மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும்

தலையங்கம் – ஆகஸ்ட் 11, 2022

இந்தியாவின் அதிகாரங்கள் மாநிலம், ஒன்றியம் என இருகூறுகளாக பிரிக்கப்பட்டு அரசியல் சாசனத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் இரண்டு அதிகாரங்களுக்கும் பொதுவான துறைகளாக அமைந்ததில் மின்சாரமும் ஒரு துறை. இத்துறை மாநில அரசினால் நிர்வாகம் செய்யப்பட்டு மக்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மின் உற்பத்தி, பகிர்ந்தளிக்கப்படுதல், கட்டணம் வசூலித்தல் என அனைத்தையும் மாநிலங்களே செய்கின்றன. தங்களது மாநிலத்தின் சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்பவும், கொள்கைக்கு ஏற்பவும் மாநிலங்கள் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன; மின்சாரம் கொள்முதல் செய்கின்றன; மக்களுக்கு விநியோகம் செய்கின்றன.

அண்ணல் அம்பேத்கர், மின்சாரத்தை அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைக்க வழிசெய்தால் மட்டுமே கல்வி, தொழில் வளர்ச்சி விரிவடையும், சாமானிய மக்களும் அந்த துறைகளில் காலூன்ற முடியுமென்பதால், தொழிற்சாலை போன்ற பெருநிறுவனங்களுக்கு, வணிகங்களுக்கு லாபத்தில் மின்சாரத்தை விற்று அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சாமானியர்களுக்கு மானியத்தில் மின்சாரம் சென்று சேரும் வகையில் மின்சாரச் சட்டத்தை அமைத்தார். இச்சட்டம் இருந்த காரணத்தினால் பெருமுதலாளிகள் மின்சாரத்தை தொழிலாக கொண்டு பெரும்லாபம் ஈட்ட இயலாமல் போனது. மின்சாரத்தை கடைசி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க முயன்று சாதித்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொழில்வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக தலைநிமிர்ந்தது.

இவ்வாறு டாக்டர்.அம்பேத்கரால் வலுவாக இயற்றப்பட்ட இச்சட்டத்தை தனியார்மயமாக்கலுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தங்கள் மூலம் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இவ்வகையில் மின் உற்பத்தியை தனியாருக்கும், பெருநிறுவனங்கள் அரசிடமிருந்து மின்சாரத்தை வாங்காது தாமே உற்பத்திச் செய்துகொள்ளலாமென திருத்தங்கள் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் மாநில மின்சார வாரியங்கள் இந்த தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து குறிப்பிட்ட விகிதத்திற்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டுமென்றனர். அதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு நட்டமே ஏற்படாதவாறு ஒப்பந்தங்கள் போடப்படுமாறு ஒன்றிய அரசு வழிகாட்டியது.

இதனால், லாபத்தில் இயங்கி வந்த மின்சார வாரியங்கள் நட்டத்திற்குள் தள்ளப்பட்டது. மிக அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி மானியத்தில் அல்லது விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. மாநிலங்களின் உற்பத்தி்யானது படிப்படியாக குறைக்கப்பட்டு தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வது அதிகரிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி பல மாநில ஆட்சியாளர்கள் பெரும்பணத்தை தனியாரின் வழியாக தமக்காக ஈட்டிக் கொண்டனர். இந்நிலையிலும் விவசாயிகள், குடிசைகள் மற்றும் சாமானியருக்கான மானிய விலை மின்சாரத்தை கொடுத்து வந்தன மின்சார வாரியங்கள்.

மின் உற்பத்தி தனியாருக்கு தாரை வார்த்த பின்னர், லாபகரமாக இயங்கும் பகுதிகளில் மின்விநியோகத்தையும் தனியாருக்கு வாரி வழங்கினால் அதானி, அம்பானி, டாடா, ஜெ.பி. போன்ற நிறுவனங்கள் மேலதிக லாபம் ஈட்டமுடியும் எனும் நிலைப்பாட்டினை ஒன்றிய அரசு எடுத்தது. இதன்படி மும்பை, டில்லி போன்ற நகரங்களில் லாபகரமான பகுதிகளில் தனியார் மின்சார விநியோகத்தை செய்தன. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் மும்பையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பொழுது, சிதைந்த மின்சார விநியோகத்தை நிலைநிறுத்தாமல் தனியார் நிறுவனங்கள் மக்களைக் கைகழுவின. நட்டம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டது. இச்சமயத்தில் மும்பையில் அரசு மின்சார விநியோக நிறுவனமே பெருமளவில் மின்சார விநியோகத்தை நிலைநிறுத்தியது என்பது வரலாறு.

இவ்வாறு லாபத்தை தனக்கும், நட்டத்தை மக்களுக்கும் சுமத்தும் தனியார் நிறுவனத்திடம் மின்சார விநியோகத்தை கொண்டு சேர்க்கும் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கட்டாயமாக்கும் வகையில் ‘மின்சார விநியோகத்தை சந்தைப்பொருளாக்கி போட்டியை கூட்டுவதன் மூலம் சிறந்த மின்விநியோகத்தை சாதிப்போம்’ எனும் முழக்கத்தினை பாஜக முன்வைக்கிறது. மேலதிகமாக இவ்வாறு தனியாரிடம் விநியோகத்தை ஒப்படைத்து சிறப்பாக மின்சாரக் கட்டணத்தை வசூலித்தால் அரசின் மின்விநியோக நிறுவனங்களை கடுமையான நட்டத்திலிருந்து மீட்க இயலுமென்கிறது. போட்டி அதிகமாவதால் அதிக வசதி்கள், தங்குதடையற்ற மின்விநியோகம் சாத்தியமென பசப்பு வார்த்தைகள் காட்டுகிறது. இதன் வழியாக நிலுவையிலிருக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான கட்டணத்தை செலுத்தி அந்நிறுவனங்களை நட்டத்திலிருந்து மீட்க முடியுமென்கிறது பாஜக அரசு.

அடிப்படையில் இந்த தனியார் நிறுவனங்களில் லாபவெறி வேட்கையே இவர்களின் கடுமையான நட்டத்திற்கு காரணம். மேலும் அரசின் மின்சார வாரியங்களின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைவது என்பது தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்ட மின்சாரமாகும். பிரச்சனைகளின் மூலத்தை நிவர்த்தி செய்யாமல் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலையை கச்சிதமாக பாஜக செய்கிறது. இதன் பின்னனியில் ஜெ.பி., அதானி போன்றோரின் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் சந்திக்கும் கடுமையான நட்டத்தினை சரி செய்ய இந்த தனியார்மயம் தேவைப்படுகிறது. மேலும் நிலக்கரியை இறக்குமதி செய்யும் ஏகபோகம் அதானியின் வசமாக இருப்பதால், நிலக்கரி இறக்குமதி- துறைமுகங்கள்-மின்சார உற்பத்தி-மின்சார விநியோகம் என அதானியின் தொடர் சங்கிலி நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நீண்டகால உழைப்பினால் உருவாக்கி வைத்திருக்கும் மின்விநியோக கட்டமைப்புகளை மலிவுவிலையில் அல்லது சலுகையில் அதானி, அம்பானி போன்ற மார்வாடிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்கிறது பாஜகவின் புதிய சட்டம். இவ்வகையில் தமிழ்நாட்டில் வடசென்னை, காரைக்கால் போன்ற இடங்களில் அதானி போன்றோர் உருவாக்கும் துறைமுகம், அனல்/சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றோடு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களின் மின்விநியோகத்தை அதானி, அம்பானி, டாடா போன்ற நிறுவனங்களின் கையில் கொண்டு சேர்க்க இந்த சட்ட மசோத பயன்படும்.

மேலும், இவ்வாறு கொண்டுவரப்படும் சட்டம், உழவர் மசோதாவைப் போலவே மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக பாஜக கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி மாநிலத்தில் மின்சாரத்தின் விலை நிர்ணயம், கொள்முதல், பரிவர்த்தனை தொடர்பான விவாதங்கள், வழக்குகளை நிர்வகிக்கும் மாநில மின்சார ஒழுங்காணையம் என்பதில் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில் ஒன்றிய அரசு தலையிடும். மேலும் ஒன்றிய அரசினால் நியமனம் செய்யப்பட்ட ஒரு அதிகாரியும் இந்த ஒழுங்காணையத்தில் பொறுப்பேற்பார் என்கிறது. மாநிலத்தின் நிர்வாகத்திற்குள்ளாக முழுமையான தலையீட்டை ஒன்றிய அரசு செய்வதன் மூலம் விலை நிர்ணயம், விநியோக பரிவர்த்தனை, கொள்முதல் ஆகியவற்றை டில்லியிலிருந்து கட்டுப்படுத்தும் பணியை ஒன்றிய அரசு மேற்கொள்ளும். இது மாநில அதிகாரத்தின் வேர்களை வெட்டிச்சாய்க்கும் நோக்கம் கொண்டது.

பாஜக கொண்டுவரும் திட்டத்திற்கெல்லாம் தலையசைத்து ஆதரிக்கும் அதிமுக மாநிலங்களவையில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது கவனத்திற்குரியது. தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் மாநில உரிமை மீது கைவைத்திருக்கும் இம்மசோதாவை எதிர்த்து வீழ்த்துவதே தமிழக மாநில கட்சிகளின் தலையாய பணி.

சட்டவரைவினை அறிய: https://prsindia.org/billtrack/the-electricity-amendment-bill-2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »