மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொல்வதற்கு கூட உளவு மென்பொருள் பயன்பட்டுள்ளது – ஐ.நா.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொல்வதற்கு கூட உளவு மென்பொருள் பயன்பாட்டுள்ளது – ஐ.நா.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் என உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானவர்களின் அலைபேசிகளை, இஸ்ரேலின் பெகாசஸ் என்னும் உளவு செயலியை பயன்படுத்தி பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் உளவு பார்த்து தகவல்கள் சேகரித்துள்ளது என்பதை இந்தியாவின் தி வயர், இங்கிலாந்தின் தி கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன்  போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே கொடுக்கப்படுகிறது.

பெகாசஸ் உளவு மென்பொருளை, பத்திரிகையாளர்கள் , சமூக ஆர்வலர்களைக் கண்காணிப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்துவது“மிகவும் ஆபத்தானது” என்றும், அவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிஷல் பேச்லெட் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளையும் கணினிகளையும் ஹேக் செய்வதற்காக கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலமுறை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பானது கடும் எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.நா.வின் கண்டன அறிக்கை:

“கண்காணிப்பு மென்பொருளின் உதவியுடன் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கைது செய்வது, மிரட்டுவது மற்றும் கொலை செய்வது வரை நடந்துள்ளது. அவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ” அபாயகரமான விளைவைக்” கொண்டுள்ளன.

ஊடகவியலாளர்களும் மனித உரிமை பாதுகாவலர்களும் நம் சமூகத்தில் இன்றியமையாத பங்கை வகிப்பவர்கள். அவர்கள் குரலை நசுக்கினால் , ​​நாம் அனைவரும் பாதிக்கப்படுவோம்.

பெகாசஸ் ஸ்பைவேர், ‘கேண்டிரு’ போன்றவை, தொலைத்தொடர்பு சாதனங்களில் மிகவும் ஆழமாக ஊடுருவி, மக்களின் அனைத்து தகவல்களையும் திரட்டுகின்றன.
கடுமையான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இவ்வகை உளவு மென்பொருள், கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடியவை.

பெகாசஸைப் பயன்படுத்துவது தொடர்பான சமீபத்திய குற்றச்சாட்டுகள் ஓரளவு கூட உண்மை என்றால், சிவப்பு எல்லைக் கோடு மீண்டும் மீண்டும் தாண்டப்பட்டுள்ளது என்பதே உண்மை.

கண்காணிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் , தங்கள் தயாரிப்புகள் ஏற்படுத்தும் சேதங்களைத் சரிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மேலும் அவர்களே தங்கள் நிறுவனத்தினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களைத் தவிர்ப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற “பேரழிவு நிகழ்வுகளில்” பங்கு வகிப்பதில்லை என்று உறுதி ஏற்க வேண்டும்.

இத்தகைய தனியுரிமை மீறல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாடுகளுக்கும் கடமை உள்ளது. மிக முக்கியமாக , நிறுவனங்கள் தங்கள் மனித உரிமைகள் பற்றிய பொறுப்புகளை அறியவும், அவற்றின் தயாரிப்புகளின் பயன்பாட்டில் மிகவும் வெளிப்படையானதாக மாறவும் நாடுகள் சட்டம் இயற்ற வேண்டும்.

அரசாங்கங்கள் கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், தனி நபர் உரிமைமீறலில் இருந்து மக்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”.

அரசுகள் ஜனநாயகத்திற்குட்பட்டு கண்காணிப்பு வரையறைகள் வைத்திருக்கும் போது, சட்டவிரோத உளவு வேளைகளில் ஈடுபடுவது, மனித உரிமை செயற்பாட்டார்களை ஒடுக்கும் கருவியாக மாறிவிடுகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த அறிக்கை மிக முக்கியமானது.  குறிப்பாக, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள், இது போது உளவு மென்பொருள் மூலம் hack செய்யப்பட்டு போலியான தரவுகளை நிறுவி, அதை ஆதாரமாகக் கொண்டு கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு மேலாகா பிணை வழங்கப்படாமல், விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான, பழங்குடி மக்களுக்காக போராடிய தோழர் ஸ்டேன் சாமி அவர்கள் தகுந்த சிகிச்சை கூட பெற முடியாமல் சில நாட்கள் முன்னால் இறந்து போனார். அப்போதும் ஐ.நா. கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது. இது போன்ற சர்வதேச அழுத்தங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை அரசு ஒடுக்குமுறையிலிருந்து காப்பாற்ற வழிகோலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »