத்தில் நிதி வழங்குமாறு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதன் அதிகாரப்பூர்வ இணையதள கணக்கின்படி, 2022 வரை இதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி அளவில் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. உறுதியான தொகை எவ்வளவு என்று மோடி நாட்டிற்கு அறிவிக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாமல், அதுநாள் வரை இருந்த பிரதம மந்திரி நிவாரண நிதியை இணைத்துக்கொண்டதோடு; பொதுமக்களிடம் இருந்து திரட்டப்படும் நிதி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான செலவு விவரங்களைக் கூட நாம் கேட்க முடியாது. ஏனென்றால், இது தனி அறக்கட்டளை நிதி என்றும் அரசின் பொது நிதி அல்ல என்றும் மோடி அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அரசின் இணையதள முகவரியுடன், தேசிய சின்னத்துடன், பிரதமர் மோடியைத் தலைமையாகக் கொண்டு திரட்டப்பட்ட நிதியை எவரும் கேள்வி கேட்க முடியாதென கூறியுள்ளது. இந்த நிதியிலிருந்து தான் வெண்டிலேட்டர் வாங்க ரூ.2000 கோடி ஒதுக்கி, முன் அனுபவமற்ற பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு தரமற்ற வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்தது. வெண்டிலேட்டர் எண்ணிக்கையில் குளறுபடி செய்தும், அதன் விலையை உயர்த்தியும் ஊழல் செய்ததாக அம்பலமாகியது.
(விரிவானக் கட்டுரை- கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு)
தேர்தல் பத்திரம் (Electoral Bond)
தேர்தல் பத்திரம், இது தான் கைம்மாறு வழங்கும் சூத்திரம். பாஜக மோடி நேரடியாக ஊழலில் பாத்திரம் வகிக்காமல், மறைமுகமாக பலனை பெறுவது தான் இந்த பத்திரம். மார்வாடி பனியா கூட்டத்திற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வழங்கும் சலுகைகளுக்கு கைமாறாக தேர்தல் பத்திரமாக பெற்றுக்கொள்கிறது மோடியின் பாஜக. இதன்படி, ஒரு அரசியல் கட்சி தனது கணக்கில் யாரிடமிருந்து பத்திரம் பெறுகிறது என்பதை வெளியிடவும் வேண்டியதில்லை; கட்சிக்கு நிதி வழங்கிய நபரோ அல்லது நிறுவனமோ தாங்கள் நிதி அளித்த கட்சியின் விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. தேர்தல் பத்திரம் முறையை மோடி அறிமுகம் செய்வதற்கு முன்பு வரை தேர்தல் கட்சிகளுக்கு வழங்கிடும் நிதி விவரங்களை தங்கள் நிறுவனத்தின் ஆண்டு கணக்கில் வெளியிட வேண்டி இருந்தது. இனி அப்படியாக கணக்கை “வெளியிட தேவையில்லை” என்று சட்டத்தை மாற்றிய அப்பழுக்கற்ற நேர்மையாளர் தான் நரேந்திர மோடி.
14 தமிழர்களின் உயிர்களை பறித்துக்கொண்ட பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பேசி வருவதின் பின்னணியில் இந்த பத்திரங்கள் பரிமாற்றம் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல் பத்திரம் வழங்கும் SBI வங்கியில் மொத்தமாக 12 ஆயிரம் கோடி அளவிற்கு ஜூலை 14, 2023 வரை தேர்தல் பத்திரம் விற்கப்பட்டுள்ளது. இதில் 80% அளவிலான ரூ 9600 கோடி மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வெளியாகியுள்ளது.
அதானி ஊழல்
2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்கும் போது அதானியின் சொத்து மதிப்பு 60,000 கோடி அளவில் தான் இருந்தது. ஆனால், இன்றைய சொத்தின் மதிப்பு 13 லட்சம் கோடி. அதானி கால் பதித்த நிலக்கரி, மின்சாரம், தொலைத் தொடர்பு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு என பல துறைகளுக்கும் உலகின் பல பகுதிகளில் ஷெல் நிறுவனங்கள் எனப்படும் வெற்று காகித நிறுவனங்களை நிறுவி; அவற்றின் மூலம் மோசடிகளை அரங்கேற்றி பல லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டியிருக்கிறார் என்பதையும், பங்குச்சந்தையில் உருவாக்கிய இமாலய ஊழலையும் வெளிக்காட்டியது ஹிண்டன்பெர்க் எனும் ஆய்வு நிறுவனம்.
(விரிவானக் கட்டுரைகள்- அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள் ; செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும்)
அதானியின் உற்ற துணையாக இருந்தவர் தான் மோடி. அதானிக்காக இந்திய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையை மாற்றினார். மோடி ஒவ்வொரு நாடாக செல்வதே, அந்த நாட்டின் புதிய திட்டங்களுக்கு அதானிக்கான ஒப்பந்தத்தை வாங்கி வருவதற்கு என்கிற அளவில் பயணத்தை அமைத்துக் கொண்டார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம், வங்கதேசத்தில் மின்சார திட்டம், இலங்கையில் சூரிய மின்திட்டம், காற்றாலை மின்சார திட்டம், துறைமுகத்தில் சரக்கு முனையம் அமைக்கும் திட்டம் என அதானிக்கு ஒப்பந்தங்களை வாங்கித் தரும் தூதுவராக பணியாற்றுகிறார்.
(விரிவானக் கட்டுரை- அதானியை வளர்க்கும் இந்திய வெளியுறவுத் துறை!)
கார்ப்பரேட்களின் ஊழல்
கார்ப்பரேட் ஊழல்களின் காவலனாக இருப்பதற்கே மோடியின் ஆட்சி நடக்கிறது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன. உள்துறை அமைச்சரான அமீத்சாவின் மகன் ஜெய்ஷாவின் ‘டெம்பிள் எண்டர்பிரைசஸ்’ பெருமளவில் நட்டத்தை சந்தித்த ஒரு நிறுவனம். ஆனால், மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அதன் வருமானம் 50 ஆயிரத்திலிருந்து 80 கோடியாக மாறியது. ஒரே ஆண்டில் 16000 மடங்கு வருமானம் வளர்ச்சிபெறும் அளவிற்கு என்ன தொழில் செய்கிறார்?
நகை மற்றும் வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி கடனை வைத்து விட்டு 2018ம் ஆண்டு ஜனவரி மாதமே தப்பியோடி விட்டார். ஆனால், 2018 பிப்ரவரியில் சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். 2016ம் ஆண்டே இவரைப் பற்றி எழுத்துப்பூர்வமான தகவல் வந்தும் நீரவ் மோடி தப்பிப்பதற்கு நரேந்திர மோடி கால அவகாசம் வழங்கினார். இன்று வரை நீரவ் மோடியை இந்தியாவிற்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், இது இரு மோடிகளின் ஊழல் இல்லாமல் வேறென்ன?
வங்கியிலிருந்து கடன் பெற்று 9000 கோடியை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, 7000 கோடிகளை ஏமாற்றிய மெகுல் சோக்சி, வின்சம் டைமண்ட்சின் ஜதின் மேத்தா, லலித் மோடி, ஜெயந்திலால் சகோதரர்கள் என 31 பேர் கணக்கிலும் ரூ 40 ஆயிரம் கோடி கடன்கள் இருக்கிறது. இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்பட்டாலும் இதுவரை ஒருவரையும் இழுத்து வந்து இந்திய சிறைகளில் ஏன் அடைக்கவில்லை? பல நாடுகளில் சுதந்திரமாக உலா வரும் இந்த பனியா திருடர்களை சிறைபிடிக்கும் வக்கற்றவரா “விஷ்வ குரு” மோடி?
ரசிய – உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் புறக்கணிக்கப்பட்ட ரசிய கச்சா எண்ணெய் மிக மலிவான விலையில் இந்தியாவிற்கு ரசியா வழங்கியது. இந்த மலிவு விலை கச்சா எண்ணெய் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை வீழ்ச்சியடைய செய்திருக்க வேண்டும். ஆனால், பனியா சேவகன் மோடிக்கோ அந்த விலை வீழ்ச்சியின் பலனை இந்தியா வாழ் 110 கோடி இந்துக்களுடன் பகிர மனமில்லை. ரசியாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் அம்பானியின் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரித்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் அம்பானி பல்லாயிரம் கோடியில் கொழுத்தார். மறுபுறம், அரசு எண்ணெய் நிறுவனங்களும் இதுநாள் வரை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வராமல் மக்களை விலைவாசி ஏற்றத்தில் நசுக்கி வருகின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வகையில் சட்டபூர்வமாக (தேவைக்கேற்ப சட்டங்களை மாற்றி) நடைபெற்று வருகிறது. இதுகாலம் வரை இந்தியாவில் இருந்த ஊழல் புரியும் முறைகளை மாற்றிய பெருமை நரேந்திர மோடியை சேரும்.
கடந்த ஜூன், 2023ல் அமெரிக்கா சென்ற மோடி மைக்ரான் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிப் தயாரிக்கும் கம்பெனி குசராத்தில் 1.65 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். இதில் வெறும் 600 கோடி மட்டுமே மைக்ரான் நிறுவனத்தின் முதலீடு எனவும், மீதமுள்ள ஒரு லட்சம் கோடி இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகின.
2014 – 2021 வரை மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 10.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். ஜூன் 2020ல் 1.46 லட்சம் கோடி ரூபாய் கடனை 1913 பேர் ‘வேண்டுமென்றே கடனைக் கட்டாதவர்கள்” (wilful defaulters) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது. 2013 வரை 2 லட்சம் கோடியாக இருந்த வராக்கடன், 8 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து 10 லட்சம் கோடியாக இமாலய வளர்ச்சிக்கு மோடியின் பங்கு இல்லையா? 140 கோடி மக்களின் வரிப்பணம் வெறும் 5000க்கும் கீழுள்ள பெரு நிறுவனங்களால் விழுங்கப்பட்டிருக்கிறது. வடநாட்டைச் சார்ந்த குறிப்பாக குசராத்தி பனியா மார்வாடி கும்பல் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியை சூறையாடியிருக்கிறார்கள். இந்த ஊழலின் கருவி யார்?
மக்களுக்கு சேவை செய்யவே உருவாக்கப்பட்ட சேவைத் துறைகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்த பணமாக்கல் திட்டம், காடுகளை அழித்து அதன் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் அள்ளிச் செல்லும் வகையில் வனப் பாதுகாப்பு திருத்த சட்டம்; தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கார்ப்பரேட்டுகள் லாபம் பார்க்க தொழிலாளர் சட்டம்; வேளாண் உற்பத்தி பொருட்களின் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் வகையில் வேளாண் திருத்தச் சட்டம்; மீனவர்களிடமிருந்து கடலை அந்நியப்படுத்தி கார்ப்பரேட்டுகள் கையில் அளிக்கும் கடல் மீன் வள மசோதா சட்டம் என கார்ப்பரேட்களுக்கு படையல் போடும் சட்டத் திருத்தங்களில் ஊழல் இல்லையா?
மிரட்டப்படும் மாநில கட்சிகள்
இப்படியாக ஒன்றிய அரசின் ஆட்சிக்கு வந்த காலம் முதலே ஊழலுக்கு வித்திட்டு, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெரிய ஆலமரமாக வளர்ந்து விரிந்து இருக்கும் மோடியின் பாஜக ஊழல் ஒழிப்பை பேசுவது தான் விந்தையாகவுள்ளது. மோடி செய்து வரும் ஊழலின் விளைவாக 130 கோடி இந்தியர்களின் உழைப்பும் வெகுசில குஜராத்தி மார்வாரி பனியா கும்பலின் சொத்து குவிப்பில் போய் முடிகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பரவலாக இருந்த சொத்துக்கள் இன்று வெகு சிலரிடம் சேர்க்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர் கட்சிகளை தாண்டி சொந்த கூட்டணி கட்சிகளையும் உடைத்து சிதறடித்து வரும் குறைந்தபட்ச அரசியல், ஜனநாயக அறமும் அற்ற கட்சியாக பாஜக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை நண்பர்களுக்கு தாரைவார்ப்பது, கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குவது, தேசப்பற்று முழங்கிக்கொண்டே சென்னையில் அமெரிக்க கப்பற்படைக்கு தளம் வழங்குவது என ஊழலின் ஆணி வேராக மோடி விளங்கி வருகிறார்.
இந்துத்துவ மதவெறுப்பை பரப்பி ஆட்சியை பிடித்து, இந்துக்களின் உழைப்பை சூறையாடி வரும் பாஜக மோடி அரசின் அயோகியதனத்தை இந்தியர்கள் உணர்ந்து கொண்டனர். இதனையடுத்து, மாநில கட்சிகளின் ஒன்றிணைவால் தனது ஆட்சிக்கு பங்கம் வருவதை உணர்ந்த மோடி அரசு மாநில கட்சிகளுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை சிதைக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஆகவே, இந்தியா முழுவதும் பாஜக இந்துத்துவ மதவெறுப்பு அரசியலை எதிர்த்து வரும் மாநில கட்சிகள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, என்ஐஏ போன்ற அரசுத்துறைகளை ஏவி வருகின்றது. இந்த அரசுத்துறைகள் நேர்மையாக பணியாற்றுமானால், முதலில் மோடி மற்றும் பாஜகவினர் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எடுக்குமா?