தலையங்கம் – ஆகஸ்ட் 10, 2022
பாஜக ஆட்சிக்கு வராத ஒரே இந்தி பேசும் மாநிலத்தில் அதன் முதலமைச்சர் கனவினை கலைத்திருக்கிறார் திரு.நிதிஷ்குமார். மராத்தியத்தின் சிவசேனை கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை பிடித்ததைப் போன்றதொரு வேலைத்திட்டத்தை பீகாரில் செய்வதற்குரிய நகர்வுகளை பாஜக செய்து வந்ததை எதிர்கொள்ளும் விதமாக திரு.நிதிஷ்குமார் கூட்டணியை மாற்றியமைத்து தனது பதவியை காப்பாற்றியிருக்கிறார்.
மத்திய மாநிலங்கள், வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் என ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி கட்சிகளை உடைத்து, பிரித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கை பாஜக செய்துவருவதன் காரணம் இந்தியா முழுவதும் மாநில ஆட்சிகளில் அமர்வது எனும் ஒற்றை நோக்கம் மட்டுமல்ல. இந்திய அரசியல் சாசனம் இரண்டு பெரும் பொறுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அதிகாரங்கள், மாநில அரசின் அதிகாரங்கள் என குழப்படியான கூட்டாட்சியை ஒத்தபடிநிலையை கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் ஆட்சியை பாஜக கைப்பற்றினாலும், ஒன்றிய அரசு சட்டங்களில், அரசியல் சாசனத் திருத்தங்களை மட்டுமே செய்யும் நிலையில் இருக்கிறது. இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தினாலும், ஆர்.எஸ்.எஸ். விரும்புகின்ற ஒற்றைத்தன்மையான இந்துராஷ்ட்ரம் அமைப்பதற்குரிய வாய்ப்பை ஒன்றிய அரசின் அதிகாரம் கொடுத்துவிடவில்லை.
மாநிலத்தின் அதிகாரத்தைக் கொண்டு ஒன்றிய பாஜகவின் நகர்வுகளை எதிர்கொள்ளுகின்ற வலிமையை எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் வரையில் முழுமையான அதிகாரத்தினை பெற்றுவிட்டதாக பாஜக கருத இயலாது. மாநில அளவிலான திருத்தங்கள் வரும்பட்சத்தில் மட்டுமே இந்துத்துவ ஆட்சியமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும். இல்லையெனில் சட்டங்களை வடிவமைத்தாலும் மாநில அளவில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத அளவில் மாநில கட்சி ஆட்சிகள் முட்டுகட்டைப்போட்டு தாமதத்தை ஏற்படுத்தவோ, பின்னடைவை கொண்டுவரவோ அல்லது கிடப்பில் போடவோ இயலும். இவ்வகையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பல் எதிர்கொள்ளும் தடைக்கற்களாக மாநில ஆட்சியமைப்பும், மாநில கட்சிகளும் உள்ளன.
இந்திய அளவிலான எதிர்ப்பு அணியை அமைக்கும் வாய்ப்புள்ள காங்கிரஸை குழப்பத்தில் ஆழ்த்தி, பலவீனப்படுத்தி பின்னுக்கு தள்ளியுள்ள பாஜக, இதே மாதிரியான சூழலை மாநில அளவிலான கட்சிகளிடத்திலும் ஏற்படுத்த விழைகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளான சிவசேனை தனது பலத்தை இழந்தது. பஞ்சாபில் அகாளிதளம் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் மிகமோசமான அளவில் தோல்வியை தழுவி நிற்கிறது. அஸ்ஸாமில் இதே போன்று அசோம் கணபரிசத் பலவீனமடைந்து மறைந்து போகும் நிலையில் உள்ளது. இதேபோல பலவீனத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிமுக. இப்படியாக இந்தியா முழுவதிலும் பாஜகவால் பலவீனமாக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் மீண்டும் தலைதூக்க இயலாத வண்ணம் தொடர்ந்து நெருக்கடியை ஒன்றிய அரசின் துறைகள் மூலம் கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிமுகவை இரண்டாக உடைத்து ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்துள்ளது. பலவீனப்பட்ட அதிமுகவின் ஒற்றைத் தலைமை எனப்படும் திரு.எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. இப்படியான பார்ப்பனிய சூழ்ச்சியின் மொத்த இருப்பிடமாக பாஜக திகழ்கிறது.
இந்தச் சூழலில் திரு.நிதிஷ்குமாரின் வெளியேற்றம் என்பது பாஜகவிற்கு தற்காலிகமான பின்னடைவை கொடுத்திருக்கிறது. திரு.நிதிஷ்குமார் கடந்த காலத்தில் எழுந்த காந்தியவாத சோசலிஸ்டு பாணியிலான ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் வழி வந்தவராக மதச்சார்பின்மைக்கும், எளிய மக்கள் மேன்மைக்குமான உரியவராக அரசியல் களம் நுழைந்தவர். இவரைப் போன்றே திரு.லாலுபிரசாத் யாதவ், திரு.முலயாம்சிங் யாதவ், திரு.ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் 1975-ல் நடந்த நெருக்கடி காலகட்டத்தில் ஜெ.பி. இயக்கம் எனப்படும் ஜெயப்பிரகாஷ்நாராயணன் வழிகாட்டுதலோடு அவரது சீடர்களாக சனநாயகத்திற்கு போராடுபவர்களாக அரசியல் களம் கண்டவர்கள். இவர்களில் திரு.லாலுபிரசாத் யாதவ் மட்டுமே இன்றளவும் பாஜகவோடு கூட்டணி வைக்காதவராக நிற்கக்கூடியவர். இதனாலேயே பல நெருக்கடிகளை சந்தித்தவர். இப்படியான பின்னணியை கொண்ட இக்கூட்டணி இன்று பலகூறுகளாக பிளவுபட்டு சந்தர்ப்பவாத அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
பாஜகவிற்கு எதிரான திரு.நிதிஷ்குமாரின் திடீர் நிலைப்பாடு கோட்பாட்டு பின்னணி கொண்டதல்ல. இதன் பின்னால் அவரது சுயநல அரசியலே மையம்கொண்டுள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் 2025-ல் வர இருக்கும் பீகாரின் தேர்தலை மையமாகக் கொண்டு இக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ஏனெனில் 43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது கடந்த கால பிரதமர் பதவிக்கான கனவினை கைவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் சூழல் எவ்வகையிலும் பாஜகவை தனிமைப்படுத்தவோ, கோட்பாடுரீதியாக தோற்கடித்து அரசியல் மாற்றத்தையோ இந்தியத் துணைக்கண்டத்தில் கொண்டு வராது.
ஆர்.சி.பி.சிங் எனும் திரு.நிதிஷ்குமார் கட்சியின் முக்கிய பொருப்பாளரை தனது வளையத்திற்குள் கொண்டுவந்து ஒன்றிய அமைச்சராக்கியது பாஜக. இவரை வைத்தே நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தை (ஒன்றிணைந்த) உடைக்க நினைத்த பாஜகவின் சூழ்ச்சி அரசியலை தோற்கடிக்கவே மகாகட்பந்தன் (Mahagathbandhan) எனும் தேஜஸ்வி கூட்டணியின் ஆதரவை நாடி இருக்கிறார். இது வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணியையோ, மதச்சார்பற்ற கூட்டணியையோ, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு கொள்கைக் கூட்டணியையோ அமைத்துவிடாது. இது போன்ற சூழ்ச்சிகள் வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் முனைப்புபெறும் என்பதையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். பாஜகவை தேர்தலில் வீழ்த்திட வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் அந்த முயற்சிகள் எவ்வகையிலும் ஆர்.எஸ்.எஸ்சை வீழ்த்திடாது. அவ்வாறு வீழ்த்தும் வலிமை தேர்தல் கட்சிகளிடத்தில் இல்லை. இதைச் செய்யும் பொறுப்பு பாசிச எதிர்ப்பு முற்போக்கு இயக்கங்களிடத்திலேயே உள்ளது.
அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டம் பாஜக வினரையும் ஆர்எஸ்எஸ் யும் திக்கு முக்காட வைக்கிறது அவர்களின் பாசிச கோட்பாடுகளை உடனடியாக செயல்படுத்த முடியாமல் அரசியல் சாசன சட்டம் பெறும் தடையாக நிற்கிறது வாழ் அம்பேத்கர்