சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்

சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்

ஈரோட்டில் பெரும் வணிகராக, பகட்டான ஆடைகள் அணிந்து, செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்  பெரியார். அன்றைய காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட பற்றினால் தெருத்தெருவாக கதர் ஆடைகளை சுமந்து விற்றார். எளிமையான வாழ்க்கைக்கு தனது குடும்பத்தையே மாற்றினார். தேசியத்தை முழு மூச்சாக கொண்ட காங்கிரஸ் இயக்கத்தார் சமூகநீதியையும் உயிராக நினைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தோளில் கதர் மூட்டைகளை சுமந்தது போலவே, கைகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ நகல்களையும் சுமந்து ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து காங்கிரஸ்  மாநாடுகளில் அலைந்தார். அக்கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கோலோச்சியதால் இறுதி வரை நகல்கள் தீர்மானமாக அரங்கேறவில்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் உரிமை வேண்டும் என்ற பெரியாரின் ஏக்கம் வகுப்புவாதமாக பார்ப்பனீயத்தால் திரிக்கப்பட்டது. பார்ப்பனீய மேலாதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரசு இயக்கம் எனத் தெளிந்தார் பெரியார்.

காங்கிரசு கட்சியில் சேருவதற்காக  ஈரோடு நகர மன்ற தலைவர் உட்பட 26 பதவிகளை தூக்கி எறிந்தவர் சமூக நீதி உரிமைக்காக காங்கிரசையே தூக்கி எறிந்தார். சமூகநீதியற்ற தேசத்தின் விடுதலை ஆதிக்க சாதியின் நலனிற்கே வழி வகுக்கும் என்றவர் 1925ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பொழுது காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறினார்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் பார்ப்பனர்கள் மட்டுமே சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். பார்ப்பனரல்லாதவர்களும் வேலைவாய்ப்பு உரிமை பெற வேண்டும் என்று 1891-ல் எழும்பிய அயோத்திதாசரின் குரலிலிருந்து நீதிக்கட்சி ஆட்சி வரை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற  இட ஒதுக்கீட்டுப் போராட்டம். 1928-ஆம் ஆண்டு அரசுப் பணியிடங்களில் அனைவருக்குமான வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை செயல்பாட்டுக்கு வந்தது. பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார், சிறுபான்மையினர் என 100% மக்களுக்கான “வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டு ஆணை (Communal G.O)” பிறப்பிக்கப்பட்டது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு

நீதிக்கட்சி முன்னோடிகளின் முன்னெடுப்புகள் ஒவ்வொன்றும் பார்ப்பனரல்லாதவர்கள் முன்னேற அமைத்துக் கொடுத்த ஏணிப்படிகள். தேசியவாதம் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு அனைத்து வகுப்பு மக்களும் பிரதிநிதித்துவம் பெறுவதை வகுப்புவாதம் எனக் கட்டமைத்தது பார்ப்பனீயம். அந்தக் கட்டமைப்பை  இடித்துத் தகர்த்துக் கொண்டே முன்னேறியது பெரியாரின் பிரச்சாரம். குடியரசுப் பத்திரிக்கையில் தலையங்கங்கள், கட்டுரைகள் எழுதி பார்ப்பன சூழ்ச்சியின் வலைப்பின்னலை அப்பட்டமாய் தோலுரித்தார். சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பதவி, அதிகாரத்தை பயன்படுத்தி  நீதிக்கட்சி கொண்டு வந்த வகுப்புவாரி உரிமை இட ஒதுக்கீட்டின்  உண்மையான நோக்கத்தினை அனைத்து  மக்களிடமும் வலுவாகவும், எளிமையாகவும் கொண்டு சேர்த்தவர் பெரியார்.

சமூகநீதி கிடைக்கப் பெற்றதற்கு பெரியாரின் பங்கு பெரிதாக இல்லை எனப் பிதற்றுவோர்கள் மக்களின் மனவோட்டத்தில் எழும்பிய மாற்றத்தின் காரணத்தை அலசுவதில்லை. அந்தக் காரணங்களில் தான் இருக்கிறது சமூகநீதிக்கு அவராற்றிய பெரும் பங்கு.

காங்கிரசைத் தலை முழுகிய அதே ஆண்டான 1925-ஆம் ஆண்டில் தான் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார் பெரியார். பார்ப்பனீயத்தினால் நிலை நிறுத்தப்பட்டு சுயமரியாதை உணர்வைத் தடுக்கும் சாதி, மதம், பக்தி, மூடத்தனங்கள், பெண்ணடிமைத்தனம், சடங்கு, சம்பிரதாயம் போன்ற ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் கட்டமைப்புகளை மக்கள் முன் அம்பலப்படுத்தும் வழிகள் அனைத்திலும் முழு ஈடுபாட்டோடு செயலாற்றினார்.

பொதுக் கூட்டங்கள் மட்டுமல்ல சாதியக் குழுக்களாக குழுமியிருந்த மக்களிடமும் சென்றார். சாதி மாநாடுகளில் பங்கேற்றுப் பேசினார். சாதி அமைப்புகளிடம் பேசுவதென்பது ஒரு சொல் கூட பதம் பார்த்து விடும் கூரிய கத்தி போன்றது. அதனை சாதுர்யமாக கையாண்டவர் பெரியார். அவரின் சொல்லாடல்கள் சாதிய மனநிலையை சமத்துவ மனநிலையாக, தங்கள் வகுப்பார்க்கு உரிய உரிமை கேட்கும் மனநிலையாக மாற்றிய அற்புதத்தை நிகழ்த்தியவர் பெரியார். 1925-ஆம் ஆண்டில் துவங்கி பெரும்பான்மை மக்களை உள்ளடக்கிய பத்திற்கும் மேற்பட்ட சாதிகளின் மாநாடுகளில் உரையாற்றியிருக்கிறார். குறிப்பாக நாடார், செங்குந்தர், வன்னிய குல சத்திரியர், செட்டியார், பள்ளர், ஆதி திராவிடர் போன்ற சாதிகளின் மாநாடுகள் அதில் அடக்கம்.” “ஒவ்வொரு  சாதியாரும் குறைபாடுகளை அரசிற்கு எடுத்துச் சொல்ல சாதி மாநாடு  கூட்டித் தான் ஆக வேண்டும். என்னை சாதி மாநாடுகளுக்கு கூப்பிட்டால் அனைத்தையும் பேசிவிட்டு இறுதியில் சாதி ஒழிய வேண்டும். சாதியின் காரணமாக ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கூறுவேன்” என்று சொன்னவர் அவர். சாதிய இழிவையும் உணர்த்தினார். அதே சமயம் சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறவும் பேசினார். மக்கள் மன்றத்தில் இவ்வளவு நுட்பமாக சமத்துவ மனப்பாங்கையும் சமூகநீதி உரிமையையும் கொண்டு சேர்த்தவர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பதவி அதிகாரப் பேராசை கொண்டவர்கள் சாதிப் பெருமைகளை வளர்த்து விட்ட அரசியல் சூழலில் சாதி ஒழிப்பு மாநாடுகளையும் கையிலெடுத்தார். சாதி மாநாடுகள் , சாதி ஒழிப்பு மாநாடுகள் என எந்த மாநாடுகளிலும் அவர் சமூகநீதி உரிமைகள் பற்றி பேசுவதைக் கைவிட்டதேயில்லை.

வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற பொழுதும் இரட்டை ஆட்சி முறையில் சென்னை மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சி வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து சமூக மாற்றத்தை உருவாக்கியது. நீதிக்கட்சிக்குப் பின்னும் இந்த இட ஒதுக்கீடு முறை 1950 வரை தொடர்ந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் தான் சமூகநீதிக்கு பார்ப்பனீயத்தால் முதல் அடி விழுந்தது. பேராசையினால் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கும் தாங்களாகவே குழி பறித்துக் கொண்டதும் அப்போது தான் நிகழ்ந்தது. அதற்கு சம்பகம் துரைராசன் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் வழக்கு முக்கியமானது. இருவருக்கும் முறையே மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. இது அரசியலமைப்பின் அடிப்படை விதிகளுக்கு மாறானது என வழக்குத் தொடர்ந்தனர். இதில் சம்பகம் துரைராஜன் மருத்துவக் கல்லுரிக்கு விண்ணப்பமே போடவில்லை. சீனிவாசனுக்கு பொறியியல் கல்லூரியில் பார்ப்பனர்களுக்கான 14.29% இடங்கள் பூர்த்தியான பின்பும் தனக்கு இடம் கொடுக்கவில்லை என்று புகார் அளித்தார். இந்தப் பேராசைக்காரர்கள் மூலமாக பார்ப்பனீயம் எதிர்பார்த்த ஆசை நிறைவேறியது. உயர்நீதிமன்றம் 1928 லிருந்து 1950 வரை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட சென்னை மாகாணத்தின்  வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு உரிமைச் சட்டத்தை  அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு மாறானது எனத் தடை செய்தது. உச்சநீதிமன்றமும் இதையேத் தான் தீர்ப்பாக ஒப்பித்தது.

அனைத்து தரப்பாரும் சமத்துவம் பெற அடிப்படைக் காரணியான சமூகநீதி உரிமைக்காக செழிப்பான வாழ்க்கை, குவிந்த பதவிகள், காங்கிரசில் வகித்த பொறுப்புகள் என அனைத்தையும் துறந்த பெரியார் இந்தத் தீர்ப்பை எப்படி ஏற்றுக் கொள்வார்? மக்களைத் திரட்டினார். 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள் வகுப்புரிமை நாளாக அறிவித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ‘அரசியல் சட்டம் ஒழிக, வகுப்புரிமை வேண்டும்’ என்னும் முழக்கங்கள் டெல்லி வரை அதிர்ந்தது.

அறிவுலக மேதை அம்பேத்கரால் 1950 சனவரி 26 அன்று நடப்புக்கு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் வேலை வாய்ப்பில் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. கல்வியில் இடஒதுக்கீடு இல்லை. திருச்சியில் 1950 டிசம்பர் முதல் தேதியன்று பெரியார் அனைத்துக் கட்சி வகுப்புரிமை ஆதரவாளர்களை திரட்டி கம்யூனல் ஜி.ஓ. மாநாடு நடத்தினார். அந்த கூட்டத்தில், “நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற; தண்ணீ பிடிச்சுக்க-ன்னு சொன்ன, ஆனா டேங்குக்குத் தண்ணீ விடலயே! எங்காளுங்களுக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்படி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்?” என்று அவரது குரல் டெல்லி அரசின் செவிகளுக்கு மட்டுமல்ல கல்வியின் இட ஒதுக்கீட்டு அவசியத்திற்கான குரலாகவும் மக்களிடம் பரவியது.

வகுப்புரிமை ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சி, இயக்கமென பாராது  இணைத்து  தொடர்ச்சியான மக்கள் எழுச்சியைத் தூண்டிய பெரியாரால் நேரு அரசாங்கம் இறங்கி வந்தது. போராட்டத்தின் வலிமையை ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு காமராஜர் உணர்த்தினார். அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தமாக அரசமைப்பு விதி 15 (4) அம்பேத்கரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. இதன்படி “மாகாண (மாநில) அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதாகச் செய்யும் எந்த தனி ஏற்பாட்டையும் இந்த 15 வது விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது” என்று மாநில அரசுக்கு உரிமை வழங்கியது.  இந்த பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது. சமூக நீதி உரிமையை அரசுக்கு உணர்த்திய பல தலைவர்களுண்டு. ஆனால் மக்களுக்கு பரப்பிய தலைவர்களுள் பெரியார் முதன்மையானவர். வகுப்புரிமை இட ஒதுக்கீட்டு ஆணைப் பிறப்பித்த நீதிக்கட்சியைக் கொண்டாடியவர்.

வசதியான வாழ்வினைத் துறந்து  பெரியாரின் பாதங்கள் பதியாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக அயராது மக்கள் மன்றத்தில் களம் கண்டவர் பெரியார். அரசியல் அரங்கத்தில்  சமூகநீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனீயம் மேற்கொண்ட  சூழ்ச்சிகளை சமரசமின்றி எதிர்த்து நின்றவர் பெரியார்.  தமிழினம் சரிவை சந்தித்த வழிகளெங்கும் சென்று அதற்குக் காரணமான பார்ப்பனீயத்தைக் கண்டறிந்த பெரியார் அந்த வழிகளைச் செப்பனிட்டு தமிழினத்தை தலை நிமிரச் செய்ய தனது கொள்கைக் கரங்களில் விடாமல் ஏந்திக் கொண்ட கருவி தான் சமூகநீதி. அந்த சமூகநீதி நாயகனின் பிறந்தநாளை சமூகநீதி நாளென்று அழைப்பது நமக்காக உழைத்த அவருக்கு நாம் செலுத்தும் சிறிய நன்றிக்கடன்.

“தகுதி, திறமை பெறுவதற்கு தான் ஒருவன் பள்ளிக்கு பயிற்சிக்கு வருகிறான். ஆனால் படிக்கவும், பயிற்சி பெறவும் கூட தகுதி, தினம வேண்டுமென்றால் இது அயோக்கியத்தனம்” என்றவர் பெரியார். இந்தத் தகுதி பெயரைச் சொல்லித் தான் பார்ப்பனீயத்தின் அதிகாரக் கட்டமைப்புகளைக்  காக்கவே ஆளும் ஒன்றிய அரசு நீட் போன்ற தகுதித் தேர்வுகளைத் திணித்து தகுதியுடைய  நம் பிள்ளைகளை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக்காக களம் கண்ட பெரியார் வழியில் நின்று சமூகநீதிக்கெதிரான தகுதித் தேர்வுமுறைகளை இந்த சமூகநீதி நாளில் ஒழிக்கும் உறுதியை ஏற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »