மோடி ஒழித்த கருப்பு பணம்!

rbi-rs-2000-note ban

2016 நவம்பர் 8ஆம் தேதி கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். பண பரிவர்த்தனை மேலாண்மை செய்யும் ரிசர்வ் வங்கி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூடும் பாராளுமன்றத்திலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மோடி இந்த முடிவெடுத்து அறிவித்தார். 

 தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணம் செல்லா காசாக அறிவிக்கப்பட்டதால், பல கோடி ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூட்டம் கூட்டமாக பல நாட்கள் தானியங்கி (ATM) வாசலிலும் வங்கி வரிசையிலும் கால்கடுக்க  நின்று, காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகியும் பணத்தை மாற்றினார்கள். இந்த நெருக்கடியில் சிக்கி உடல் நலிவுற்ற கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர்.

மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் மற்றும் பயங்கரவாத ஒழியும் என்றும்; நாட்டின் நலனுக்காக சில அதிரடி நடவடிக்கைகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் ரஜினி உட்பட மோடி இந்துத்துவ ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். ரூ.2000 நோட்டுகளில் ‘Chip’ இருப்பதாகவும், அதை செயற்கைக்கோள் மூலம் மோடி அரசு சட்ட விரோத பயன்பாடுகளை கண்காணிக்கும் என்று வேத மந்திரதந்திர ஜாலங்களை போல பாஜகவின் எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பேசி வந்தனர்.

2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியானபோது மே பதினேழு இயக்கம் இந்நாடிவடிக்கையின் மூலம் கறுப்பு பணம் ஒழிக்க முடியாது; பெரிய தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் தங்கள் கணக்கில் வராத வருமானத்தை பணமாக மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் நிலம், தங்கம், தொழில் நிறுவனம் மற்றும் பங்கு சந்தைகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். ஆகவே, இந்நடவடிக்கையால் ஏழை மற்றும் நடுத்தர மக்களும், சிறுகுறு வணிக நலன்களே பெரிதும் பாதிப்படையும். தொழில் நுகர்வு குறைந்து பொருளாதார வீழ்ச்சியடையும் என அழுத்தம் திருத்தமாக கூறியது. இதை காலம் உறுதி செய்தது.

2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மொத்த ரூபாய் நோட்டுகளில் 500,1000 நோட்டுகள் மட்டும் 68% செயல்பாட்டில் இருந்துள்ளது. அதில் 99.6% வரையிலான நோட்டுகள் ரிசர்வ் வாங்கியிடம் திரும்ப வந்துவிட்டன என அதிகாரிகளும் தெரிவித்தனர். இதன் மூலம் கறுப்பு பணத்தை யாரும் வீட்டில் வைத்து வைத்திருப்பதில்லை, அதை நிலம், பொருள் போன்ற சொத்துக்களாக மாற்றி வைத்திருப்பார்கள் என்பது உறுதியாகிறது.

உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது கட்டுக்கட்டாக பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. சுமார் 147 கோடி ரூபாய் மதிப்புடைய பழைய நோட்டுகளும், சுமார் 24 கோடி மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இது சம்பந்தமான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் 2021ல் ரத்து செய்துள்ளது. இதேபோல், அரசியல்வாதிகள் மற்றும் குஜராத் மார்வாடி பனியா தொழிலதிபர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 58 வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆக, பாஜக அரசாங்கத்திற்கு கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழலை ஒழிப்பதில்; பயங்கரவாத செயல்களுக்கான நிதியை தடுப்பதில் எந்த அக்கறையும் இல்லை. இவை எல்லாம் இந்தியாவில் இன்றும் தொடர்ந்து வருவதே இதற்கு சாட்சி.

கல்விக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்கூடங்கள், வேலைவாய்ப்புகள், மருத்துவமனைகள் பெருகியுள்ளதாக கூறி பாஜக எப்போதாவது தேர்தலில் பேசி உள்ளதா? ராமர் கோயில் கட்டுவதற்கும், பட்டேல் சிலை வைப்பதற்கும், புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு மட்டுமே நிதி ஒதுக்கி மக்கள் வரிப்பணத்தை பாஜக செலவு செய்கின்றது. இதனால், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பெற்று விடமுடியுமா? உலகின் அதிக ஏழைகளை கொண்டுள்ள இந்தியாவின் இந்து மக்களின் பசி தீர்ந்துவிடுமா?

திரும்பப்பெறப்படும் 2000 ரூபாய்

இந்நிலையில், கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வரும் 30.09.2023 வரை மட்டுமே ரூ.2000 நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. பொதுமக்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்றிக்கொள்ளுமாறு தெரிவித்தது. நாளொன்றுக்கு 20,000 ரூபாய் வரை உச்சவரம்பு விதித்து ரூ.2000 நோட்டுகளை ஒப்படைத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிவிடும்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் கடந்த மே 19ம் தேதியன்று அறிவித்தார்.

இதற்கிடையே, 2000 நோட்டு ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான காரணங்களை கேட்டு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்திருந்தார். இதற்கு, “காரணங்களை வெளிப்படுத்தினால் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும்” என்று ரிசர்வ் வங்கி காரணங்களை வழங்க மறுத்துள்ளதாக கோகலே தெரிவித்துள்ளார்.

sakhet gokahle 2000rs rti

மேலும், “2000 ரூபாய் நோட்டுகளை (இந்தியாவிற்குள்) திரும்ப பெறுவதற்கும் வெளிநாட்டு உறவுக்கும் என்ன சம்மந்தம்? இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது? 2000 நோட்டுகள் ஏன் திரும்ப பெறப்பட்டது?” போன்ற கேள்விகளுக்கு ஆர்பிஐ மற்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூற வேண்டும் என்று கோகலே ட்வீட் செய்திருந்தார்.

2023 மார்ச்சு 31 வரை ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. 2017ல் ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்தபோது ஒரு நோட்டு அச்சடிக்க ரூ.3.54 முதல் ரூ.3.77 வரை செலவு செய்வதாக தெரிவித்திருந்தது. 2022 மார்ச் மாத இறுதி வரை 214 கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆக, குறைந்தபட்சம் ரூ.758 கோடி மக்கள் வரிப்பணம் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. விநியோகம், பரிவர்த்தனை தகவமைப்பு என பிற செலவுகளும் உண்டு.

2016ல் பாஜக ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹதாகி உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 17 – 23% வரை பணம் வங்கிகளுக்கு வராமல் போகும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். இது, சுமார் ரூ.1.45 லட்சம் கோடி கணக்கில் வராத “கருப்பு பணம்” என்று கருதப்படும். இதன்மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு இந்தியாவின் கடன்கள் அனைத்தும் தீரும் என்று கூறி இருந்தார். ஆனால், 99% மேலான தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்து சேர்ந்ததால் ஒன்றிய அரசின் கருப்பு பணம் ஒழிப்பு  என்னும் முட்டாள் தனமான நடவடிக்கை அம்பலமானது.

ஆர்எஸ்எஸ் பாஜக மோடியின் மதிகெட்ட பொருளாதார நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை, ஊழல், பயங்கரவாதம் எதுவும்குறைந்தபாடில்லை. இந்த நடவடிக்கை மக்கள் வரி பணத்தை கரியாக்கியது மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி நின்ற சிறுகுறு தொழிற்துறையை சீர்குலைத்தது. இதனால் வேலை இழந்து வாழ்வாதாரம் பறிபோன இந்துக்கள் பல கோடி.

புராண புனைவு இராமாயணங்களை போற்றும் வானரப்படையிடம் ஆட்சி அதிகாரம் கிட்டினால் அது அந்த குரங்கு கையில் சிக்கிய பூ மாலை தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »