நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்
கல்வி என்பது சமத்துவத்தை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உயர் சாதி மேட்டுகுடிகளும், ஒன்றிய அரசும் தகுதி தேர்வின் மூலமே மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்றும், நீட் (NEET) தேர்வினால்தான் சரியான தரமான மருத்துவர்கள் உருவாக முடியும் என்கின்றனர்.
2017-ல் நடந்த நீட் தேர்வில் சுமார் 400 மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற்றும், 110 பேர் பூஜ்ஜியம், நெகட்டிவ் மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணத்தை கொட்டி சேர்ந்துள்ளனர். அப்படி என்றால் இந்துத்துவ மோடி அரசு கூறிய தரம் இதுதானோ?
12 ஆண்டுகளாக பள்ளி கல்வியை படித்த மாணவர்களை பொது தேர்வு நடத்தி அவர்களின் தரத்தை சோதிக்காமல், வெறும் 2 மணி நேர நீட் தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள் தரத்தை முடிவு செய்வது என்பது முற்றிலும் நயவஞ்சகமானது. தகுதியை வளர்ப்பதற்கு தான் கல்வி தேவை, மாறாக தகுதி இருந்தால் தான் கல்வியைப் பெற முடியும் என்பது அநீதி.
2017-ல் நீட் வந்தது முதல் தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். முதன் முதலில் 2017-ல் நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். ஏனெனில் சமூகநீதியை நிலைநாட்டும் தமிழ் நாட்டில் அவருக்கு மருத்துவம் பயில 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டு இருந்தது. அதற்காக அந்த ஏழைச் சிறுமி கடுமையாக உழைத்து அதிக மதிப்பெண் எடுத்தும் அவரது கனவு நீட் தேர்வால் தகர்ந்த போது அதற்காக அவர் சட்ட போராட்டம் நடத்தியும் நயவஞ்சக பார்ப்பன உயர்சாதி சதிக்கு முன்னால் அவர் தோற்றுப் போனார். எனவேதான் அவரது மரணம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் துவக்க வைத்தது.
புராணத்தில் உயர்சாதி பார்ப்பனிய குரு துரோணர் தனக்கு குருதட்சணையாக ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டி கேட்டார். ஆனால் இன்றோ இந்த நவீன யுகத்திலும் கல்வி கற்க உயர்சாதி பார்ப்பனிய கும்பல் நம் குழந்தைகளின் உயிரைக் கேட்கிறார்கள்.
நீட் தேர்வை தமிழகத்தில் புகுத்திய பிறகு, அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் மொழியில் படித்தவர்கள், கிராமப்புற மாணவர்கள் ஆகியோர் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு பின் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், 3 முதல் 6 பேர் தான் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்கள். ஆனால் நீட் தேர்வுக்கு முன் சராசரியாக 20 முதல் 60 மாணவர்கள் வரை அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைக்கு மிக முக்கிய ஒற்றை காரணம் நீட் மட்டுமே.
பின்னணியில் உலக வர்த்தக கழகம்
தமிழ்நாட்டின் தற்போதைய மருத்துவக் கல்வி முறையில் மருத்துவம் முடித்த மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடும் இருக்கிறது. ஆனால் நீட் தேர்வு முறையில் இந்த நடைமுறைக்கு வாய்ப்பே இல்லை. இதனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். இது தான் நீட் தேர்வின் பின்னணி. இதை புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். மேலும் சமூக நீதி கண்ணோட்டத்தில் பார்த்தால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூகத்தினரை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியலும் நன்கு புரியும்.
தொடர்ந்து நீட் தகுதித் தேர்வு நீடிக்கும் பட்சத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரிய மருத்துவர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். இதனால் கிராமப்புற ஏழைகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்காமல் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும். இதுதான் நீட் தகுதித் தேர்வின் பின்னுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்.
இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்த அகில இந்திய கல்வி பெறும் உரிமைக்கான மன்றத்தின் (All India Forum for Right to Education) செயற்குழு உறுப்பினரான பேராசிரியர் முனைவர் அனில் சடகோபால் (Anil Sadgopal) சென்னையில் 22-05-17 அன்று நடந்த நீட் தேர்வு குறித்தான கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்புக்கு ஒன்றிய அரசு சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை தனியார் மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிப்பது. இது எல்லாம் நிறைவேற, இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு என்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வின் பின்னால் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அரசியல் உள்ளது. இது பல நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கும் அமைப்பு ஆகும். இங்கு ஒவ்வொரு நாட்டின் சார்பாக அங்கு வர்த்தகங்களை கண்காணிக்கும் அமைச்சர் ஒருவர் பங்கேற்பார். இந்த அமைப்பில் 1995-லிருந்து கல்வியில் சந்தை வாய்ப்புகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
WTO கூட்டத்தில் பங்கேற்ற வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜக அரசு, வர்த்தகங்களில் சேவை துறைகளை திறந்து விடுவதற்கு விருப்பம் தெரிவித்தது. அதற்கு இந்தியாவில் ஒரே மாதிரியான கல்வி முறை இருக்க வேண்டும். மேலும் மாநிலத்துக்கு ஒரு கல்வி முறை இருந்தால், வெளிநாட்டு வர்த்தகர்களால் இங்கு கல்வியை வைத்து வணிகம் செய்ய இயலாது. எனவே தான் அவர்களுக்காக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. நீட், எக்சிட் (NExT) போன்ற தேர்வுகள் இந்திய உயர்கல்வியை WTO-விற்கு அடகு வைத்து, இந்திய கல்வியை வணிகமயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பார்க்க கொண்டு வரப்பட்டது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏனெனில், இந்திய அரசு WTO-GATS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு, சட்டங்கள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் கல்வித் துறையை அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்றப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது நியதி. எனவேதான் அதன் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது மோடி அரசு. இதனாலேயே தனியார்மய, உலகமய பொருளாதார கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி இந்தியாவை மறு காலனியாக்க நடவடிக்கையை மேற்குலக நாடுகள் வேகமாக மேற்கொள்ள அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது மோடி அரசு.
நாட்டின் கல்வித் துறையை படிப்படியாக அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையே புதிய கல்விக் கொள்கை. மேலும் கல்வித்துறை தொடர்பாக சட்டமியற்றி மாநிலங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவது, பல்கலைக்கழக சிண்டிகேட்டுகள், செனட்டுகளின் அதிகாரத்தை ரத்து செய்வது, கல்லூரிகளை பல்கலைக் கழகங்களில் இருந்து பிரித்து அவற்றை திறன் சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது, நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) கலைப்பது என பல வழிகளில் காய் நகர்த்தி வருகிறது பாஜக மோடி அரசு.
மேலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை தளர்த்தி, அவற்றிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அவற்றுக்கு அனுமதி அளிப்பது, தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN (Global Initiative of Academic Network) இந்தியாவில் கற்பித்தல் மூலம் இறக்குமதி செய்தல், இணைய சேமிப்பு கிடங்குகளான MOOCs (Massive Open Online Courses – பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்) போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதலும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
நம் ஆசிரியர்களின் வேலை உரிமையை பறித்து அவர்களை வெளியேற்றுவது, கல்வியை கணினி மயமாக்கி ‘Digital India’ மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல், இதன் மூலம் மாணவர்கள் கல்வித் துறையின் பயனாளிகளாக இருப்பது மாறி வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பயனாளிகளாக மாற்றப்படுவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நீட்!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா பல தேசிய இனங்களை கொண்ட மாநிலங்களின் தொகுப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவருக்கு ஏற்ற வகையில் கல்வியை கற்கின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த மடத்தனம். எந்த வசதியும் இல்லாமல் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவனும், எல்லா வசதிகளையும் பெற்று உயர்தர தனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார மாணவனும் ஒன்றாக போட்டி போட வேண்டும் என்று கூறுவது எவ்வாறு நியாயமான ஒன்றாகும்?
நீட் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கனவைச் சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழகத்தில் மட்டும் மிகக் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போராட்டத்திற்கு மாணவர்கள் தங்களது இன்னுயிரை தாரைவார்த்து வருவதும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் 86,342 பேர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு 14-07-2021 அன்று தமிழ்நாடு அரசிடம் அளித்த அறிக்கையில், சமுகத்தில் பின்தங்கியவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு நீட் இடையூறாக இருக்கிறது என்றும், வசதி படைத்த பிரிவினருக்கே நீட் சாதகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது. மேலும் எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாகக் கொண்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் நீட் தேர்வு மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதுவே அனைத்து மாநிலங்களின் நிலையும் கூட.
இது நாட்டின் இறையாண்மைக்கு அடிக்கப்படும் சாவுமணி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. விவசாயத்தையும், தொழில் துறைகளையும் சிதைத்ததோடு, தற்போது கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளையும் WTO-GATS-க்கு ஏற்றபடி மாற்றி அமைப்பதன் மூலம் மோடி அரசு அமெரிக்காவுக்கு சேவை செய்வதை உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டின் சட்டரீதியான போராட்டம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய, சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம். இங்கு மொத்தம் 30 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் கிட்டத்தட்ட 3,500-க்கும் மேல். ஆண்டுதோறும் சுமார் 60% மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இந்த மருத்துவ இடங்களுக்குத் தேர்வாகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட சமூகநீதி கிராமப்புற எளிய மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வையே ரத்து செய்து அனைவரும் மருத்துவம் பயில வழிவகுத்தது! 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே போதும் என்கிற ஒரேயொரு தகுதி தவிர வேறு எதுவும் தடையாக இல்லாமல் இருந்ததால் பல உலக தரம் வாய்ந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியது.
இப்படி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பை பெற்ற தமிழகத்தின் இந்த மாபெரும் மருத்துவ கல்வி வளத்தை சுரண்ட, சரியான நேரம் பார்த்து கொண்டு வந்ததுதான் இந்த “நீட்” என்னும் அரக்கன்.
முன்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர CET எனும் நுழைவுத் தேர்வு முறை இருந்தது. 2006ல் இந்த தேர்வு முறையை நீக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்த போது வல்லுநர்கள் குழு கொண்டு ஆராய்ந்து அதனடிப்படையில் அப்போதைய தமிழ்நாடு அரசு, CET நுழைவுத் தேர்வை நீக்கி சட்டம் இயற்றியது. சென்னை உயர் நீதிமன்றமும் ‘இது சமூக நீதிப்படி உள்ளதே தவிர இது தரத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை’ என்று CET நுழைவுத் தேர்வு நீக்க மசோதாவை ஏற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் வரவேற்று உறுதி செய்தது. இது போன்றே சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையிலான சட்டம் நமது பெரும் போராட்டத்தால் இயற்றப்பட்டு நிறைவேறியது.
அது போல 2017-ல் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று எடப்பாடி தலைமையிலான அரசு, ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ‘நீட் பாடத் திட்டத்திற்கும், மாநில பாடத் திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளதால் விலக்களிக்க வேண்டும்’ என குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மோடி அரசோ ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது. மோடியின் கைப்பாவையாக இருந்த அன்றைய எடப்பாடி அரசும் கண்துடைப்பு நாடகமாக இதை நடத்தி மக்களிடமிருந்து இப்பிரச்னையை நீர்த்துப்போகச் செய்தது. சட்ட மசோதாவை ஏற்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அதை ஏற்காமல், நீட் தேர்வை நடத்துவது தமிழர்களுக்கு எதிரான பாஜக அரசின் நிலைப்பாடே ஆகும். அதுதான் எழுவர் விடுதலையிலும் வெளிப்படுகிறது.
இந்த நீட் தேர்வால் அனிதா தொடங்கி, ஏராளமான மாணவர்கள் தங்களுடைய உயிரை இழக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடமும் தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா என்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிர்க்கொல்லியாக மாறிவரும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்காக தற்போதைய திமுக அரசும் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது. ஆனால் அதற்கு அனுமதி கிடைப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. ஏனெனில் நீட் தேர்வு எதிர்ப்பை மட்டுப்படுத்தும் வேலையை மட்டுமே செய்யும் பாஜகவினர், நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா தாக்கலின் போது வெளிநடப்பு செய்தது அவர்கள் தமிழின விரோதிகள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் “தலைகீழாக நின்று மசோதா கொண்டு வந்தாலும் நீட் தேர்வு நடக்கும்” என்றும், நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது எத்தகைய பச்சை பொய் என்றும், அவர் தமிழின விரோதி என்பதும் அறியமுடிகிறது.
நீட் எனும் கார்ப்பரேட் வணிகம்
முறையான பள்ளிக் கல்வியை மாற்றி, பயிற்சி நிலைய கல்வி வணிகத்தை உருவாக்கும் மோசடி இதன் பின்னணியில் உள்ளது. நுழைவுத் தேர்வு என்றால், கூடவே பயிற்சி நிலையங்களும் உருவாகின்றன. சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டுமா? நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? அதற்கு நாங்க கேரண்டி. இன்றே எங்கள் பயிற்சி நிலையத்தில் சேருங்கள்’ எனும் விளம்பரங்களுடன் பயிற்சி நிலையங்கள் பரவலாக தங்கள் கடைகளைத் திறந்துள்ளது இதற்கு சான்று.
மேலும் பல முறைகேடுகள் மூலம் பணம் கொழிக்கும் வணிகமாக இந்த நீட் தேர்வு மாறியுள்ளது. அதற்கு தற்போதைய சிறந்த உதாரணம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்காக 35 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது. இதுதான் இந்துத்துவ பார்ப்பனிய மோடி அரசின் சாதனை.
இந்தியாவின் அடையாளமே பன்முகத் தன்மைதான்! ஆனால் இந்துத்துவ மோடி அரசு அதைச் சிதைத்து அனைத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறது. அதுவே ஒற்றை தகுதித் தேர்வு முறை, கல்வி, உணவு முறை, உடை மற்றும் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் அனைவரின் மீதும் திணித்து கொண்டு இருக்கிறது.
இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம் தமிழர் நலனுக்கு எதிரானது என்பது இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நாம் அறிந்த ஒன்று. இதனை தந்தை பெரியார் நேரடியாகவே கூறியுள்ளார். மாநில சுயாட்சியை வெல்லாமல் இந்த நிலை மாறாது. இந்த உரிமை சட்டமன்றத்தில் வெல்லப்படக்கூடிய ஒன்று அல்ல. மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அவ்வாறான போராட்ட சூழல் இப்பிரச்சனையில் பாஜகவின் சூழ்ச்சிகரமான தமிழின விரோதத்தை வீழ்த்தும்.