மே 17 இயக்கம் ஏன் அம்மனை, அய்யானாரை முன்னிறுத்தியது?

வட நாட்டிலிருந்து இங்கு வந்து பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை விரட்டியடிக்க, தமிழரின் முன்னோர்களாக இருந்து, பின்னர் பண்பாட்டு தெய்வங்களாக மாறிப் போயிருக்கும் அம்மனையும், அய்யனாரையும் கையிலெடுத்தது மே 17 இயக்கம். இந்த தெய்வங்களின் மீதான வழிபாடு என்பது இந்துத்துவத்திற்கு எதிரான பண்பாடு என்பதே தொ. பரமசிவன், ஆ. சிவ சுப்ரமணியன் போன்ற ஆய்வாளர்களின் கருத்துமாக இருக்கிறது.

இவர்கள் பிரம்மாவிலிருந்து தோன்றிய கடவுளர்கள் அல்ல, தமிழர்களின் இயற்கை வழிபாட்டுக்குரியவர்கள். இந்துத்துவக் கும்பல் ராமனைக் கொண்டு வந்தால், தமிழர்களாகிய நாம் அய்யனாரை எதிர் நிறுத்துவோம் என மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் பொங்கலிட்டு, அய்யனாருக்கு ஆட்டினை நேர்ந்து விட்டு, அறநெறி மூத்தோன் திருவள்ளுவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி விட்டு, வரவிருக்கும் 2024, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை மே 17 இயக்கம் துவங்கியது.

இந்த முன்னெடுப்பை வறட்டு நாத்திகவாதிகள் சிலர், இறுதியில் தமிழ் தேசியம் இந்துத்துவத்திற்குள் அடைக்கலமாகி விட்டது எனக் கூச்சலிட்டு கொக்கரிக்கின்றனர்.  பெரியாரை மேம்போக்காக பார்த்து, விழிப்புணர்வடைந்து, முற்போக்கு ஞானம் பெற்றதாய் புல்லரிக்கும் வறட்டுவாதிகளாக இருந்து கொண்டு, மே 17 இயக்கத்தின் முன்னெடுப்பை கேலி செய்கின்றனர். இவர்கள் என்றுமே மக்களுக்கான களத்தில், போராட்டத்தில் இயங்கியவர்கள் கிடையாது. இணைய தளத்திலேயே முடங்கிக் கிடப்பவர்கள். இணையதள அறிவுசீவிகளாக உலா வருபவர்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் பிரச்சனைக்காக வீதியில் போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்திப் பேசுவதை பிழைப்பாகக் கொண்டவர்கள். 

பார்ப்பனியத்தையும், பார்ப்பனியத்தின் வேத ஆகமங்களை முற்றிலும் எதிர்க்கும் நாத்திக இயக்கம் மே 17 இயக்கம். ஆர்.எஸ்.எஸ்-சின் கருத்தியலுக்கு எதிரான பெரியாரிய கருத்தியலில் துளியும் சமரசம் கொள்ளாதவர்கள் மே 17 இயக்கத்தினர் என்பதையே 15 ஆண்டு கால அரசியல் களத்தில் நாங்கள் பெற்றிருக்கும் பேறாக இருக்கிறது. மக்களின் வாழ்வோடு உறவாடி அவர்களிடையே உறைந்து கிடக்கும் விழுமியங்களை ஆய்வு செய்தவர்களை வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் தனித்துவமான  இறையாண்மையை இலக்காகக் கொண்ட தமிழ் தேசியம் நோக்கி, தமிழர்களின் உரிமைக்காக வாழ்நாளெல்லாம் போராடிய பெரியாரின் திராவிடக் கொள்கையின் பாதையில் பயணிக்கிறோம். 

தமிழரின் பண்பாட்டு தெய்வங்களை கடவுளாக மாற்றி காசாக்கிய பார்ப்பனிய அதிகார மையத்தின் நிறுவன சமயத்தையே பெரியார் மூர்க்கமாக எதிர்த்தார் என்பதே ஆய்வாளர்களின் கூற்று. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் இடும் கட்டளைகள் என்பவை அடித்தட்டு மக்களை வற்புறுத்தி பணிய வைத்து விட்டு, மேல்தட்டு அதிகாரத்தை அப்படியே இருக்கச் செய்யும்போது, அந்த அரசியல் அதிகார மட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பியவரே பெரியார். அதை விடுத்து எளிய மக்களின் வழிபாட்டு முறையை நோக்கி தனது நாத்திக ஆற்றலை திருப்பியவரல்ல பெரியார்.  இதைத்தான் தொ. பரமசிவன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டை சொல்லி விளக்குகிறார்.

ஜெயலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட உயிர்ப்பலி தடைச் சட்டத்திற்கு இந்துத்துவ சக்திகளும், முற்போக்கு அமைப்புகளும் ஒரு சேர ஆதரவு அளித்ததை சுட்டிக் காட்டி, தொ. பரமசிவன் அவர்கள், ’இது ஒரு அரசியல் முரண் அல்லாமல் பண்பாட்டு முரண்’ ஆகும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்த கட்டத்தில் பெரியாரது நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? “பெரிய கோயில்களில் யாகங்களை நிறுத்துங்கள், அனைவரையும் கருவறைக்குள் நுழைய அனுமதியுங்கள். அதற்கப்புறம் ‘உயிர்ப்பலித் தடை’ பற்றி யோசிக்கலாம்” என்றுதான் அவர் சொல்லியிருப்பார். ஏனென்றால் பெரியார் உடனடித் தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்.” எனக் கூறுகிறார்.

உயர்சாதியினரின் அதிகார மைய வழிபாட்டு முறை இருக்கும் போது, அதுவே இந்துத்துவமாக உருப்பெற்று நிற்கும் போது, அதற்கு மாற்றாக எளிய அடித்தட்டு மக்கள் காத்து நிற்கும் தமிழர் பண்பாட்டு வழிமுறையை கையிலெடுக்காமல் போனால் வேறென்ன வழி இருக்கிறது? வறட்டு நாத்திகவாதிகள் கையாளும் தெய்வ மறுப்புக் கொள்கை வெற்றியைத் தந்திருக்கிறதா என்பதை தமிழ் சமூகத்தை ஆய்வு செய்து ஏதேனும் முடிவை வைத்திருக்கிறார்களா? என்பதே கேள்வியாக எழுகிறது.

மேலும் தொ.ப அவர்கள், “நாட்டார் தெய்வங்கள்’ என்ற சொல்லாட்சி, ஓரளவு வாசிப்புப் பழக்கம் உடையவர்களிடத்திலும், இடதுசாரி இயக்கச்சார்பு உடையவர்களிடத்திலும் உடனடியாகச் ‘சாமியாட்டம், குருதிப்பலி, பலிவடிவங்கள்’ ஆகிய படங்களாகவே விரிகின்றது. பொத்தாம் பொதுவான அல்லது மேலோட்டமான இந்தக் கணிப்புக்கள் அனைத்துமே தவறானவை. நாட்டார் தெய்வங்கள் தத்துவ, ‘விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத் தன்மையும் உயிர்ப்பும் உடையன. சிவன், திருமால், விநாயகர் போல ‘வடவேங்கடம் தென்குமரி’ வரை ஒத்தத்தன்மை அவற்றுக்கில்லை. சென்னை, செங்கல்பட்டு வட்டங்களில் ‘காளன்’, ஆற்காட்டுப் பகுதியில் ‘பொன்னியம்மன்’, வேலூர் திருவண்ணாமலைப் பகுதிகளில் ‘போத்தி ராஜா’, கொங்கு நாட்டில் ‘அண்ணன்மார்’, திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களில் ‘காத்தவராயனும் நாடியம்மனும்’, மதுரை முகவை மாவட்டங்களில் ‘கருப்பசாமி’ , நெல்லை – குமரி மாவட்டங்களில் ‘சுடலைமாடனும் இசக்கியம்மனும்’ என்று, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும், சமூக உளவியலுமாகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுபவை. இந்தப் ‘பன்முகத் தன்மை’ என்பது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாகும்… இந்த வழிபாட்டு முறைகளை தெய்வ நம்பிக்கையோடு  கூடிய வழிபாட்டு நெறிகள் (Cult) என்று அழைக்கலாமேத் தவிர மதம் என்ற கட்டுக்குள் அடக்கவியலாது. எனவே அவை அரசதிகாரச் சார்புடையன அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார்.

பெரியாரைப் புரிந்து கொள்ள முயலுகின்றவர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. ”குருதிப் பலியும், சாமியாட்டமும்கூட மூட நம்பிக்கைகள்தானே? என்பதே அந்தக் கேள்வி. இப்படித் திருப்பிக் கேட்கலாம். ‘நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையே என்ன இருக்கின்றது?’ ஏதோ ஒரு வகையில் நுண் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் இருக்கின்றன என்பதே நமது பதிலாகும். இந்தப் பதிலைக் கொண்டுதான் பெரியாரையும், மக்கள் திரளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்” என தொ. பரமசிவன் அவர்கள் பெரியார் முன்வைத்த மூடநம்பிக்கையானது எவையென்று உள்வாங்கும் வழியைக் காட்டுகிறார். 

பெரியார் கடவுள் மறுப்பாளரே தவிர, நாட்டார் தெய்வங்களை என்றைக்கும் எதிராக அணுகியவரல்ல என்பதற்கு பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன் அவர்கள், ஒரு நிகழ்வை நினைவுறுத்துகிறார். ஈரோடு அருகே ’கொடுமுடி’ என்ற ஊரில் பண்டாரம் என்று அழைக்கப்பட்ட யோகிஸ்வரர்கள் சமூகம், ஒரு துண்டறிக்கையை குடி அரசு இதழில் வெளியிட அனுப்பியிருக்கிறார். அதை பெரியார் வெளியிட்டு அதிலும் ஒரு குறிப்பை தன் கைப்பட எழுதி வெளியிடுகின்றார். அந்த குறிப்பு என்னவென்றால், “நமது தாலுகாவிலுள்ள சைவ பண்டாரங்களின் முக்கியக் கூட்டம் இது. ஆகையால் அத்தாலுகாவில் உள்ள வேளாளர் சமூகத்தார் அச்சமூகம் முன்னேற்றமடைய உதவி செய்வது முக்கிய கடமை. ஏனென்றால் அவர்கள்தான் பெரும்பாலும் நமது கிராம தேவதைகள்” என்று எழுதுகிறார். அவர் வெளியிட்ட நமது என்ற சொல் செல்லும் செய்தி, அவர் நிறுவன சமய கோவில்களில் வழிபாடு நடத்துகிறவர்களுக்கும், நாட்டார் தெய்வ கோயில்களில் வழிபாடு நடத்துபவர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து இருக்கின்றார். இப்படி கூறுவதால் பெரியார் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர் அல்ல. சிவனை வேண்டாம், சுடலை மாடனை ஏற்றுக் கொண்டவர் என்று பொருள் அல்ல, மாறாக அது சாதாரண மக்களின் தெய்வம் என்பதை ஏற்றுக் கொண்டவர்“ என்பதை தெளிவாக உணர்த்துகிறார் ஆ. சிவசுப்ரமணியன் அவர்கள்.

தமிழர்களின் ஐந்திணை வாழ்க்கை முறைமையின் வழிபாட்டுக் கூறுகளை ஆய்ந்து அறிந்தவரல்ல பெரியார். பார்ப்பனியத்தின நிறுவனமான கடவுள்களால் மக்களிடையே விளைந்த மூடத்தனத்தையும், சாதிய வேறுபாடுகளையும், அதை அடித்தளமாகக் கொண்டு எழும்பிய இந்துத்துவ  காட்டுமிராண்டித் தனத்தையும் கண்முன் கண்டதனால் கடவுள் இல்லை என்கிற பகுத்தறிவுக் கோட்பாட்டினை முன்வைத்தார்.

ஒரு சமூகத்தை பக்தி எனும் போர்வையால் மூடி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, மூடத்தனங்களை வளர்த்து சுகபோக வாழ்க்கை வாழும் பார்ப்பனியத்தை முழுமையான சுரண்டல் வடிவங்களை அறிந்தவரே பெரியார். பார்ப்பனியம்  அரசியல், பண்பாடு வழியாக வேதம், புனிதம், வர்ணம் போன்ற கற்பிதங்களை உருவாக்கி இந்துத்துவத்தை நிலைநிறுத்தச் செய்த வழிகளையெல்லாம் ஆய்ந்து அறிந்ததனால், அனைத்திற்கும் அடித்தளமாக பார்ப்பனியம் கடவுளைக் கைக்கொண்டதினால், அப்படியான கடவுளே இல்லை என்று கடவுள் மறுப்பைப் பேசினார். இப்படியான பல்வேறு கண்ணிகளை சமூக தளத்திலோ, பண்பாட்டு, அரசியல் தளத்திலோ இணைத்துப் பார்க்கத் தெரியாதவர்கள் அடித்தட்டு மக்கள்.

அரசியல் வட்டத்தில் கோலோச்சும் பார்ப்பனிய அதிகார வட்டம் முன்னகர்த்துகின்ற கொள்கைத் திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களையே தாக்குபவையாக இருக்கும் போது, அவர்கள் அந்தத் துயரங்களிலிருந்து விடுபட தங்கள் பக்தியையே பிடிமானமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் பெருங் கொள்ளையடிப்பதற்காக பார்ப்பனியம் உருவாக்கிய சடங்கு, சம்பிரதாயம், ஜாதகம், புரோகிதம் போன்ற மூடத்தனங்களிலும் எளிதில் ஆட்பட்டு விடுகிறார்கள். இந்துத்துவம் செரிக்க ஆரம்பிக்கும் இடம் இங்குதான் துவங்குகிறது. சாமானிய மக்களின் இந்தப் பற்றுதலை வெட்டி விடுவது தீர்வா? அல்லது தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு முறையை அவர்களுக்கு ஆதரவாக பற்றிக் கொள்ளத் திருப்பி விட்டு இந்துத்துவத்தை வெட்டுவது தீர்வா? என்பதை வறட்டு நாத்திகவாதிகள் பெரியாரிய வழியில் நின்று சிந்தித்துப் பார்ப்பார்களா?  

பெரியாரின் பணியும், சிந்தனையும் இயங்கியல் தன்மை கொண்டது. பெரியாரின் சிந்தனை நிலம், மொழி, தேசம்-தேசியம் கடந்து ஆதிக்க அதிகாரத்திற்கு எதிராக இயங்கும் போக்கு கொண்டிருப்பதால் தான் அது ‘பெரியாரியம்’ என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெரியார் அடித்தட்டு மக்களின் அரசியல் பண்பாட்டு அதிகாரத்திற்காக சிந்தித்து அதற்கு தேவையான நடவடிக்கைகளையே வாழ்நாள் முழுவதும் செய்துள்ளார். பெரியாரியம் என்பதை வெறும் கடவுள் மறுப்பு சிந்தனை என்று மட்டும் புரிந்து கொள்ளும் முற்போக்காளர்கள் தங்களைத் தாங்களே பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பெரியாரின் பார்வையிலேயே இவர்கள் சிந்தனை வறட்டுவாதிகளாகத்தான் கருதப்படுவார்கள்.

பெரியார் நாத்திகம் அல்லது கடவுள் மறுப்புக்கொள்கையின் விளைவுகளாக பார்ப்பனிய கொள்கை ஒழிப்பு இருக்க வேண்டுமென்பதை நாடினார். அவரது கடவுள் மறுப்பின் அடிப்படை பார்ப்பனிய ஆதிக்கத்தின் வேரை அழிப்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. பெரியாரின் நாத்திகத்தன்மை பார்ப்பனிய எதிர்ப்புக் குறியீட்டின் நடைமுறை வடிவம். இதை அவர் பிற மதங்களில் நிலைபெற்ற ஆதிக்க சுரண்டல் வடிவங்களுக்கும் எதிராக பிரயோகித்தார். நாத்திகம் என்பதை பார்ப்பனிய எதிர்ப்பிலிருந்து பிரித்துப்பார்க்க இயலாது. அவ்வகையில் பார்ப்பனிய எதிர்ப்பே முதன்மைக் கருதுகோள். அந்த பார்ப்பனிய மறுப்பு வழியை தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டார் பண்பாட்டு முறைகளையும் பார்ப்பனியத்தோடு இணைத்து வரையறை செய்வது பார்ப்பனியத்திற்கே பயன்படும். பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கைகள், தத்துவங்கள் நாத்திகரல்லாத தன்மையைக் கொண்டிருந்தாலும் அவையும் நடைமுறையில் பயன் தரக்கூடியவை. அண்ணலின் பெளத்த தழுவலை இவ்வகையில் கொள்வதும், இந்து மதத்திலிருந்து இசுலாத்துக்கு மாறும் எதிர் நடவடிக்கைகளும் இவ்வகையை சார்ந்தவை.

குடியான மக்களின் பொருளாதார வாழ்வியலையும், அதனோடு இணைந்து வெளிப்படும் பண்பாட்டு கூறுகளையும் பகுப்பாய்வு செய்து உணராமல் அனைத்தையும் மூடநம்பிக்கையாக வரையறை செய்வது பார்ப்பனிய வகைப்பாடே. ஏனெனில் நாட்டார் முறைகளை பார்ப்பனியம் ஏற்றுக் கொண்டதில்லை. நாட்டார் முறைகளை பார்ப்பனிய மயமாக்கலுக்குள் கொண்டுவர விரும்புகிற இந்துத்துவ அரசியல் வேலைத்திட்டத்தை உணராமலும், எதிர்கொள்ளாமலும் வறட்டு நாத்திகக் கோட்பாடாக அணுகினால் குடியானவர்களை இந்துத்துவம் வெற்றிகொள்ளும் நடைமுறைகளை தடுக்க இயலாது. நம் இலக்கு என்பது பார்ப்பனியத்தை வெற்றிகொள்வதா அல்லது நாத்திகத்தை நிறுவனமயமாக்குதலா எனும் கேள்வியில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? எமக்கு பார்ப்பனியத்தை வெற்றி கொள்ளுதலே முதன்மை இலக்கு. இதற்கு பயன்படும் நாத்திகத்தையும், நாட்டார் முறைகளையும் அல்லது வேறு வழிமுறைகளையும் கைக்கொள்ள மே17 இயக்கம் அணியமாகவே உள்ளது.

பெரியார் சிந்தனையில் உள்ள இயங்கியலை உள்வாங்கிக் கொண்டே மே 17 இயக்கம் ஆர்.எஸ்.எஸ், பாஜக-விற்கு எதிரான தமிழர் பண்பாட்டு அரசியலை முன்னெடுத்துள்ளது. மே 17 இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் பெரியாரியத்தை உள்வாங்கி, தமிழர்களை அரவணைத்து, தமிழர் இறையாண்மையை இலக்காகக் கொண்ட தமிழ்தேசியம் அமைப்பதே ஆகும். இந்த நோக்கத்தில் துளியும் சமரசம் கொள்ளாத இயக்கமாக மே 17 இயக்கம் பயணிக்கிறது. இந்த பயணத்தில் பெரியாரின் தமிழர் பண்பாட்டு அரசியல் மூலம் இந்துத்துவவாதிகளிடமிருந்து தமிழர்களை  மீட்பதைப் போலவே, இந்த வறட்டுவாதிகளிடமிருந்து பெரியாரையும் மீட்கும்  அரசியல் பணியும் எங்களுக்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »