
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஓரங்களிலுள்ள குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்துப் கட்டப்பட்ட வணிக வளாகங்கள், சொகுசு விடுதிகள் போன்றவற்றை ஆக்கிரமிப்பாக பார்க்க மறுப்பது ஏன் என்கிற கேள்வியை முன்வைத்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஜூலை 15, 2025 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தவை.
இந்த செய்தியில் குடிசைப் படங்களை காட்டுவதற்கு பதிலாக ஏன் அம்பா-ஸ்கைவாக் காட்டப்படுவதில்லை, அல்லது அப்பல்லோ பார்க்கிங், ஷான் ராயல் ஹோட்டல், காஸாக்ராண்ட் கட்டிடங்கள் காட்டப்படுவதில்லை? மாறாக குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுகின்றன? நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழிகாட்டல் தீர்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தபட்ச அக்கறை கொண்ட அந்த தீர்ப்பையும் நாம் அவசியம் வாசித்திட வேண்டும்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க ஏன் அவசர உத்திரவுகள், காலக்கெடுவுக்குள்ளான உத்திரவுகளை நீதிமன்றங்கள் கொடுப்பதில்லை? ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் என்பதில் என்னவகையான நீதி உள்ளன?
இந்த ஆற்றின் கரையோரம் இருக்கும் பெரு நிறுவனங்கள் எவை என நீதிமன்றத்திற்கு தெரியாதா? அல்லது நீதியரசர்கள் பார்த்ததில்லையா? நொச்சிக்குப்பம் லூப்-சாலையில் ஏன் மீன் விற்கிறீர்கள் கேட்க தெரிந்தவர்களுக்கு, ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டிருக்கும் காஸாக்ராண்ட், அம்பா ஸ்கைவாக், அப்பல்லோ பார்க்கிங், ஷான் ராயல் ஹோட்டல் எல்லாம் தெரியாமல் இருக்க வாய்புண்டா?
அரசு அதிகாரிகள் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக ஆவணங்களை சமர்பிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சார்பாக பேச மறுக்கிறார்கள். CMDA, மாநகராட்சி நிர்வாகமும் ஏழைகளுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவும் பட்டா, ஒப்புதல் வழங்குவதில் நடந்து கொள்கிறார்கள்.
MRC நகர் எனப்படும் அடையாறு கழிமுகப்பகுதியில் ஏராளமான பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்ப கொள்கை மாற்றம் கொண்டுவந்தார்கள். கழிமுகப்பகுதியில் லீலா-பேலஸ் எனும் நட்சத்திர விடுதிக்கு அரசு நிர்வாகத்தினர் சொல்லாமலா இருந்திருப்பார்கள். கழிமுக பகுதியில் வெள்ள பெருக்கெடுத்த காலத்தில் ஆறுவிரிவாக கடலில் கலக்கும். கழிமுக பகுதி ஆக்கிரமித்தால் வெள்ளநீர் தேங்கி ஊருக்குள் நாசம் உருவாகும். இதுதான் 2015ல் நடந்த திடீர் வெள்ளப்பெருக்கின் அடிப்படை காரணங்களில் ஒன்று. அடையாறு ஆற்றை விட இருமடங்கு வெள்ளநீர் கூவத்தில் சென்றபோது கழிமுகப்பகுதி வெள்ளத்தை தடுக்கவில்லை. அதனால் கூவம் ஆற்றில் வெள்ளம் மக்களை பாதிக்கவில்லை. ஆனால் இதைவிட அளவு-குறைந்த அடையாறு ஆற்றில் ஏற்பட்ட திடீர் அறிவிக்கப்படாத வெள்ளபெருக்கு அதிமுக அலட்சியத்தினால் மட்டுமல்ல, MRC நகர் கழிமுக ஆக்கிரமிப்பினால் வெள்ளநீர் கடலில் கலக்காமல் தேங்கியது. MRC நகர் குடியிருப்பு பகுதியாக எடுக்கலாமென்று 1996ல் நிலவகையை மாநகராட்சி மாற்றியது. யாருடைய நலனுக்காக நடந்தது? ஆனால் இச்சலுகை ஏழைகளின் வீடுகளுக்கு கிடைக்கவில்லை.
இந்த MRC நகர் மற்றும் அடையாறின் வடக்கு பகுதி கரையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் நீதியரசர்களின் குடியிருப்பும் ஆக்கிரமிப்பென சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லாமலா இருக்கிறது. அனகாபுத்தூரில் வைக்கப்பட்ட அளவுகோளை எடுத்து கழிமுகப்பகுதிக்கு ஏற்றவகையிலான அளவீடை செய்தல் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு கட்டிடங்கள், நீதியரசர்-அமைச்சர் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பென சொல்லிவிட இயலும்.

ஆனால் ஏழைகளே வஞ்சிக்கப்படுகின்றனர். அதுவும் நீதிமன்றம் மிகக்கராராக, நேர்மையின் அடையாளமாக வெளியிடும் தீர்ப்புகளின் பின்புறத்தில் பாதிக்கப்படும் ஏழை மக்களின் நிலை குறித்து அவர்கள் கவலைகொள்வதோ, மீள்குடியேற்றத்தின் யோக்கியதை குறித்தோ அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை. அனகாபுத்தூரில் சட்டவிரோதமாக அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில், அனுமதி பெற்று கட்டப்பட்ட ஏழைகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. இராணுவத்தைக் கொண்டாவது ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று சொன்ன நீதிமன்றம், டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையை வைத்து ஆக்கிரமிப்பு என சொன்ன நீதியரசர்கள் எங்ஙனம் மக்கள் சார்பாக வழக்கினை அணுகினார்கள் எனும் கேள்விக்கு பதிலில்லை. ஆங்கில ஊடக செய்திதை வைத்து நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால், ஆங்கில ஊடகங்கள் காஸாக்ராண்ட் விளம்பரத்தை லட்சக்கணக்கான பணத்தில் வெளியிடுகின்றன. இது ஊரறிந்த உண்மை.
அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கை தொடுக்கும் நீதிமன்றங்கள், லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பட்டா கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் இதே ஆற்றங்கரையோரம் பட்டா-அப்ரூவல் கொடுத்தது எப்படி என என்றாவது தாமாக கேட்டிருக்கிறதா? என்றாவது ஆற்றின் கரையோரமுள்ள பெருவணிக கட்டிடங்களை இடிக்க விசாரணை நடத்தியிருக்கிறதா?
ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் பெறுவதற்கு அடிப்படை காரணம், ஆற்றங்கரை சீரமைப்பு எனும் பெயரில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள். இதை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளை கொண்டு திமுக அரசு ப்ரைவேட் லிமிட்டெட் கம்பெனியை கடந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வழியாக ஏழைகளின் வீடு இடிப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏழைகளின் நிலங்களில் பூங்காக்கள், நடைபாதைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு என கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் திமுக-அதிமுக சார்பான நபர்களுக்கு சொந்தமானவை. இதற்கு சாதகமான தீர்ப்புகள் பெறப்படுகின்றன. இதை தடுக்க திமுக முயற்சிப்பதில்லை. அதிமுக-பாஜக போன்ற கட்சிகள் கேள்வி எழுப்புவதில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த அநீதியை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்.

உங்கள் நிலத்தை கையகப்படுத்துகிறோமென அரசு அறிவிப்பு கொடுக்கிறதெனில், நீங்கள் உடனடியாக நீதிமன்றம் செல்ல வேண்டுமென அரசு அதிகாரிகள் விரும்புவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடுகளை இடிக்க காவல்துறையோடு களம் இறங்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். முறையான, மக்கள் சார்பான வழக்கறிஞர்கள் இல்லை என்றால், நீதிமன்றத்தில் மக்கள்சார்பான கருணைமிக்க நீதியரசர் அமரவில்லை என்றால் வீதியில் தான் நீதியை மக்கள் போராட்டத்தின் மூலமாக போராடி பெற வேண்டும்.
நிலம் என்பது நமது உரிமை. அதை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது. மக்கள் போராட்டங்களின்றி தீர்வு இல்லை. இதற்கு எதிராக போராடும் அமைப்புகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமிது. மே17 இயக்கம் இதற்கான முழுமுயற்சிகளை முன்னெடுக்கும். நீங்களும் ஆதரவளிக்க வாருங்கள்.