இஸ்ரேலிய பெகாசஸ் செயலி மூலம் குடிமக்களை உளவு பார்த்த மோடி!
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் தங்கள் நாட்டை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை சட்டவிரோதமாக உளவு பார்த்ததாக கடந்த ஜூலை 19 அன்று இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில், இந்தியாவின் தி வயர், இங்கிலாந்தில் தி கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த செய்தி உலகையே உலுக்கியது. இந்தியாவை பொறுத்தவரை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், 40 பத்திரிக்கையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்ப்பதற்காக ஊடுருவப்பட்டிருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உளவு செயலுக்கு, ‘பெகாசஸ்’ (Pegasus) என்னும் உளவு செயலி (Spyware) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.(NSO) என்ற நிறுவனத்தின் சார்பாக அடுத்தவர்களை உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி தான் ‘பெகாசஸ்’. இது ஆன்ட்ராய்ட் அமற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இயங்கக்கூடியது. இந்த செயலி குறித்து 2019-இல் தான் முதன்முதலாக செய்திகள் வெளி உலகத்திற்கு வந்தன. இந்த செயலி மூலம் மின்னஞ்சல், வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் உள்ளிட்ட ஒருவரின் தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களையும் கண்காணிக்கவும், இயக்கவும் முடியும் என்கிறது இதனை வெளிக்கொண்டுவந்த பிரான்சு நாட்டை சேர்ந்த பார்பிடன் ஸ்டோரிஸ் (Forbidden Stories) என்கிற புலனாய்வு பத்திரிகை.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) மற்றும் உலகின் 16 முன்னணி பத்திரிக்கைகளுடன் இணைந்து, இந்த பார்பிடன் ஸ்டோரிஸ் பத்திரிக்கை ஒரு புலனாய்வை மேற்கொண்டது. அந்த புலனாய்வில் 2016-இல் இருந்து இந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் செயலி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக 50 நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நபர்களின் கைப்பேசியில் ஊடுருவி உளவு பார்த்ததை அம்பலப்படுத்தியது. அதில் 85 பேர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், 65 பேர் தொழிலதிபர்கள் 600 பேர் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத்துறையை சேர்ந்தவர்கள், மற்றும் 40 இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட 189 பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மேலும், உளவு பார்ப்பதற்காக அரசுகளிடமிருந்து அந்த நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் தொலைபேசி எண்கள் கசிந்துள்ளதாக அந்த புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பெகாசஸ் செயலியை அந்த நிறுவனம் தயாரித்ததே கண்காணிப்புக்காகத் தான் என்றும், பல்வேறு நாடுகளில் இருக்கும் அரசுகளுக்கு அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த செயலி விற்கப்படுவதாகவும் வேறு எந்தவொரு தனிநபருக்கோ, தனியார் நிறுவங்களுக்கோ இந்த செயலி விற்கப்படுவது இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் முகப்பிலேயே செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும், சைபர் பாதுகாப்பை (Cyber Security) உறுதிசெய்வதற்காக தான் விரும்பும் தேர்ந்தெடுத்த அரசுகளுடன் மட்டும் வணிகரீதியாக உறவு வைத்துள்ளதாக கூறியுள்ளது. அப்படியாக, 60 அரசு நிறுவனங்களும் மற்றும் 40 நாடுகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக சொல்லும் இந்த நிறுவனம், எந்தெந்த நாடுகள் எந்தெந்த அரசு நிறுவனங்கள் என்று எந்த விவரமும் சொல்லவில்லை.
இந்த செயலி இயங்கும் முறை:
பெகாசஸ் செயலி ஒருவருடைய கைப்பேசியில் நிறுவப்பட்டால் மட்டுமே அந்த கைப்பேசியை முழுமையாக கட்டுபாட்டில் எடுக்க முடியும். இதன் பழைய வடிவமைப்பில், உளவு பார்க்க வேண்டிய நபரின் தொலைபேசிக்கு முக்கியமான செய்தி போன்று இணைப்புடன் கூடிய ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை அந்த நபர் திறந்தவுடன், அந்நபருக்கு தெரியாமல் அந்த தொலைபேசியில் இந்த செயலி நிறுவப்பட்டுவிடும். அதன்பின் அந்த தொலைபேசியில் உள்ள அனைத்து தரவுகளையும் பெகாசஸ் செயலி திருடி அதன் சர்வருக்கு அனுப்பி விடும். மேலும், தொலைபேசியின் மைக்ரோபோன் மற்றும் கேமராவை இயக்கி, NSO சர்வர் அமைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருந்து கண்காணிக்க முடியும். கண்காணிக்கப்படும் தொலைபேசியின் சர்வர் கண்காணிக்கப்படுபவரின் நாட்டில் இருக்காது என்றும் NSO நிறுவனம் தெரிவிக்கிறது. NSO சர்வர் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக அமைக்கப்பட்டிருக்கிறதென்றும், இந்தியாவில் மூன்று இடங்களில் இந்த சர்வர் (கட்டுப்பாட்டு அறை) இருப்பதாக பார்பிடன் ஸ்டோரிஸ் புலனாய்வு இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஒருமுறை இந்த செயலி நமது தொலைபேசியில் இணைந்த பிறகு நம்முடைய வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மெசஞ்சர் செய்திகள், நமக்கு வருகிற மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், காணொளிகள், கடவுச்சொற்கள், வங்கி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் NSO சர்வரில் இருந்து கண்காணிக்க முடியும். இதில் உச்சபட்சமாக கண்காணிக்கப்படும் தொலைபேசியின் கேமராவை இயக்கை கட்டுபாட்டு அறையிலிருந்து சம்பந்தப்பட்டவரின் அனுமதியே இல்லாமல் பார்க்க முடியும். அதேபோல், மைக்ரோபோனையும் இயக்கி, அவரை சுற்றி நடப்பவற்றை யாரும் அறியாமல் கேட்கவும் முடியும். இதன் மூலம் தான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் காசோகியின் மனைவி தொலைபேசி கண்காணிக்கப்பட்டு, 2018ல் துருக்கியில் வைத்து காசோகி படுகொலை செய்யப்பட்டார்.
பெகாசஸ் செயலியை பயன்படுத்தி 121 செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்களை இந்திய அரசு உளவு பார்த்ததாக 2019-இல் NSO நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதையும் நினைவுகூர வேண்டும். மிகுந்த ஆபத்தை உருவாக்கக்கூடிய இந்த செயலியை பயன்படுத்தி தான் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட செயற்பாட்டார்கள், 40 பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், 2 அமைச்சர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பல தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களை மோடி அரசு 2017-19 காலகட்டங்களில் உளவு பார்த்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை அம்பலப்படுத்துவார்கள் என்று கருதப்பட்ட பத்திரிக்கையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்களை குறித்து வைத்து உளவு வேலை நடைபெற்றுள்ளது.
அமித்சாவின் மகன் ஜெய்சா மற்றும் தொழிலதிபர் நிகில் இடையே நடைபெற்ற திரைமறைவு பேரத்தை வெளிக்கொண்டு வந்த, ரபேல் ஊழலை அம்பலப்படுத்திய தி வயர் பத்திரிக்கையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உட்பட அந்த ஊடகத்தை சேர்ந்த பலவேறு ஊடகவியலாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர். ரஃபேல் ஊழல் குறித்து தொடர்ந்து எழுதி வந்த சுஷாந்த் சிங், “நான் ஒரு ட்ரால்” புத்தகத்தை எழுதிய ஸ்வாதி சதுர்வேதி, தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்திய ரித்திகா சோப்ரா, காஷ்மீர் தொடர்பான செய்திகளை எழுதி வந்த முசாமீல் ஜமீல் ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியா டுடே பத்திரிக்கைக்கு இராணுவம் தொடர்பான தகவல்களை அளித்து வந்த சந்தீப் உன்னிதன், தி இந்து நாளிதழுக்கு உள்துறை தொடர்பான செய்திகளை அளித்து வந்த விஜைதா சிங் என பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகள் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டுள்ளது.
அதே போன்று, அரசியல், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இதில் குறிவைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, பாஜக அரசியலுக்கு மிகுந்த இடையூறாக பார்க்கப்பட்டது மே பதினேழு இயக்கம். அதன் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி, இளைஞர்களிடையே, நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் எழுச்சியை உருவாக்கினார். தமிழர்களை அழித்து, தமிழ்நாட்டின் வளத்தை கொள்ளையடித்து, கார்பரேட் நிறுவனங்கள் லாபம் காண கொண்டு வரப்பட்ட அழிவுத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணரவூட்டினார். ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் பதிவு செய்தார். இதனாலேயே, தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசியும் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் டெல்டும்ப்டே, மனித உரிமை வழக்கறிஞர் பேலா பாட்டியா, சிறையில் அடைக்கப்பட்ட செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ், வழக்கறிஞர் நிஹால் சிங் ரத்தோட் ஆகியோரின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி ஹேக் (Hack) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது. ஆனாலும் என்ஐஏ மறுத்தது. இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். இதற்கு பின்னால் பெகாசஸ் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி 2017 ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு, அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பின்பு தான், பெகாசஸ் செயலி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது புலப்படுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டிக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2017-19 காலகட்டம் என்பது இந்திய அரசியலில் மிக முக்கியமான காலகட்டம். குறிப்பாக, பிஜேபியின் அரசியலில் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இரண்டாம் முறை மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மிகத் தீவிரமாக மோடி அரசு செயல்பட்ட காலம் இது. இதற்கு இடைஞ்சலாகவும் அல்லது மாற்றாகவும் யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நீதிபதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகள் உள்ளிட்ட அனைவரின் தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டு அவர்களை மிரட்டி, அச்சுறுத்தி, போலியான வழக்குகள் அல்லது புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைத்து, சிறையில் தள்ளி மீண்டும் 2019-இல் மோடி ஆட்சியை பிடித்தார்.
மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ராணுவ பொருளாதார ஒப்பந்தங்களை போட்டார். அதோடு மக்களுக்கு விரோதமான பல்வேறு மசோதாக்களை மிக வேகமாக அறிமுகப்படுத்தியதும் இந்த காலகட்டத்தில் தான்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் பிஜேபி ஆட்சியில் அமர்வதற்கு இந்த செயலியின் மூலம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பல எம்எல்ஏக்களை இந்த செயலியின் மூலம் உளவு பார்த்து அவர்களது தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் திருடப்பட்டு மிரட்டப்பட்டு அவர்களை பிஜேபிக்கு இழுத்து ஆட்சியை கவிழ்த்து மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது என்கிற உண்மை தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
அரசு ஒருவரை உளவுபார்ப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இந்திய தந்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் இதற்கான வழிமுறைகளை சட்டப்பூர்வமாக அளிக்கிறது. ஆனால், ஒருவரது தொலைபேசியில் அவருக்கு தெரியாமல் அவரது தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலியை நிறுவுவது, இதே சட்டத்தின் கீழ் சட்டவிரோத செயலாகும். அரசை விமர்சிப்பவர்களை முடக்க அரசே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். பெகாசஸ் செயலியின் மூலம் தனிநபர் சுதந்திரம் கட்டுக்கடங்காமல் மீறப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் மோடி அரசு செயல்படுகிறது என்பது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த மக்கள் விரோத செயல்பாட்டை செய்த மோடி அரசை பதவி விலகச் செய்ய மக்கள் பெருந்திரளாக தங்களது மௌனங்களை கலைத்து ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் இந்த பாசிச அரசு அஞ்சும்.