ஆஸ்திரேலிய அபோரிஜினல் பூர்வகுடிகளை இனப்படுகொலை செய்த ஐரோப்பியர்கள்
பெரியவர்களை கொன்றால் 5 பவுண்டு, சிறியவர்களை கொன்றாலோ இல்லை அடிமையாக பிடித்து கொடுத்தாலோ 2 பவுண்டு சன்மானமாக (Bounty) கொடுக்கபட்டது. இது, 19-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் அபோரிஜினல் (Aboriginal Australians) எனப்படும் பூர்வகுடிகளை, அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் வேட்டையாடுவதற்கு கொடுக்கப்பட்ட சன்மானம்.
ஐரோப்பியர்களின் கொடுங்கோன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் வந்த அந்த தொன்மையான பூர்வகுடி மக்களின் கடைசி பெண் தான் துருகானினி (Truganini). திராவிட இனத்தோடு தொடர்புடைய இந்த பழங்குடி இனம், 1800-களில் குடியேறிய ஆங்கிலேயர்களால் வேட்டையாடப்பட்டு, அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லப்பட்டது.
1642-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கண்டத்தின் தற்போதைய டாஸ்மேனியா நிலப்பரப்பில் எதிர்பாராத விதமாக தரையிறங்கினார் ஆபேல் ஜான்சன் டாஸ்மேன் என்னும் நபர். இவர் தான் ஆஸ்திரேலியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர். அவர் அந்த நிலப்பரப்பிற்கு வான் டீமனின் நிலம் (Van Diemen’s Land) என்று பெயர் வைத்தார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கடற்பயணி (Sea Route Explorer) கேப்டன் ஜேம்ஸ் குக் 1770-ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பகுதியை அடைந்து, வடக்கு நோக்கி பயணம் செய்து, ஆஸ்திரேலியா கிழக்கு கடற்கரை பகுதியில் 1770-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் தரையிறங்கினார். அதன்பிறகு, அந்த நிலப்பரப்பை பிரித்தானியாவின் (Great Britain) ஒரு பகுதியாக அறிவித்தார்.
இன்று ஆஸ்திரேலியா கண்டத்தில் அழிந்துவிட்டது என்று நம்பபட்ட டாஸ்மேனிய டைகர் மீண்டும் வந்துவிட்டது என்று மிகவும் பெருமைப்படும் இந்த உலகம், ஒரு பூர்வகுடி இனத்தையே மிருகங்களை வேட்டையாடுவதை போல் படுகொலை செய்யப்பட்டதை பற்றி பேசுவதே இல்லை.
வெள்ளையர்கள் டாஸ்மேனிய தீவுக்கு வருவதற்கு முன்பு அந்த நிலப்பரப்பை 8 சிறிய நாடுகளாக பிரித்து அபோரிஜினல் பழங்குடி மக்கள் ஆட்சி செய்து வந்தனர். இப்பகுதியினர் பல்லவா (Pallawah) என்ற மொழியை பேசி வந்தனர்.
இந்த நிலப்பரப்பில், 1803 ஆண்டு முதல் ஐரோப்பிய குடியேற்றங்கள் வெகுவாக நடைபெற்றது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறினர். சில மாதங்களிலேயே பூர்வகுடி மக்களுக்கும் குடியேறியவர்களுக்கும் மோதல்கள் நடைபெற்றது. மேலும், இங்கிலாந்து நாட்டில் கடும் குற்றங்கள் செய்த கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கடுங்குற்றவாளிகளை இங்கிலாந்து அரசு டாஸ்மேனிய தீவுக்கு நாடு கடத்தியது. அவர்கள் அங்கே வந்த பிறகு குற்றங்கள் அதிகரித்தது. குறிப்பாக, அபோரிஜினல் பழங்குடி பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தனர். இந்த ஐரோப்பிய குடியேறிகள், தீவில் கண்ணில் பட்ட பூர்வகுடி மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள் சிலர் மிருகங்களை விளையாட்டாக வேட்டையாடுவதை போல் படுகொலை செய்தார்கள்.
துருகானினியின் அம்மாவை ஆஸ்திரேலிய வந்த வெள்ளையர்கள் படுகொலை செய்தார்கள். அவர்களுடைய மாமா இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவருடைய சகோதரியை கடத்தி சென்றார்கள். துருகானினிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரையும் சுட்டு படுகொலை செய்தார்கள். பிறகு, அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தார்கள். 1830-ஆம் ஆண்டு அவர்களை ஃபிலிண்டர்ஸ் தீவில் (Flinders Island) உள்ள சித்ரவதை முகாமுக்கு, மிஞ்சிய 100 பூர்வகுடி மக்களுடன் கொண்டு சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்கள். 1856-ஆம் ஆண்டில் ஓய்ஸ்டர் கோவ் (Oyster Cove) பகுதிக்கு மீதி உள்ள டாஸ்மேனிய பூர்வகுடி மக்களை அழைத்து வந்தார்கள். அதில் அனைவரும் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்தார்கள்.
1861-ல் 14 டாஸ்மேனிய அபோரிஜினல் பூர்வகுடி மக்களே எஞ்சி இருந்தனர். 1876-ஆம் ஆண்டு மே 8 அன்று துருகானினி மரணம் அடைந்தார். அவர் தான் அந்த டாஸ்மேனியன் தீவின் கடைசி பூர்வகுடி பெண். தன்னுடைய மரணத்திற்கு முன்பு, தான் மறித்த பின்பு தன்னுடைய சாம்பலை தீவு முழுவதும் காற்றில் தூவிவிட வேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆனால், ராயல் சொஸைட்டி ஆஃப் டாஸ்மேனியா (Royal Society of Tasmania) என்ற அமைப்பு அவரது இறந்த உடலை பரிசோதனை செய்ய வைத்து கொண்டார்கள். அதன்பிறகு அவரது உடலை டாஸ்மேனிய அருங்காட்சியகத்தில் வைத்தனர்.
1788 ஆண்டு ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வரும்போது 2,50,000 பூர்வகுடி பழங்குடி மக்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிலப்பரப்பில் இருந்தனர். அவர்கள் ஐரோப்பியர்களால் படுகொலை செய்யப்படுவது 1920-இல் நிறுத்தபட்டபோது, 6,000-க்கும் குறைவான பூர்வகுடி மக்களே ஆஸ்திரேலியா முக்கிய நிலப்பரப்பில் எஞ்சி இருந்தனர்.
ஜார்ஜ் அகஸ்டஸ் ராபின்சன்:
ஜார்ஜ் அகஸ்டஸ் ராபின்சன் (George Augustus Robinson), 1824-இல் ஆஸ்திரேலியாவின் குடியேறிய ஒரு வெள்ளையர். இவர் அபோரிஜினல் மக்களிடைய நல்லுறவை வைத்து இருந்தார். அவர்களுடைய மொழியை பேசுவார். இவர் துருகானினி வாழ்ந்த பகுதியில் நற்பெயரை பெற்று இருந்தார். ஆஸ்திரேலியாவில் குடியேறிகளால் பூர்வகுடி மக்கள் அடிக்கடி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1829-ஆம் ஆண்டில் பூர்வகுடி மக்களுக்கு அகஸ்டஸ் வாய்வார்த்தையாக ஒரு உறுதிமொழி கொடுத்தார். அங்கே உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது என்று பூர்வகுடி மக்களை ஃபிலிண்டர்ஸ் தீவுக்கு குடிபெயர வைத்தார். அகஸ்டஸ் ராபின்சனுக்கு அடுத்த ஐந்து வருடங்களில் பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் வழிபாட்டு முறை அவர்களுடைய மொழி அனைத்தையும் துருகானினி கற்று கொடுத்தார். ராபின்சன் பூர்வகுடி மக்களுக்கு சொன்னது, நீங்கள் தொடர்ந்து வெள்ளையர்களுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தால், அது உங்கள் இனத்தை அழிவுக்கு தான் இட்டு செல்லும் என்று. ராபின்சன், இதைப் போலவே மற்ற பூர்வகுடி சிறுபான்மை மக்களுக்கும் வாக்குறுதி கொடுத்து ஃபிலிண்டர்ஸ் தீவுக்கு குடிபெயர வைத்தார். ஏனென்றால், ஃபிலிண்டர்ஸ் தீவில் இருந்து யாரும் தப்பித்து, அவர்களுடைய பூர்வீக நிலமான டாஸ்மேனிய தீவுக்கு வருவது முடியாத காரியம். இந்த திட்டம், பூர்வகுடி மக்களிடமிருந்து வெள்ளையர்களை பாதுகாக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஜார்ஜ் ஆர்த்தர்:
ஜார்ஜ் ஆர்த்தர் (Sir George Arthur), 1820-களில் வான் டீமனின் நிலத்திற்கு (டாஸ்மேனியா) லெப்டினன்ட் கவர்னராக பதவியேற்று வந்தார். தீவுக்கு வந்தவுடன், தீவில் உள்ள குடியேற்ற காலனிகளை பாதுகாக்க வேண்டும் என்று திட்டம் போட்டு, பூர்வகுடி மக்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். முதலாவதாக குடியேறிய காலனிய அரசு பூர்வகுடி மக்களுடன் ஒப்பந்தம் போட்டு இருந்தால் இந்த மோதல்களை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினார்
ஜார்ஜ் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஐரோப்பிய குடியேற்ற பகுதிகளுக்கும் ஒரு உத்தரவு போட்டார். அதாவது, அனைத்து குடியேற்ற மாவட்டங்களையும் எல்லை கோடிட்டு வைத்துகொண்டால், பூர்வகுடி மக்களை ஒரு எல்லையில் அடைத்து விடலாம் என்று ஒரு மனிதநேயமற்று செயலை செய்தார்கள். இதனை கருப்பு எல்லை என்று அழைத்தனர்.
1830 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஆர்த்தர் இங்கிலாந்து அரசு அனுமதியுடன் ஒரு சட்டம் இயற்றினார். அது, யார் வேண்டுமானாலும் பூர்வகுடி மக்களை படுகொலை செய்யலாம் என்று. இது மிக பெரிய அழிவுக்கு வழி வகுத்தது. டாஸ்மேனிய தீவில் இருந்த பூர்வகுடி மக்கள் அனைவரையும் சுட்டுப் படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள். ஜார்ஜ் ஆர்த்தர் பூர்வகுடி மக்களை படுகொலை செய்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தார். பெரியவர்களை கொன்றால் 5 பவுண்டு, சிறியவர்களுக்கு 2 பவுண்டு என அறிவித்தார். சிலர் சிறுவர்களை கடத்தி சென்று அடிமையாக வேலை செய்ய வைத்து கொண்டார்கள்.
ஒரு காலத்தில் டாஸ்மேனிய தீவு முழுவதும் பரவி வாழ்ந்து இருந்த டாஸ்மேனிய அபோரிஜினல் பூர்வகுடி மக்கள், 100-க்கு குறைவானவர்களாக மாறிப்போனார்கள். அவர்கள் அனைவரையும் ஃபிலிண்டர்ஸ் தீவுக்கு நாடுகடத்தினார்கள் வெள்ளையர்கள். 1861-ம் ஆண்டு டைம்ஸ் நியூஸ் இதழின் ஒரு கட்டுரையில், ஃபிலிண்டர்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட டாஸ்மேனிய அபோரிஜினல் பூர்வகுடி மக்களில் 14 நபர்களே உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறியது. இதில் 9 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் இருந்தனர். இதில் 4 தம்பதியினர் இருந்தனர். அனைவரும் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அவர்களில் யாருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை.
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு ஆஸ்திரேலியா கண்டம் முழுவதும் பரவியிருந்த அபோரிஜினல் பூர்வகுடி மக்கள், ஐரோப்பியர் வருகைக்கு பின்பு சில நூறு பேர் மட்டுமே எஞ்சிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஐரோப்பிய காலனியத்தால் ஒரு இனத்தையே மிருகங்களை போல் வேட்டையாடி படுகொலை செய்துவிட்டு, இன்று அந்த தீவின் பூர்வகுடி மக்கள் போல் முழு அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, அபோரிஜினல் பூர்வகுடி மக்கள் வாழ்வை இன்றளவும் நிர்ணயித்து வருகின்றனர்.
ஐரோப்பியர்களின் காலனியாதிக்க கொடுங்கோன்மை உலகம் முழுவதும் ஆட்கொண்டதை வரலாற்றின் ஊடாக நாம் அறிவோம். அதன் உச்சக்கட்டத்தை ஆஸ்திரேலிய தீவில் அபோரிஜினல் பூர்வகுடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் வழியாக காண முடிகிறது. காலனியாதிக்கம் உண்டாக்கிய மாற்றங்கள், பூர்வகுடிகள் தங்கள் நிலங்களை இழந்து, உரிமையை இழந்து, சொந்த மண்ணில் அடிமைகளாக, அகதிகளாக வாழும் சூழலை உண்டாக்கி சென்றது. காலனியாதிக்க நீக்கம் என்பது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட மக்கள், காலனியாதிக்க நிலைக்கு முன்பிருந்த நிலைக்கு, அம்மக்களின் விருப்பத்தோடு விடுவதாகும். ஆனால், ஆஸ்திரேலியா உட்பட, உலகின் எந்த ஒரு காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எனில், காலனிய ஆதிக்கம் இன்றும் நீங்கவில்லை என்பதே உண்மை. மாறாக, நவீன பொருளாதார கொள்கைகள் மூலம், பூர்வகுடிகள் மீண்டும் ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகளிடம் அடிமையாக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான ஒன்று.