ஆதி திராவிடரான பட்டியலின மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப் போவதாக தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை வெளியீட்டின் பொழுது கூறியுள்ளது. இதற்கு அந்தப் பள்ளிகளின் கூட்டமைப்புகள் சார்பாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு பட்டியலின மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரானது எனக் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி ஊட்டச்சத்து அளிப்பதைப் போல, கல்வி நிலையில் பின்தங்கிய ஆதி திராவிடர் பிள்ளைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆதி திராவிடர் நல சிறப்புப் பள்ளிகள். ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், சீர்மரபினர் நலத் துறை, அறநிலையத் துறை, வனத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த துறைகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1834 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1138 பள்ளிகள் ஆதி திராவிடர் நலப் பள்ளிகள். 328 பள்ளிகள் பழங்குடியினர் நலப் பள்ளிகள். மீதமுள்ளவை மற்றவற்றின் கீழ் இயங்குபவை. இவைகளில் 1300-க்கும் மேற்பட்ட விடுதிகளும் இயங்குகின்றன. இவை அனைத்திலும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர்.
ஆதி திராவிடர் பள்ளிகள் அனைத்தும் அந்த மக்களின் குடியிருப்பை ஒட்டியே இருக்கிறது. கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி பெற வேண்டும் என்று எண்ணிய அயோத்திதாசர் போன்ற பலரின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை இவை. அதன் பின்னர் அரசு இவற்றையெல்லாம் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் கொண்டு வந்தது. இந்தப் பள்ளிகள் அமைந்துள்ள நிலங்கள் யாவும் ஆதி திராவிடர்களான பட்டியலின மக்களின் சொத்துக்களேத் தவிர அரசின் சொத்துகள் அல்ல என்பது முக்கியமானது. பல கோடிகள் பெறுமானம் பெறும் இந்த சொத்துக்களை குறிவைத்தே பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் கல்வியார்வலர்களால் எழுப்பப்படுகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட அருகாமைப் பள்ளிகள் மூடப்பட வேண்டும், அவை பெரிய பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதும், அரசுப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மட்டுமே இயங்க வேண்டும் என்பதும் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைத் திட்டம் – 2020-ன் நோக்கம். ஆனால் அனைவருக்கும் சமச்சீரான கல்வி அருகாமைப் பள்ளிகளிலே கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இந்த நிலையில் இப்படியான அறிவிப்பு, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாற்று வழியில் கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறதா என ஆதி திராவிடர் பள்ளிக் கூட்டமைப்பு ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆதி திராவிடர் பள்ளிகளுக்கென்று பள்ளிக் கல்வித் துறைப் போன்று தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்போது இந்தப் பள்ளிகள் வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்பார்வையின் கீழ் தான் இயங்குகிறது. கல்வித்துறை சாராதவர்களால் எவ்வாறு ஆதி திராவிடர் பள்ளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு செயலாற்ற முடியும் என இவர்கள் கேட்கின்றனர்.
ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆதி திராவிடர் நலத் துறையிலிருந்து தான் ஒதுக்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடுகள் முறையாக நடைபெறாததால் நிர்வாகச் சிக்கல்கள், மாணவர்களின் கல்வித் தரம் குறைவு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், குறைவான ஆசிரியர்கள் போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளிலும் இவை பொதுவானவையே என்னும் போது ஆதி திராவிடர் பள்ளிகளில் மட்டும் இந்த சிக்கல்களைக் காரணமாக வைத்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது நியாயமற்ற செயல் எனக் கூறுகின்றனர். உரிய கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்வதை விடுத்து, இதனையே காரணமாகக் கொண்டு இந்தப் பள்ளிகளை இணைத்து விடும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வது அறமற்ற செயல் என அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
ஆதி திராவிடக் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆதி திராவிடர் பள்ளிகளின் நோக்கம் சிதைந்து விடக் கூடாது என்ற உணர்வின் அடிப்படையை முதன்மையாகக் கொண்டே கல்வி சங்கங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அரசு எந்த ஆய்வும் நடத்தாமல், ஆதி திராவிடர் பள்ளி சார்ந்த அலுவலர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது கண்டனத்திற்குரியது எனவும் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.
ஆதித்திராவிடர் நலத்துறை பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக எழுப்பியுள்ள கோரிக்கைகள்:
- ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை பொதுக் கல்வித் துறையோடு இணைப்பதைக் கைவிடுக.
- ஆதி திராவிடர் பள்ளிகளை மேலாண்மை செய்திட பொது கல்வித் துறையை போன்று தனிக் கல்வித் துறை உருவாக்கிடுக.
- ஆதி திராவிடர் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வருவாய்த்துறை தலையிடுவதை கைவிட்டு முற்றிலும் தனி நிர்வாகத்தை உருவாக்கிடுக.
- ஆதி திராவிடர்களுக்கு தரப்படும் மத்திய அரசின் சிறப்பு உட்கூறுத் திட்ட நிதிகள் முழுவதையும் ஆதி திராவிடர்களின் நல மேம்பாட்டிற்கு மட்டுமே செலவிடுக.
- ஆதி திராவிடர்களின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை பொதுத்திட்டங்களுக்கு செலவிடுவதை கைவிடுக.
- ஆதி திராவிடர் மக்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளை செலவிட தனி பட்ஜெட் போடும் நடைமுறைகளைக் கொண்டு வருக.
- தமிழகத்தின் எஸ்.சி/எஸ்.டி பின்னடைவு காலிப் பணியிடம் சுமார் 10,000 பணியிடம் அரசாணை வெளியிட்டதை எஸ்.சி/எஸ்.டி பணியினை உடனடியாக நிரப்பி வேலையில்லாத எஸ்.சி/எஸ்.டி இளைஞர்களுக்கு அரசுப் பணியை வழங்கிடுக.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், கருத்தரங்கம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் தவிர்த்த கல்வி என்று ஒன்றில்லை. கல்வியை அரசியலாக நினைப்பதனால் தான் ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் சனாதனத்தை கொள்கையாகக் கொண்டவர்கள் கொண்டு வரும் கல்வித் திட்டம் என்பது நம் பிள்ளைகளை அடிமைப்படுத்தும் கல்வித் திட்டம். அந்த கல்வித் திட்டத்தை திணிக்கும் முயற்சியாகத் தான் ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் அறிவிப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
இங்கு மரணத்தில் கூட சாதி பார்ப்பவர்களால் பொதுவான சுடுகாடே இல்லாத போது, தண்ணீரில் கூட சாதி பார்ப்பவர்களால் இரட்டைக் குடிநீர் தொட்டிகள் இருக்கும் போது, தீண்டாமைச் சுவர்கள் பத்தடி உயரத்தில் எழுப்பப்படும் போது, இரட்டைக் குவளை முறை இன்னமும் நீடிக்கும் போது ஒடுக்கப்படுபவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தாமல் எப்படி சமத்துவத்தை சாத்தியப்படுத்த முடியும்?
ஐஐடி, ஐஐஎம் போன்ற இன்னமும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் நுழைவது சிரமமாக இருக்கக்கூடிய, சமத்துவமற்ற உயர்வான மனோபாவம் வளர்க்கக்கூடிய பார்ப்பனியக் கோட்டையாக விளங்கும் கல்வித் தளங்களை ஒன்றிய அரசு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து நடத்துகிறது. ஆனால் கல்வியில் சமத்துவம் உருவாகும் நோக்கத்துடன் உருவான ஆதி திராவிடர் பள்ளிகளை நடத்துவதில் தமிழ்நாடு அரசு சிரமமாக பார்த்து பள்ளிக்கல்வித் துறையுடன் இணைப்பது எந்த வகையிலும் சமூகநீதியாகாது.
சமூகநீதி என்பதன் பொருளே சாதிய ரீதியாக, கல்வி ரீதியாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பது தான். அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முறையே கொண்டு வரப்பட்டது. சமூக நீதி அரசாக, திராவிட மாடல் அரசாக முன்னிறுத்திக் கொள்ளும் திமுக அரசு முறையான ஆய்வுகள் செய்து, கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் குறைகளை களைய முன்வரவில்லை. ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது ஆதி திராவிடர் மாணவர்களின் நலனுக்கானதல்ல, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நயவஞ்சகமானது.
ஒன்றியத்தைப் பொறுத்தவரை சமூகத்தை மாற்றியமைக்கக் கூடிய ஆளுமைத்திறன் வளர்ப்பதான கல்வித் திட்டம் தீட்டப்படுவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யும் அடிமைத்தன கல்விமுறை தான் கல்விக் கொள்கையாக உள்ளது., திராவிட மாடல் அரசாக சொல்லிக் கொள்ளும் திமுக அரசு தமிழ்நாட்டிற்கென திராவிடக் கல்விக் கொள்கையை உருவாக்க முனையாமல், தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான சிறப்புப் பள்ளிகளை பொதுப் பள்ளிகளுடன் இணைப்பதை மேற்கொள்வது எந்த வகையிலும் திராவிட மாடலுமல்ல, சமூக நீதியுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்குப் பின் ஈராயிரமாண்டு சனாதன அரசியல் இருக்கிறது. அந்த அரசியல் மாணவர்களுக்கு சொல்லப்பட வேண்டும். ஆதித் திராவிடர் பள்ளிகளுக்கென்று தனியாக கல்வித் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மக்களிடையே சமத்துவம் நடைமுறையிலும் உருவாக வேண்டும் என்றால் சிறப்புப் பள்ளிகள் தனியாக, தனித்துவத்துடன் இயங்க தமிழ்நாடு அரசு முயற்சிகளை அடுக்க வேண்டும். இந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு சமூக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும்.