ஒன்றிய அரசின் ஒப்பந்த முறைக்கு எதிராக போராடும் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள்

சென்னை திருவொற்றியூரில் உள்ள MRF நிறுவனத்தில் ஒன்றிய அரசின் ஒப்பந்த ஊழியர் (NAPS) திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர்களுக்கு வருடாந்திர காப்பீட்டு தொகைக்கான முன்பணம் கொடுக்காததை எதிர்த்தும் சுமார் 800 தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

அண்மையில் ஒன்றிய அரசின் National Apprenticeship Promotion Scheme (NAPS) மூலம் ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த MRF நிறுவனம் முயன்றிருக்கிறது. இதை அங்குள்ள தொழிலாளர் சங்கம் தீவிரமாக எதிர்த்தது. இதனால் தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக, MRF நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான முன்பணம் வழங்கும் நீண்டகால நடைமுறையை நிறுத்திவிட்டு, செப்டம்பர் 13, 2025 அன்று தொழிற்சாலை வாயில்களை சட்ட விரோதமாக மூடிவிட்டது.

வழக்கமாக நிர்வாகம் வழங்கும் மருத்துவ காப்பீட்டு முன்பணத்தை 4-5 மாதங்களுக்குள் சிறிய தவணைகளில் தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்தி வந்தனர். இப்போது காப்பீடு முன்பணத்தை தராமலும் ஒப்பந்த ஊழியர் முறையை கொண்டு வந்து தொழிலாளர்களின் பணி நிரந்தரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே MRF நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக (13.09.2025 முதல்) தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

MRF நிர்வாகம், தனது தொழிற்சாலைக்கு அருகில் போராட்டம் நடத்தக்கூடாது என தடை ஆணை வாங்கிய போதும் மாற்று இடத்தில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 19, 2025 அன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொழிலாளர்களுடன் பேரணியாக சென்ற அவர், அதைத் தொடர்ந்து போராட்டத்தில் உரையாற்றினார்.

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரையின் சுருக்கம்:

“அன்பார்ந்த தோழர்களே,

சட்டவிரோதமாக கதவடைப்பை செய்த MRF நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டக்களத்தை கண்டிருக்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதலில் இரண்டு விடயங்களை MRF நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலை இயங்க வேண்டுமென்றால் நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு முக்கியமோ தொழிலாளர்களின் உடல்நிலையும் முக்கியம். அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நிறுவனத்திற்கு இருக்கின்றது. பொது மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். பொதுவாக உலகளவில் இது முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது. ஒரு தொழிலாளியின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அந்நாட்டினுடைய பொருளாதார உற்பத்தி பாதிக்கப்படும். தொழிலாளி நேரடியாக நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் மறைமுகமாக நாட்டின் வரி கட்டுமானத்திற்கும் உதவி புரிகின்றார்.

எனவே நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க வேண்டுமென்றால் தொழிலாளியின் நலனைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக இருப்பதற்கு இங்கு கல்வியும் மருத்துவமும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்ற கட்டமைப்புதான் காரணம். எந்த நாட்டிலெல்லாம் பொது மருத்துவக்கட்டமைப்பு இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். எனவேதான் ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டால் அது தனிமனித பிரச்சினையாகப் பார்க்காமல் நாட்டின் பேரிடர் என்று பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்காத நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்திருக்கின்றன என்பது வரலாறு. மேலும் பசி, பட்டினி, நோய் இல்லாத நாடுதான் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்குமென்பதால் இது தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில்தான் தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீடை நிறுவனங்கள் வழங்குவது முக்கியமானதாகிறது. இன்று ஒரு வாகனம் வாங்கினால் கூட காப்பீட்டை அரசு நம்மிடம்தான் திணிக்கிறது. சிறு-குறு நிறுவனம் கடன் வாங்கினாலோ அதற்கும் காப்பீட்டுத் தொகையை செலுத்துகின்றோம். இத்தகைய சூழலில் MRF நிறுவனம் தன்னுடைய லாபத்தில் இருந்து தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீடை வழங்கியிருக்க வேண்டும். முன்பு தொழிற்சாலை நடத்தும் நிறுவனங்களே மருத்துவமனை கட்டினார்கள். ஏனென்றால் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கிடைத்தால்தான் தொழிற்சாலை முழுமையான உற்பத்தியைக் கொடுக்கென்பது அடிப்படையான பொது அறிவாக அன்று இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. இன்று லாப நோக்கத்தை மட்டுமே நிறுவனங்கள் கவனத்தில் எடுக்கின்றன.

MRF நிறுவனம் 1800 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வருவதாக தோழர்கள் கூறினார்கள். அதில் ஒரு சதவீதம்தான் காப்பீட்டுக்கான முன்பணமாக செலவாகும். அதையும் சுயமரியாதை மிக்க தொழிலார்கள் திருப்பி செலுத்தி விடுகிறார்கள்.

மோடி அரசு மூன்று தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டு வந்தது. அதை மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசின் ஒப்புதலும் தேவைப்படுகின்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திமுக அரசு ஒப்புக்கொள்ளாத நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்றால், அந்த சட்டங்களை நிறுவனங்கள்  நடைமுறைப்படுத்துவதற்கு நாம் அனுமதிப்போமா? இல்லை.

இதை மாநில உரிமை சம்பந்தப்பட்டதாகவும் நாம் பார்க்கின்றோம். மாநிலத்தில் தொழிலாளர்துறை அதிகாரிகள் இருக்கின்றனர், மாநில சட்டமன்றம் இருக்கிறது. இதில் NAPS போன்ற திட்டங்களை விவாதித்து தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதாக கூறிய பிறகுதான் நிறுவனம் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்றிய அரசோடு மாநில அரசு கொள்கை முரண்பாட்டில் இருக்கும்போது, மாநில அரசை மீறி MRF நிறுவனம் எவ்வாறு ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்? எனவே MRF நிறுவனம் தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பதாகத்தான் நாம் புரிந்து கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்களின் நலன் சார்ந்துதான் MRF நிறுவன தொழிலாளர்கள் போராடுகிறார்கள். தொழிலாளர்களின் காப்பீடு முன்பணம் குறித்த கோரிக்கையும் பொதுநலன் சார்ந்தது.

இதுகுறித்து (NAPS  குறித்து) நாம் பிற தொழிற்சங்கங்களுடன் பேச வேண்டும். இந்த போராட்டக் குரல் தமிழ்நாடு முழுவதும் சென்று சேர்வதற்கு மே பதினேழு இயக்கம் துணை நிற்கும். சட்ட விரோதமாக தொழிற்சாலையில் கதவடைப்பை செய்து தமிழ்நாட்டின் உற்பத்தியை MRF நிறுவனம் பின்னுக்கு இழுத்திருக்கிறது.

மேலும் வடசென்னை பகுதி என்பதே தொழிற்சாலைகள் நிறைந்ததால் மாசுபட்ட பகுதியாக மாறி இருக்கின்றது. இன்று இந்தியாவிலேயே நச்சுக்கழிவுகள் அதிகம் வெளியேறும் பகுதிகளில் ஒன்றாக வடசென்னை மாறி இருக்கின்றது. தொழிற்சாலைகள் இருக்கின்ற, தொழிலாளர்கள் வாழ்கின்ற பகுதியிலே முதலாளிகள் வாழ்வதில்லை. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் வாழ்கின்றார்கள். ஆனால் மாசு நிறைந்த சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு என்பது அடிப்படை தேவை. மேலும் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, தொழிலாளர்களின் உடல்நலனை ஆலை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை செய்யவில்லையென்றால் அரசாங்கம் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் MRF தொழிற்சங்கத்திற்கென்று ஒரு பெரிய வரலாறு இருக்கின்றது. 2009இல் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது MRFதொழிற்சங்கம்தான் தமிழ்நாட்டிலே முதன்முதலாக வீதிக்கு வந்து, இனப்படுகொலையை நிறுத்த வேண்டுமென்று முழங்கிய தொழிற்சங்கம். தமிழ்நாட்டில் எழுச்சிப் போராட்டத்தை தொடங்கியதில் MRF தொழிலாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. 2009இல் முத்துக்குமாரின் மரணத்திற்குப்பிறகு, MRFதொழிற்சங்கம் தான் முதல் போராட்டத்தை அறிவித்தது. அதேபோல் முல்லைப்பெரியார் பிரச்சினையிலும் குரல் கொடுத்தது. கூடங்குளத்திற்காகவும் போராட்டக்களத்தில் இறங்கியது.

தொழிலாளர் வர்க்கம் தனக்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்காக போராடும்போது அந்த சமுதாயம் முழுவதுமே புரட்சிக்குத் தயாராகிறது என்று கூறுவார்கள். இவ்வாறு அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உள்ள இயக்கமாகத்தான் MRFதொழிற்சங்கம் இருக்கின்றது.

NAPS திட்டத்தை நாம் ஏன் எதிர்க்கிறோமென்றால் அது ஒட்டுமொத்த தொழிலாளர்களை அமைப்பாக மாறவிடாமல் நசுக்குகின்ற முதலாளித்துவ முறை. இதுபோன்ற ஒப்பந்த முறையை எதிர்த்துதான் தூய்மை பணியாளர்கள் போராடினார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் தொழிலாளர்களின் பிரச்சினையை 2000 தொழிலாளர்கள் வீதிக்கு கொண்டு வந்தார்கள்.

இன்று தொழிலாளர் வர்க்கம் உதிரியாக மாறுவதற்கு ஒப்பந்த முறையே காரணம். பணி நிரந்தரமோ சம்பள உயர்வோ இல்லாத ஒப்பந்த முறை சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய முறையாக இருக்கின்றது. ஒரு நிறுவனமும் அதன் முதலாளியும் தொழிற்சாலையும் நிரந்தரமாக இருக்கிறதென்றால் தொழிலாளரும் நிரந்தரமாக இருக்க வேண்டும். ஒரு தொழிற்சாலையின் லாபத்தில் தொழிலாளருக்கும் பங்கு இருக்க வேண்டும். அதற்கு வழிவகை செய்வதே நிரந்தர பணியாளர் முறை. தொழிற்சாலையின் லாபத்தில் பங்கு கொடுக்காமல் முழுவதையும் முதலாளிகள் தங்களுக்கென எடுத்துக்கொள்ளும் சதிகார முறைதான் ஒப்பந்த பணியாளர் முறை. எனவேதான் ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்று எழுந்திருக்கிறது.

நம் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நிரந்தர பணி கிடைக்காத மோசமான சூழல் உருவாகும் என்பதை எதிர்த்துதான் நாம் இன்று போராடுகின்றோம். Road safety பற்றி கூறும் MRF நிறுவனத்தின் labour safety பற்றி யார் பேசுவது? இதேபோல் போர்ட் (Ford) நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக நாங்கள் இருந்தோம். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் ஆதரவாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

தோழர்களே, MRF நிறுவனம் என்பது தமிழ்நாட்டு தொழிலாளர்கள் உழைத்து வளர்த்தெடுத்த நிறுவனம். தொழிலாளர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டியது திமுக அரசின் இன்றியமையாத கடமை. எனவே நாங்கள் உங்கள் சார்பாக திமுக அரசிற்கு வேண்டுகோள் வைக்கின்றோம். தமிழ்நாடு அரசு உரிய வகையிலே பேச்சுவார்த்தை நடத்தி இந்த போராட்டத்திற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மேலும் ‘மோடி அரசின் தொழிலாளர் விரோத திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்’ என்று சட்டசபையில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். ஏனெனில் காரல் மார்க்ஸ் கல்லறையில் புகழ் வணக்கம் செலுத்திய முதலமைச்சராக நீங்கள் (மு.க.ஸ்டாலின் அவர்கள்) இருக்கின்றீர்கள். காரல் மார்க்ஸ் சொன்ன தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் அடையாளமாக, ‘ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அதை முதலில் MRF நிறுவனத்தில் அமல்படுத்தி, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

தொழிலாளர் மீது அக்கறை இல்லாத நிறுவனத்தை எதிர்த்து நடக்கும் இந்த போராட்டம் நேர்மையானது, தொலைநோக்கு பார்வை கொண்டது. தமிழ்நாடு அரசு தலையிட்டு தொழிலாளர் நலனை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தோழர்கள் எழுப்பியிருக்கின்றனர். சமூக நீதி குறித்துப் பேசும் திமுக அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.

இதைத் தொடர்ந்து நடந்த ஊடக சந்திப்பிலும் திமுக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டுமென்றும் MRF நிர்வாகத்தின் சட்டவிரோத கதவடைப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

குறிப்பு: பத்திரிக்கையாளர்களை சந்திந்த இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/v/1EtP9mzaRn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »