மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் அடித்தளம் அமைப்பது அம்மாநில மக்களே. அவர்களுடைய உழைப்பினாலும் வரியினாலும் மட்டுமே மாநிலத்தின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் நடைபெறுகின்றன. இதற்குச் சான்றாக, மராத்திய மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரானதற்கும் மராத்திய மக்களின் உழைப்பு பெரும் பங்கு வகித்ததைக் கூறலாம்.

ஆனால், அண்மையில் மராத்திய மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோசியாரி, மும்பை அந்தேரியில் நடைபெற்ற ஓர் விழாவில், “குஜராத்தியர் மற்றும் மார்வாடிகள் மராத்தியத்தில் இருந்து வெளியேறினால், மராத்திய மாநிலத்தின் பொருளாதாரமே அழிந்துவிடும்” என்றும் “மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக இருக்காது” என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஒரு மாநிலத்தின் ஆளுநர், மார்வாடிகளை உயர்த்தி அம்மாநில மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது தற்போது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பாஜகவிற்கு ஆதரவாகவும் மாநில சுயாட்சியைப் பறிக்கும் வகையிலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில கட்சிகளை ஆட்சியமைக்க விடாமல், பாஜக குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏ-க்களை இழுக்கும் வறை கால அவகாசம் அளித்து, பின்னர் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்வது வாடிக்கையாக உள்ளது. இப்படியான சூழல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய மாநிலத்தில் சிவசேனை கட்சிக்கு ஏற்பட்ட போது, பாஜகவை தவிர்த்த ஆட்சியை அமைத்தது. ஆயினும், பாஜக இடைப்பட்ட காலத்தில் சிவசேனை கட்சியை உடைத்து இன்று பாஜக ஆதரவு சிவசேனை ஆட்சியில் அமர ஆளுநர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, குஜராத்தியர் மற்றும் மார்வாடிகளைப் புகழும் நோக்கில் (மோடி மற்றும் அமித்சா குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால்) மாராத்திய மண்ணின் மைந்தர்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் கோசியாரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆளுநர் கோசியாரியின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததோடு, மராட்டிய மக்களின் உணர்வுகளை புண்படுத்திய ஆளுநர் கோசியாரி மராட்டியர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரினார். மேலும், சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் பேசியதற்கு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரினார். பாஜக ஆதரவில் ஆளுநரின் தயவில் மராட்டிய முதல்வராக பதவியேற்ற சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியதோடு, மராட்டிய மக்களின் கடும் உழைப்பினாலேயே மும்பை நகரம் பெரும் வளர்ச்சி கண்டது என்றும் மராட்டிய மக்களையே மும்பையையோ எவரும் அவமதிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதனையடுத்த, தான் எந்த இடத்திலும் மாராத்தியர்களை அவமதிக்கவில்லை என்றும், குஜராத்தி, இராஜஸ்தானிகள் குறித்து தான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார் ஆளுநர் கோசியாரி. கடும் எதிப்பு காரணமாக, மராத்திய மக்கள் மனம்திறந்து மன்னிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

கோசியாரி இது போன்று சர்ச்சையில் சிக்குவது முதல்முறை அல்ல. மும்பை பல்கலைக்கழகத்தின் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச மாணவர்கள் விடுதிக்கு சாவர்க்கரின் பெயரை சூட்டுமாறு துணைவேந்தரிடம் வலியுறுத்தியவர். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சர்களுடன் பலமுறை வார்த்தைப் போரில் ஈடுபட்டவர். தாக்கரே சட்டமன்ற உறுப்பினராவதைத் தடுக்கும் நோக்கில் சட்டமன்றக் குழுவின் இடைத்தேர்தலை அனுமதிக்க மறுத்தவர். பெண்உரிமைப் போராளியும் மராத்திய கல்வியாளருமான சாவித்ரிபாய் பூலே குறித்தும் அவரது கணவரான ஜோதிபாய் பூலே குறித்தும் கொச்சையாகப் பேசியவர்.

இதுதவிர கோசியாரி, தாக்கரே அரசின் விவசாய சந்தைக் குழு குறித்த அவசரச் சட்டத்தை வேண்டுமென்றே கையெழுத்திடாமல் தாமதப்படுத்தினார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காசுமீர் என்று விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் சந்தித்தவர். இவ்வாறு பலமுறை தனது பாஜக ஆதரவை வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறார் கோசியாரி. ஆனால் இந்தமுறை மார்வாடிகளை உயர்த்தி மராத்தியர்களை தாழ்த்துவது போல் பேசியிருப்பது அங்குள்ள மக்களையும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கோபப்படுத்தியிருக்கின்றது. ஆளுநரை நீக்கும் போராட்டத்தில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதுபோன்று பாஜகவின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

One thought on “மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்

  1. ஆளுநர் பதவி ஒட்டு மொத்தமாக தூக்கி விட்டு உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குபதவிப்பிரமாணங்கள் செய்து வைக்க வேண்டும். இதனால் ஆளுநர் பதவிக்காக செய்யப்படும் வீண் செலவுகள் மிச்சப்படுத்தப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாநில அரசாங்கங்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் மாநில சுயாட்சி சுயமரியாதை ஆகியவை 95 சதவீதம் மீட்கப்பட்டு காப்பாற்றப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »